என் மலர்
கிருஷ்ணகிரி
- சுய லாபத்திற்கு கொள்கையை விற்று ஆதாயம் தேடும் இரு தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து உள்ளனர்.
- தமிழகத்தில் எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்று.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் அ.தி.முக. கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை அ.தி.முக. இணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ.க. முயன்ற காரணத்தால் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது என்று அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளது உண்மையில்லை. அண்ணாமலை முதல்வர் வேட்பாளர் என்று பா.ஜ.க. ஒருபோதும் சொல்லவில்லை. அப்படி சொல்வது அபத்தமானது.
30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. ஆட்சி செய்து பல்வேறு திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கி உள்ள நிலையில் பா.ஜ.க. தேசிய தலைமை எப்படி தமிழகத்தில் பா.ஜ.க. முதலமைச்சர் பதவி வேண்டும் என கேட்பார்கள் கேட்கமாட்டார்கள் அப்படி எல்லாம் பேசி அ.திமு.க என்ற கட்சியை பலவீனப்படுத்த முடியாது.
பண்ருட்டி ராமச்சந்திரன் வயதுக்கு ஏற்றவாறு பேசவேண்டும், பதிலுக்கு நாங்களும் பேசலாம் ஆனால் எங்களுக்கு நாகரிகம் உள்ளது. காவிரி பிரச்சனையில் பண்ருட்டி ராமசந்திரன் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. என சென்ற இடங்களில் எங்கும் விசுவாசமாக இல்லை. நம்பிக்கை துரோகத்துக்கு பெயர் போன பண்ருட்டி ராமச்சந்திரன் நம்பிக்கை துரோகியுடன் அமர்ந்துகொண்டு அவரை நம்பிக்கை உரியவர் என கூறுகிறார். அ.தி.மு.க.வை கபளீகரம் செய்த சசிகலா இந்த இயக்கத்தில் இருக்கக்கூடாது என நான் போராடினேன்.
அந்த சமயம் தர்ம யுத்தம் செய்கிறேன் என என்னுடன் வந்து சசிகலாவை விமர்சனம் செய்தார் ஓபிஎஸ். தற்போது கால சூழல் மாறிய உடன் சசிகலாவை தலைவியாக ஏற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார். தன்னுடைய சுய லாபத்திற்கு கொள்கையை விற்று ஆதாயம் தேடும் இரு தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து உள்ளனர். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி நதிநீர் பிரச்சினை நீண்டகாலமாக உள்ள பிரச்சினை. இதில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை எனில் அடுத்த கட்டமாக அ.தி.மு.க. போராட்டம் நடத்துவது குறித்து பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.
தமிழகத்தில் எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்று. அதே நேரத்தில் தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வரமுடியாது. சமுக வலைத்தளங்களில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து தவறாக விமர்சனம் செய்கிறார்கள். இதை பார்த்து கொண்டு அ.தி.மு.க., சும்மா இருக்காது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிருஷ்ணகிரியில் பருவமழை மாற்றம் குறித்து கருத்தரங்கை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- 25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பாக, காலநிலை மாற்றத்தில் பருவநிலை மாற்றம் குறித்து நடைபெற்ற மாவட்ட அளவிலான கருத்தரங்கை கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்.
இதில், கால நிலை மாற்றம் இயக்கம் சார்பாக தமிழ்நாடு ஈரநிலை இயக்க உதவி இயக்குனர் மணிஷ்மீனா பங்கேற்று, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மாற்றம் தொ டர்பான கருத்துக்கள் குறித்து உரையாற்றினார். பூவுலகின் நண்பர்கள் வெற்றிச்செல்வன், அருண்குமார், கிருஷ்ணகிரி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் ஆகியோர் காலநிலை மாற்றம் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மேறகொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் தெரிவித்து, பயிரிடப்பட வேண்டிய மாற்றுப்பயிர் வகைள் குறித்தும் விளக்கப்படங்கள் மூலம் தெளிவாக விவரித்தனர்.
இதில் தமிழ்நாடு ஈரநிலை இயக்கம் உதவி இயக்குநர்கள் மணிஷ்மீனா, யோகேஷ்குமார் ஆகியோர், தமிழ்நாடு அளவில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றங்கள் குறித்து விவரித்து, அதனை கையாள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விளக்கினர். பின்னர் கிருஷ்ணகிரி சமூகக்காடுகள் கோட்ட அலுவலர் சக்தி வேல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றம் ஏற்படுத்துவற்கான காரணம் குறித்தும், அதனை எதிர்கொள்ள துறை மூலம் நடவு செய்யப்படவுள்ள மரக்கன்றுகள் குறித்தும் விளக்கினார்.
தொடர்ந்து, 2022-23ம் ஆண்டு பசுமை சாதனையாளர் விருதுகள் பெற்ற அறம் விதை அறக்கட்டளை நிர்வாகி அருண், வனத்துறையுடன் இணைந்த பசுமை போர்வையை அதிகரித்து, பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தப்படும் நடவடிக்கைகள் குறித்தும், காவேரிப்பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர் அனிதா, பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பள்ளிகளில், மாணவர்கள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்களை கொண்டு ஏற்படுத்தப்பட்டு வரும் விழிப்புணர்வு குறித்தும் விளக்கினார்.
பின்னர், 2022-23ம் ஆண்டு பசுமை சாதனையாளர் விருதுகள் பெற்ற பிரசன்ன வெங்கடேஷ், அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொழில் நிறுவனத்தினர்களுடன் கலந்துரையாடி, அனைத்து பருவநிலை மாற்றத்தை கையாள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடி கருத்துகளை எடுத்துரைத்தனர்.
கருத்தரங்கில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பாக, மாவட்ட அளவிலான பசுமைக்குழு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு, மாவட்ட கலெக்டர் தலைவராகவும், வன உயிரின காப்பாளர், உறுப்பினர் செயலாளராகவும் கொண்டு, கடந்த 2022ம் ஆண்டு அனைத்து துறை அலுவலர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு,
2022-23ம் ஆண்டில் 25 லட்சம் மரக்கன்றுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடவு செய்ய திட்டமிடப்பட்டு, மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முடிவில், மாவட்ட வனஉயிரின காப்பாளர் கார்த்தி கேயனி, பிளாஸ்டிக்கை தவிர்த்து பசுமை போர்வையை ஏற்படுத்த கருத்துரையாற்றினார். இந்த கருத்தரங்கில் அனைத்து துறை அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், வனத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்
- ஊத்தங்கரையில் சிறுவர் பூங்காவை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- 1987 ஆம் ஆண்டு ரூ. 78 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி ரோட்டில் உள்ள இந்திரா நகரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் மற்றும் எல்.ஐ.ஜி குடியிருப்புகள் உள்ளது.
இந்த குடியிருப்புகள் 1987-ம் ஆண்டு ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் 72 குடியிருப்புகள் கட்டப் பட்டு அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் திறப்பு விழா நடத்தப்பட்டது. குடியிருப்புகளை ஒட்டியவாறு மக்கள் பயன்பாட்டிற்கு என சிறுவர் பூங்கா மற்றும் 2 கடைகள் அமைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் ஓய்வு நேரத்தை இந்த பூங்காவில் தான் பயன்படுத்தினார்கள்.
பூங்காவில் சிறுவர்கள் பொழுதுபோக்கிற்கு பயன்படுத்தும் சாதனங்கள் பழுதாகி சேதமடைந்து உள்ளது. குப்பைகள் கொட்டும் தளமாக காட்சி அளிக்கிறது. பூங்காவில் உள்ள மின்சாதனங்கள் சேதம டைந்துள்ளது. பூங்காவை தன்னுடைய பொறுப்பில் வைத்து பராமரிக்கும் ஊத்தங்கரை தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பூங்காவை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கிருஷ்ணகிரியில் இடி-மின்னலுடன் கனமழை பெய்ந்தது.
- அஞ்செட்டியில் 4.மி.மீ பதிவு
கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை வெயில் அடித்தது. மாலை வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை 6.30 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
ஜக்கப்பன் நகர் 8-வது கிராஸ் ராஜகாளியம்மள் கோவில் அருகில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. மேலும் கடைகளுக்கு சென்ற பொது மக்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதிக்குள்ளானார்கள். இரு சக்கர வாகன ஓட்டிகளும் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளானார்கள். பெங்களூரு சாலையில் 5 ரோடு சந்திக்கும் பகுதியில் மழை நீர் குளம் போல தேங்கியது. இந்த மழையால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 63.7 மி.மீ அளவு பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 28.3 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு: அஞ்செட்டி-4.0 மி.மீ, கிருஷ்ணகிரி-28.3, ராயக்கோட்டை-27, கே.ஆர்.பி அணை-4.4
- பாகலூரில் வெளிமாநில இளம்பெண்களை வைத்து விபசாரம் பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது
- ஸ்பா, மசாஜ் சென்டர்களிலும் நடப்பதாக புகார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் நடை பெறுவதாகவும், அதே போல ஸ்பா சென்டர், மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசார தொழில் நடப்பதாகவும் போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து குடியிருப்பு பகுதிகளை கண்காணிக்கவும், ஸ்பா சென்டர்கள், மசாஜ் சென்டர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க அவர் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஓசூர அருகே பாகலூரில் வீடு ஒன்றிற்கு அடிக்கடி ஆண்கள் வந்து செல்வதாக பாகலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாகலூர் போலீசார் நேற்று முன்தினம் அந்த வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
அதில் வீட்டில் வெளி மாநில இளம்பெண்கள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அந்த இளம்பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த இளம்பெண்களை மீட்ட போலீசார், அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் சூளகிரி தாலுகா பேரிகை அருகே உள்ள நரிபுரத்தைச சேர்ந்த நஞ்சப்பா என்பவரின் மனைவி மஞ்சுளா (38), கர்நாடக மாநிலம் மாலூர் அருகே உள்ள வாலாவை சேர்ந்த முனிராஜ் (45) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- கிருஷ்ணகிரி பாம்பாறு அணை முழுக்கொள்ளவை ்எட்டியது
- 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு நீர்தேக்கம் 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை, அங்குத்தி சுனை பகுதிகளில் இருந்து அணைக்கு தண்ணீர் வருகிறது.
பாம்பாறு அணையின் மொத்த உயரம் 19.68 அடி. அணையில் திறக்கப்படும் நீர் மூலம் ஊத்தங்கரை வட்டத்தில் மிட்டப்பள்ளி, ஓபகாவலசை, போத்த ராஜன்பட்டி, மூன்றம்பட்டி, கொட்டு–காரம்பட்டி, கரிய பெருமாள் வலசை உட்பட 12 கிராமங்களில் 2501 ஏக்கர் விளை நிலங்களும், தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தா.அம்மாபோட்டை, வேடகட்டமடுவு மேல்செங்கம்பாடி, ஆண்டியூர் உள்ளிட்ட 4 கிராமங்களில் 1499 ஏக்கர் விளைநிலங்கள் உட்பட 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் ஜவ்வாது மலையில் பெய்த தொடர் மழையால், பாம்பாறு அணைக்கு நீர்வரத்து படிப்–படியாக உயர்ந்து, அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் பொதுப்–பணித்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வெளியேற்றப்படுகிறது. மேலும் உபரி நீர் வெளியேறும் பகுதிகளில் ஆற்றில்குளிக்கவும் செல்பி எடுக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளன.
- பஞ்சாயத்து அலுவலகம் முன்பு வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- நெகிழிக்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பைவிழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த காட்டகரம் ஊராட்சியில், குப்பை இல்லா இந்தியா, ஊராட்சி அளவில் தூய்மை பாரத இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு வரைபடங்கள், சந்தூரில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் முன்பு வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் மண்டல துணை பி.டி.ஓ. சுசேந்திரன், வட்டார ஒருங்கிணைப்பாளர் கோவிந்தம்மாள், மாவட்ட துணை அமைப்பாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் பேசுகையில், ஊராட்சி அளவில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தி தூய்மை உறுதிமொழி எடுத்தல், நம்ப ஊரு சூப்பர் பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஏற்படுத்தப்பட்ட சுகாதார குழு உறுப்பினர்களை சுகாதாரம் குறித்து மாணவர்களிடையே பிரசாரம் செய்து பள்ளியில் சுகாதார வகுப்பு நடத்த வேண்டும்.
ஊராட்சியில் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிக்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பைவிழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த வேண்டும். ஊராட்சியில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார முகாம்கள் நடத்த வேண்டும் என்றார். இறுதியில் ஊராட்சி செயலர் கஜேந்திரன் நன்றி கூறினார்.
- கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் இன்று முழு அழைப்பு போராட்டம் நடைபெற்றது.
- கன்னட கூட்டமைப்புகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஓசூர்:
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் இன்று முழு அழைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.
கர்நாடகத்தில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கன்னட அமைப்புகளின் சார்பில் சமீப நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று, கர்நாடக ரக்ஷன வேதிகே (சிவராம் கவுடா அணி) கன்னட ஜாக்ருதி வேதிகே, மற்றும் கன்னட கூட்டமைப்புகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக, அத்திப்பள்ளியிலிருந்து மாநில தலைவர் சிவராம் கவுடா, மஞ்சுநாத் தேவா, நாகராஜ் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்த கன்னட அமைப்பினர், பின்னர் திடீரென தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில், பெண்கள் உள்பட சுமார் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவி உள்பட 4 பெண்கள் மாயமானார்கள்.
- உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
அஞ்செட்டி அருகே உள்ள உரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயது இளம்பெண் திருமணம் ஆனவர். இவர் கடந்த 26-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார்.
அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது கணவர் அஞ்செட்டி போலீசில் புகார் செய்தார். அதில் உரிகத்தை சேர்ந்த சந்திரன் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேபோல் கல்லாவி அருகே உள்ள ஓலப்பட்டியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். தனியார் நிறுவன ஊழியர். கடந்த 21-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அது குறித்து பெற்றோர் கல்லாவி போலீசில் புகார் செய்தனர். அதில் ஓலப்பட்டியை சேர்ந்த சதாம் உசேன் (25) என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேபோல் கிருஷ்ண கிரியை அடுத்த நெக்குந்தியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர், கடந்த 25-ந் தேதி காலை தான் படித்த கல்லூரியில் மாற்று சான்றிதழ் வாங்கி வருவதாக கூறி தர்மபுரிக்கு சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது பெற்றோர் கே.ஆர்.பி., டேம் போலீசில் புகார் செய்தனர். அதில் நெக்குந்தியை சேர்ந்த ஜெகதீஷ் (25) என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேபோல் கிருஷ்ணகிரி அருகில் உள்ள பகுதியை சேர்ந்தவர், 17 வயது பிளஸ்-2 மாணவி. கடந்த 20-ந் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். அதில், கொங்க னப்பள்ளியை சேர்ந்த பேக்கரி கடை ஊழியர் சதீஷ் (20) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் சிறுதானிய பயிர்களை பயிரிட லாம் என்று வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்.
- அதிக லாபம் கிடைப்பதாக தகவல்
சிறுதானியப் பயிர்களை பயி ரிட்டு நல்ல லாபம் பெறலாம் என, கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி வட்டா ரத்தை பொறுத்தவரை நல்ல மழை பெறப்பட்டுள்ளது. தற்போது இந்த மழையை பயன்படுத்தி சிறுதானிய பயிர்களான சாமை, குதிரைவாலி, தினை, வரகு போன்ற பயிர்களையும், பயறு வகைப் பயிர்களாகன உளுந்து, காராமணி, கொள்ளு போன்ற பயிர்களையும் விதைப்பு செய்ய தகுந்த பருவமாக உள்ளதால், தரிசாக உள்ள நிலங்களையும், ஊடுபயிர் செய்யாமல் உள்ள நிலங்களையும் விதைப்பிற்கு பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெற்று பயன்பெறலாம்.
சிறுதானியங்கள், பயறு வகைப் பயிர்களின் விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள், உயிர் எதிர்காரணிகள் போன்றவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. சத்தான நஞ்சில்லா உணவிற்கு பயறு வகைகள், சிறுதானியங்கள் மிகவும் அவசியம்.
இந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு என்ற திட்டத்தின் கீழ் மானியங்கள் வழங்கி வருகிறது. இதை வலியுறுத்தி கிருஷ்ணகிரி வட்டாரம் முழுவதும் வாகனங்கள் மூலம் ஒலி பெருக்கி வைத்தும், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் பரவலாக விளம்பரம் செய்யப்பட்டது.
மேலும், விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் அல்லது கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். சரியான பருவம், தரமான விதைகள் மற்றும் சீரான தொழில் நுட்பங்களை பின்பற்றி விவசாயிகள் நன்முறையில் விவசாயம் செய்து கூடுதல் லாபம் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரியில் இதயம் செயலிழந்த கர்ப்பிணி பெண்ணை அரசு டாக்டர்கள் காப்பற்றினார்கள்.
- 35 நாட்கள் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது.
இதயம் செயலிழந்த நிலையில், ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு, 35 நாட்கள் செயற்கை சுவாசம், சிகிச்சைகள் அளித்து கிருஷ்ணகிரி அரசு மகப்பேறு மருத்துவமனை மருத்து வர்கள் காப்பாற்றினார்கள்.
இது குறித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பூவதி கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம் தேவகானப்பள்ளியை சேர்ந்தவர் சபீரா (வயது 26). கர்ப்பிணியான இவருக்கு கர்ப்பகால வலிப்பு நோயுடன், உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகையும் இருந்துள்ளது. ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற இவருக்கு கடந்த ஜூலை, 9-ந் தேதி உடல்நிலை மோசமானது.
இதையடுத்து உயர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி காந்திசாலையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று, அதிகாலை, 3 மணியளவில் அவருக்கு சுயநினைவே இல்லை. இதய செயலிழப்பும் ஏற்பட்டது. உடனடியாக உயிர் காக்கும் முதலுதவியுடன் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது.
அறுவை சிகிச்சை மூலம் காலை, 6.30 மணிக்கு, 30 வார வளர்ச்சியுடன், 750 கிராம் எடையுடன் இறந்த நிலையில் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர். சபீராவுக்கு தொடர் செயற்கை சுவாசம் தேவைப்பட்டதால், டிரக்கியாஸ்டமியும் செய்யப்பட்டது. தொடர்ந்து, 35 நாட்களுக்கு எந்த அசைவும் இல்லாமல் இருந்த அவர், அதன் பின் முன்னேற்றமடைந்து சுவாசிக்க தொடங்கி, தற்போது நலமுடன் உள்ளார்.
அதேபோல காவேரிப்பட்டணத்தை சேர்ந்த சோனியா (25) என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு அதிக ரத்தப்போக்கால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கும், 55 யூனிட் ரத்த மூலக்கூறுகள் செலுத்தப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இருநாட்களில் உடல்நலம் சீராகி, கடந்த, 3-ந் தேதி சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
செயற்கை சுவாசத்துடன், 35 நாட்கள் சிகிச்சை பெற்றவரை கண்காணிக்க மருத்துக்கல்லூரி முதல்வர் பூவதி தலைமையில், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வி மற்றும் வசந்தகுமார், சிவமஞ்சு, உதயராணி, நவீனாஸ்ரீ, முத்தமிழ், இளம்பரிதி, மஞ்சித் ஆகிய டாக்டர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கர்ப்பிணி பெண்ணை உரிய சிகிச்சைகள் மூலம் காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.
- கிருஷ்ணகிரி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் முக்கிய இடத்தை வகித்து வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
- தொழிற் நிறுவன பிரநிதிகளுடன் ஆலோசனை
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சமூக பொறுப்பு நிதி தொடர்பான வலைதள சேவையை தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
மேலும் பெரு நிறுவனங்களுக்கான சமூக பொறுப்பு நிதி தொடர்பாக நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சரயு, சட்டமன்ற உறுப்பினர்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த வலைதள பக்கத்தில் மாவட்டத்தின் அடிப்படை தேவைகளான கல்வி, சுகாதாரம், குடியிருப்பு போன்ற இனங்களின் எந்தெந்த பகுதிகளில் தேவை உள்ளது என்ற விவரம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் பெருந்தொழில் நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களை இந்த வலைதள பக்கத்திலிருந்து தேர்வு செய்து மேற்கொள்ள வேண்டும்.
இப்பணிகள் பொதுமக்களுக்கு பெரு மளவு பயனளிப்பதாகவும், அப்பகுதியில் வாழும் பொதுமக்களின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகவும் அமைய வேண்டும். மேலும், பெருநிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்பு நிதியை நமக்கு நாமே திட்டத்தின் மூலம் வழங்கி, கூடுதலாக அதிக பணிகளை மேற்கொள்ளலாம். தொழில்துறை வளர்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய இடத்தை வகித்து வருகிறது. எனவே, இங்கு இயங்கி வரும் நிறுவனங்கள் தாங்கள் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தேவையான வசதிகளை சமூக பொறுப்பு நிதியின் கீழ் செய்து கொடுத்து, அவர்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்த வழிவகை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியயாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் மாநகராட்சி ஆணையர் சினேகா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, உதவி கலெக்டர் பாபு, தொழிலக பாதுகாப்புத்துறை இணை இயக்குநர் சபீனா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ரமேஷ்குமார், நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர். பரமசிவம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.ரமேஷ்கமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னபாலமுருகன், கனிம வளத்துறை துணை இயக்குநர் வேடியப்பன், தாசில்தார்கள் ஜெய்சங்கர், விஜயகுமார், பெருநிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






