என் மலர்
மயிலாடுதுறை
சீர்காழி அருகே கோமாரி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சீர்காழி:
சீர்காழி அருகே ஓதவந்தான்குடி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பு
மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஆடு மாடு கோழி உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிறப்பு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஓதவந்தான்குடி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பு மற்றும் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதில் ஓதவந்தான்குடி, அகரவட்டாரம், மாதானம், ஆர்ப்பாக்கம், பச்சை பெருமாநல்லூர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பசுமாடுகள், ஆடுகள், கோழி, வளர்ப்பு நாய் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
குறிப்பாக மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை கருவூட்டல் ஊசி மற்றும் மாடுகளுக்கான பரி சோதனை செய்யப்பட்டது.
ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மேலும் கால்நடை வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அப்போது சிறப்பாக மாடு வளர்ப்பில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
தற்போது பெய்த பருவம் தவறிய மழையால் கால்நடைகள் கோமாரி நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பாதிப்புக்கு ஆளாகி வரும் நிலையில் இப்பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாம் விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.முகாமிற்கு மண்டல இணை இயக்குனர் சஞ்சிராஜ் தலைமை வகித்தார்.
உதவி இயக்குனர் முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தார். ஓதவந்தான்குடி ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார், கால்நடை மருத்துவர்கள், ராமபிரபா, மணிமொழி, மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், அலுவலர்கள் முகாமில் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தொடர் சிகிச்சை அளித்தனர்.
மேலும் இந்த சிறப்பு முகாமில் மீன்வளத் துறை சார்பாக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மீன் இறால் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
குடியிருப்புகளின் மீது தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்ததல்.
சீர்காழி:
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதிதேவேந்திரன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங் கோவன், அருள்மொழி, ஒன்றியக்குழு துணை தலைவர் உஷாநந்தினி பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-
ஜான்சிராணி, திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழாவிற்கு மக்கள் பிரதிநிதியான ஒன்றியக்குழு உறுப்பினருக்கு அழைப்பு இல்லை.
விசாகர்; சட்டநாதபுரம் ஊராட்சியில் பசுமைவீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகள் எத்தனை கட்டப்பட்டுள்ளது. சுமார் 20 பயனாளிகளுக்கு 2வீடுகள் கொடுக்கப்பட்டு பணம் எடுக்கப்பட்டுள்ளது.
சட்டநாதபுரம் ஊராட்சியில் எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என அளிக்கப்பட்ட மனு மீதி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அறிவழகன்; ராதா நல்லூர் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள நூலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டவேண்டும். கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் நல்ல குடிநீர் வழங்கவேண்டும்.
சோனியாகாந்தி; புங்கனூர் ஊராட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள காடாக்குடி முதல் ஆதமங்கலம் வரையிலான இணைப்பு சாலையை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பெருமங்கலம், புங்கனூர் ஊராட்சியில் புதிய ரேசன் கடைக்கு கட்டிடம் கட்டிதர வேண்டும்.
ரிமா, நிம்மேலி கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்றார்.
தென்னரசு; எடக்குடி வடபாதி ஊராட்சியில் சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.
பஞ்சுகுமார்; தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மின்சார வாரியம் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிலவழகி; கீழமூவர்க்கரை கோவில் தெருவில் வீட்டின் மீது தாழ்வாக செல்லும் மின்கம்பியை சரி செய்ய வேண்டும். கீழமூவர்க் கரையில் பழுதடைந்துள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை சரிசெய்ய வேண்டும்.
கோணயாம்பட்டினம் அங்கன்வாடி மைய கட்டிடத்தில் கதவு இல்லாமல் இருந்து வருகிறது.பெருந் தோட்டத்தில் சமுதாய கூடம் கட்டிடம் கட்டப்பட்டு முழுமைபெறாமல் உள்ளது.
நடராஜன்; திருநகரியில் பழுதடைந்துள்ள பொன்னன்தெரு மற்றும் ஆற்றங்கரை சாலையை போர்கால அடிப்படையில் சீரமைக்கவேண்டும்.
திருநகரி ரேசன் கடை சேதமடைந்துள்ளது. புதிய கட்டிடடம் கட்டவேண்டும்.விஏஓ அலுவலகம் சேதமடைந்துள்ளதால், ஊராட்சிமன்ற அலுவலகத்தில் இயங்கி வருகிறது.
ஆகையால் புதிதாக கட்டிடம் கட்டவேண்டும் என்றார். இதில் மேலாளர் சசிக்குமார், பொறியாளர்கள் கலை யரசன், தெய்வானை, பணி மேற்பார்வையாளர்கள் பிருந்தா, ஓசைநாயகி, மோகன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகேயுள்ள சோழம் பேட்டை-மூவலூர் இணைப்பு பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
பாலத்தை உடனடியாக கட்டி முடிக்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாப்படுகை அண்ணாசிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் துரைராஜ், மாரியப்பன், ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி, நகர செயலாளர் துரைக்கண்ணு மாவட்டக்குழு உறுப்பினர்கள் மேகநாதன், ரவீந்திரன், அறிவழகன், இயற்கை விவசாயி ராமலிங்கம், உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர்.
15 க்கும் மேற்பட்ட கிராம மக்களின் தேவைக்காக கட்டப்படும் சோழம் பேட்டை-மூவலூர் இணைப்பு காவிரி பாலத்தை உடனே கட்ட வலியுறுத்தியும், அதுவரை அப்பகுதியில் தற்காலிக பாலம் அமைத்துத் தர வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
100-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்ட போராட்டத்திற்கு பிறகு பேச்சு வார்த்தைக்கு வந்த அதிகாரிகள் ஜூன் மாதத்திற்க்குள் பாலத்தின் பணிகளை முடிப்பதாக எழுத்து பூர்வமாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப் பட்டது.
சீர்காழியில் அ.தி.மு.க சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
சீர்காழி:
சீர்காழியில் அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பி.வி.பாரதி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ஏ.கே.சந்திரசேகரன், ஆதமங்கலம்.ரவிச்சந்திரன், கே.எம்.நற்குணன், என்.சிவக்குமார், நகர செயலாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகர்மன்ற தேர்தலில் உறுப்பினர்களாக வெற்றிபெற்ற ரமாமணி, கிருஷ்ணமூர்த்தி, நாகரெத்தினம் ஆகியோருக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் பாராட்டு தெரிவித்தார்.தொடர்ந்து மகளிர் தினத்தையொட்டி கட்சி பெண்களுக்கு சேலைகளை எஸ்.பவுன்ராஜ் வழங்கினார்.
பின்னர் தேர்தலில் பணியாற்றிய ஒன்றிய நகர தேர்தல் பொறுப்பாளர்களுக்கு பாராட்டுக்களும் அடுத்தடுத்த தேர்தலில் இன்னும் தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர் கருத்துரைகளை வழங்கினார்.
இதில் வைத்தீஸ்வரன்கோயில் பேரூர் கழக செயலாளர் போகர்.ரவி, பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், மீனவரணி செயலாளர் நாகரத்தினம், மாவட்ட பொருளாளர் செல்லத்துரை, ஒன்றிய கவுன்சிலர்கள் நடராஜன், விஜயக்குமார், நிர்வாகிகள் அம்சேந்திரன், வக்கீல்கள் பாலாஜி, தியாகராஜன், நெடுஞ்செழியன் மற்றும் பரணிதரன், மற்றும் பலர் பங்கேற்றனர்.
சீர்காழி காவல் நிலையத்தில் மகளிர் தின விழா பேச்சுபோட்டி, பரிசளிப்பு நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி காவல்நிலையத்தில் தமிழ்நாடு காவல்துறை துறை சார்பில் உலகமகளிர்தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி, பேச்சுபோட்டி ஆகியவை நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.
மகளிர் தினத்தையொட்டி சீர்காழி காவல்நிலையத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமை வகித்தார்.
மண்டல துணை வட்டாட்சியர் விஜயராணி, மகளிர் காவல் ஆய்வாளர்கள் கவிதா, சந்திரா, நாகரெத்தினம், ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி டிஎஸ்பி லாமெக் பேரணியை தொடங்கிவைத்தார்.பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் சிசுகொலையை தடுப்போம் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை பள்ளி மாணவிகள் கையில் ஏந்தி துண்டுபிரசுரங்களை வழங்கியவாறு முக்கியவீதிகளின் வழியாக சென்றனர்.
தொடர்ந்து சீர்காழி காவல்நிலையத்தில் மகளிர் தின போட்டிகள் நடைபெற்றது.இதில் மாவட்ட உரிமையியல் நீதிமன் நீதிபதி பார்கவி, தபால் நிலைய அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கு ஏற் போட்டிகளை தொடங்கிவைத்தனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
தொடர்ந்து பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், விழிப்புணர்வு பேச்சுபோட்டி போன்றவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த பாலாஜி, கோபாலகிருஷ்ணன், வினோத் மற்றும் மகளிர் காவலர்கள் பங்கேற்றனர்.
திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றது.
சீர்காழி:
திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றது.
திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கிருந்து நோயாளிகளை மேல் சிகிச்சையாக சீர்காழி மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் சேவை அரசு வழங்கியுள்ளது.
ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திநடராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராம் மோகன் வரவேற்றார்.
இதில் சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து பேசினார். கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சசிக்குமார், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் திமுக நிர்வாகிகள் பாண்டியன், ராஜ்குமார் அரசு மருத்துவர் கார்த்திக் உள்ளிட்ட படக்குழுவினர் முடிவு டாக்டர் பிரபாகரன் நன்றி கூறினார்.
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தரங்கம்பாடி பகுதி மருத்துவ மாணவி, பெற்றோருடன் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி தரங்கம்பாடி வட்டம் கோவசேரி ஆனந்தன், கவிதா ஆகியோரின் மகள் ஆர்த்திகா மருத்துவ படிப்பு 5-ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் படித்து வந்தார்.
உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதை அடுத்து அந்த மாணவி அங்கிருந்து தமிழகம் வருவதற்காக கோரிக்கை வைத்திருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரித நடவடிக்கையால் உக்ரேன் நாட்டிலிருந்து கடந்த 6&ம் தேதி ஆர்த்திகா மீட்கப்பட்டு சென்னை வந்தடைந்தார்.
இதையடுத்து ஆர்த்திகா மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவை தனது குடும்பத்துடன் நேரில் சந்தித்து முதலமைச்சருக்கும், மாவட்ட கலெக்டருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
ஏ.டி.எம். கார்டு விவரங்களை பகிர வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின்படி பயணிகள், பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் சைபர் கிரைம் போலீசார் இணையவழி மோசடி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சைபர் க்ரைம் போலீசார் சுதாகர் மற்றும் போலீசார் பொது மக்களிடம் விழிப் புணர்வு துண்டு பிரசுரங் களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், குழந்தைகள் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதை பெற்றோர் கண்காணிக்க அறிவுறுத்தினர்.
இணையத்தின் வாயிலாகவோ செல்போன் வாயிலாகவோ உங்களது சுய விவரங்களை யாரேனும் கேட்டால் பகிர வேண்டாம், முகம் தெரியாத நபர்களை இணையத்தில் நண்பனாக்கிக் கொள்ள வேண்டாம்.
உங்களது ஏ.டி.எம் கார்டு, ஆதார் கார்ட், ஓ.டி.பி எண்களை யாரிடமும் பகிர வேண்டாம், வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டால் உடனடியாக 1930 என்ற உதவி என்னை அழைத்து சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
வைத்தீஸ்வரன் கோவிலில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருடப்பட்டுள்ளது.
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் விளக்கு முக தெருவை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 49) விவசாயியான இவர் வைத்தீஸ்வரன்கோவில் கீழவீதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் தனது கணக்கிலிருந்து எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு மேல வீதியில் உள்ள கடைக்கு ரீசார்ஜ் செய்ய சென்றார்.
மீண்டும் வந்து பார்த்த போது இருக்கைக்கு அடியில் வைத்திருந்த பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ராஜதுரை வைத்தீஸ்வரன் கோயில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலில் வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகத்தை யொட்டி பாதுகாப்பு பணிகள் குறித்து சரக டி.ஐ.ஜி ஆய்வு செய்தார்.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில், கும்பாபிஷேகம் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. அதன் பின்னர் கடந்த ஒரு ஆண்டாக குடமுழுக்கு திருப்பணிகள் பழமை மாறாமல் நடைபெற்று வந்தது.
வருகிற 27 ஆம் தேதி, உத்திராட நட்சத்திரத்தில் ரிஷப லக்கினத்தில் காலை 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக யாகசாலை அமைக்கும் பணிகள் மற்றும் கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஐந்து ராஜ கோபுரங்கள் மற்றும் கருவறை சந்ததிகளுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக 73 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால யாகசாலை பூஜைகள் விரைவில் தொடங்க உள்ளது.
கும்பாபிஷேகத்தில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
தருமபுர ஆதீன 27 &வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அப்போது உடன் இருந்தார். கும்பாபிஷேகத்தின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள், பொதுமக்கள் வந்து செல்லும் வழிகள், வி.ஐ.பி. தரிசன வழி, அவசரகால வெளியேற்றும் வழி, யாகசாலை பூஜைக்கான குண்டங்கள் அமைக்கும் இடம், ஆகியவை குறித்து ஆலோசனை செய்தனர்.
அப்போது போலீஸ் சூப்பிரண்டு சுணாசிங், பொறையார் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன், சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர். கனேசன் குருக்கள், கோயில் நிர்வாகிகள் கோவிந்தராஜ், ஸ்ரீராம் ஆகியோர் உடன் இருந்தனர்.
சீர்காழி அருகே கனமழையால் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் 1 லட்சம் நெல் மூட்டைகள் நனையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீர்காழி:
சீர்காழி அருகே டி.மணல்மேடு கிராமத்தில் அரசு திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு இயங்கி வருகிறது. சீர்காழி தாலுக்காவில் அறுவடை செய்யப்படும் 6 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் இந்த திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்படுகிறது.
இந்த நெல் சேமிப்பு கிடங்கு தாழ்வான பகுதியில் உள்ளதால் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் சேமிப்புக் கிடங்கை சுற்றி தண்ணீர் தேங்கி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் பாதிப்படைந்து முளைக்கத் தொடங்கின.
இதுகுறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து தாழ்வான பகுதியில் இயங்கிவந்த இந்த சேமிப்புக் கிடங்கை மூடுவதற்கு உத்தரவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதாக உத்தரவாதம் அளித்து இருந்தனர். இந்நிலையில் மூன்று மாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது வரை நெல் மூட்டைகளை வேறு இடத்திற்கு மாற்றாமல் புதிதாக நெல் மூட்டைகளை அதே இடத்தில் சேமிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சம்பா பருவ நெல் மூட்டைகள் 6,000 டன் அதாவது ஒன்றரை லட்சம் ஓட்டுகள் இந்த நெல் சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த கன மழையால் சேமிப்பு கிடங்கு சுற்றி தண்ணீர் தேங்க ஆரம்பித்துள்ளது.
இதனால் சரியான முறையில் பாதுகாக்கப் படாமல் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக இந்த திறந்தவெளி மேல் சேமிப்புக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி அருகே எருக்கூரில் மக்களை தேடி மருத்துவ திட்ட பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
சீர்காழி:
சீர்காழி தாலுகா எருக்கூர் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகங்களை வழங்கினார். எருக்கூரில் முதியவர் ஒருவருக்கு அளிக்கப்பட்டு வரும் முடநீக்கு சிகிச்சையை பார்வையிட்டு மருந்து பெட்ட கங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதா கிருஷ்ணன், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா.முருகன், பன்னீர்செல்வம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் குருநாதன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன், வட்டார சுகாதார அலுவலர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






