என் மலர்
மதுரை
- தற்போது இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவை உள்ளது.
- இரவு நேரங்களில் விமான சேவை இல்லாமல் இருந்தது.
மதுரை :
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், இலங்கை, துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் விமான சேவை நடைபெற்று வருகிறது. தற்போது மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவை உள்ளது.
வெளிநாட்டு விமான சேவை நடைபெறும் நாட்களில் கூடுதலாக 2 மணி நேரம் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் விமான சேவை இல்லாமல் இருந்தது. தென் மாவட்ட மக்கள், வர்த்தகர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து, மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்க வழிவகை செய்ய வேண்டும் என பல கட்டங்களாக வலியுறுத்தி வந்தனர்.
இதற்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தற்போது அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி மதுரை விமான நிலையம் வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் 24 மணி நேர சேவை நடைபெற அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிப்பதோ செய்யக்கூடாது.
- கோவில்களில் ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது
மதுரை:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மல்லா கோட்டை கிராமத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் விழாவில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்க கூடாது என்றும், கோவில் வழிபாட்டில் அனைவரையும் சமமாக நடத்த உத்தரவிட கோரியும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிப்பதோ செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மேலும், கோவில்களில் ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- தந்தை பெரியாரும், பெருந்தலைவர் காமராஜரும், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட மாபெரும் தலைவர்கள்.
- காமராஜர் ஆட்சியை வரவேற்று ஒரு பெரிய தலையங்கத்தை எழுதினார் பெரியார்.
தந்தை பெரியாரும், பெருந்தலைவர் காமராஜரும், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட மாபெரும் தலைவர்கள். நேரிலே இருவரும் அதிகமாகச் சந்தித்துக் கொண்டதில்லை. கட்சிக் கொள்கைகளில் கருத்து வேறுபாடு இருந்தாலும், அடிப்படைக் கொள்கைகளில் ஒரே கருத்துடையவர்கள். அடித்தட்டு மக்களை, சமுதாயத்தில் உயரத்திற்கு கொண்டு வருவதற்காக உழைத்தவர்கள். தமிழினத்தின் உயர்வுக்காக பாடுபட்டவர்கள்.
1936 வரை தந்தை பெரியார், காங்கிரஸ் கட்சியிலே தான் இருந்தார். தலைவர், செயலாளர் என்று பல பொறுப்புகளிலும் சிறப்பாகப் பணியாற்றினார். காந்தியடிகளின் கொள்கையினை ஏற்று, மதுவிற்கு எதிராகப் பிரசாரம் செய்ததோடு தனது தோட்டத்திலே இருந்த 500 தென்னை மரங்களில் இருந்து "கள்" இறக்குவதைத் தடுத்து, அவற்றை அடியோடு வெட்டிச் சாய்த்தவர்தான் பெரியார். அது மட்டுமல்ல, கதர்த் துணிகளை தனது தலைமையிலே சுமந்து கொண்டு வீதி வீதியாக விற்ற பெருமையும் பெரியாருக்கு உண்டு.
நமது கொள்கைக்கும் காங்கிரசுக்கும் இனிமேல் ஒத்துவராது என்று சொல்லி 1937-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி வெளியே வந்துவிட்டார் பெரியார். காங்கிரசிலே இருந்தபோது சாத்தூரில் நடைபெற்ற தாலுகா காங்கிரஸ் கமிட்டி மாநாட்டிலே பெரியார் கலந்து கொண்டபோது காமராஜர் அதிலே ஒரு தொண்டராக கலந்து கொண்டார். அப்போது இருவருக்கும் இடையே எவ்வித அறிமுகமும் இல்லை. அதே போன்று கேரளாவிலே, வைக்கம் என்ற ஊரிலே உள்ள ஒரு தெருவிலே தாழ்த்தப்பட்டோர் நுழையக் கூடாதென்ற நிலை இருந்தபோது, பெரியார் தலைமையிலேதான் ஒரு மிகப்பெரிய போராட்டமே அங்கு நடந்தது. அப்போது அங்கிருந்த தனது தாய் மாமா கடையிலேதான் காமராஜர் பணியாற்றிக் கொண்டிருந்தார். பெரியார் நடத்திய போராட்டத்திலும் ஒரு பார்வையாளராக காமராஜர் கலந்து கொண்டார். அப்போதும் இருவருக்கும் இடையே எந்த உறவும் நட்பும் இல்லை என்ற நிலைதான் இருந்தது.
ராஜாஜி முதல்-அமைச்சராக இருந்தபோது, அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை கடுமையாக எதிர்த்தவர்களில் காமராஜரும் ஒருவர். அப்போது காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தார். காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து கொண்டு, ராஜாஜியை எதிர்க்கிற தைரியம் ஒருவருக்கு இருக்கிறதென்றால் அவர் நிச்சயம் சமநோக்கு உடையவராகத்தான் இருப்பார் என்பது காமராஜரைப் பற்றிய பெரியாரின் கணிப்பு அது.
ராஜாஜி பதவியை விட்டு விலகினால் அந்த இடத்திற்கு முதல்-அமைச்சராக யார் வருவது? என்ற விவாதம் நடந்து கொண்டிருந்த நேரம் அது. அப்போது பெரிய தலைவராக விளங்கிய வரதராஜுலு நாயுடு போன்ற தலைவர்கள் எல்லோரும், காமராஜர், தான் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்று வற்புறுத்திய வண்ணம் இருந்தனர். ஆனால் பதவி ஆசை எதுவும் இல்லாத காமராஜர். தான் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்பதிலே எவ்வித ஆர்வமும் காட்டவில்லை. குலக்கல்வித் திட்டத்தை வாபஸ் வாங்கிக் கொண்டு ராஜாஜியே முதல்-அமைச்சராக நீடிக்கட்டும் என்ற நிலைப்பாட்டிலேதான் காமராஜர் இருந்தார். ராஜாஜியை நேரில் சந்தித்து வற்புறுத்தவும் செய்தார். அன்றைக்கு இருந்த உண்மை நிலை அதுதான். ஆனால் காமராஜரின் நெருங்கிய நண்பர்கள் எல்லாம் காமராஜர் முதல்-அமைச்சராக வரவேண்டும் என வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு காமராஜர் முதல்-அமைச்சராக வந்தால்தான், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் விடிவு காலம் உண்டு என்பதை உணர்ந்திருந்த தந்தை பெரியார் நீங்கள்தான் முதல்-அமைச்சராக வரவேண்டும் என காமராஜரிடம், மிகவும் வேண்டிக் கொண்டதோடு, வற்புறுத்தவும் செய்தார். இறுதியில் இதைச் செய், அதைச் செய் என்று கட்சிக்காரர்கள் எனக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கக்கூடாது என்ற நிபந்தனை விதித்து அதற்குப் பிறகுதான் முதல்-அமைச்சர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் காமராஜர் என்பதுதான் வரலாறு. ஆக காமராஜர் முதல்-அமைச்சராக வருவதற்கு பெரியார் ஓர் உந்து சக்தியாக இருந்தார் என்பது மறுக்க முடியாத, மறைக்க முடியாத வரலாறாகும்.
1937-ல் இருந்து காங்கிரசைக் கடுமையாக எதிர்த்த பெரியார், 1952-லே நடந்த பொதுத்தேர்தலிலே, காங்கிரசை எதிர்த்து தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் தங்களுக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, கம்யூனிஸ்டுகளை வெற்றி பெறச் செய்தார் பெரியார். காமராஜர் முதல்-அமைச்சரான பிறகு தனது நிலைப்பாட்டினை முற்றிலும் மாற்றிக் கொண்டு, காங்கிரசை கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தார் என்பதுதான் வரலாறு.
காமராஜர் பதவி ஏற்ற மகிழ்ச்சியில் அதாவது 15.4.1954 அன்று விடுதலை நாளேட்டில், காமராஜர் ஆட்சியை வரவேற்று ஒரு பெரிய தலையங்கத்தை எழுதினார் பெரியார். அதை அப்படியே தருவது என்பது காமராஜரை எப்படிப் பெரியார் புரிந்து வைத்திருந்தார் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது என்பதாலும் இந்த வரலாற்றினை வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவும், ஒருவரிகூட மாற்றாமல் அப்படியே தருகிறேன்.
"சாதியை ஒழிப்பதற்கு இது நல்ல தருணம். காமராஜர் அவர்கள் முதல்-அமைச்சராகி இருக்கிறார். இவருக்கு சாதியை ஒழிப்பதில் தனி அக்கறை உண்டு என்பது நமக்குத் தெரியும். இதுபற்றி பல தடவை பேசியிருக்கிறார்" என்று தனது தலையங்கத்தை தொடங்குகிறார் பெரியார்.
"சுயராஜ்யம் வந்த பிறகு சாதி வெறி பல மடங்கு வளர்ந்து விட்டதென பல தடவை கூறியிருக்கிறார். இந்த சாதி வெறியை ஒழிப்பதற்கு எது வேண்டுமானாலும் செய்யத் தயார் எனவும் பலதடவை தெரிவித்திருக்கிறார். சாதி மாநாடுகளில் இவர் கலந்து கொள்வதில்லை என்பது நம் நினைவு....
இப்பேர்ப்பட்டவர், இனிச் செய்கை மூலம் தம் லட்சியத்தைப் பெற வேண்டும். இதற்கான கால்கோள் விழாவை நடத்திவிட்டார் என்றே நாம் கருதுகிறோம். ஒரு குறிப்பிட்ட சாதிக்காகவே தோன்றிய இரண்டு அரசியல் கட்சிகளை (உழைப்பாளர் கட்சி மற்றும் காமன் வீல் கட்சி) தனது சாமர்த்தியத்தால் கலைக்கும்படி செய்து காங்கிரசோடு இணக்கமாக இணைத்துக் கொண்டார். தனி சாதிக்காக ஒரு அரசியல் கட்சி என்ற அவமானத்தை போக்கிவிட்ட வகையில் இக்காரியம் சமுதாயத்துறையில் வரவேற்கப்படக் கூடிய ஒன்று என்பதே நம் கருத்து.
சாதி ஒழிப்பு உணர்ச்சியை மக்களிடையே பரப்புவதற்கு இது நல்ல தருணம். சுயமரியாதைக் காரர்களுக்கும் இது நல்ல தருணம். சட்டதிட்டங்கள் மூலம் முதல்-அமைச்சர் இக்காரியத்தை சாதிக்கலாம். வழக்கமான பிரசாரத்தின் மூலம் சுயமரியாதைக்காரர்கள் இவருக்கு உதவியாக இருக்கலாம். புத்தர்கள், சித்தர்கள் பிரம்ம சமாஜ் தலைவர்கள், சமுதாய சீர்திருத்தவாதிகள் ஆகிய பலரால் சாதிக்க முடியாத ஒரு காரியத்தை ஒரு முதல்-அமைச்சர் வெற்றிகரமாக செய்து முடித்துவிட்டார் என்ற நிலை ஏற்பட்டால் அது இந்திய வரலாற்றிலேயே இடம் பெறக்கூடிய சாதனை அல்லவா இது"
என்று காமராஜருக்கு தந்தை பெரியார் புகழாரம் சூட்டி எழுதிய சிறப்பான தலையங்கம் இது. அன்றைய அரசியல் சூழலில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது என்றே சொல்லலாம்.
ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து திராவிடக் கழகத்தைச் சேர்ந்த 600 பேர் பாத யாத்திரை மேற்கொண்டு சென்னையை நோக்கி வந்தனர். இவர்கள் வெற்றி கிடைக்கும் என்று வந்தவர்கள் அல்ல. சிறைச்சாலை போவது நிச்சயம் என்று வந்தவர்கள். முதல்-அமைச்சர் காமராஜரைப் பார்த்து தங்கள் கோரிக்கை மனுவை கொடுத்த போது, அனைவருக்கும் இருக்கை கொடுத்து அமர வைத்து, "ஒன்றும் கவலைப்படாதீங்க நானும் உங்க ஆளுதான். நாளைக்கே உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வரும்" என்று அவர்களை அனுப்பி வைத்தார் காமராஜர். ஆச்சரியத்தில் திராவிடக் கழகத்தினர் உறைந்து போய்விட்டார்கள்.
மறுநாளே ராஜாஜி கொண்டு வந்த "குலக்கல்வி திட்டம் ரத்து" என்று அரசாணை பிறப்பித்துவிட்டார் காமராஜர். பத்திரிகையில் இந்தச் செய்தியைப் பார்த்த தந்தை பெரியார் காமராஜர் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்று முதன் முதலாகச் செய்த சாதனை இது. நம் மக்களுக்குச் செய்த பேருதவியாகும். இது மட்டும் நடக்கவில்லை என்றால் நம்மில் பல பேர் சுடப்பட்டு இருப்பார்கள். சிலர் தூக்கு மேடை ஏற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் நடைபெறாமல் காமராஜர் தடுத்துவிட்டார் என்று பெரியார் பாராட்டி மகிழ்ந்தார்.
காமராஜருக்கும், எனக்கும் மிகப்பெரிய நெருக்கம் இருக்கிறதென்றும் தினம் பேசிக் கொள்கிறோம். அடிக்கடி சந்தித்துக் கொள்கிறோம் என எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல. அவர் முதல்-அமைச்சராக வருவதற்கு முன்பு இரண்டு மூன்று வருடங்களாகத்தான் அவரைப் பற்றி ஓரளவு தெரியும். அரக்கோணத்தில் ஒரு தடவை பார்த்தேன். மேயர் வீட்டில் ஒரு தடவை பார்த்தேன். எனது பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்ல வந்த போது ஒருமுறை பார்த்தேன். அவ்வளவுதான்.
அவரும் என்னைப் போலவே மொட்டை மரம். எனக்காவது திருமணம் உண்டு. அவருக்கு அதுவும் இல்லை. பெற்றெடுத்த தாயார் உண்டு. ஆனால் அவர் பெயரில் சொத்து சுகம் எதுவும் இல்லை என்றெல்லாம் காமராஜரின் தியாக வாழ்க்கை பற்றிக் குறிப்பிட்டு கூட்டங்களில் பேசினார் தந்தை பெரியார்.
இப்படிப்பட்ட ஒருவர்தான் நமக்கு வேண்டும். 1937-ல் இருந்து 1954 வரை (அதாவது முதல்-அமைச்சராக காமராஜர் பொறுப்பேற்கும் வரை) எப்படிக் கடுமையாக காங்கிரசை எதிர்த்தேனோ. அதே போல காமராஜர் இந்த தமிழ்த் சமுதாயத்திற்குச் செய்யும் நன்மைகளுக்காக வருகிற தேர்தலில் காங்கிரசை ஆதரிக்கப் போகிறேன் என்று பேசினார் பெரியார்.
தற்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல்தான் முதல்-அமைச்சராகி இருக்கிறார் காமராஜர். தேர்தலில் நின்று வெற்றி பெற்றால்தானே முதல்-அமைச்சர் பொறுப்பிலே நீடிக்க முடியும். மேலவை உறுப்பினராக வந்து முதல்-அமைச்சர் பொறுப்பிலே நீடிப்பதை காமராஜர் விரும்பவில்லை. நேரடியாக மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்டு, வெற்றி பெற்று பதவியில் அமர்வதே ஜனநாயக முறை என்று சொல்லி அப்போது காலியாக இருந்த குடியாத்தம் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்தார் காமராஜர். நேரடியாக தொகுதிக்கே சென்று மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரித்தார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் பெரியாரின் ஆதரவைக் கோரவில்லை. ஆனால் யாருடைய வேண்டுகோளையும் எதிர்பார்க்காமல் காமராஜரை ஆதரித்துப் பேசினார் பெரியார். திராவிடர் கழகம் தானாகவே முன்வந்து இந்த ஆதரவைத் தெரிவித்தது. ஆத்தூரிலே ஒரு கூட்டத்திலே பேசிக் கொண்டிருந்தபோதுதான் இந்த அறிவிப்பினை வெளியிட்டுப் பேசினார் தந்தை பெரியார்.
அப்போது மிகவும் பிரபலமாக விளங்கியவர் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு. காங்கிரசிலே மிகவும் முக்கியமான தலைவராக விளங்கியவர். பெரியாருக்கும், காமராஜருக்கும் மிக நெருக்கமான நண்பராக இருந்தவர். அவருடைய பிறந்த நாள் விழா 21.11.1955 அன்று ராஜாஜி ஹாலிலே நடைபெற்றது. அந்த விழாவிலே தந்தை பெரியாரும், முதல்-அமைச்சராக இருந்த காமராஜரும் கலந்து கொண்டதும், இருவரும் சந்தித்துக் கொண்டதும் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
அந்த விழாவிலே பெரியார் பேசிய பேச்சு, மிகவும் குறிப்பிடத்தக்க பேச்சாகும். அதனையும் நமது வாசகர்களின் பார்வைக்கு அப்படியே தருகிறேன்.
"தலைவர் காமராஜர் என்னைப் பற்றிக் குறிப்பிட்டார். அதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காமராஜரிடம் அன்பு கொண்டு, என்னான வழிகளில் அவருக்கு ஆதரவு கொடுத்து வருகிறேன். காரணம் அவர் சில விஷயங்களில் தமிழன் என்ற உணர்வோடும், உணர்ச்சியோடும் ஆட்சி நடத்துகின்றார். அதனால், சிலருக்கு பொறாமை ஏற்பட்டு வகுப்புக் காரணமாக சில எதிரிகள் இருந்து கொண்டு அவருக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள். அப்படி அவர்கள் கொடுக்கிற தொல்லைகள் ஒரு போதும் வெற்றி பெற்று விடக்கூடாது. வெற்றி பெற்றுவிட்டால் தமிழர்களின் நிலைமை மிக மிக மோசமாகிவிடும்.
உத்தியோகத் துறையில் நமது தமிழர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுவிடும். அப்படிப்பட்ட பின்னடைவு ஏற்படாமல் இருக்க நமது இனத்தை காப்பாற்ற முதல்-அமைச்சர் பொறுப்பிலே இருக்கிற காமராஜரால் மட்டுமே அது முடியும். இந்த கருத்தினை ஏற்கனவே காமராஜர் தன்னகத்தே கொண்டிருப்பதால் அதற்காக அவர் பாடுபடுவதை, ஏதோ எனக்கு அவர் ஆதரவு தருவது போல சிலர் பேசுகிறார்கள்.
நான் அரசியல் தொண்டனல்லன். நான் ஒரு சமுதாய நலத்தொண்டன். அதிலும் நமது தமிழ் மக்களின் நலனுக்காக பாடுபடுகிற தொண்டன். அதை முன்னிட்டு அரசியல் என்பதை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் எதிர்க்கவும் விட்டுக் கொடுக்கவும் நான் துணிவேன். காமராஜருக்கும் எனக்கும் கட்சி அளவில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர் நலன் என்று வரும்போது இருவருமே ஒத்த கருத்துடையவர்களாக இருக்கிறோம். மற்றபடி எங்கள் இருவருக்கும் இடையே எந்த சுயநல நோக்கம் எதுவுமே இல்லை என்று அந்த விழாவிலே பெரியார் பேசியது குறிப்பிடத்தக்கது.
பெரியார் இது போல காமராஜரை பற்றி அவரது சாதனைகள் பற்றி பல இடங்களில் பேசியிருக்கிறார். அடுத்த தொடரில் அதனை விரிவாக பார்க்க இருக்கிறோம். அதே சமயத்தில் பெரியாரைப் பற்றி காமராஜர் பேசிய பேச்சினையும் நாம் பார்க்க வேண்டும் அல்லவா. அது தானே சரியான பார்வையாக இருக்க முடியும். திருச்சியில் உள்ள வரகனேரி என்ற இடத்தில் பள்ளத்தெரு என்ற இடத்தில் அந்த பெயரை மாற்றி விட்டு பெரியார் நகர் என்ற பெயர் சூட்டி அதனை திறந்து வைத்து காமராஜரை பேசுவதற்கு அழைத்திருந்தார்கள். அப்போது காமராஜர் பெரியாரை பற்றி ரத்தின சுருக்கமாக பேசியது குறிப்பிடத்தக்கது.
ஜாதி பேதமற்ற சமுதாயத்தை தனது வாழ்நாளிலே கண்டுவிட வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கிற பெரியாரின் பெயரை இங்கே நீங்கள் சூட்டி இருப்பது மிகவும் பொருத்தமானது. அதற்காக தானே அவர் போராடிக் கொண்டிருக்கிறார். கேரளாவில் வைக்கம் நகரில் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தை முன் நின்று நடத்தியவரே பெரியார் தான். அதனால் தான் தமிழ் தென்றல் திரு.வி.க. பெரியாரை "வைக்கம் வீரர்" என்ற பட்டம் சூட்டி அழைத்தார்.
ஜாதி ஒழிப்புக்கு சட்டம் போட்டு ஒரு சமூகத்தை மாற்றி அமைத்துவிட முடியாது. அதற்கு ஜனங்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். முதலில் மூடப்பழக்க வழக்கங்களில் இருந்து நாம் விடுபட வேண்டும். அதற்காகத்தான் பெரியார் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட பெரியார் நீடூடி வாழ்ந்து சேவை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று பேசி முடித்தார் பெருந்தலைவர் காமராஜர்.
அடுத்த வாரம் சந்திப்போம்.
- குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்தார்.
- இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை
தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன் தனது தொகுதி பிரச்சினைகள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடை ஆரம்ப கட்ட பணிகள் மட்டும் நடைபெற்றுள்ளன. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடைகள் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் சாக்கடை, குடிநீரிலும் கலப்பதால் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு அவ்வப்போது பொது மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், அனைத்து பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை பணிகளை முழுமையாக நிறைவேற்றி தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்து ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே. என். நேரு பேசும்போது, பூமிநாதன் எம்.எல்.ஏ. கோரிக்கைகள் தொடர்பாக நான் ஏற்கனவே சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்த்துள்ளேன்.
குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க மதுரை மாநக ராட்சி கமிஷன ரிடம் பேசி இந்த பிரச்சி னைகளுக்கு தீர்வு காணப்படும் என்றார்.
- திருப்பரங்குன்றம் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
- அவர்கள் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் தாலுகா கோடாங்கி தோப்பு தெரு பகுதியில் கிராம நத்தம் மற்றும் புறம்போக்கு பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து தற்போது திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி வட்டாட்சியரிடம் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.
இதேபோல தென்பரங்கு ன்றம் காட்டுநாயக்கர் தெரு பகுதி மக்களும் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தாலுகா அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
- ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
- போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினார்கள்.
மதுரை
மதுரை மாநகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளி மாவட்டங்களில் இருந்து ரவுடிகள் கொள்ளை யடிப்பதற்காக, ஆயுதங்க ளுடன் ஊடுருவி இருப்பதாக மாநகர போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இன்று அதிகாலை கீரைத்துறை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஆயுதங்களுடன் 2 பேர் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினார்கள்.
இருந்தபோதிலும் தனிப்படை போலீசார் 2 பேரையும் பிடித்தனர். அப்போது அவர்கள் அரிவாள், உருட்டுக்கட்டை, மிளகாய் பொடி மற்றும் கயிறு ஆகியவை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் பிடிபட்ட 2 பேரையும், போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சிந்தாமணி கண்ணன் காலனி, சோலைமாரி மகன் திருக்குமார் என்ற கோழி குமார் (வயது 19), மேலதோப்பு, தாயுமானவசாமி நகர், நிறைகுளத்தான் மகன் சதீஷ்குமார் (22) என்பது தெரியவந்தது. கோழிகுமார் மீது கீரைத்துறை போலீசில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சதீஷ்குமார் மதுரை மட்டுமின்றி, ராமநாதபுரம் மாவட்டத்திலும் மேலத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவங்களிலும் தொடர்புடையவன். அவன் மீது கோவிலாங்குளம் போலீஸ் சரகம் உள்பட மதுரையின் பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும் பிடிபட்ட 2 பேரும் மதுரை மாநகரில் கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர்களை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.
- சமாதான கூட்டத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஆதிதிராவிட நலத்துறை இணை இயக்குனரை இணைத்து, மாவட்ட நிர்வாகம் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும்.
- சட்ட, ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, ஜல்லிக்கட்டு போட்டியை தலைமை ஏற்று நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை:
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த முனியசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 1-ந்தேதி அன்று பொங்கல் திருநாளையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் வருகிற பொங்கல் தினத்தன்று (ஜனவரி மாதம் 15-ந்தேதி) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க உள்ளன.
அவனியாபுரம் அம்பேத்கர்நகர் பகுதியில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவனியாபுரத்தில் பிற சமூகத்தை சேர்ந்தவர்களும் வசிக்கிறார்கள். கடந்த ஆண்டில் கோர்ட்டு உத்தரவின்பேரில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. ஆனால் கோர்ட்டு உத்தரவின்படி அனைத்து சமூகத்தினரையும் சேர்க்காமல் குறிப்பிட்ட சமூகத்தினர் அடங்கிய குழு மட்டும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவை நடத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த குழுவில் ஆதிதிராவிடர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். இது ஏற்புடையதல்ல. எனவே கடந்த ஆண்டு நடத்தப்பட்டதைப்போல கோர்ட்டு உத்தரவின்படி அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து வருகிற பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் விஜயகுமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கென அரசு பல ஏற்பாடுகள் மற்றும் செலவுகளைச் செய்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கென நிலையான வழிகாட்டுதல்கள், நடைமுறைகள் உள்ளன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கென பல சமூகத்தினரும், அமைப்புகளும் கமிட்டி உருவாக்குகின்றனர். பலவகை சமாதான கூட்டம் நடத்தியும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் தலைமையில் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணையில் மனுதாரர் தரப்பில், 2022-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் படி ஒருங்கிணைப்புக் குழுவில் அதிகாரிகளும், ஆலோசனைக்குழுவில் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாயத்தினரையும் ஒன்றிணைத்து குழு உருவாக்கி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஆண்டும் அதேபோல் குழு அமைத்து ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள் ஆலோசனை குழுவின் வேலை என்ன ஒருங்கிணைப்பு குழுவின் வேலை என்ன என கேள்வி எழுப்பினர்.
இதற்கு மனுதாரர் தரப்பில், ஆலோசனை குழுவில் கிராமத்தின் அனைத்து சமுதாய உறுப்பினர்களும் இணைந்து காளைகளை தேர்வு செய்வது, பந்தல்கால் நடுவது, விழாக்களை நடத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு அரசு தரப்பில், இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பொருத்தவரை ஆலோசனைக்குழு என எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு கருத்துக்களையும் கேட்ட நீதிபதிகள், தங்களது உத்தரவில் அவனியாபுரத்தில் அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து, நாளை (13-ந் தேதி) மாவட்ட கலெக்டர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்த வேண்டும். சமாதான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டால் அவனியாபுரம் அனைத்து சமுதாய கிராம மக்கள் இணைந்த ஆலோசனைக்குழுவை உருவாக்கி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்.
சமாதான கூட்டத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஆதிதிராவிட நலத்துறை இணை இயக்குனரை இணைத்து, மாவட்ட நிர்வாகம் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும்.
ஒருவேளை மதுரை அவனியாபுரம் அனைத்து சமுதாய மக்கள் இணைந்த ஜல்லிக்கட்டுக்குழு அமையப்பெற்று, நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏதேனும் சட்ட, ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, ஜல்லிக்கட்டு போட்டியை தலைமை ஏற்று நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும்.
- ஜனாதிபதிக்கு அ.தி.ம.மு.க. கடிதம் அனுப்பியுள்ளது.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் கவர்னர் ஆர். என். ரவி சமீப காலமாக தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழக சட்டமன்றத்தில் அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்கும் வகையிலும், தனக்கு வழங்க ப்பட்டுள்ள அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கிலும் அவர் நடந்து வருகிறார்.
தேசிய கீதம் பாடப்படு வதற்கு முன்பு அவையில் இருந்து வெளியேறி அவை மரபையும் மீறியுள்ளார்.மேலும் அதிக அதிகாரம் படைத்த சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும், அவமதிக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு பிரிவினை வாதத்தை பேசி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி வருகிறார்.
எனவே தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் கவர்னர் ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அதிவேகமாக வாகனம் ஓட்டிச்சென்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 10 பேரை கைது செய்தனர்.
- தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமை யில் தனிப்படை அமைக்கப் பட்டது.
மதுரை
மதுரை மாநகரில் உள்ள 10-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்களில் நடிகர் அஜித்குமார் நடித்த 'துணிவு', நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய 2 திரைப்படங்கள் நேற்று வெளியாகி உள்ளன. இதனை பார்ப்பதற்காக ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு தியேட்டருக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் சினிமா ரசிகர் மன்றங்களை சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் அதிவேகமாக செல்வதாக போலீசாருக்கு புகார் வந்தது.
போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் விதிமுறை களை மீறி செல்வோரை கண்காணித்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து மாநகர வடக்கு துணை கமிஷனர் (பொறுப்பு) ஆறுமுகம் சாமி மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில், தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமை யில் தனிப்படை அமைக்கப் பட்டது.
அவர்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள். ரிசர்வ் லைன், ஆத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 5 பேர் பிடிபட்டனர். அப்போது அவர்கள் வந்த 4 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் ஆகியவை பறி முதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மேற்கண்ட 5 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் கோசாகுளம், பெரியார் நகர் வல்லரசு (வயது 33), ஆனையூர் குமார் மகன் அருண் பாண்டியன் (23), கோசாகுளம், பாண்டியன் நகர் கண்ணன் மகன் வருண் பாலாஜி (24), நெல்பேட்டை காயிதே மில்லத் நகர் நசீர் உசேன் மகன் முஜிபுர் ரஹ்மான் (19) மற்றும் தபால் தந்தி நகர், பார்க் டவுன் ஆதிஸ்வரன் மகன் சிவபாலன் (23) என்பது தெரியவந்தது. அவர்களை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மதுரை கட்ட பொம்மன் நகர் சந்திப்பு முதல் 50 அடி ரோடு வரை அதிவேகமாக வாகனம் இயக்கியதாக, 3 மோட்டார் சைக்கிள்களை செல்லூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரை குருவிக்காரன் சாலை சினிமா தியேட்டர் முன்பு அஜாக்கிரதையாக வாகனம் இயக்கியதாக சிம்மக்கல், அபிமன்யு தெரு கருப்பையா மகன் சந்தோஷ் (19), கே.கே.நகர், பாரதியார் தெரு ராமலிங்கம் மகன் கவுரவ் (20) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்கள் வந்த 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை குருவிக்காரன் சாலை ஆஸ்பத்திரி அருகே அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக அய்யர் பங்களா, அய்யாவு நகர் சிதம்பரம் மகன் தீபக் (24), தல்லாக்குளம் பச்சைக்கிளி மகன் சூர்யா (21) ஆகிய 2 பேரை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர்.
- மதுரை காமராசர் பல்கலைக்கழக அனைத்து மண்டலங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டிகள் அமெரிக்கன் கல்லூரியில் நடந்தது.
- இந்த கல்லூரி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
மதுரை
மதுரை காமராசர் பல்கலைக்கழக அனைத்து மண்டலங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டிகள் அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றது. லீக் முறையில் நடைபெற்ற போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் அமெரிக்கன் கல்லூரி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 2 வெற்றிகளை பெற்ற திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி 2-ம் இடத்தையும், ஒரு வெற்றி பெற்ற விருதுநகர் வி.எச்.என். எஸ்.என். கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றது.
சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்கன் கல்லூரி மாணவர்களை கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், துணை முதல்வர் மார்ட்டின் டேவிட், நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம், உடற்கல்வி இயக்குனர் பாலகிருஷ்ணன், மதுரை காமராசர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் பாராட்டினர்.
- கொட்டாம்பட்டியில் புதிய பஸ் நிலையம் கட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இந்த தகவலை வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மேலூர்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி மந்தை தெற்கு தெருவில் பகுதி நேர ரேசன் கடை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கொட்டாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.என்.எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கொட்டாம்பட்டி கூட்டுறவு சங்க பதிவாளர் பரமசிவம் வரவேற்றார். கூட்டுறவு சங்கங்களின் மதுரை மண்டல இணை பதிவாளர் குருமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இதில் வெங்கடேசன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பகுதி நேர ரேசன் கடையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். இதை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.1000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, முழுகரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், கொட்டாம் பட்டி பகுதி வளர்ச்சிக்கு தனி கவனம் செலுத்தி வருகிறேன். இங்கு புதிய பஸ் நிலையம் அமைக்க முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். அதன்படி புதிய பஸ் நிலையத்திற்கு ரூ.5 கோடி அரசு ஒதுக்கி உள்ளது என்றார்.
மேலும் கொட்டாம்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமை எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் 2400 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க மாவட்ட துணை பதிவாளர் ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலு வலர் முருகேஸ்வரி, மேலூர் மேலாண்மை இயக்குனர் பாரதிதாசன், கொட்டாம்பட்டி கூட்டு றவு சங்கத் தலைவர் வெங்கடாசலம், மேலூர் வட்ட வழங்க அலுவலர் அரவிந்தன், தும்பைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான், கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவ லர் அன்பரசன், கொட்டாம்பட்டி ஊராட்சி செயலர் சிவராமகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மர்ம நபர் மதுரை வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
- கோவையில் இருந்து மதுரைக்கு வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் போஸ்க்கும் மற்றொரு பயணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கோவையில் இருந்து மதுரை வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அதுபற்றி உடனே மதுரை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள், மதுரை வரும் கோவை ரெயிலில் சோதனை நடத்த வெடிகுண்டு நிபுணர்களுடன் தயாரானார்கள்.
மதுரை ரெயில் நிலையத்திற்கு வந்த கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் அனைத்து பெட்டிகளுக்கும் சென்று அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.
ஆனால் ரெயிலில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் மர்ம நபர் போனில் கூறிய தகவல் பொய் என்பது தெரியவந்தது. பொய்யான தகவலை கூறி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போலீசாரை அலைக்கழித்த மர்ம நபர் குறித்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்த செல்போன் எண்ணை சோதனை செய்தபோது, அது மதுரை மேலூர் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த செல்போன் வைத்திருக்கும் நபரை ரெயில்வே போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர் மேலூர் அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்த போஸ் (வயது35) என்பதும், போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அவர் தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
சம்பவத்தன்று கோவையில் இருந்து மதுரைக்கு வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் போஸ் பயணம் செய்தபோது அவருக்கும், மற்றொரு பயணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நபரை சிக்க வைப்பதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாகவும் போலீசில் போஸ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும் தகவல் உண்மை தானா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






