என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
மத்திய, மாநில அரசுகளின் தனியார் மயமாக்கும் போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிருஷ்ணகிரி நகர கிளை பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மத்திய சங்க பொருளாளர் சேகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், தொ.மு.ச. மத்திய சங்க துணை பொதுச்செயலாளர்கள் முருகன், வரதராஜன், துணைத்தலைவர் பார்த்தீபன் மற்றும் பணிமனை நிர்வாகிகள் ராஜேந்திரன், சிவக்குமார், ராமச்சந்திரன், சி.ஐ.டி.யூ. உமர்பாரூக், ஜான் லுயிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 288ஏ-வை கைவிட வேண்டும். தனியார் பஸ்சை வாடகைக்கு எடுக்கும் முறையை புகுத்த வேண்டாம். போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த நிதி வழங்க வேண்டும். தொழிலாளியிடம் பறிக்கப்பட்ட விடுப்பை திரும்ப வழங்க வேண்டும். பிடிக்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
ஊத்தங்கரை அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. சங்க செயலாளர் தவமணி, ஏ.ஐ.டி.யு.சி. வரதராஜ், ஏ.ஏ.எல்.எப். அண்ணாமலை, டி.டி.எஸ்.எப். மயில்சாமி மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியில் சாலையோரத்தில் காட்டு யானை நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள மரக்கட்டா காப்புக்காட்டில் ஏராளமான காட்டு யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. இந்த காட்டு யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு காட்டு யானை தினமும் மரக்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறி வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையோரத்தில் சுற்றித்திரிகிறது. இதனால் தினமும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அந்த சாலையில் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலையும் அந்த ஒற்றை காட்டு யானை தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் மரக்கட்டா வனப்பகுதியில் சாலையோரம் நின்று இருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் மெதுவாக ஒருவித அச்சத்துடன் சென்றனர். அப்போது இந்த ஒற்றை காட்டுயானை மூங்கில் மர கிளைகளை ஒடித்து தின்றவாறு நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்று இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்கு விரட்டினர். தினமும் சாலையோரங்களில் நின்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் இந்த காட்டுயானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அஞ்செட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி மற்றும் போலீசார் பூஞ்சோலை கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கொழந்தை (வயது50), கிருஷ்ணன்(49), ராமர் கோவில் ராஜா(40), வண்ணாத்திப்பட்டி மூர்த்தி(43) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல் வேப்பனப்பள்ளி போலீசார் திம்மசந்திரம் பகுதியில் ரோந்து சென்றபோது அங்குள்ள ஒரு கோவிலின் பின்புறம் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீராமன்(42), பரமேஸ்வரன்(25), முருகேசன்(32), மாணிக்கம்(32) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
ஓசூரில் பிரபல நகைக் கடையில் ஏற்பட்ட ‘தீ‘ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வெள்ளி நகைகள் தப்பியது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேதாஜி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் என்ற பிரபல தங்க நகைக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் பணிகள் முடிந்து கடையை ஊழியர்கள் பூட்டிச்சென்றனர். பின்னர் நள்ளிரவில் திடீரென கடையில் உள்பகுதியில் இருந்து ‘தீ‘ பிடித்து, கருமேகம் போல் புகை வெளியேறியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கடையின் இரவு காவலர்கள், நகைக்கடை மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் தீயணைப்பு நிலையம், மற்றும் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் ஓசூர் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ மளமள என்று பரவியதால் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். தீ முழுவதுமாக அணைக்கப்பட்டதால் அங்கு நிகழவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த திடீர் தீ விபத்தில், கடையில் பொருத்தப்பட்டிருந்த மரக்கதவுகள், அலங்கார பொருட்கள் ஆகியவை தீயில் கருகி சாம்பல் ஆனது. மேலும் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டதால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகள் தப்பியது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருப்பதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
ராயக்கோட்டை போலீசார் ரகமத் காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற பாஞ்சாலி நகரை சேர்ந்த முருகன் (வயது 53) என்பவரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பெத்தனபள்ளி பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற அந்த பகுதியை சேர்ந்த அன்பு (23) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் போகனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற அந்த பகுதியை சேர்ந்த மாணிக்கம் (60) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்தும் பணம், லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஊத்தங்கரை அருகே கிணற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலியானார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த நடுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோடாலவலசை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் ஆனந்தி (வயது 13). அதே கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகள் ராதிகா (13). ஆனந்தியும், ராதிகாவும் 7-ம் வகுப்பு முடித்து விட்டு 8-ம் வகுப்பு செல்ல இருந்தனர்.
இந்த நிலையில் சிறுமிகள் 2 பேரும் நேற்று அவர்களது தோழிகளுடன் அருகில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றனர். அந்த நேரம் கிணற்றில் உள்ள படிக்கட்டு வழியாக சிறுமிகள் இறங்கிய போது, ஆனந்தி மற்றும் ராதிகா ஆகிய இருவரும் தண்ணீரில் தவறி விழுந்தனர்.
இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்கள். இதைப்பார்த்துக் கொண்டிருந்த மற்ற சிறுமிகள் கூச்சலிட்டனர். அதற்குள் 2 சிறுமிகளும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெவித்தனர்.
அவர்கள் வருவதற்குள் பொதுமக்களில் சிலர் கிணற்றில் குதித்து ராதிகாவின் உடலை மீட்டனர். பின்னர் வந்த தீயணைப்புத் துறையினர் ஆனந்தியின் உடலை மீட்டனர். அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசுக்கு எதிராக தவறான தகவல்களை கூறிய ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் பாவனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக (ஆங்கிலம்) பணிபுரிந்து வருபவர் பாலகிருஷ்ணன். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில், அரசு விதிகளுக்கு மாறாக அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர்களை நியமனம் செய்து கோடிக்கணக்கான ரூபாய் அரசு இழப்பீடு செய்வதாகவும், அரசின் நடைமுறைகளை விமர்சித்தும் பேட்டி அளித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில் அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் பேட்டி கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்ததாக கல்வித்துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அரசுக்கு எதிரான செயலில் ஈடுபட்டதாக பட்டதாரி ஆசிரியர் பாலகிருஷ்ணனை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அலுவலர் கலாவதி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓசூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஞ்சாலி மற்றும் போலீசார், சின்னாளதொட்டி வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கர்நாடகா மாநிலம் மஸ்தி பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 22), சுக்காண்டஅள்ளி ரமேஷ்(40), லட்சுமய்யா(60), லக்கூர் ரவி(40) ஆகிய 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த பணம் ரூ. 11,900-ஐ பறிமுதல் செய்தனர்.
சூளகிரி அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலியானார். 4 நாட்களில் 3 பேரை இந்த யானை கொன்றதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஏ.செட்டிப்பள்ளி காட்டில் ஒற்றை காட்டு யானை நீண்ட நாட்களாக பதுங்கி இருந்து இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து, அங்கு விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 16-ந்தேதி காலை புலியரசி கிராமத்தை சேர்ந்த முனிராஜ், ஜோகீர்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 2 பேரும் ஏ.செட்டிப்பள்ளி பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு நடந்து சென்றபோது, புதரில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை, திடீரென வெளியே வந்து இருவரையும் தாக்கியது. இதில், முனிராஜ், ராஜேந்திரன் ஆகியோர் இறந்தனர்.
இதையடுத்து, யானையை கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் ஏ.செட்டிப்பள்ளி காட்டிற்குள் பதுங்கிய யானையை அங்கிருந்து கர்நாடக பகுதிக்கு விரட்டும் பணி தோல்வியில் முடிந்தது
இந்த நிலையில் நேற்று சூளகிரி அருகே உள்ள ஆபிரி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனுசாமி என்கிற அப்பையா (வயது 57) என்பவர் காட்டு பகுதியில் யானை தாக்கி இறந்து கிடந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விவசாயியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஏ.செட்டிப்பள்ளி காட்டில் இருந்து நள்ளிரவில் ஒற்றை யானை வெளியேறி, அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்தபோது, அந்த வழியாக சென்ற அப்பையாவை மிதித்து கொன்றிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இறந்து போன அப்பையாவிற்கு மனைவி இல்லை. ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகிறார்கள். அப்பையா, ஆபிரியில் உள்ள விவசாய நிலத்தை கவனித்துகொண்டு அங்கேயே தனியாக வசித்து வந்தார்.
தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானை, நேற்று ஓசூர் அருகே பேரண்ட பள்ளி பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும் ஆவேசமாக சுற்றித்திரிந்தவாறு இருந்தது. வனத்துறையினர் பட்டாசு வெடித்து அதனை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அடுத்தடுத்து 4 நாட்களுக் குள் 3 பேரை தாக்கி கொன்று, ஏ.செட்டிப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆக்ரோஷத்துடன் அந்த யானை சுற்றி திரிவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். அட்டகாசம் செய்து வரும் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே யானை தாக்கி பலியான விவசாயியின் குடும்பத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பி.முருகன், எஸ்.ஏ.சத்யா ஆகியோர் ஆறுதல் கூறினார்கள். மேலும் வனத்துறையின் முதல் கட்ட நிவாரண நிதியான ரூ.50 ஆயிரத்தை வழங்கினார்கள்.
ஊரடங்கு அமலில் உள்ளதால் விநாயகர் சதுர்த்தியை வீடுகளிலேயே கொண்டாடுங்கள் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கொரோனா நோய் தொற்று தவிர்க்கும் பொருட்டு விநாயகர் சிலை வைப்பதை தவிர்ப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரகுகுமார், உதவி கலெக்டர்கள் குணசேகரன், கற்பகவள்ளி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ராஜசேகரன் மற்றும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் நரேந்திரன், நாகராஜ், தர்மலிங்கம், இந்து முன்னணி நிர்வாகி சந்துரு, சிவசேனா நிர்வாகிகள் வேல்மணி, முரளிமோகன், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் அசோக், பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 22-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்களின் நலன் கருதியும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ அல்லது சிலைகளை வைத்து வழிபடவோ கூடாது. மேலும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க இயலாது. எனவே, பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும்.
மேலும், சதுர்த்திக்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சிறிய கோவில்களில் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. அத்தகைய கோவில்களிலும் வழிபாடு செய்யும் போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க பொதுமக்களை கோவில் நிர்வாகத்தினர் அறிவுறுத்த வேண்டும்.
மேலும், அவ்வாறு வழிபாட்டு தலங்களுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடுத்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழா கொரோனா தொற்று நீங்கும் பட்சத்தில் மீண்டும் உற்சாகமாக கொண்டாடலாம். மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு வகுத்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை அனைவரும் கடைபிடித்து கொரோனா நோய் தொற்று பரவாமல் செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் ஜாகீர்நாட்றாம்பள்ளி, பெத்ததாளப்பள்ளி பகுதியில் தார்சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி ஒன்றியம் ஜாகீர்நாட்றாம்பள்ளி முதல் ராயக்கோட்டை மெயின் ரோடு வரை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.29 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் தார்சாலை அமைக்கப்படுகிறது. இதேபோல் ஜாகீர்நாட்றாம்பள்ளி கிராமத்தில் 130 மீட்டர் தூரத்திற்கு ரூ.8 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் 2018-19-ம் ஆண்டில் பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் பசுமை வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பேபி என்பவர் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் பசுமை வீடு கட்டுமான பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கிருஷ்ணகிரி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணபவா, உமாமகேஸ்வரி, பொறியாளர் செல்வம், பணி மேற்பார்வையாளர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளியை ஊழியர் ஒருவர் சக்கர நாற்காலியில் இருந்து கீழே தள்ளிய வீடியோ வாட்ஸ்- அப்பில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களும், பக்கத்து மாவட்டமான திருப்பத்தூரில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் தினமும் பல்வேறு சிகிச்சைக்காக வருகிறார்கள். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வாட்ஸ்-அப் குழுக்களில் வெளியாகி நோயாளிகளையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் ஒரு நபரை, மருத்துவமனை ஊழியர் ஒருவர் சக்கர நாற்காலியில் அழைத்து வந்து, கட்டிலின் அருகே நிறுத்துகிறார். பிறகு சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து கட்டிலுக்கு செல்லுமாறு நோயாளியிடம் அந்த ஊழியர் கூறுகிறார். ஆனால் அந்த நோயாளியால் எழுந்து செல்ல முடியவில்லை.
இதனால் அந்த நோயாளி ஊழியரிடம் உதவி செய்யுமாறு கேட்கிறார். அப்போது அந்த ஊழியர் அவரை திட்டி சக்கர நாற்காலியில் இருந்து கீழே தள்ளி விட்டவாறு அங்கிருந்து செல்கிறார். இதை அந்த பகுதியில் இருந்த யாரோ ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து வாட்ஸ்-அப் குழுக்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட வாட்ஸ்-அப் குழுக்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரமசிவன் கூறும்போது, ‘ நோயாளியிடம் மனிதநேயம் இல்லாமல் நடந்து கொண்ட மருத்துவமனை ஊழியர் பாஸ்கரன் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரை ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஊழியர் பாஸ்கரன் மீது துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது‘ என்றார்.