என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • ஓசூர் வார்டு பகுதிகளில் மேயர் சத்யா ஆய்வு மேற்கொண்டார்
    • ரூ. 3.86 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெறுகிறது

    ஓசூர் மாநகராட்சி 31-வது வார்டிற்குட்பட்ட இமாம் பாடா, தாசரப்பேட்டை, ஏழு வீதி தெரு, ராஜு வீதி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூபாய் 3.86 லட்சம் மதிப்பீட்டில், நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர் எஸ்.ஏ.சத்யா மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை தரம், அதன் உயரம், அகலம் குறித்தும் மக்களுக்கு தேவையான கழிவு நீர் கால்வாய், தெரு விளக்குகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் சரியான முறையில் செய்து கொடுக்கப்படுகிறதா? எனவும் அவர் கேட்டறிந்தார்.

    பின்னர் பொதுமக்களின், குறைகளையும் கேட்ட றிந்தார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தீக்காயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • கிருஷ்ணகிரியில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கிருஷ்ணகிரி அருகே சிட்கோ தொழிற்சாலை பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவரது மனைவி சரஸ்வதி (வயது33). இவர் கடந்த மாதம் 19-ந் தேதி வீட்டில் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அடுப்பின் அருகே பாட்டிலில் இருந்த வெள்ளை மண்எண்ணை தவறி கீழே விழுந்தது. அதில் தீப்பொறி பற்றி திடீரென்று தீப்பிடித்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சரஸ்வதியின் சேலையில் தீப்பற்றி அவரது உடல் முழுவதும் தீ பரவி பலத்த காயமடைந்தார்.

    உடனே அவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தீபக் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாமல்பட்டி ரெயில்வே பாலம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டர் சைக்கிள் மீது நேருக்கு நேராக மோதியது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை அருகேயுள்ள நடுபட்டு பகுதியை சேர்ந்தவர்கள் குமரேசன். இவரது மனைவி லோசிணி.

    இவர்கள் ஊத்தங்கரை பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக கணவன்-மனைவி இருவரும் ஒரு மோட்டர் சைக்கிளில் நடுபட்டுவில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

    அப்போது குமரேசன் மோட்டர் சைக்கிளை ஓட்டி வந்தார். அவர்கள் சாமல்பட்டி ரெயில்வே பாலம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டர் சைக்கிள் மீது நேருக்கு நேராக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் லோசிணி படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். குமரேசன் பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து காயமடைந்த குமரேசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமரேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவலறிந்த சாமல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் இறந்த லோசிணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன் கண்முன்பே மனைவி இறந்து போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஊத்தங்கரை அருகே புதிய துணை சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
    • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

            கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புங்கனை மற்றும் அதன் சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் நீண்ட நாட்களாக அரசு ஆரம்ப சுகாதார வளாகம் வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும் பல முறை ஆர்ப்பாட்டங்கள் செய்தும் அரசுக்கு கோரிக்கைகளை முன் வைத்துள்ளதாகவும் இதுவரை இப்பகுதியில் அரசு துணை சுகாதார நிலையம் அமைக்கவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து புங்கனை கிராம பொதுமக்கள் கூறியதாவது:-

    புங்கனை பகுதியில் வசித்து வரும் நாங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 15 கிலோ மீட்டர் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இங்கு அரசு துணை சுகாதார நிலையம் அமைப்பது இப்பகுதி பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், தற்துபோது தமிழக அரசு புதியதாக துணை சுகாதார நிலையம் ஒன்றினை அமைக்க அரசாணை வெளியிட்டு அதற்கான பணியும் தொடங்கி உள்ளன. இந்த பணியானது புங்கனை பகுதியில் ஆரம்பிக்காமல் அருகே உள்ள மண்ணாடிப்பட்டி கிராமத்தில் போதுமான இடவசதி இல்லாத பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது.

    ஆனால், புங்கனை பகுதியில் துணை சுகாதாரம் நிலையம் அமைப்பதற் காகவே சுமார் 41 சென்ட் நிலம் கடந்த 20 ஆண்டு களாக ஒதுக்கப்பட்டு இருப்பதா கவும் அவற்றில் கட்டினால் நிலையத்திற்கு போதுமான இடவசதி இருக்கும். எனவே உடனடியாக மண்ணாடிப்பட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்தில் தடுத்து நிறுத்தி புங்கனை பகுதியில் அமைத்திட வேண்டும்.

    அவ்வாறு மாற்றி அமைக்க விட்டால், வருகிற 4-ந் தேதி புதூர் புங்கனை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு புங்கனை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கிருஷ்ணகிரியில் 11.329 பேருக்கு ரூ.20.11 கோடியில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • முதல் அமைச்சரின் வரிவான மருத்துவ காப்பீட்டில் வழங்கப்பட்டது.

    முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு, பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜன திட்டத்தின் கீழ் 11 ஆயிரத்து 329 பயனாளிகளுக்கு ரூ.20 கோடியே 11 லட்சத்தில் மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார்.

    நிறைவு விழா

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீடு மற்றும் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டத்தின், 5-ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கி காப்பீட்டுத் திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு பரிசுகள், சிறப்பாக செயல்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:

    ரூ.20.11 கோடியில் மருத்துவ சிகிச்சைகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் அமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் மூலம், 11,329 பயனாளிகளுக்கு, 20.11 கோடி ரூபாய் மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3 லட்சத்து 78 ஆயிரத்து 741 குடும்பங்கள், பதிவு செய்யப்பட்டு காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

    காப்பீட்டுத் திட்ட அட்டை தேவைப்படுவோர் ரேஷன், ஆதார் அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட ஆண்டு வருமானச் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக, அறை எண்.32 -ல் செயல்படும் மையத்தை அணுகி இணையத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    பாராட்டு சான்றிதழ்கள்

    தொடர்ந்து, பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா மற்றும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயனடைந்த, 5 பயனாளிகளுக்கு நினைவு பரிசுகளும், சிறப்பாக செயல்பட்ட தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை, உமாராணி, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகிய தனியார் மருத்துவமனை, 5 வார்டு மேலாளர்கள், 5 தொடர்பு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.மேலும் பிரதம மந்திரி மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட,10 பேருக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

    இதில் நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம், மாவட்ட காப்பீட்டுத் திட்ட அலுவலர்கள் இளந்தரியன், சையத்அலி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சரக அளவிலான தடகள போட்டியில் மத்தூர் குணா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • வெற்றி மாணவர்களை அனைவரும் பாராட்டினர்

    சரக அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் மத்தூர் குணா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்த கொண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத் துள்ளனர்.

    இதில் மாணவர்க ளுக்கான கால் பந்து போட்டியில் U14 மற்றும் U17 இரண்டு அணிகளும், மாணவர்கள் பந்து வீச்சு போட்டியில் U17 மற்றும் U19 இரு அணிகளும் சரக அளவில் முதலிடமும், U19 மாண விகள் இரண்ட்டா மிடமும் பிடித்தனர்.

    மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் U14 மற்றும் U17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.

    மாணவிகளுக்கான கோ -கோ போட்டியில் U14 அணிஇரண்டாம் இடம்பிடித்தனர். சரக அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வெள்ளி வெண்கலம் என 17 பதக்கங்களை மாணவ மாணவிகள் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர் குண. வசந்தரசு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தார்.

    உடன் பள்ளியின் முதல்வர் இரவிந்திரன், உடற்கல்வி ஆசிரியர் செந்த மிழ் மற்றும் இருபால் ஆசிரி யர் பெருமக்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவி களை வாழ்த்தினர்.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசு கடைகள் வைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • 31ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும்.

    இது குறித்து கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற நவம்பர் மாதம் 12-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடை வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008-ல் விதி 84-ஐ முறையாக கடைபிடித்து இணையதளத்தின் வாயிலாக எந்தவொரு இ-சேவை, மக்கள் கணினி மையம் மூலம் உரிய ஆவணங்களுடன் வருகிற 31-ந் தேதிக்குள் மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    அதன்படி, சம்பந்தப்பட்ட ஊராட்சி வரி ரசீது. உரிமம் கோரும் இடத்தின் வரைபடம் (2 நகல்கள்). நடப்பு நிதி ஆண்டின் கட்டிட வரி ரசீது. வாடகை கட்டிடமாக இருப்பின் நோட்டரி வழக்கறிஞர் கையொப்பத்துடன் கூடிய ஓராண்டிற்கு குறையாத காலத்திற்கு செய்துகொள்ளப்பட்ட வாடகை ஒப்பந்த பத்திரம் (அசல் மற்றும் 2 நகல்கள்). உரிமம் கட்டணம் ரூ.500 செலுத்தி, அதற்கான அசல் சலான் இணைக்கப்பட வேண்டும். இரண்டு ஸ்டாம் சைஸ் புகைப்படம். ஆதார் அடையாள அட்டை ஆகிய ஆவணங்கள் இருக்க வேண்டும்.

    தகுதிகள்

    மேலும், தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பம் செய்வோர், பட்டாசு கடை வைக்கும் கட்டிடம் கல் மற்றும் தார்சு கட்டிடமாக இருக்க வேண்டும். தற்காலிக உரிமம் கோரும் ஒவ்வொரு கடைகளுக்கு இடையே 3 மீட்டர் இடைவெளிவிட்டு இருத்தல் வேண்டும். மேலும், அருகில் குடியிருப்புகள் இருத்தல் கூடாது. எதிர் எதிரே பட்டாசு கடைகள் இருப்பின் உரிமம் வழங்கப்பட மாட்டாது.

    எண்ணெயில் எரியும் விளக்கு, எரிவாயு விளக்கு, மெழுகுவர்த்தி மற்றும் இதர மின்சாரம் இல்லாத விளக்குகள் கடையில் பயன்படுத்தக் கூடாது. மின்சார விளக்குகள் பயன்படுத்தும் போது, மின்சார ஒயர்கள், சுவிட்ச் பெட்டிகள் சுவற்றில் பாதுகாப்புடன் எவ்வித மின்கசிவும் இல்லாமல் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். உரிமம் பெற்றவர்கள் உரிமத்தின் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பட்டாசு இருப்பு வைத்துக்கொள்ளக் கூடாது.

    தீயணைப்பு கருவிகள்

    அவசர காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து உரிமதாரரும், அவரது பணியாளர்களும் தெரிந்திருக்க வேண்டும். தணிக்கை அலுவலர் கடையை தணிக்கை செய்து விதிமுறைகளின் படி தெரிவிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிமம் கோருபவர் மேற்கொள்ள வேண்டும். விபத்துக்கள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையம், தாசில்தார், தீயணைப்பு அலுவலர் மற்றும் உரிமம் வழங்கிய அலுவலருக்கும் தெரிவிக்க வேண்டும்.

    மேலும், அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களிடம் மட்டுமே பட்டாசு இனங்கள் வாங்கி விற்பனை செய்தல் வேண்டும். உரிமம் பெற்ற இடத்தில் 2 தீயணைப்புக் கருவிகள், 2 தண்ணீர் வாளிகள், 2 மணல் நிரப்பப்பட்ட வாளியும் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அல்லது தேவைக்கு ஏற்ப கூடுதலாகவும் முன்னேற்பாடுகள் செய்திருக்க வேண்டும். பட்டாசுகளை ஏற்கனவே அனுபவம் பெற்றவர்களே கையாள வேண்டும்.

    குற்றவியல் நடவடிக்கை

    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடை அருகில் வாகனங்களை நிறுத்தவோ அல்லது சுற்றுப்புறத்தின் சூழலை கெடுக்கும் வகையிலோ வியாபார் செய்யக்கூடாது. உரிமத்தை, தணிக்கை அலுவர்களின் தணிக்கையின் போது பார்வையில் படும்படி வைக்க வேண்டும். இருப்பு பதிவேடு மற்றும் தணிக்கை பதிவேடுகள் முறையாக பராமரிக்க வேண்டும்.

    மேற்கண்ட விதிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தவறும் உரிமைதாரரின் உரிமத்தை ரத்து செய்வதுடன், அவரின் பேரில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்தூர் அருகே மோட்டர் சைக்கிள் மோதி பேக்கரி மாஸ்டர் பலியானார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் கொத்தகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் கோவிந்தன் (வயது30). இவர் பேக்கரி கடையில் மாஸ்டாராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இந்த நிலையில் நேற்று மதியம் ஹாலோ பிரிக்ஸ் கற்களை வாங்குவதற்காக அதே பகுதியில் உள்ள சமத்துவபுரத்திற்கு வந்தார். அப்போது அவர் அந்த பகுதியில் நடந்து வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிருஷ்ணகிரியில் கர்நாடக அரசு பஸ்சை மறித்து நாம் தமிழ் கட்சியினர் ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தண்ணீர் தர மறுத்து கன்னட அமைப்புகள் பந்த் நடத்தியது.

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கரு. பிரபாகரன் தலைமை தாங்கினார். அப்போது காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசு, கன்னட அமைப்புகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கோஷங்கள் எழுப்பினார்கள்.

    அப்போது கிருஷ்ணகிரி பஸ் நிலையம் வழியாக சென்ற கர்நாடகா அரசு பஸ்சை திடீரென அக்கட்சியினர் மறித்து, சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரியில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும், தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.

    தொடர்ந்து அங்கிருந்து சாலையில் ஊர்வலமாக நடந்து சென்ற அக்கட்சியினர், கிருஷ்ணகிரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினார்கள். இதனால் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • மத்தூரில் ஸ்ரீதேவி,பூதேவி சமதே ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
    • காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் இரண்டாம் சனிக்கிழமையொட்டி ஸ்ரீனிவாசா பெருமானுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி அம்மையாருக்கும் திருக்கல்யாணம் நடை பெற்றது.

    முன்னதாக பெருமாளுக்கு கோ பூஜையுடன் சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் கோவில் வளாகத்தில் திருவிளக்கேற்றுதல், படி கொடுத்தல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ஊர் முக்கியஸ்த்தர்களுக்கு புரோகிதர்களால் முதல் மரியாதை செலுத்தியும், மேள தாளங்களுடன் பெருமாள் கோவிலில் இருந்து பெண்கள் சீர்வரிசையுடன் ஊர்வலமாக ஸ்ரீ சோமேஸ்வர் ஆலயத்திற்கு சென்று அங்கு அம்மையப்பரை சிறப்பு பூஜைகளுடன் கொண்டு வரப்பட்டன. இத்திருக்கல்யாண விழாவில் தம்பதியினருக்கு மாங்கள்ய பூஜையும் நடைபெற்றன.

    திருக்கல்யாண திருமணத்தில் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் என இந்துக்கள் முறைப்படி புரோகிதர்களால் வெற்றிலை தாம்பூலம் மாற்றிக் கொல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

    ஸ்ரீனி வாச பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தயாரின் திருக்கல்யாண நிறைவுடன் பக்தர்களல் மொய் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதளையடுத்து ஸ்ரீனிவாச பெருள், ஸ்ரீதேவி, பூதேவி வீதி உலா நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், ஊர் தலைவர் ஊர் பெரியதானக்காரர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • அரசு பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
    • நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரஹ்மத் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது41). இவர் சூலகுண்டா பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார் இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அதிக அளவில் கடன் ஏற்பட்டுள்ளது.

    இதனால் மன வேதனை அடைந்த மணிகண்டன் கடந்த 28 ந்தேதி வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு ராயக்கோட்டை அரசு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி பானுப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
    • பல்வேறு கல்லூரி மாணவர்கள் 342 பேர் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,  

    ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி கணினி பயன்பாட்டுவியல் துறை சார்பில், 'வைஃப் 5" என்ற கருத்தரங்கு 2 நாட்கள் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மேலும், " நாட்டின் வளர்ச்சி என்பது தொழில்நுட்பத்தைச் சார்ந்துதான் இருக்கின்றன.  மக்களின் வாழ்வியலில் அறிவியல் சார்ந்த பொருட்கள் அதிக பயன்பாட்டில் இருந்து வருகின்றன. மாணவர்கள் தொழில்நுட்ப கருவிகளைச் சரியான முறையில் பயன் படுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

    முன்னதாக, கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் சிவராமன் வரவேற்றார். இதில், முத்துராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு. தொழில் நுட்பத்தின் மையநோக்க மான மாணவர்களின் புத்திக்கூர்மை, தனித் தன்மை, படைப்பாற்றல் போன்றவை இன்றைய மென்பொருள் துறையின் போக்குக் குறித்தும் பேசினார்.

    மேலும், இன்றைய வளர்ச்சிக்காலத்தில் சாட் ஜி.பி.டி.யின் அவசியம் குறித்தும், ஒவ்வாரு மாண வர்களும் தொழில்நுட்ப வளர்ச்சி ஓட்டத்தில் பின்பற்றி ஓட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மாணவர்களின் செயல்திறனை உலக அரங்கில் கொண்டு செல்ல வும் அவர்களின் திறமை களை வெளிக்கொணரவும் ஒரு முத்தாய்ப்பாக, தனியார் தொலைகாட்சி "கலக்க போவது யாரு" புகழ் பாலா கலந்து கொண்டு, " மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை அடுத்தக்கட்ட நிலைக்கு எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும்? எதிர்த்து வரும் போராட் டங்களைச் சமாளிப்பது எப்படி? மாணவர்கள் அனைவரும் சகிப்புத் தன்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று இயல்பாக நகைச்சுவையுடன் பேசினார்.

    கருத்தரங்கின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மட்டு மின்றி கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சார்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள் 342 பேர் கலந்து கொண்டனர். மேலும் மாணவர்களுக்கான குறும்படம், நடனம், தப்மாஸ், புகைப்படம் போன்ற போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் வெற்றிப் பெற்றவர்களுக்குப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

    கருத்தரங்க ஏற்பாடு களை கணினி பயன்பாட்டி யல் துறை பேராசிரியர்களும், மாணவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ×