என் மலர்
கரூர்
- பா.ஜ.க.வின் பட்டியல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தி.மு.க. அரசை கண்டித்து நடந்தது
கரூர்
கரூர் தமிழக பட்டியல் சமூக மக்களுக்காக மத்திய அரசு சார்பில் எஸ்.சி.எஸ்.டி. திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் நிதியை முறையாக செலவு செய்யாமல், வேறு திட்டங்களுக்கும், மீதி தொகையை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிய தி.மு.க. அரசை கண்டித்து கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று கரூர் மாவட்ட பா.ஜ.க.வின் பட்டியல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் பிச்சை அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு கரூர் மாவட்ட பட்டியல் அணி தலைவர் தங்கதுரை தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் மற்றும் கரூர் மாவட்ட பட்டியல் அணி மாநில பார்வையாளர் சுரேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேல் முருகன், மாவட்ட துணைத்தலைவர் செல்வன், செயலாளர் ஆர்.வி.எஸ்.செல்வராஜ் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும், உண்டியலில் காசு போட்டு அதனை சென்னை தலைமை செயலகத்திற்கு அனுப்பும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
- சாலை விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
கரூர்
குளித்தலை அருகே உள்ள ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 44). சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த மாட்டு தரகர் ஓமாந்து (81). இந்தநிலையில் சிவக்குமார் தனக்கு மாடு வாங்குவதற்காக ஓமாந்துவை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். சத்தியமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே 2 பேரும் சாலையை கடந்துள்ளனர்.
அப்போது அதே சாலையில் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம், இவர்கள் மீது மோதியது. இதில் சிவக்குமார் மற்றும் ஓமாந்து ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 2 பேரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.
- வேளாண் திட்டங்கள் குறித்து
கரூர்
கரூர் தரகம்பட்டி அருகே உள்ள செம்பியநத்தம் ஊராட்சியில் விவசாயிகளுக்கு பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டங்கள் குறித்து சிறப்பு பயிற்சி நடந்தது. இதற்கு கடவூர் வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா தலைமை தாங்கினார். விதை சான்றளிப்புத்துறை வேளாண்மை உதவி இயக்குனர் கவுதமி முன்னிலை வகித்தார்.
இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், மண் வளங்களை அதிகரிக்க செய்வது, நவ தானியங்கள், தொழு உரங்கள் மற்றும் நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், இணைய வழி பாரம்பரிய விவசாயிகள் குழு பதிவு செய்தல், சான்றுகள் பெறுதல் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் முத்தமிழ்செல்வன், அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர் கவியரசன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் வேளாண்மை அலுவலர் சரண்யா நன்றி தெரிவித்தார்.
- ஆட்டு வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை, பணம் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- பட்டப் பகலில் துணிகரம்
கரூர்:
கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே உள்ள காருடையான் பாளையம் மாலப்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 57).
விவசாயியான இவர் ஆடு வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று காலை 10.30 மணிக்கு அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி சர்மிளாவுடன் கரூருக்கு ஒரு வேலை விஷயமாக சென்றார். பின்னர் கணவன் மனைவி இருவரும் பிற்பகல் வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் முன்பக்க கேட் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் வீட்டின் கதவு பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் எடை கொண்ட
2 தங்க நாணயங்கள் மற்றும் ஆடு வாங்க வைத்திருந்த ரூ.40 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து செல்வராஜ் க. பரமத்தி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பட்டப் பகலில் ஆடு வியாபாரி வீட்டில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.
- அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு
கரூர்
கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் 2023-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்படும். இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும்- வழங்கப்பட உள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் அண்ணாவும் மேடைபேச்சும், கடமை, கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய்மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பன உள்ளிட்ட தலைப்புகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.
கல்லூரி மாணவ-மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் கல்லூரி கல்வி இணை இயக்குனர் வழியாக இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டிடத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் 04324-255077-ஐ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிலத்தகராறில் கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- சொத்தை கிரையம் வாங்கியுள்ளார்
கரூர்
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பழமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல்(வயது 43). இவர் பாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி, இவரது மனைவி சரஸ்வதி, மகள் சந்தியா, மகன் நிதிஷ் மற்றும் அவரது உறவினர்கள் தேவேந்திரன், சசி ஆகியோரிடம் இருந்து அவர்களுக்கு சொந்தமான சொத்தை கிரையம் வாங்கியுள்ளார். இந்நிலையில் வடிவேலுக்கு சொந்தமான கிரயம் எழுதிக் கொடுத்த சொத்துக்களை மேற்கண்ட 6 பேரும் சொத்தை அபகரிக்கும் நோக்கோடு கிரயம் கொடுத்த பின்பும் அந்த வீட்டில் குடியிருந்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது வடிவேல் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். அவர்கள் இடத்தை காலி செய்ய மறுத்து வடிவேலையும், அவரது மனைவி பானுப்பிரியாவையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வடிவேல் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- லாரி உரிமையாளரிடம் பணம் பறித்த பெண் கைது செய்யப்பட்டார்.
- ரூ.30 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார்.
கரூர்
கோவை மாவட்டம், சூலூர், காடம்பாடி, பாரதி நகரை சேர்ந்தவர் ஆனந்தகிருஷ்ணன்(வயது 40). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார்.
இந்த நிலையில் கோவையில் இருந்து ஆற்று மணல் எடுத்துச் செல்வதற்காக கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் கரூரை நோக்கி வந்துள்ளார். அப்போது கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள கூனம்பட்டி பிரிவு என்ற இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு இருந்த ஒரு பெண் ஆனந்தகிருஷ்ணனிடம் இருந்த ரூ.30 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார். இதையடுத்து அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அந்த பெண்ணை ஆனந்தகிருஷ்ணன் பிடித்து தென்னிலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். தென்னிலை சப்- இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி அந்த பெண்ணிடம் விசாரித்தபோது அந்தப் பெண் கரூர் மாவட்டம், மகாதானபுரம் அருகே உள்ள கம்மநல்லூர் காலனியைச் சேர்ந்த புஷ்பா(45) என தெரியவந்தது. இதனையடுத்து தென்னிலை போலீசார்அந்த பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் காலை உணவின் தரம், அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
- காலை உணவு சமைப்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு, கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
கரூர்:
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேலன் செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல்-அமைச்சர் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த சுமதி என்ற பெண் சமைப்பதற்காக பணி அமர்த்தப்பட்டுள்ளார்.
இந்த பெண் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், பள்ளியில் சமையல் பணி செய்யக்கூடாது. அப்படி செய்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் என்று, ஊர் பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டரிடம், சமூக ஆர்வலர் ராஜகோபால் மற்றும் தோழர் களம் அமைப்பினர் புகார் அளித்தனர்.
உடனே கலெக்டர் பிரபுசங்கர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு சென்றனர். அங்கு கலெக்டர் உணவின் தரம், அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் காலை உணவு உண்ணாத, 15 குழந்தைகளின் பெற்றோரை விசாரணை செய்தார்.
அருந்ததியர் சமூக பெண் சமைத்தால் தம்முடைய குழந்தை உணவு சாப்பிடாது, வேண்டுமென்றால் குழந்தையின் பள்ளி மாற்று சான்றிதழ் பெற்றுக் கொள்கிறேன், என தெரிவித்தார்.
இதையடுத்து எதிர்ப்பு தெரிவித்த பாலசுப்பிரமணியன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்படும் என, கலெக்டர் பிரபுசங்கர் எச்சரிக்கை விடுத்தார்.
இதை தொடர்ந்து, அவர் தன் குழந்தையை காலை உணவு உண்ண ஏற்பாடு செய்யப்படும் என மன்னிப்பு கேட்டதன் அடிப்படையில், வழக்கு தொடுக்காமல் எச்சரித்து விடுவிக்கப்பட்டார். மேலும் காலை உணவு சமைப்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு, கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
- பள்ளி தூய்மை பிரசாரம் தொடர்பாக விழிப்புணர்வு நடந்தது.
- கலெக்டர் பிரபுசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
கரூர்
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி தூய்மை பிரசாரம் தொடர்பாக எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி என்ற நிகழ்ச்சி திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பிரபுசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு ஊர்வலமானது பள்ளி வளாகத்திலிருந்து மண்மங்கலத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்திற்கு வந்தடைந்தது. ஊர்வலத்தில் பொதுமக்கள் விழிப்புணர்வு தூய்மை பிரசாரத்தை வலியுறுத்தி பல்வேறு பதாகைகள் கையில் ஏந்தி சென்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி என்ற நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தில் கலெக்டர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதனைத்தொடர்ந்து எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி என்ற நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தூய்மை பிரசாரம் தொடர்பான உறுதிமொழியினை கலெக்டர், மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர்.
- பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி நடந்தது
கரூர்
பணி நிரந்தரம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ரூசோ வரவேற்புரை ஆற்றினார்.
இதில் மாவட்ட துணைத்தலைவர் ஜீவரத்தினம், மாவட்ட துணை செயலாளர் மாரியம்மாள், மாவட்ட இணை செயலாளர் தேவிகலா மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
- சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பணம் வைத்து விளையாடியுள்ளனர்
கரூர்
கரூர் காந்திபுரம் பகுதியில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் ேராந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ராஜகோபால் (வயது 63), ராஜன் (69), ரமேஷ் (56), அண்ணாதுரை (50), விஜயன் (55), கண்ணன் (59) ஆகிய 6 பேரும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்
கரூர்
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள பெரியவட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 21). கணவர் பரணி. இவர்கள் கரூர் ஆத்தூர் பகுதியில் வீடு வாடகை எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பிரியதர்ஷினி கடந்த சில மாதங்களாக தலைசுற்றல் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பிரியதர்ஷினி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






