என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    கொள்ளிடம் அருகே அரசூரில் 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள ஊராட்சி அலுவலகத்தை விரைவில் திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அரசூரில் புதிதாக ஊராட்சி அலுவலக கட்டிடம் கடந்த ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அருகில் உள்ள சேவை மைய கட்டிடத்தில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலக கட்டிடம் எதிரே உள்ள பழமையான ஒரு அய்யனார் கோவில் சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில் அதை அப்படியே மரம் செடி கொடிகள் மற்றும் புதர்கள் மூடியுள்ளன. இதில் விஷப் பாம்புகள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலக கட்டிடம் அருகிலும், அதை சுற்றியுள்ள பகுதியிலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. ஊராட்சி அலுவலக கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளதால் அலுவலகத்தில் நடைபெற வேண்டிய கூட்டங்கள் மற்றும் ஊராட்சி சம்பந்தமான நிகழ்வுகள் சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றன. எனவே புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி அலுவலக கட்டிடத்தை விரைவில் திறந்து அதன் எதிரே மலை போல் வளர்ந்துள்ள புதர்களை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    அபுதாபி:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. இந்த 2 தோல்வியால் அரை இறுதிக்கு முன்னேறுவதற்காக வாய்ப்பு மிக மிக குறைவாகவே உள்ளது.

    இந்திய அணி 3-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆப்கானிஸ்தான் கேப்டன் நபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணி வீரர்கள் விவரம்:-

    1. லோகேஷ் ராகுல் 2. ரோகித் சர்மா 3. சூர்யகுமார் யாதவ் 4. விராட் கோலி 5. முகமது சமி 6. ரி‌ஷப் பண்ட் 7. ஹர்த்திக் பாண்ட்யா, 8. ஜடேஜா 9. சர்துல் தாகுர் 10. அஸ்வின் 11. பும்ரா. 

    ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் விவரம்:-

    1. ஹஸ்ரத்துல்லா ஜசாய் 2. முகமது ஷசாத் 3. ரமனுல்லா குர்பாஸ் 4. நஜிபுல்லா ஜட்ரன் 5. முகமது நபி (கேப்டன்) 6. குல்படின் நைப் 7. ஷரபுதீன் அஷ்ரப் 8. ரஷித்கான் 9. கரீம் ஜனத் 10. நவீன்-உல்-ஹக் 11. ஹமீத் ஹாசன்

    கொள்ளிடம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்துள்ள கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது40). கொத்தனாரான இவர் நேற்று முன்தினம் தைக்கால் கிராமத்துக்கு சென்று அப்பகுதியில் ஒருவர் வீட்டில் வேலை பார்த்தார். பின்னர் மாலை வேலை முடிந்த பின் மோட்டார் சைக்கிளில் மணிகண்டன் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தைக்கால் பள்ளிவாசல் எதிரே அவர் சென்ற போது சாலையின் குறுக்கே ஒரு நாய் வந்தது. இதனால் அவர் வாகனத்தை திருப்பிய போது மோட்டார் சைக்கிளில் இருந்து மணிகண்டன் தவறி விழுந்தார்.

    இதில் தலையில் காயமடைந்த அவர் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு வீட்டுக்கு சென்றுவிட்டார். இரவு இவருக்கு மீண்டும்தலைவலி அதிகமாக இருந்ததால் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்தார். இதுகுறித்து மணிகண்டனின் மனைவி தீபா அளித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுவை கடந்த 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி விடுதலை பெற்றது.

    நவம்பர் 1-ந்தேதி புதுவையின் விடுதலை நாள் விழாவாக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுவை கடற்கரை சாலையில் விடுதலை நாள் விழாவுக்காக கொடிக்கம்பம், மேடை அமைக்கப்பட்டிருந்தது.

    சரியாக காலை 9.09 மணிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டது.

    இதன்பின் காவலர் அணிவகுப்பு மரியாதையை ரங்கசாமி பார்வையிட்டார். பின்னர் மீண்டும் மேடை திரும்பிய ரங்கசாமி விடுதலை நாள் உரையாற்றினார்.

    அவர் ஆற்றிய உரையின் முக்கியம்சங்கள் வருமாறு:-

    பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுவை மாநிலம் இதேநாளில் விடுதலை அடைந்த மகத்தான நாள். இதேநாளில்தான் பிரெஞ்சு கொடியிறக்கப்பட்டு 21 குண்டுகள் முழங்க இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

    ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் பிரெஞ்சுகாரர்களும் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக தங்களை வளர்த்துக்கொண்டனர். தமிழகத்தை ஒட்டியிருக்கும் புதுவை, காரைக்கால், கேரளாவில் மாகி, ஆந்திராவில் ஏனாம், மேற்குவங்கத்தில் சந்திரநாகூரில் பிரெஞ்சுக்காரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    பிரெஞ்சு வசம் இருந்து சந்திநாகூர் 1950-ம் ஆண்டு விடுதலை பெற்று மேற்கு வங்கத்துடன் இணைக்கப்பட்டது. வீர மறவர்களின் தன்னலமற்ற போராட்டத்தால் 1954-ம் ஆண்டு நவம்பர் முதல்நாள் நாம் விடுதலை பெற்றோம்.

    வரலாற்றின் சிறப்பு மிக்க இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் பிரெஞ்சு ஆட்சியாளர்கள் புதுவையை விட்டுவிட்டு எந்த இடத்திலிருந்து கப்பலில் சென்றார்களோ? வங்க கடலில் அதே இடத்தில் தேசியக்கொடியை ஆண்டுதோறும் ஏற்றி விடுதலை நாளை கொண்டாடி வருகிறோம்.

    பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது. இதனால் பொதுத்தேர்வுக்கு தயாராகும் வகையில் அரசு பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். ஊரடங்குக்கு பிறகு பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.

    புதுவை மாநிலத்தில் இதுவரை சுமார் 70 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி போடாததே உயிரிழப்புக்கு காரணம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். போதிய தடுப்பூசிகள் சுகாதாரத்துறை வசம் உள்ளது. எனவே இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் எவ்வித அச்சமோ, தயக்கமோ இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும். எங்கள் அரசு பொறுப்பேற்ற 6 மாதத்தில் மாநில வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அவற்றில் சிலவற்றை தங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். மாநில மக்கள் அனைவருக்கும் விடுதலை தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து காவல்துறையின் ஆயுதப்படை, போக்குவரத்து, ரிசர்வ் பட்டாலியன், ஊர்க்காவல்படை, தீயணைப்புத்துறை, என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.

    இதைத்தொடர்ந்து நாட்டிய நாடகம், பரத நாட்டியம், காளியாட்டம், தப்பாட்டம், சிலம்பம், புலி ஆட்டம் ஆகியவை நடந்தது. பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவுபெற்றது.
    கிடாரம் கொண்டான் துணை மின் நிலையத்தில் ரூ.1½ கோடியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்.
    திருவெண்காடு:

    செம்பனார்கோவில் அருகே கிடாரம்கொண்டான் பகுதியில் துணை மின் நிலையம் உள்ளது. இந்த மின் நிலையத்தின் மூலம் 15 ஊராட்சி பொதுமக்கள் மற்றும் 1,200 விவசாய மின் மோட்டார்கள் பயன்படுகின்றன. இந்த துணை மின்நிலையத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, மின்தடை ஏற்பட்டது. எனவே புதிய மின் மாற்றி அமைத்து தர வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் நிவேதா முருகன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து கிடாரம்கொண்டான் துணை மின் நிலையத்தில் புதிய மின் மாற்றி அமைத்து தர வேண்டும் என எம்.எல்.ஏ., தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் கோரிக்கை மனு அளித்தார். அதன்படி ரூ.1 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது.

    விழாவிற்கு நாகை கோட்ட மேற்பார்வை பொறியாளர் நக்கீரன் தலைமை தாங்கினார்.. நாகை செயற்பொறியாளர் நவநீதகிருஷ்ணன், சீர்காழி செயற்பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செம்பனார்கோவில் உதவி செயற்பொறியாளர் அப்துல் வகாப் மரைக்காயர் வரவேற்றார்.

    இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மின்மாற்றியை இயக்கி வைத்தும், கட்டிடத்தை திறந்து வைத்தும் பேசினார்.

    விழாவில் நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் தம்பி ஞானவேலன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், சசிகுமார், மாவட்ட கவுன்சிலர்கள் ஆனந்தன், வெண்ணிலா தென்னரசன், ஒன்றிய கவுன்சிலர் மோகன்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கடாரம்கொண்டான் துணை மின் நிலைய பொறியாளர் வனிதா நன்றி கூறினார்.
    கொள்ளிடம் அருகே, மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல் வழியாக சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் அருந்ததியர் தெருவில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் வசிப்பவர்கள் இறந்தால் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்திற்கு உடலை கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டும். இந்த மயானத்திற்கு செல்வதற்கான சாலை ஆக்கிரமிக்கப்பட்டதால் இறந்தவரின் உடலை மிகுந்த சிரமத்துடன் தோளில் சுமந்து கொண்டு வயல் வழியாக செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

    இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் மயான சாலை அமைத்து தரப்படவில்லை. இந்தநிலையில் இந்த பகுதியை சேர்ந்த ராமையன் என்பவர் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் குன்றி இறந்து விட்டார்.

    அவரின் உடலை கிராம மக்கள் மிகுந்த சிரமத்துடன் தோளில் சுமந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடவு வயலில் நடந்து சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர்.

    தொடர்ந்து இந்த நிலை நீடிக்காமல் இருக்க. மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றி மயானத்திற்கு செல்ல சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சீர்காழி பகுதியில் சம்பா நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கற்கோவில், கதிராமங்கலம், எடக்குடி வடபாதி, காரைமேடு, சட்டநாதபுரம், தாடாளன் கோவில், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, கடவாசல், வடகால், விளந்திட சமுத்திரம், அத்தியூர், அகனி, கொண்டல், வள்ளுவக்குடி, எலத்தூர், மருதங்குடி, புங்கனூர், திருப்புன்கூர், ஆதமங்கலம், பெருமங்கலம், தொழுதூர், மருவத்தூர், நயினார் தோப்பு, நல்லான் சாவடி, காந்திநகர் உள்ளிட்ட கிராமங்களில் தற்போது பாசன நீர் மற்றும் தொடர் மழையால் விவசாயிகள் சம்பா நடவு பணி செய்வதற்காக நிலங்களை உழுது தயார் செய்து, சமப்படுத்தி தற்போது ஆட்களை கொண்டு சம்பா நடவு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் எந்திரம் மூலம் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் முன்கூட்டியே சம்பா நடவு பணி மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.

    இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு கூட்டுறவு மற்றும் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
    10 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லாததால் காலிக்குடங்களுடன் உளுத்துக்குப்பை கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ் பார்மர் பழுது காரணமாக குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மின் வசதி, குடிநீர் வினியோகம் இல்லாமல் பெரும் அவதிக்கு உள்ளாகினர்..

    இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் உளுத்துக்குப்பை கிராம மக்கள், மயிலாடுதுறை-சிதம்பரம் சாலையில் காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார், பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மயிலாடுதுறைக்கு நடந்தே சென்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 227 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 19 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 95 வயது முதியவர் பலியானார். தற்போது 139 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    வீட்டில் இருந்த பீரோ, துணிமணிகள், பாத்திரங்கள், ரேஷன் கார்டு உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.
    பொறையாறு:

    செம்பனார்கோவில் அருகே பரசலூர் ஊராட்சி சாத்தனூர் வள்ளுவக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 40). இவருடைய கூரை வீடு நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது ராஜகோபால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த பீரோ, துணிமணிகள், பாத்திரங்கள், ரேஷன் கார்டு உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கடையூரில் கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கடையூர்:

    கள்ளக்குறிச்சி செட்டி தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 70). இவர் தனது உறவினர் 60-ம் கல்யாணத்திற்காக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது இவர் திருக்கடையூர் மெயின் ரோட்டை கடந்தபோது காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி வந்த கார், கண்ணன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சீர்காழி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே தென்பாதி அகர திருக்கோலக்கா, கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கரிகாலன் (வயது 34 ). இவர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமன் (27) ,லட்சுமண் (27) மற்றும் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனராம். இதனைப் பார்த்த கரிகாலன் அவர்களிடம் இங்கு ஏன் விளையாடுகிறீர்கள் என்று தட்டிக் கேட்டாராம் . அதன் பின்னர் கரிகாலன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    பின்னர் மீண்டும் மாலை கரிகாலன் சென்றுகொண்டிருந்தபோது மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் இரும்பு பைப், அரிவாளால் கரிகாலனை தலை, உடம்பில் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த கரிகாலனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து புகாரின் பேரில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சப் -இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலதேனூர் பகுதியை சேர்ந்த கோபிநாதன் (19) என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பி சென்ற ராமன், லெட்சுமனனை தேடி வருகின்றனர்.

    ×