என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    சீர்காழி பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு நடைபெற்று வந்தது. இதுதொடர்பான தொடர் புகாரின் பேரில் சீர்காழி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் அடுதாராணி, சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கொள்ளிடம் போலீசார் வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.

    விசாரணையில் அவர் சீர்காழி திருக்கோலக்கா தெருவைச் சேர்ந்த வாசுதேவன் (வயது 22) என்பதும் அவர் ஓட்டி வந்த வாகனம் திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து வாசுதேவனை கைது செய்த போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் திருடி மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்களை போலீசார் மீட்டு வாசுதேவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    கீராநல்லூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழி தாலுகா கீராநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்ணைக்குழுக் கூட்டம் மற்றும் பெற்றோர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜெ.மேகலா தலைமை வகித்தார்.ச.அமுதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பள்ளி முன்னேற்றம், வளர்ச்சி எதிர்காலத்தேவைகள், திட்டங்கள், மாணவர்கள் நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    பள்ளிவளர்ச்சிகள் குறித்து பள்ளி ஆசிரியர்கள் பத்மாவதி, சுமதி ஆகியோர் எடுத்துக் கூறினார்கள். தன்னார்வலர்கள் ஸ்ரீதேவி, வாஹிதாபானு கலந்து எஸ்.எம்.சி. உறுப்பினர்களின் பங்களிப்பு பற்றி பேசினார்கள். பிரியா பள்ளியின் சிறப்புகள் பற்றி காணொளி மூலம் விளக்கினார். கூட்டத்தில் பெற்றோர்கள், உறுப்பினர்கள் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    திருக்கடையூருக்கு பாதயாத்திரையாக வந்த தருமபுர ஆதீன மடாதிபதிக்கு மும்மதத்தினர் வரவேற்பு அளித்தனர்.
    தரங்கம்பாடி:

    திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தருமபுர ஆதீன 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், நேற்று முன்தினம் ஆதீன மடத்தில் இருந்து ஆதின பூஜா மூர்த்தியாகிய சொக்கநாதப் பெருமான் உடன் குரு லிங்க சங்கம பாதயாத்திரையை தொடங்கினார். நேற்று 2-ம் நாளாக பாதயாத்திரை காலஹஸ்தினாபுரத்தில் இருந்து தொடங்கியது.

    ஆக்கூர் ஊராட்சியில் தலைவர் சந்திரமோகன் தலைமையில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வரவேற்பில், சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பள்ளிவாசல் சார்பில் ஜமாத்தார்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் ஆகிய மும்மதத்தினரும் தருமபுர ஆதீன மடாதிபதிக்கு மரியாதை செய்து வரவேற்றனர். 
    தொடர்ந்து ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பூரண கும்ப மரியாதையுடன் மரியாதை அளிக்கப்பட்டது.

    தருமை ஆதீனம் சிவனை வழிபட்டு வரவேற்பு அளிக்க வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ஆக்கூர் முக்கூட்டு முனீஸ்வரன் கோவிலில் ஒன்றிய கவுன்சிலர் சாந்தி முருகவேல் மடாதிபதியை வரவேற்றனர். 

    நேற்று இரவு திருக்கடையூர் அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில் நுழைவு வாயிலில் பாதயாத்திரையாக வந்த தருமபுர மடாதிபதியை திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலா சிவராஜ், ஊராட்சி செயர் வெங்கடேசன், வார்டு உறுப்பினர் செந்தில் உட்பட பலர் பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவேற்றனர். 

    இதனை தொடர்ந்து கோவிலுக்கு சென்றடைந்த தருமபுர ஆதீன மடாதிபதியை கோவில் ஊழியர்கள், பொருளாளர் ஸ்ரீராம் தலைமையில் மலர்கள் தூவி வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் கணேஷ் குருக்கள், மகேஸ் குருக்கள் பள்ளி, கல்லூரி நிர்வாக செயலர் செல்வநாயகம், முன்னாள் ஏ.வி.சி. கல்லூரியின் செயலாளர் செந்தில்வேலன், உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
    செம்பனார்கோவில் ஒன்றியத்தில் ரூ.25 லட்சத்தில் 3 மின்மாற்றிகள் திறக்கப்பட்டது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், பரசலூர் ஊராட்சி, நல்லாடை மெயின் ரோட்டில் குறைந்த மின் அழுத்தத்தை போக்க 2 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சிக்கு பரசலூர் ஊராட்சி தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் (சீர்காழி) லதாமகேஸ்வரி, முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் நாகராஜன் வரவேற்றார். நல்லாடை மெயின் ரோட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 100 கிலோ வோல்ட் கொண்ட மின் மாற்றியும், அதே இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் 63 கிலோ வோல்ட் கொண்ட மின்மாற்றியும் அமைக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் ஆறுபாதி ஊராட்சியில் 100 கிலோ வோல்டில் விவசாயத்திற்கு ஒரு லட்சம் பம்பு செட்டுகள் மின் இணைப்பு கொடுத்து பயன்படும் வகையில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

    மொத்த செலவு ரூ.25 லட்சம் ஆகும். இதனை கோட்டப் பொறியாளர் லதா மகேஸ்வரி செயல்பாட்டுக்கு திறந்துவைத்தார். செம்பனார்கோயில் உதவி செயற் பொறியாளர்கள் விஸ்வநாதன், அப்துல் வஹாப், மற்றும் மின் வாரிய ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
    செம்பனார்கோவில் அருகே தில்லைகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    தரங்கம்பாடி:

    செம்பனார்கோயில் அருகே நடுக்கரை ஊராட்சி கீழப்பாதி கிராமத்தில் உள்ள தில்லைகாளியம்மன் கோவிலில் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. 

    முன்னதாக பூர்வாங்க பூஜைகள், அனுக்ஞை பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது.

    கணபதி பிரார்த்தனை, கங்கா பூஜை, சூரிய பூஜை, மகா பூர்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் அடங்கிய கடங்களை, வேத விற்பன்னர்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்து கோபுரத்தை அடைந்தனர். 

    அங்கு வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பா பிஷேகம் நடைபெற்றது. பின்னர் தில்லை காளியம்மன் மற்றும் கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப் பட்டது.
     
    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார், துணைத் தலைவர் மகாலெட்சுமி சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    சீர்காழி நகராட்சியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை செலுத்தாத கடைகளில் நகராட்சி ஆணையர் இப்ராஹிம் உத்தரவின்பேரில் சோதனை நடத்தப்பட்டது.

    மேலாளர் காதர்கான், கணக்கர் சார்லஸ், வருவாய் ஆய்வாளர் ராஜ கணேஷ், இளநிலை உதவியாளர் பாபு, வருவாய் உதவியாளர்கள் ரவி, முருகானந்தம், பணி மேற்பார்வையாளர் வீரப்பன் ஆகியோர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். 

    அப்போது வாடகை செலுத்தாத 2 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
    மயிலாடுதுறையில் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான சாரண-சாரணியர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது.

    இதில் மாவட்டம் முழுவதும் 60 பள்ளிகளில் இருந்து, 540 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். உலக சமாதானம் வேண்டியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி முக்கிய வீதிகள் வழியாக பேரணி புறப்பட்டு மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
    மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிக்கு வருகிற 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லலிதா தகவல் தெரிவித்துள்ளார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலருமான இரா.லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
    இந்திய தேர்தல் ஆணையம், ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக 2022-ம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு எனது வாக்கு எனது எதிர்காலம்-ஒரு வாக்கின் வலிமை என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டியை தொடங்கியது.

    இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்க முறையான அறிவூட்டல் என்ற திட்டத்தின் மூலமாக மக்களின் திறமை மற்றும் படைப்பாற்றலை இப்போட்டியில்பங்கேற்க செய்வதன் வாயிலாக மக்களாட்சியின் முக்கியத்துவத்தை பறை சாற்றுகிறது.

    இதில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். மக்களாட்சியில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்ற கருப்பொருளை மையமாக் கொண்டு மக்களின் ஏராளமான படைப்புகள் வரவேற்க்கப்பட்டு இதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 2097 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

    இப்போட்டியில் கலந்து கொள்ள நிர்ணயிக்கப்பட்ட காலம் வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    வினாடிவினா, வாசகம் எழுதுதல், பாட்டு, காணொலி காட்சி உருவாக்குதல், விளம்பரப்பட வடிவமைப்பு போட்டிகள் என 5 பிரிவுகள்.

    விதிமுறைகள், நிபந்தனைகளை தொடர்புடைய வலைதளத்தில் காணலாம்.போட்டி பதிவுகளை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பங்கேற்பாளர்கள் பெயர் மற்ம் பிரிவு ஆகியவற்றை தெரிளவாக குறிப்பிட வேண்டும். வினாடிவினா போட்டிக்கு வலைதளத்தில் பதிவு செய்யலாம்.

    போட்டி தொடர்பான அனைத்து பதிவுகளும் பங்கேற்பாளர்களின் விவரங்களுடன் இணைத்து 31-ந்தேதிக்குள் மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ஊக்கப்பரிசாக இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிசு மற்றும் அடையாள வில்லை வழங்கப்படும். பங்கேற் பாளர்கள் அனைவரும் போட்டியின் 3 நிலைகளை நிறைவு செய்ததன் பேரில் மின்னணு சான்றிதழ் பெறுவர். 

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    சீர்காழி அருகே ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் கட்டுமானப் பணியை வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் ஆய்வு செய்தார்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுமானப் பணியை ஆய்வு செய்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் மதிவாணன் நிருபர்களிடம் கூறுகையில்,

    கொண்டல், மாதானம், அகர பெருந்தோட்டம், தென்னாம் பட்டினம் ஆகிய ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் ரூ.2 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. 

    நடந்து வரும் பணிகளை விரைவு படுத்தவும், பணிகளின் தரம் குறித்த ஆய்வு செய்தேன்.மேலும் அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்தேன்.

    பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கவும், கொண்டல் பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர் அது குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

    ஆய்வின்போது சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், கோட்டாட்சியர் நாராயணன், தாசில்தார் சண்முகம், தாட்கோ செயற்பொறியாளர் உதய ராமன், உதவி செயற்பொறியாளர் அமிர்தலிங்கம், திமுக ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், சசிகுமார், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    மயிலாடுதுறையில் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில பா.ஜ.க அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிம்சன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ரவீந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    மாவட்ட செயலாளர் துரைராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சீனிவாசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், மாவட்ட பொருளாளர் வைரவன், மாவட்ட துணைச் செயலாளர் ராயர், இயற்கை விவசாயி ராமலிங்கம் மற்றும் விவசாய சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
    தரங்கம்பாடி அருகே ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இடத்தை மீட்டுத்தர வேண்டும் என எஸ்.பி.யிடம் வாலிபர் புகார் மனு அளித்தார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா வதிஸ்டாச்சேரி பகுதியை சேர்ந்த ஹனிபா மகன் ஷாஜகான் என்பவர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் மனு கொடுத்துள்ளார். 

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

    எனது தாய்மாமன் அகமது என்பவரது இடத்தை நான் பராமரித்து வந்ததேன். மாமா அகமது ஊருக்கு வந்து அந்த இடத்திற்கு ரூ.5 லட்சம் விலை பேசி ரூ.1 லட்சத்தை வாங்கிகொண்டு ஊருக்குச் சென்றார்.

    மீண்டும் வரும்போது பாக்கித் தொகையை கொடுத்துவிட்டு பதிவு செய்வதாகக் கூறி பத்திரம் எழுதி கையொப்பம் இட்டு கொடுத்துவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார். 

    இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த முத்தவள்ளி மகன் ஜர்ஜிஸ், சேத்து மரைக்காயர் மகன் சபீர், மேலும் 2 பேர் சேர்ந்து ஷாஜகான் வாங்கிய இடத்திற்குச் சென்று அந்த இடத்தில் வேலி அமைக்க கம்பிவேலிகளை இறக்கியுள்ளனர். அங்கே இருந்த மரங்களையும் வெட்டி உள்ளனர். இதுகுறித்து கேட்டதற்கு தகராறில் ஈடுபட்டனர்.

    மேலும் தன்னை அடைத்து வைத்து வெற்றுப் பத்திரத்தில் கையொப்பம் வாங்கியுள்ளனர். அந்த நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
    சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. 
    இக்கோவிலில் மலையின் மீதும் தோணியப்பர்-உமாமகேஸ்வரர், சட்டைநாதர் சுவாமி அருள் பாலிக்கின்றனர்.

    இங்கு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைபெற்றது. கோசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசு மாடு, கன்றுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கொடிமரம் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
    ×