என் மலர்
மயிலாடுதுறை
கோனேரிராஜபுரம் நடராஜர் கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜா தரிசனம் செய்தார்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தில் தேகசௌந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனந்தக் கூத்தராகிய ஸ்ரீநடராஜப் பெருமான் உலகில் மிகப் பெரிய வடிவமாக எட்டரை அடி உயரம் கொண்டு, காண்போரை சுண்டி இழுக்கும் நர்த்தன சுந்தர நடராஜராக விளங்குகிறார்.
இக்கோயிலில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தரிசனம் மேற்கொண்டார். முன்னறிவிப்பின் திடீரென கோவிலுக்கு வந்த இளையராஜாவுக்கு கோவில் நிர்வாகத்தினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, சுவாமியின் முன்பு சுமார் 15 நிமிடங்கள் தியானம் செய்த இளையராஜா பின்பு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
மயிலாடுதுறை அருகே வள்ளாலகரத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை ஒன்றியம், வள்ளாலகரம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, வட்டார மருத்துவர் சரத் சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ராபர்ட் ஜெயகரன் வரவேற்றார். தோல் நோய், கண் சிகிச்சை, பல், நீரழிவு நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து மருத்துவம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர். ரத்தப் பரிசோதனை, ஸ்கேனிங், இ.சி.ஜி. உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இந்த முகாமில் பயன்படுத்தப்பட்டது. இதில் 300&க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்து நோய்களை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.
20 க்கும் மேற்பட்டவர்களுக்கு மேல் சிகிச்சைக்கான பரிந்துரை அளிக்கப்பட்டது. சித்தா, யுனானி, ஆயுர்வேதிக், ஹோமியோபதி உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மருத்துவர் பிரபா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார், மகளிர் பகுதி சுகாதார செவிலியர் தமிழ்ச்செல்வி, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இமையநாதன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சுந்தரபாண்டியன், வார்டு உறுப்பினர் ஜெயக்குமார், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சரவணன் நன்றி கூறினார்.
மயிலாடுதுறையில் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இவற்றில் 80-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.340 ரூபாய் வழங்கப்படும் நிலையில் அதில் 10 ரூபாய் சேமநல நிதியாக பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், பிப்ரவரி மாத சம்பளம் அவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து மயிலாடுதுறை நகராட்சி வரதாச்சாரியார் பூங்காவில் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், சம்பள பில் வழங்க வேண்டும், பி.எப் பிடிமானம் செய்யப்பட்டதற்கான கணக்கு தர வேண்டும், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,
நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க தலைவர் அம்பேத்கர், துணை செயலாளர் ராஜசேகர், துணைத்தலைவர் முருகவேல் ஆகியோர் தலைமையில் தூய்மைப் பணியாளர்கள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நேரடி கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் தேக்கமடைந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களில் 75 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதை கண்டித்து தி.மு.க. கட்சியின் தொழிற்சங்கமான தொ.மு.ச. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை நுகர்பொருள் வாணிப கழக, துணை மண்டல மேலாளரை கண்டித்து அவருடைய அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் இன்னும் ஓரிரு தினங்களில் நெல் மூட்டைகளை வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு ரூ.40, 45 வாங்குவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொன்டனர். இதனையடுத்து போராட்டத்தை விடுத்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். அதிகாரிகள் உறுதி அளித்தபடி நெல் மூட்டைகளை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மயிலாடுதுறையில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தனர்.
தரங்கம்பாடி:
சைவ திருமடங்களின் சமய மரபுகளில் தலையிட்டு இந்துக்களின் நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகளை கொச்சைப்படுத்தும் திராவிடர் கழகத்தை தடை செய்யக்கோரி நாளை (12-ந்தேதி) மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சி காவிக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.
நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொள்ளவிருந்த இந்த ஆர்பாட்டத்திற்கு மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளரால் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் திராவிடர் கழகத்தை தடை செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி அறிவித்திருந்த காவிக் கொடி போராட்டம் தொடர்பாக மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலகத்தில் கோட்டாட்சியர் பாலாஜி, தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியர் ராகவன், துணை காவல் கண்காணிப்பாளர் வசுந்தராஜ், காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் சார்பாக மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் பார்த்திபன், மாவட்ட துணைத்தலைவர் சொக்கலிங்கம், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், நகர தலைவர் முத்துகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் நிறைவாக ஆர்ப்பாட்டத்திற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியாத சூழல் உள்ளதால் வேறொரு தேதியில் இருபது நாட்களுக்கு முன் அறிவித்து அனுமதி பெற்று நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.
திருப்பனந்தாள் அருகே வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது-.
கும்பகோணம்:
திருப்பனந்தாள் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்ட தமிழ்நாடு நீர்நிலவள திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிச்சி மாதிரி கிராமத்தில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கிராமத்தில் விவசாயிகளுடன் தமிழ்நாடு நீர் நில வள மேம்பாட்டு முகமை மாநில அதிகாரிகள் முனைவர் கிருஷ்ணன் நீர் ஆதார நிபுணர் ஷாஜகான் வேளாண் ஆலோசகர் அருள்குமார் செயற்பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் நோக்கம், , மாதிரி கிராமத்தின் செயல்பாடுகள், நீரின் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்து முன்மாதிரி கிராமத்தில் நமது கனவு கிராமத்திட்டம், நீர் நிலைகள் பற்றிய விழிப்புணர்வு, நீர் வரவு செலவு கணக்கின் அவசியம், மதிப்பு கூட்டிய வேளாண் விளை பொருள்களை சந்தைப்படுத்துதல்கான திட்ட வரையரைகள் விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.
இதில் அனைத்து முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி இயக்குநர் (பொ) கார்த்திகேயன் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர் ரமேஷ், ராம்குமார், செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி (வயது 60). ஊராட்சி மன்ற தலைவர். இவர் சட்டநாதபுரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டார்.
அப்போது கலியபெருமாள் என்பவருக்கு உரிய பிளாட் வழியாக சாலை அமைக்கும்போது பிளாட் சேதப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து சட்டநாதபுரம் பகுதியை சேர்ந்த தி.மு.க ஒன்றியக்குழு உறுப்பினர் விசாகர் (42) கேட்டுளார்.
இதனால் இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் முடிந்து ஒன்றிய குழு உறுப்பினர் விசாகர் வெளியே வந்தபோது ஊராட்சி மன்றத்தலைவர் தட்சிணாமூர்த்தி அவரிடம் வாக்குவாதம் செய்தார். தி.மு.க மற்றும் அ.தி.மு.க. வை சேர்ந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதனிடையே நேற்று மீண்டும் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதில் ஊராட்சிமன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி தாக்கப்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி ஒன்றிய கவுன்சிலர் மீது புகார் அளித்தார். புகாரினை அடுத்து சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார், விசாகர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே பிளாட்டினை சேதப்படுத்தி சாலை அமைக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி தலைவர் தெட்சிணாமூர்த்தி மீது ஒன்றிய கவுன்சிலர் விசாகரும் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருதரப்பு புகாரினை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சீர்காழியில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி போலீஸ் நிலையத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் கவிதா, நாகரத்தினம், ஜெயந்தி, அமுதாராணி மற்றும் சப்&இன்ஸ்பெக்டர்கள் நிலையை எழுத்தர்கள் முன்னிலை வகித்தனர்.
இன்ஸ்பெக்டர் மணிமாறன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், சீர்காழி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பார்கவி பங்கேற்று பேசினர்.
விழாவில் பங்கேற்ற சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் பாலாஜி மற்றும் கோபாலகிருஷ்ண ஆகியோர் சேவையை பாராட்டி போலீசார் கவுரவித்தனர். இதில் டெம்பிள்டன் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த வீரபாண்டியன், வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Mayiladuthurai, எல்.ஐ.சி. பங்கை தனியாருக்கு விற்பதை கண்டித்து மயிலாடுதுறையில் காப்பீட்டு கழக ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்திக்கொண்டு எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க முயற்சி செய்வதை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். செயலாளர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார்.
அப்போது எல்.ஐ.சி.நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்க முயற்சி செய்யும் போக்கை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் லிகாய் முகவர்கள் சங்க தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் சண்முகம், காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கம், மயிலாடுதுறை கிளை முகவர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சீர்காழியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
சீர்காழி நகரில் பிரதான சாலைகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பிடாரி வடக்குவீதி, கடைவீதி, தேர் வடக்குவீதி, மணிகூண்டு, கொள்ளிடமுக்கூட்டு பகுதி, தென்பாதி ஆகிய பகுதிகளில் பிரதான சாலைகளில் அதிகளவு மாடுகள் சுற்றி திரிகிறது.
மாடுகள் வளர்ப்பவர்கள் பால்கறக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கால்நடைகளை சாலைகளில் விட்டு விடுகின்றனர். சாலையோரம் உள்ள பழகடைகள், பூக்கடைகளில் உள்ள பொருட்களை மாடுகள் கடை உரிமையாளர்கள் அசந்த நேரத்தில் கீழே தள்ளி தின்றுவிடுகிறது.
சில நேரங்களில் சாலையோரம் மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்பதும், அமர்ந்து விடுவதால் போக்குவரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்படுகிறது. ஆகையால் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு ரூ.10ஆயிரம் வரை அபராதம் நகராட்சி நிர்வாகம் விதித்தால் மட்டும் இதற்கு நிரந்தரதீர்வு காணமுடியும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி மாத உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சீர்காழி:
சீர்காழி அடுத்த திருநகரியில் பிரசித்தி பெற்ற கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது. திருமங்கை ஆழ்வார் இக்கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
பஞ்ச நரசிம்மர்களில் ஒன்றான ஹிரணிய நரசிம்மர் இக்கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் பங்குனி மாத உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் சிறப்பு வழிபாடு தீபாரதனை நடைபெற்றது.
பின்னர் உற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன், திருவேடு பறி உற்சவர் கமிட்டித் தலைவர் ஆளவந்தார், செயலாளர் ரகுநாதன், பொருளாளர் ரங்கராஜன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சீர்காழி பகுதி ரேசன் கடையில் நகர்மன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார்.
சீர்காழி:
சீர்காழி பிடாரிவடக்கு வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு தாடாளன் கீழமடவிளாகம் பகுதியில் ரேசன் கடை இயங்கி வருகிறது. இந்த ரேசன் கடையில் நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்திபாபு ஆய்வு செய்தார். தரமான அரிசி கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறதா என பார்வையிட்டார்.
மேலும் இந்த ரேசன் கடை 14வது வார்டு பகுதி மக்களுக்கு நீண்ட தூரத்தில் உள்ளதால் பிடாரி வடக்கு வீதியில் ஏதேனும் ஒரு பகுதிக்கு கடையை இடமாற்றம் செய்யவேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கை குறித்து ரேசன் கடையை விற்பனையாளரிடம் ஆலோசனை நடத்தினார்.






