என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கொரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி அறிவுரை வழங்கினார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க காவல் துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரியில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிப்பது, முக கவசம் அணிவது குறித்து மாவட்ட காவல் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், முக கவசம் அணியாதவர்களுக்கு முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் நேற்று மாலைநடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி தலைமை தாங்கி பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு முக கவசம் வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். முக கவசம் அணியாமல் வெளியே செல்வதால் நாம் பாதிக்கப்படுவதோடு,நம்மால் பலருக்கு தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளி, முக கவசம், சானிடைசர் பயன்படுத்தியும், அடிக்கடி கைகளை கழுவியும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா, சேலம் ரோடு, பழைய சப்-ஜெயில் ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள், உள்ளிட்டோருக்கு போலீசார் முக கவசங்களை வழங்கினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜூ, விவேகானந்தன், துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஓசூரில் வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த சானமாவு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட் சுப்பிரமணியம் (வயது 57), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை ஓசூர் அண்ணாநகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த நபர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 700 ரூபாயை பறித்து சென்றார். இது குறித்து அவர் ஓசூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டவர் உத்தனப்பள்ளியை அடுத்த கன்னசந்திரம் பகுதியை சேர்ந்த முரளி (40) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கைதான முரளி மீது ஏற்கனவே அட்கோ, மத்திகிரி, உத்தனப்பள்ளி, போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    கிருஷ்ணகிரி அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பெலட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி ஹேமலதா (வயது 24). இவர் கிருஷ்ணகிரியில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக ஹேமலதா மனமுடைந்து காணப்பட்டார். இதனால் கடந்த 1-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹேமலதா, வி‌ஷம் குடித்தார். இதில் உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஹேமலதா பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சுண்ணாம்பட்டி, கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52) , லாரி டிரைவரான இவரும் மனைவி அம்சா ஆகிய இருவரும் நேற்று மாலை வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றுள்ளனர்.

    மீண்டும் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் ஆகியவற்றை  மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து மத்தூர் காவல் நிலையத்திற்கு வீட்டின் உரிமையாளர் முருகேசன் புகார் அளித்தார். அதன் பேரில் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.
    ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு 27 மாடுகளை ஏற்றி சென்ற சரக்கு லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு 27 மாடுகளை ஏற்றி வந்த சரக்கு லாரியை காரில் வந்த கும்பல் கடத்தி சென்றனர். அந்த லாரி ஓசூர் அருகே 13 மாடுகளுடன் மீட்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.இது பற்றிய விவரம் வருமாறு:- ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து 27 எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று கேரளா மாநிலம் நோக்கி நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது.

    அந்த லாரியை ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சையத்பாஷா (வயது 50) என்பவர் ஓட்டிச் சென்றார்.லாரியில் உதவியாளர்களாக ஐதர் அலி (25), முகமது ரபீக் (27), சுதாகர் (26) ஆகிய 3 பேர் இருந்தனர். அந்த லாரி நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா ஒரப்பம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது இயற்கை உபாதை கழிப்பதற்காக டிரைவர் சையத் பாஷா லாரியை நிறுத்தினார். அவருடன் உதவியாளர்களும் கீழே இறங்கினார்கள்.அந்த நேரம் ஒரு காரில் 3 பேர் வந்தனர். அவர்கள் இயற்கை உபாதை கழிக்க சென்ற 4 பேரையும் மிரட்டி தங்கள் ஓட்டி வந்த காரில் ஏற்றினார்கள். பின்னர் காரில் வந்த 3 பேரில், ஒருவர் இறங்கி கொள்ள மற்ற 2 பேரும் காரை கிருஷ்ணகிரி - சேலம் சாலையை நோக்கி ஓட்டிச் சென்றார்கள்.

    அதே நேரத்தில் காரில் இருந்து இறங்கிய மற்றொரு நபர் லாரியை எடுத்துக் கொண்டு பெங்களூரு சாலையில் கொண்டு சென்றார்.

    இந்த நிலையில் சையத் பாஷா உள்ளிட்ட 4 பேரையும் காரில் வந்தவர்கள், கிருஷ்ணகிரி அவதானப்பட்டி ஏரிக்கரை பக்கமாக இறக்கி விட்டு விட்டு சென்றனர். எருமை மாடுகளுடன் லாரி கடத்தப்பட்டது.

    மேலும் தங்களை கடத்தல் கும்பல் ஒரு இடத்தில் இறக்கி விட்டதை கண்டு சையத்பாஷா உள்ளிட்ட 4 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து சையத்பாஷா உடனடியாக ஆந்திராவில் உள்ள தனது லாரியின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார்.

    அந்த லாரியில், எங்கே லாரி சென்று கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதை கொண்டு அந்த லாரி எங்கே இருக்கிறது என்பதை லாரியின் உரிமையாளர் பார்த்தார்.அப்போது அந்த லாரி ஓசூரை அடுத்த கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் நின்று கொண்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து லாரி டிரைவர் கந்திகுப்பம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயவாணி மற்றும் போலீசார் அத்திப்பள்ளிக்கு விரைந்து சென்றனர். அப்போது சாலையோரத்தில் கடத்தப்பட்ட லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியில் மொத்தம் இருந்த 27 மாடுகளில, 14 மாடுகள் திருடப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து லாரியையும், 13 மாடுகளையும் போலீசார் மீட்டனர். மேலும் 14 மாடுகளை திருடிச் சென்ற நபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ஓசூரில் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணேகொள்புதூர் அடுத்த மாந்தோப்பு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 25), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 4-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே குடும்ப தகராறில் வெறுப்படைந்த அரசு பஸ் கண்டக்டர் அதிக தூக்க மாத்திரை தின்று தற்கொலை செய்துகொண்டார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சிவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுகேந்திரன். இவரது மகன் குரு (வயது 31). அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், பிருந்தா என்ற இளம்பெண்ணுக்கும் இடையே கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் குருவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் குரு இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து உறவினர்கள் மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கண்டக்டர் குருவின் உடலை கைப்பற்றி மத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குருவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வாலிபரிடம் பண மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருள் (வயது 24) இவருக்கு வாட்ஸ்அப் மூலம் வந்த தகவல்படி பணத்தை உடனடியாக அதாவது ஒரு லட்சத்துக்கு, இரண்டு லட்சம் தருவதாக கூறி தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் படி வாலிபர் அருள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நேற்று ஊத்தங்கரை பேருந்து நிலையத்திற்கு வருமாறு அந்த நபர்களை வரவழித்தும் இது குறித்து ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

    தகவலின்படி போலீஸார் விரைந்து வந்து பேருந்து நிலையத்தில் மறைந்திருந்து வாலிபர் அருளிடம்  வாட்ஸ்அப் தகவல் மோசடி நபர்களிடம் பணம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர். அதே போல் வாலிபர் அந்த நபர்களிடம் பணம் கொடுக்கும் போது மறைந்திருந்த போலீஸார் அந்த மர்மநபர்களை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், ஒழுகூர் கிராமத்தை சேர்ந்த யோகணன் சத்யா வயது 53, அதே விலாசத்தை சேர்ந்த செல்வகுமார் வயது 41, பழனி 51 என தெரிய வந்தது.

    இந்த மோசடியில் ஈடுபட்ட மூவரிடமும் வாலிபர் அருள் கொடுத்த பணத்தை பறிமுதல் செய்தும் மோசடி வழக்கில் கைது செய்ததுடன் மூவர் மீது வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஒசூர் கிளை சிறையில் அடைத்தனர்.
    ஓசூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓசூர் சிப்காட் மூக்கண்டப்பள்ளி என்.டி.ஆர். நகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 32). இவர் ஓசூரில் ரிங் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருடைய மனைவிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிரசவம் நடந்தது. அப்போது பெண் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதில் மனவேதனையில் இருந்து வந்த அய்யப்பன் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தேன்கனிக்கோட்டை அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி முதன்மை மருத்துவ அலுவலர் ஞானமீனாட்சி, ஓசூர் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் முருகன், சந்தனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் மாரேஸ் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் தேன்கனிக்கோட்டை அருகே திப்பசந்திரத்தில் உள்ள மருந்து கடையில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த நீலஞ்சனூரை சேர்ந்த விஜய் (வயது 24) மருந்து கடை பின்புறம் கிளினிக் நடத்தியது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, எலட்ரோபதி படித்து விட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கிளினிக்கிற்கும் சீல் வைத்தனர்.
    ஓசூர் அருகே கார் மோதி டீக்கடைக்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் அகவத்தியூரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 52). இவர் ஓசூரில் சின்ன எலசகிரி பாலாஜி நகர் பகுதியில் தங்கி, டீக்கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று அவர், ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தர்கா முத்து மாரியம்மன் கோவில் அருகில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஓடும் பஸ்சில் இருந்து பிளஸ்-2 மாணவி கீழே குதித்து பலியான சம்பவம் ஓசூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சினிகிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகள் நவியாஸ்ரீ (வயது 17). இவர் கெலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு அரசு பஸ்சில் செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாணவி பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவி நவியாஸ்ரீ, கெலமங்கலத்தில் இருந்து தருமபுரி நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏறி தனது ஊருக்கு பயணம் செய்தார்.

    அப்போது சினிகிரிப்பள்ளி கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான மாணவி, பதட்டத்துடன் இருக்கையில் இருந்து எழுந்துள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத வகையில் மாணவி, ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்தார்.

    இதில் கீழே விழுந்த மாணவி மீது பஸ்சின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் படுகாயம் அடைந்த மாணவி வலியால் துடித்தார். உடனே சக பயணிகள், கூச்சல் போட்டு பஸ்சை உடனடியாக நிறுத்தினர். பின்னர் மாணவியை மீட்டு, அதே பஸ்சில் உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவியை அனுப்பினர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று 10 மணியளவில் மாணவி நவியாஸ்ரீ பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து பற்றி உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    ×