என் மலர்
மதுரை
- விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துச்சென்ற பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
- ஊழியர்களின் வருகை பதிவேடு மற்றும் ரொக்கம் 18,450 ஆகியவற்றை 3 பைகளில் எடுத்து சென்று விட்டனர்.
மதுரை
மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தின் செயலாளர் டாக்டர் இஸ்மாயில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது-
மதுரை மேலவெளி வீதியில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான விக்டோரியா எட்வர்டு மன்றத்தின் உறுப்பினர்க ளால் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறேன். இந்த நிலையில் மன்றத்திற்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் சிலர் மீட்புக்குழு என்ற பெயரில் பல பொய்யான குற்றச்சாட்டுகளை மன்ற நிர்வாகத்துக்கு எதிராக தங்களது செல்வாக்கை பயன்படுத்தி அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து பலமுறை அளித்த பொய் புகார் காரணமாக எங்கள் தரப்பு நியாயங்களை கேளாமலும், சட்டத்திற்கு புறம்பாகவும் விக்டோரியா மன்றத்திற்கு தனி அலுவலர் நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் தெரிவித்த உத்தரவாதத்தை மீறி கடந்த 4-ந் தேதி மாவட்ட பதிவாளர் ராஜ்குமார் மற்றும் மன்ற நிர்வாகத்திற்கு எதிராக செயல்படும் முத்துக்குமார் உள்ளிட்ட சில நபர்கள் மன்ற வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அலுவலக பணியாளர் செந்தில் குமாரை மிரட்டி அவரிடம் இருந்த சாவியை பறித்து அலுவலகத்தில் சென்று அங்கு இருந்த கம்ப்யூட்டர் ஹார்டிஸ்க், சிசிடிவியின் ஹார்டிஸ்க், நிர்வாகக் குழு மற்றும் பொதுக்குழு நடவடிக்கை புத்தகம், வாடகைதாரர் ஒப்பந்த பத்திரங்கள், ரெசிப்ட் புத்தகம், ஊழியர்களின் வருகை பதிவேடு மற்றும் ரொக்கம் 18,450 ஆகியவற்றை 3 பைகளில் எடுத்து சென்று விட்டனர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரி களுக்கு புகார் தெரிவிக்கப் பட்டது. இதனிடையே நாம் தமிழர் கட்சி சேர்ந்த வெற்றி குமரன் உள்ளிட்ட சிலர் தனது அரசியல் பலத்தால் மன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகளை தொடர்ந்து தடுத்து வருகிறார்கள். இதனால் மன்ற நிர்வாகிகளுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு மன்றத்திற்கு எதிராக செயல்படும் நபர்கள் மீதும், மன்ற வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற மாவட்ட பதிவாளர் ராஜ்குமார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு உத்தரவிட வேண்டும் என்று வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மதுரையில் போலி வயர்களை விற்ற வியாபாரிகள் கைது செய்யப்பட்டார்.
- அலுவலக உபயோகத்துக்காக மதுரை கிளாஸ்கார தெருவில் உள்ள எலக்ட்ரிகல் கடையில் வாங்கியுள்ளார்.
மதுரை
விழுப்புரம் மாவட்டம், அவரப்பாக்கத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 33). மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் அலுவலக உபயோகத்துக்காக பிராண்டட் நிறுவனத்தின் வயர்களை மதுரை கிளாஸ்கார தெருவில் உள்ள எலக்ட்ரிகல் கடையில் வாங்கியுள்ளார். அந்த வயர்களை பரிசோ தித்தபோது அவை போலி என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று பணத்தை திருப்பித் தரும்படி கேட்டார்.அவர்கள் தர மறுத்து விட்டனர். இதுகுறித்து வினோத் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லோகேசுவரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தெற்கு ஆவணி மூல வீதியைச் சேர்ந்த தால்பர்ட் (39), அவரது சகோதரர் தீக்சித் (21) ஆகிய 2 வியாபாரிகளை கைது செய்தார்.
- மதுரை தெற்கு கோட்டத்தில் வருகிற 16-ந்தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை தெற்கு கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 16-ந் தேதி(வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். இதில் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்சங்கம், யானைக்கல், டவுன்ஹால் ரோடு, மீனாட்சியம்மன் கோவில், மாகாளிப்பட்டி, திருமலைநாயக்கர் மகால், ஜான்சிராணி பூங்கா, அரசமரம், தெப்பம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
- வாடிப்பட்டி பேரூராட்சி வளாகத்தில் மகளிர் தின விழா நடந்தது.
- விழிப்புணர்வு நாடகம், கவிதை, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி பேரூராட்சி வளாகத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் தின விழா விழிப்புணர்வு நாடகம், கவிதை, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடந்தது. மகளிர் திட்ட மாவட்ட இயக்குநர் காளிதாஸ் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, துணைத் தலைவர் கார்த்திக், உதவி திட்ட அலுவலர்கள் வெள்ளைபாண்டிமரியாள் முன்னிலை வகித்தனர். பொறுப்பாளர் ரம்யா வரவேற்றார். மகளிர் சுய உதவி குழுவினரின் விழிப்புணர்வு நாடகம், கவிதை, பரதம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேரூராட்சி கவுன்சிலர்கள் நல்லம்மாள், கார்த்திகா ராணி,சரசு, பூமிநாதன், ஜெயகாந்தன்,மீனா, சூர்யா, பிரியதர்ஷினி, பஞ்சவர்ணம், வெங்கடேசுவரி, குருநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சமுதாய ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, சமூகவள பயிற்றுநர் குமாரி, செல்வி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பொறுப்பாளர் சித்ரா நன்றி கூறினார்.
- இறைச்சியில் விஷம் கலந்து வைத்து 50 நாய்களை கொன்றது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இறந்த நாய்களின் அருகில் உணவுப் பொட்டலங்கள் இருந்தது.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள மம்பட்டி பட்டி, நரியம்பட்டி, வையத்தான், கோவில்பட்டி ஆகிய கிராமங்களில் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது இறந்த நாய்களின் அருகில் உணவுப் பொட்டலங்கள் இருந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் சோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் நாய்களின் உடல்கள் மீட்கப்பட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை செய்யப்பட பின் நாய்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும்.
கிராமங்களில் விவசாயி கள் தங்கள் ஆடு, மாடுகளை பாதுகாக்க தோட்டங்களில் நாய்களை வளர்த்து வருகின்றனர். மேலும் வீடு களுக்கும் நாய்கள் பாதுகாப்பாக உள்ளன. அதன்படி மேற்கண்ட 4 கிராமங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நாய்களை வளர்த்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஆங்காங்கே கோழி இறைச்சி கழிவுகளில் விஷம் கலந்து பல்வேறு இடங்களில் வைத்து விட்டு சென்றுள்ளனர். இதை சாப்பிட்ட 50 நாய்கள், ஒரு பூனை பரிதாபமாக இறந்துள்ளது.
நாய்களை விஷம்வைத்து கொன்ற நபர்கள் யார்? கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் நாய்களை விஷம்வைத்து கொன்றார் களா? நாய்களின் தொல்லை காரணமாக யாரேனும் இவ்வாறு செய்தார்களா? என்று போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நாய்களை விஷம் வைத்து கொன்றது யார்? எஎன்பதை கண்டறிய அந்த பகுதியில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வாயில்லா ஜீவன்களான நாய்களை விஷம் வைத்து கொன்றவர்களை கண்டுபிடித்து கைது செய்ய போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராமமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- மதுரை மண்டலத்தில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது.
- மேற்கண்ட தகவல் மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம் உதவி இயக்குநர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை மண்டலத்தில் ஐ.டி.ஐ.-ல் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.30மணி முதல் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான மண்டல அளவிலான (மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மாவட்டம்) தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் மதுரை மூன்று மாவடியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதி வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த பல முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவ னங்களுக்கு தேவையான தொழில்பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் ஐ.டி.ஐ. தேர்ச்சி சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.
தொழிற்பழகுநராக தேர்வு செய்யப்படும் ஐ.டி.ஐ பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.7 ஆயிரத்து 700 முதல் 8 ஆயிரத்து 50 வரை வழங்கப்படும்.
தொழிற்பழகுநர் பயிற்சியின் முடிவில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழும் வழங்கப்படும்.இந்த முகாம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதி வளாகம், மூன்று மாவடி, மதுரை என்ற முகவரியில் இயங்கி வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக தொலைபேசி எண்.(94990 55748, 63831 93760, 99948 97402, 86100 78848)-க்கு தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.
மேற்கண்ட தகவல் மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம் உதவி இயக்குநர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- போராட்டம் முடிந்து எல்லோரும் கலைந்து சென்ற சில மணி நேரங்களிலேயே மீண்டும் அந்த கடை திறக்கப்பட்டது.
- டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டதால் மேலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது சாணிபட்டி. இங்கு அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இக்கடையை அகற்றக்கோரி இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இது குறித்து கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுமக்கள் தொடர் கோரிக்கை வைத்தும் இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதை கண்டித்தும், டாஸ்மாக் கடையை உடனே அகற்றக்கோரியும் நேற்று சாணிப்பட்டி மற்றும் கேசம்பட்டி,அருக்கம்பட்டி, கடுமிட்டான்பட்டி ஆகிய பகுதியைச் சேர்ந்த 300க்கு மேற்பட்ட பெண்கள் நேற்று காலை சுமார் 2 மணி நேரம் மேலூர்-நத்தம் செல்லும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
அப்போது அதிகாரிகள் தரப்பில் 15 தினங்களில் இந்த கடையை அகற்றி விடுவோம் என்று உறுதி கூறினார். அப்போது போராட்டத்தில் பங்கேற்றவர்கள் இன்று முதல் அந்தக் கடையை திறக்க கூடாது என கோரிக்கை வைத்தனர். ஆனால் போராட்டம் முடிந்து எல்லோரும் கலைந்து சென்ற சில மணி நேரங்களிலேயே மீண்டும் அந்த கடை திறக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மீண்டும் இன்று காலை ஒன்று கூடி 2-வது நாளாக பெண்கள் உள்பட ஏராளமானோர் மீண்டும் மறியல் போராட்டம் நடத்தினர். மேலும் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த கொட்டாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி பாலாஜி மற்றும் மேலவளவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டதால் மேலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- மதுரை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கஞ்சா விற்று கைதானவர்களின் சொத்துக்களை போலீசார் முடக்கினர்.
- பரமேஸ்வரனை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அவரது மனைவி விஜயலட்சுமியை தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, திருமங்கலம், பேரையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. மதுரை நகர் பகுதியிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடந்து வருகிறது.
இதனை தடுக்க மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் போலீசாரின் கண்களில் மண்ணை தூவி சமூக விரோத கும்பல் கஞ்சா விற்பனையில் கொடிகட்டி பறந்து வருகிறது.
இந்த நிலையில் கஞ்சா விற்பவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு அண்மையில் எச்சரித்திருந்தது. அதன்படி மதுரை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கஞ்சா விற்று கைதானவர்களின் சொத்துக்களை போலீசார் முடக்கினர்.
மதுரை நகர் போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள நரேந்திரன் நாயர் கஞ்சா விற்பனையை தடுக்க தனி கவனம் செலுத்தி தீவிர நடவடிக்கை எடுத்தார். இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது. சம்பவத்தன்று தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில் கடச்சனேந்தல்-ஊமச்சிக்குளம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்ட போது 72 கிலோ கஞ்சா கடத்துவது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கடத்தி வந்த அய்யர்பங்களா ஜி.ஆர்.நகரை சேர்ந்த பரமேஸ்வரன் (வயது42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பரமேஸ்வரன் தொடக்க காலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு போதுமான வருவாய் கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தை நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என பரமேஸ்வரன் முடிவு செய்தார். அதற்காக அவர் தவறான வழியை தேர்ந்தெடுத்தார். அதன்படி வெளி மாவட்டங்களில் இருந்து சட்ட விரோதமாக கஞ்சாவை கடத்தி வந்து மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்று வந்துள்ளார். இந்த தொழிலுக்கு அவரது மனைவி விஜயலட்சுமியும் உடந்தையாக இருந்துள்ளார்.
கஞ்சா விற்பனையில் பரமேஸ்வரனுக்கு கணிசமான லாபம் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் ஆந்திராவில் இருந்து கிலோ கணக்கில் லஞ்சம் வாங்கி சமூக விரோதிகள் மூலம் தென் மாவட்டங்களுக்கு சப்ளை செய்தார். இதில் அவருக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைத்துள்ளது.
இதன் மூலம் ஆடம்பர பங்களா, 5 கார்கள், 14 செல்போன்கள், தங்கச்சங்கிலி உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். ஏற்கனவே கஞ்சா கடத்தல் தொடர்பாக பரமேஸ்வரன் மீது செல்லூர் போலீசில் 2 வழக்குகள் உள்ளன.
மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பரமேஸ்வரனை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அவரது மனைவி விஜயலட்சுமியை தேடி வருகின்றனர்.
- அவனியாபுரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- பா.ஜ.க. தலைவர் சசிகுமார் தலைமையில் மனு கொடுத்து போராட்டம் நடத்தினர்.
அவனியாபுரம்,
அவனியாபுரம்- திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள அம்பேத்கார் சிலையிடம் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிகுமார் தலைமையில் மனு கொடுத்து போராட்டம் நடத்தினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு ஆண்டுதோறும் பட்டியலின மக்களுக்கு வளர்ச்சி நிதி ஒதுக்கீடு செய்கிறது.அவ்வாறு ஒதுக்கப்படும் நிதியை தமிழக அரசு சரியாக பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புகிறது.
இதை கண்டித்து இந்த சட்டத்தை இயற்றிய அம்பேத்காரிடம் மனு கொடுகிறோம். 2021-22 ஆண்டு மத்திய அரசு ரூ.2,418 கோடியும், 2022- 23-ம் ஆண்டில் ரூ.16.442 கோடியும் ஒதுக்கீடு செய்த பணத்தில் ரூ.10.446 கோடியை திருப்பி அனுப்பி உள்ளனர்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க.பட்டியலின நிர்வாகி முத்துமாரி, ஊடகப்பிரிவு தலைவர் காளிதாஸ், சடாச்சரம், அவனிஆனந்த், தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஜமாத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்பு வாரியத்துக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் 2021-ம் ஆண்டு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மதுரை
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி வடக்குத்தெரு முஸ்லிம் ஜமாத் செயலாளர் ஷேக் அப்துல்லா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தொண்டி வடக்கு தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் 2021-ம் ஆண்டு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக சாகுல் ஹமீது தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தநிலையில் அவர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். ஜமாத் மக்கள் மற்றும் ஜமாத் கமிட்டி உறுப்பினர்களும் சேர்ந்து அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை வக்பு வாரியத்துக்கு அனுப்பி யுள்ளோம். இதுவரை நடவடிக்கை இல்லை. தீர்மானத்தின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு குறித்து வக்பு வாரியம் வருகிற 23-ந்தேதிக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
- கூலி தொழிலாளியை தாக்கிய தி.மு.க நிர்வாகியின் மகன் கைது செய்யப்பட்டார்.
- வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படும் விஜய சேகர், தி.மு.க வட்ட செயலாளராக உள்ளார்.
மதுரை
மதுரை முத்துப்பட்டி ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35), கூலிதொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விஜய் சேகர் குடும்பத்துக்கும் முன் விரோதம் இருந்தது.
இது தொடர்பாக சுப்பிர மணியபுரம் போலீஸ் நிலை யத்தில் வழக்கு உள்ளது.
நேற்று மாலை மணிகண்டன் வீட்டில் இருந்தார். அங்கு வந்த விஜய் சேகர் குடும்பத்தினர் அவரை உருட்டு கட்டையால் தாக்கிவிட்டு தப்பினர். இது குறித்த புகாரின்பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பட்டி வீரமுடையான் தெருவை சேர்ந்த விஜயபாபுவை (37) கைது செய்தனர்.
மேலும் இது தொடர்பாக இவரது தந்தை விஜய சேகர் மற்றும் விஜயபாஸ்கர் உள்பட சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணி கண்டனை வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படும் விஜய சேகர், தி.மு.க வட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உமாமகேஸ்வரி தேர்வு எழுதுவதற்காக பிரத்யேக இடவசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
- தமிழ் மொழிப்பாட தேர்வை உமாமகேஸ்வரி ஆர்வமுடன் எழுதினார்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஓ.ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், தொழிலாளி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் உமாமகேஸ்வரி (வயது 17). திருமங்கலம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாடியில் காய போட்டிருந்த துணியை எடுக்க உமாமகேஸ்வரி சென்றபோது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது 2 கால்கள், இடது கை, குறுக்கெலும்பு உடைந்தது. இதையடுத்து உமாமகேஸ்வரி கடந்த 2 மாதங்களாக கை, கால்களில் கட்டுபோடப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வை முன்னிட்டு சிகிச்சையில் இருக்கும்போதே தேர்வுக்கு தயாரானார். ஆசிரியைகள் மற்றும் தோழிகளிடம் பாடத்தில் உள்ள சந்தேகங்களை கேட்டு படித்து வந்தார். அரசு பொது தேர்வை எழுதும் ஆர்வத்தில் இருந்த உமா மகேஸ்வரிக்கு பள்ளி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்க முன்வந்தது. அதன்படி இன்று தேர்வு தொடங்கிய நிலையில் உமாமகேஸ்வரி வீட்டில் இருந்து வேனில் தேர்வு மையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
உதவியாளர்கள் அவரை தேர்வு அறைக்கு தூக்கிக் கொண்டு சென்றனர். அங்கு உமாமகேஸ்வரி தேர்வு எழுதுவதற்காக பிரத்யேக இடவசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது. தமிழ் மொழிப்பாட தேர்வை அவர் ஆர்வமுடன் எழுதினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் கர்ணன், சமூக ஆர்வலர்கள் காளீஸ்வரன், இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர்.
இதுகுறித்து மாணவி உமாமகேஸ்வரி கூறுகையில், "கீழே விழுந்ததில் கை, கால்களில் முறிவு ஏற்பட்ட நிலையிலும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுத கடந்த சில வாரங்களாக தயாராகினேன். தேர்வு எழுத எனது பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு வழங்கியது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம் படிப்பேன்" என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.






