சிங்காரப்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன் கண்முன்பே மனைவி பலி

சாமல்பட்டி ரெயில்வே பாலம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டர் சைக்கிள் மீது நேருக்கு நேராக மோதியது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்காரப்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன் கண்முன்பே மனைவி பலி
Published on

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை அருகேயுள்ள நடுபட்டு பகுதியை சேர்ந்தவர்கள் குமரேசன். இவரது மனைவி லோசிணி.

இவர்கள் ஊத்தங்கரை பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக கணவன்-மனைவி இருவரும் ஒரு மோட்டர் சைக்கிளில் நடுபட்டுவில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

அப்போது குமரேசன் மோட்டர் சைக்கிளை ஓட்டி வந்தார். அவர்கள் சாமல்பட்டி ரெயில்வே பாலம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டர் சைக்கிள் மீது நேருக்கு நேராக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் லோசிணி படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். குமரேசன் பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து காயமடைந்த குமரேசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமரேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவலறிந்த சாமல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் இறந்த லோசிணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன் கண்முன்பே மனைவி இறந்து போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com