search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    சீர்காழி பகுதியில் தொடர்மழை: 60 ஏக்கர் சம்பா நெற்பயிர் மூழ்கியது

    சீர்காழி பகுதியில் தொடர்மழை காரணமாக சம்பா நெற்பயிர் சுமார் 60 ஏக்கர் அளவில் மழை நீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனைடைந்துள்ளனர்.

    சீர்காழி:

    சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து 3நாட்களுக்கு மேலாக மழை பெய்துவருகிறது. இதனால் சில இடங்களில் மழைநீர் நெற்பயிரை மூழ்கடித்துள்ளது. கொள்ளிடம் அருகே உள்ள குன்னம் கிராமத்தில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் செய்திருந்தனர். கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக விதைப்பு செய்து ஒருமாத காலமேயான நேரடி மற்றும் சம்பா நெற்பயிர் சுமார் 60 ஏக்கர் அளவில் மழை நீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனைடைந்துள்ளனர்.

    இதுகுறித்து குன்னம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நரசிம்மன் கூறுகையில், குன்னம் கிராமத்தில் சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் செய்துள்ளனர். கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக ஒரு மாதமே ஆன நெற்பயிர் முழுவதும் தண்ணீரில் மூழ்கி வயல் கடல் போல் காட்சியளிக்கிறது.

    இக்கிராம பகுதியில் முக்கிய பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்துவரும் அழிஞ்சியாறு மற்றும் ஒட்டன் வாய்க்கால் ஆகிய இரண்டு வாய்க்கால்களும் குன்னம் கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர் வாரப்படாமல் ஆழபடுத்த படாமலும் உள்ளதால் இந்த வாய்க்கால்களில் புதர்கள் மண்டி வாய்க்கால் தூர்ந்து போய் கிடக்கின்றன. கடந்த இரண்டு வருடங்களாக இந்த வாய்க்கால்களை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வாய்க்கால்களை தூர்வாரி இருந்தால் குன்னம் கிராமத்தில் வயல்களில் தேங்கும் அதிகப்படியான மழை நீர் எளிதில் வெளியேறி குன்னம் கிராமத்திலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் சென்று கலந்துவிடும்.

    அழிஞ்சிஆறு மூலமாக அதிகப்படியான தண்ணீர் எளிதில் சென்று ஆற்றில் வடிந்துவிடும். ஆனால் இந்த அழிஞ்சி ஆறு மற்றும் ஒட்டன் வாய்க்கால் ஆகிய இரண்டு வாய்க்கால்களும் தூர் வாராமல் விடப்பட்டுள்ளது. தற்போது மழையின் காரணமாக வாய்க்கால்களில் அதிக நீர் வரத்து இருந்து வருகிறது.

    இதனால் தண்ணீர் வடிய முடியாமல் சம்பா நெற்பயிர் மூழ்கி கிடக்கிறது. கடந்த மூன்று நாட்களாக பயிர் தண்ணீருக்குள்ளேயே இருந்து வருகிறது. இதனால் இளம் பயிர்அழுகிவிட்டது. இனி மறுமுறை தான் பயிர் செய்ய முடியும். ஒரு ஏக்கருக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் செலவு செய்து நடவு மற்றும் நேரடி விதைப்பு செய்து தற்போது பயனில்லாமல் போய்விட்டது. எனவே விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக மீண்டும் மறுமுறை நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் செய்ய அரசு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும். நெல் விதை மற்றும் குறுவை தொகுப்பு உரம் 100 சத மானியத்தில் வழங்கியது போல உரங்களும் உடனடியாக நிவாரணமாக வழங்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×