search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக எல்லையான ஜூஜூவாடியில் அரசு பஸ் ஒன்றில் முண்டியடித்து கொண்டு ஏறிய பொதுமக்களை படத்தில் காணலாம்.
    X
    தமிழக எல்லையான ஜூஜூவாடியில் அரசு பஸ் ஒன்றில் முண்டியடித்து கொண்டு ஏறிய பொதுமக்களை படத்தில் காணலாம்.

    பஸ்களில் கூட்டம், கூட்டமாக பயணம் - கொரோனா தொற்று பரவும் அபாயம்

    கர்நாடகாவிலிருந்து ஓசூருக்கு படையெடுக்கும் மக்கள் பஸ்களில் கூட்டம், கூட்டமாக பயணம் செய்து வருகிறார்கள். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    ஓசூர்:

    தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதேபோல் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட 10 மாநிலங்களில் கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இதனிடையே கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்திற்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் இருந்தும் கர்நாடக மாநிலத்திற்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    இதனால் ஓசூரில் இருந்து தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி வரையும், கர்நாடகாவில் இருந்து அந்த மாநில எல்லையான அத்திப்பள்ளி வரையும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக ஓசூரில் இருந்து பெங்களூரு செல்லும் பொதுமக்கள், ஜூஜூவாடியில் இறங்கி அங்கிருந்து அத்திபள்ளி பகுதிக்கு நடந்து சென்று கர்நாடக மாநில பஸ்களில் பயணிக்கிறார்கள். இதேபோல் கர்நாடகாவில் இருந்து வரும் பொதுமக்கள் அத்திபள்ளியில் இறங்கி அங்கிருந்து ஜூஜூவாடிக்கு சென்று தமிழக பஸ்களில் பயணிக்கின்றனர்.

    தற்போது ஆடி மாதத்தையொட்டி கோவில்களில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை கொண்டாடுவதற்கு ஏராளமான பொதுமக்கள் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு படையெடுக்கிறார்கள். இந்தநிலையில் ஜூஜூவாடியில் இருந்து ஓசூருக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் கர்நாடகாவில் இருந்து வரும் பொதுமக்கள் மாநில எல்லையில் அதிக நேரம் காத்து நிற்கும் நிலை உள்ளது.

    மேலும் அவர்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு பஸ்களில் முண்டியடித்து ஏறுகிறார்கள். தொடர்ந்து அவர்கள் ஓசூருக்கு பஸ்களில் கூட்டம், கூட்டமாக பயணம் செய்து வருகின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு கொரோனா தொற்று குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
    Next Story
    ×