என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    நாகரசம்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    நாகரசம்பட்டி அருகே உள்ள சின்ன கரடியூரை சேர்ந்தவர் சித்ரா (வயது 32). சம்பவத்தன்று அவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். அந்த நேரம் மர்ம நபர்கள் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர். இந்தநிலையில் வீட்டில் நகைகள் திருடப்பட்டிருப்பதை கண்டு சித்ரா அதிர்ச்சி அடைந்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி ரெயில்வே காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 39). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இவருடைய மனைவி பெற்றோர் வீட்டிற்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்று விட்டார். இந்தநிலையில் மனமுடைந்து காணப்பட்ட சீனிவாசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பேடரப்பள்ளி அருகே விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குருபரப்பள்ளி:

    தர்மபுரி மாவட்டம் பேடரப்பள்ளி அருகே உள்ள மாமரத்துப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவன் (வயது 32). வேன் டிரைவர். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் குருபரப்பள்ளி அருகே குந்தப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சஞ்சீவன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கர்நாடகாவிலிருந்து ஓசூருக்கு படையெடுக்கும் மக்கள் பஸ்களில் கூட்டம், கூட்டமாக பயணம் செய்து வருகிறார்கள். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    ஓசூர்:

    தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதேபோல் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட 10 மாநிலங்களில் கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இதனிடையே கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்திற்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் இருந்தும் கர்நாடக மாநிலத்திற்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    இதனால் ஓசூரில் இருந்து தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி வரையும், கர்நாடகாவில் இருந்து அந்த மாநில எல்லையான அத்திப்பள்ளி வரையும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக ஓசூரில் இருந்து பெங்களூரு செல்லும் பொதுமக்கள், ஜூஜூவாடியில் இறங்கி அங்கிருந்து அத்திபள்ளி பகுதிக்கு நடந்து சென்று கர்நாடக மாநில பஸ்களில் பயணிக்கிறார்கள். இதேபோல் கர்நாடகாவில் இருந்து வரும் பொதுமக்கள் அத்திபள்ளியில் இறங்கி அங்கிருந்து ஜூஜூவாடிக்கு சென்று தமிழக பஸ்களில் பயணிக்கின்றனர்.

    தற்போது ஆடி மாதத்தையொட்டி கோவில்களில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை கொண்டாடுவதற்கு ஏராளமான பொதுமக்கள் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு படையெடுக்கிறார்கள். இந்தநிலையில் ஜூஜூவாடியில் இருந்து ஓசூருக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் கர்நாடகாவில் இருந்து வரும் பொதுமக்கள் மாநில எல்லையில் அதிக நேரம் காத்து நிற்கும் நிலை உள்ளது.

    மேலும் அவர்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு பஸ்களில் முண்டியடித்து ஏறுகிறார்கள். தொடர்ந்து அவர்கள் ஓசூருக்கு பஸ்களில் கூட்டம், கூட்டமாக பயணம் செய்து வருகின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு கொரோனா தொற்று குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
    காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றில் மாவட்ட கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்க விட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொரோனா பரவல் அச்சமின்றி ஆடி பெருக்கை முன்னிட்டு புனித நீராடினர்.
    காவேரிப்பட்டணம்:

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகிணங்க கொரோனா நோய் தொற்று நடவடிக்கையின் தொடர்ச்சியாக, கூடுதல் தளர்வுகளின்றி வருகிற 9-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று நீர்நிலை பகுதிகளான கிருஷ்ணகிரி அணை மற்றும் தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் உள்ள நீர்நிலைகள் மற்றும் ஆலயங்களில் பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கும், நீராடுவதற்கும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவிட்டிருந்தார்.

    ஆனால் காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றில் மாவட்ட கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்க விட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொரோனா பரவல் அச்சமின்றி ஆடி பெருக்கை முன்னிட்டு புனித நீராடினர். மேலும், அவர்கள் தங்களது வாகனங்களை ஆற்றில் கழுவி சுத்தப்படுத்தினர். கொரோனா பரவல் அச்சமின்றியும், மாவட்ட கலெக்டர் உத்தரவை மீறியும் செயல்பட்டனர்.
    கொரோனா 3-வது அலையில் இருந்து அனைவரும் தங்களை காத்து கொள்ள கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறினார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 7-ந் தேதி வரை கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் மற்றும் சுங்கச்சாவடி பகுதியில் கொரோனா தொற்று தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா 3-வது அலை பரவாமல் தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் மேற்கொண்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை மீண்டும் உயராத வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தி உள்ளது. அதன்படி வருகிற 7-ந் தேதி வரை கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

    கொரோனா 3-வது அலையில் இருந்து நம்மையும், நமது குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், துணை இயக்குனர் கோவிந்தன், நகராட்சி ஆணையாளர் முருகேசன், வட்டார மருத்துவ அலுவலர் சுசித்ரா, டாக்டர்கள் ராஜா, நவீன், விக்ரம், தாசில்தார் பூவிதன், சுகாதார அலுவலர் மோகனசுந்தரம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 42 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 42 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 43 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 41 ஆயிரத்து 359 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் 40 ஆயிரத்து 699 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 338 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவிற்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 322 ஆகஉள்ளது.
    குருபரப்பள்ளி அருகே பெண்ணை கத்தியால் குத்தி நகையை பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியை அடுத்த சாமந்தமலை பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி பட்டு (வயது 45). இவர் நேற்று முன்தினம் வெளியில் சென்றார். அப்போது முக கவசம் அணிந்து வந்த 2 நபர்கள் பட்டுவின் கண்ணில் மிளகாய் பொடி தூவியும், கத்தியால் குத்தியும் அவர் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் நகை மற்றும் கொலுசை பறித்து சென்று விட்டனர்.

    இதில் காயமடைந்த பட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பட்டுவுக்கு உறவினர்களான மணி (47), பெருமாள் (38) ஆகிய 2 பேருடன் நிலத்தகராறு இருந்து வந்ததும் தெரிந்தது.

    இது தொடர்பாக ஊர் பெரியவர்கள் பேசியும் தீர்வு ஏற்படாத நிலையில் தற்போது பட்டு மீது மர்ம நபர்கள் மிளகாய் பொடியை தூவி நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதனால் நில பிரச்சினைக்கும், இந்த நகை பறிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் குருபரப்பள்ளி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி செல்லாண்டி நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 42). பேக்கரி மாஸ்டர். இவர் கடந்த 27-ந் தேதி இரவு, தனது மோட்டார்சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது மோட்டார்சைக்கிள் திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்து சக்திவேல் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காவேரிப்பட்டணம் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் ஒன்றியம் நாகரசம்பட்டி போலீசார் அகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பறைக்கொட்டாய் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற கோபால் (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    உத்தனப்பள்ளி அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    உத்தனப்பள்ளி அருகே உள்ள கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 23). கூலித்தொழிலாளியான இவர் ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் உள்ள துப்புகானப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சிவக்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓசூரில் உள்ள ராயக்கோட்டை சாலை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் மெய்யரசு (வயது 25). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் தனது பெற்றோரிடம் குடும்ப செலவுக்காக ரூ.5 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பெற்றோர் பணம் கொடுக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மெய்யரசு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×