என் மலர்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சித்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் ஒன்றியம் கூடலூர் நடுத் தெருவை சேர்ந்தவர் விக்டர் வினோத்குமார் (வயது 35).
நல்லிச்சேரி கீழபாதி வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் அய்யாபிள்ளை மகள் புவனேஸ்வரி (எ) ஹேமா ஜூலியட் (37). இவர்களுக்கு கேப்ரியல் பிரின்ஸ் என்ற மகனும், பெர்னிக்கா சஜன் என்ற மகளும் உள்ளனர். குடும்ப பிரச்சனையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை பரசலூர் கடை தெருவுக்கு வந்த மனைவியை சேர்ந்து வாழ வருமாறு அழைத்தபோது அவர் மறுத்ததால் ஆத்திரத்தில் பிளேடால் மனைவியின் கழுத்தை கிழித்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து தடுத்து விக்டர் வினோத்குமாரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் ஹேமா ஜூலியட்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து செம்பனார் கோவில் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.
மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் நடந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை வடக்கு காவிரிக்கரையில் கணவனுடன் உடன்கட்டை
ஏறிய பெண்மணியை தெய்வமாக பாவித்து தீப்பாய்ந்தாள்
அம்மன் என்ற பெயரில் கோவிலில் சிலை வைத்து பொதுமக்கள்
வழிபாடு நடத்தி வருகின்றனர்.
தீப்பாய்ந்தாள் அம்மன் நினைவாக ஆண்டுதோறும் மாசி மாதத்தில்,
தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு 130-ம் ஆண்டாக தீமிதி திருவிழா
நடைபெற்றது. இதனை முன்னிட்டு, காவிரி ஆற்றங்கரை
நாலுகால் மண்டபத்தில் இருந்து அலகு காவடி, சக்தி கரகம்
ஆகியவை ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியே
வீதிஉலாவாக கோயிலை வந்தடைந்தன.
கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில்
விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் ஆயிரக் கணக்கான
பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு
செய்தனர். இதில் விழா குழுவினர்கள், பொதுமக்கள்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
சீர்காழி அருகே கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் பாலாலய விழாவில் சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் பங்கேற்றார்.
சீர்காழி:
சீர்காழி அருகிலுள்ள தென்னலக்குடி கிராமத்தில் உள்ள பழமையான கன்னிகா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவில் சிதிலமடைந்துவிட்டதால் புதிதாக கட்டி குடமுழுக்கு நடத்திட கிராமவாசிகள், பக்தர்கள் ஒன்றிணைந்து முடிவு செய்தனர்.
அதன்படி குடமுழுக்கு நடத்திட பாலாலயம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு பூஜைகள், வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து பாலஸ் தாபனமும் திருப்பணி தொடக்க விழாவும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதினம் சீர்காழி சட்டைநாதர் சுவாமி தேவஸ்தானம் கட்டளை தம்பிரான் ஸ்ரீமத் சொக்கலிங்கத் தம்பிரான் சுவாமிகள் பங்கேற்று திருப்பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
விழாவில் தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் மண்டல செயளாலர் செந்தில்குமார், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன், தொழிலதிபர் ரங்கதுரை, வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன், ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
ஏற்பாடுகளை கிராம வாசிகள் செய்திருந்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் தனி சன்னதியில் நவக்கிர கங்களில் செவ்வாய் பகவானுக்கு அதிபதியான அங்காரகன், செல்வ முத்துக்குமாரசாமி, தன்வந்திரி ஆகிய சுவாமிகள் அருள் பாலிக்கின்றனர்.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
உற்சவத்தின் முக்கிய விழாவாக திருத்தேரோட்டம் நடைபெற்றது. கோவில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். முன்னதாக விநாயகர், செல்வ முத்துக்குமாரசாமி, சுவாமி அம்மன் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் பஞ்ச மூர்த்தி சுவாமிகள் எழுந்தினர்.
முதலாவதாக புதிதாக செய்யப்பட்ட தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில் தேரோட்டம் நடந்தது.
அதன் பின்னர் செல்வ முத்துக்குமார சுவாமி எழுந்தருளி பெரிய தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடிக்க நடைபெற்றது பின்னர் சுவாமி அம்மன், அங்காரகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமி தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி லாமெக் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சப்&இன்ஸ்பெக்டர் காயத்ரி மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் செய்திருந்தனர்.
மயிலாடுதுறையில் காப்பீட்டு நிர்வாகத்தை கண்டித்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற
அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராமானுஜம் தலைமையில்
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து
அரசு துறை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 8 ஆண்டுகளாக பணமில்லா மருத்துவம் என்ற பெயரில்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் மருத்துவ செலவிற்காக ஓய்வு தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையைவிட
குறைவான தொகையை மட்டும் காப்பீட்டு நிறுவனம் ஆண்டுதோறும்
மருத்து தொகையை வழங்கி வருகிறது. இதனால் நாங்கள்
கையிலிருந்து மீதமுள்ள தொகையை செலுத்தி மருத்துவம்
பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே காப்பீட்டு நிறுவனம் மருத்துவத்திற்கு பிடித்தம் செய்யப்படும் தொகையை முழுமையாக மருத்துவத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட தணிக்கையாளர் தில்லை சிவப்பிரகாசம்
விளக்கவுரையும், மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன்,
மாநில செயற்குழு உறுப்பினர் தமிழரசன், வட்டத் தலைவர்
நமச்சிவாயம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சீர்காழி அருகே கடன் பிரச்சினையால் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா நாங்கூர் கன்னி கோயில் தெருவை சேர்ந்தவர் காக்களிங்கம் மகன் கார்த்திக் (வயது 32.) இவரும் தென்னலக்குடி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகள் பாரதி (27) என்பவரும் காதலித்து கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு கௌசிக் என்ற மூன்றரை வயது மகனும், பவதாரணி என்ற 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
இவர்கள் இருவரும் தற்போது சீர்காழி தென்பாதியிலுள்ள என்.எஸ்.பி நகரில் வாடகை குடியிருப்பில் வசித்து வருகின்றனர். லாரி டிரைவரான கார்த்திக் வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு லாரி ஓட்டிக்கொண்டு அடிக்கடி சென்று விடுவது வழக்கம். கார்த்தி பலரிடம் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சொந்தமாக இடம் வாங்கி, வீடு கட்ட வேண்டும் என பாரதி தனது கணவரிடம் கூறி வந்த நிலையில், கடன் மட்டும் வாங்கி வந்ததால் மனம் உடைந்த பாரதி தனது கணவர் கார்த்திக் வெளியூருக்கு வேலைக்கு சென்றிருந்த நிலையில் தனது குழந்தைகள் இருவரையும் ஜன்னலில் தூக்கு மாட்டி கொன்றுவிட்டு, தானும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக், இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையின் போது பாரதி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் எங்கள் சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. நான் எங்கள் அப்பா அம்மாவை விட்டுவிட்டு வந்தது தவறு. என் கணவருக்கு கடன் அதிகம் உள்ளது. எங்களுக்கு இடம் வாங்கி வீடு கட்ட தெரியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி மனைவி, 2 வயது குழந்தையுடன் கொத்தனார் பலியாகியுள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வேட்டங்குடி கேவரோடை கிராமத்தை சேர்ந்தவர் நிவாஸ்ரத்தினம் (வயது 34) கொத்தனார். இவர் நேற்று மாலை தனது மாடி வீட்டில் சுவிட்ச் போர்டில் பழுதடைந்த சுவிட்சை சரி செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக நிவாஸ்ரத்தினத்தை மின்சாரம் தாக்கி துடித்தார். அதனைக் கண்ட அவரது மனைவி ஹேமா (28) இடுப்பில் தனது ஓன்றரை வயது மகள் நிஹன்யாவை தூக்கிக்கொண்டு கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.
அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் மூவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக், இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவன், மனைவி, மற்றும் குழந்தையின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சீர்காழி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்ததுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செம்பனார்கோவில் அருகே ஹரிஹரசுதன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
செம்பனார்கோயில் ஒன்றியம் ஆக்கூர் ஊராட்சி உடையார் கோயில்பத்து கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூர்ணா புஷ்களாம்பிகா உடனாகிய ஹரிஹரசுதன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக கடந்த 12-ம் தேதி முதல்யாகசாலை பூஜை தொடங்கப்பட்டது. இதனையடுத்து 2-ம் மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று 4-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை வலம் வந்து கோபுரத்தை அடைந்தனர். அங்கு வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் ஹரிஹரசுதன் சாமி மற்றும் கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர். இதில் பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. நிவேதா முருகன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் ரவி, ஒன்றிய கவுன்சிலர் ராஜ்கண்ணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கடையூர் மகா முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியம், திருக்கடையூர் ஊராட்சி கீழ வீதியில் மகா முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் தீமிதி திருவிழா கடந்த 4 &ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மகாமுத்துமாரி அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நேற்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு மாலை திருக்கடையூர் ஆணைக்குளத்தில் உள்ள எதிர்காலிஈஸ்வரர் கோவிலில் இருந்து பால் காவடி, அலகு காவடி, பறவைக் காவடிகள் உடன் கரகம் புறப்பட்டு வாணவேடிக்கை மேளதாளம் முழங்க கடைவீதி, சன்னதி வீதி, வடக்கு வீதி, மேல வீதி வழியாக கோயிலை வந்தடைந்தது.
அதனை தொடர்ந்து மகா முத்து மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.
தொடர்ந்து இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி அமிர்தம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கவுன்சிலர் துளசிரேகா ரமேஷ், ஒன்றிய குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலாசிவராஜ், மற்றும் கிராமவாசிகள் பக்தர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறையில் லோக் அதாலத் மூலம் 366 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை ஒருங்கினைந்த நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் நீதிபதி கவுதமன் தலைமையில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரிஸ்வானாபர்வின், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கார்த்திகா ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது.
60&க்கும் மேற்பட்ட வழக்குகளில் விசாரணை மேற்கொண்டதில் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் 21 வழக்குகளும், கூடுதல் துணை நீதிமன்றத்தில் 10 வழக்குகளும், மாவட்ட நீதிமன்றத்தில் 4 வழக்குகள், முன்சிப் கோர்ட்டில் 2 வழக்குகள் என சாலை விபத்து நஷ்டஈடு, குடும்ப விவாகரத்து வழக்குகள், காசோலை வழக்குகள் என மொத்தம் 37 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இதன் மூலம் ஒரு கோடியே 69 லட்சத்து 77 ஆயிரத்து 651 ரூபாய்க்கு தீர்வுகாணப்பட்டதாகவும், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நீதிபதி அமிர்தம் தலைமையில் 164 வழக்குகளுக்கு தீர்வு கானப்பட்டு 63 ஆயிரத்து 300 ரூபாய் அபராதமும், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ல் நீதிபதி அப்துல்கனி தலைமையில் 158 வழக்குகள் தீர்வுகாணப்பட்டு 25 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டது.
மாயூரம் வக்கீல்கள் சங்கத் தலைவர் விதிவிடங்கன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மாயூரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 2 வழக்கறிஞர் சங்கத்தினரும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்திருந்த நிலையில், லோக் அதாலத் வழக்கு விசாரணைக்கான வழக்காடிகளுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் இருந்த வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளை சட்டப்பணிகள் குழு தலைவர் நீதிபதி கவுதமன் நன்றி கூறினார்.
சீர்காழி அருகே கோமளவல்லி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சீர்காழி:
சீர்காழி தேர்வடக்கு வீதி கீழ்பகுதியில் அமைந்துள்ள கோமளவல்லி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா விமர்சையாக நடந்தது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் 10நாள் உத்ஸவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு உத்ஸவம் கடந்த புதன்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடு, ஆராதனை, வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக காலை திரளான பக்தர்கள் பால்குடங்கள், அலகுகாவடிகள் எடுத்துக்கொண்டு கோயிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.
பின்னர் மாலை சிவப்புகாளி ஆட்டத்துடன் கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீமித்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சீர்காழி அருகே தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் - அ.தி.மு.க. ஊராட்சித்தலைவர் இடையே மோதலில் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் தெற்கு தெருவை சேர்நதவர் தெட்சிணாமூர்த்தி (60). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இதேபோல் சட்டநாதபுரம் ஆதித்யா நகரை சேர்ந்தவர் எஸ்.எஸ்.ஜெ.விசாகர் (42) தி.மு.க ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார்.
இதனிடையே சட்டநாதபுரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடந்துவருகிறது. அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு பிளாட் சுற்றுசுவர் சேதப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து விசாகர் மற்றும் தெட்சிணாமூர்த்தியிடையே வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
கடந்த 9ம் தேதி ஒன்றியகுழு கூட்டத்தில் தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் விசாகர் சட்டநாதபுரம் ஊராட்சியில் எவ்விதமான வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என தெரிவித்தார். பின்னர் கூட்டம் முடிந்து வெளியில் வந்த விசாகரிடம், அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருவரிடையே தகராறு நடந்தது. அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
புகார் தெரிவிக்கப்பட்ட சட்டநாதபுரம் ஊராட்சி கலியபெருமாள் நகரில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, பொறியாளர் சிவகுமார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது மனையை சேதப்படுத்தி சாலை அமைக்கப்படுவதாக விசாகர், அதிகாரிகளிடம் கூறினாராம். அங்கிருந்த ஊராட்சி தலைவர் தெட்சிணாமூர்த்தி இதற்கு மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றி இருவரும் தாக்கி கொண்டதாக தெரிகிறது.
இதில் காயமடைந்த ஊராட்சி தலைவர் தெட்சிணாமூர்த்தி சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் ஒன்றிய கவுன்சிலர் விசாகரும் தாக்குதலில் காயமடைந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இருவரும் அளித்த புகாரின் பேரில் சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விசாகர், தெட்சிணாமூர்த்தி இருவர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தெட்சிணாமூர்த்தியை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், மாவட்ட அவைத்தலைவர் பி.வி.பாரதி, ஒன்றிய செயலாளர்கள் ஏ.கே.சந்திரசேகரன், ரவிச்சந்திரன், நகர செயலாளர் வினோத் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். இதேபோல் விசாகரை திமுகவினர் சந்தித்து ஆறுதல் கூறினர். திமுக ஒன்றிய கவுன்சிலர், அதிமுக ஊராட்சி தலைவரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






