என் மலர்
கரூர்
- இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்
- தோட்டக்குறிச்சியில் இயங்கும் கான்கிரிட் தயாரிக்கும் நிறுவனம் மணல் திருட்டில் ஈடுபடுவதால் சாலைகள் பழுதாவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் அருகே தனியாருக்கு சொந்தமான கான்கிரீட் கலவை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிமெண்ட் மற்றும் சல்லி கலந்து கான்கிரீட் கலவை தயார் செய்யப்பட்டு நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு ஆர்டரின் பேரில் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கான்கிரிட் லாரிகள் அங்குள்ள சாலைகளில் பகல், இரவு நேரங்களில் கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாக தோட்டக்குறிச்சியிலிருந்து காவிரி ஆற்றுக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து வாகனங்களை செல்ல முடியாத அளவுக்கு சீரழிந்து விட்டது. மேலும் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக மணல்களை அள்ளி கான்கிரீட் தயார் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது சம்பந்தமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கிணறு தண்ணீரை உறிஞ்சி எடுத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது
- கிணறு நீரை எடுத்து செல்லும் லாரி உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் துறையினர் எச்சரிக்கை
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டத்தில் உள்ள கிணற்றுகளில் இருந்து தண்ணீரை எடுத்து விற்பனை செய்யக் கூடாது, அவ்வாறு விற்பனை செய்யும் கிணறு உரிமையாளர்கள் மீதும் தண்ணீரை எடுத்துச் செல்லும் லாரி உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட வருவாய்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கிணற்றிலிருந்து தொடர்ந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதால் விவசாயக் கிணறுகளில் உள்ள தண்ணீர் மிகவும் குறைந்து விவசாயம் பாதிக்கும்.அதே போல் குடிநீர் ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீரும் கீழ் மட்டத்திற்கு சென்று குடிநீர் விநியோகம் செய்வதும் பாதிக்கப்படும். எனவே அரசு அனுமதியின்றி தண்ணீரை விற்பனை செய்பவர்கள் மீதும், தண்ணீரை வாங்கி செல்பவர்கள் மீதும் கடும்நடவடிக்கை எடுக்கப் போவதாக வருவாய்த்துறை அறிவித்துள்ளது.
- கோம்புப்பாளையம் சீனிவாச பெருமாள் கோவிலில் ஆவணி மாத ஏகாதெசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது
- சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசபெருமாள் கோவிலில் ஆவணி மாத ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு துளசி மற்றும்பிரசாதம் வழங்கப்பட்டது.
- குளித்தலையில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
- சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது
கரூர்,
குளித்தலை அடுத்த முதலைப் பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி சம்பூரணம்(வயது 58). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம்குடித்தார். உடன் அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சம்பூரணம் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குளித்தலையில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
- கைது செய்யப்பட்டவரிடம் இருந்து ஏராளமான ஆன்லைன் லாட்டரி, பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
கரூர்
குளித்தலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் வந்தது. இதை யடுத்து போலீசார் குளித்தலை அடுத்த தண்ணீர் பள்ளி கடைவீதியில் ஆய்வு செய்தபோது, அங்கு தண்ணீர்பள்ளி சேடர் தெருவைச் சேர்ந்த ரமேஷ்(வயது 48) என்பவர் ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- நங்கவரம் பேரூராட்சியில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது
- குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
கரூர்
குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சியில் சமூக பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நங்கவரம் பேரூராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நங்கவரம் பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி சுந்தரம் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயலாளர் முருகேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் மஞ்சுளா கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் குழந்தை திரும ணம், பாலியல் குற்றங்கள், ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழு வதை தடுக்கும் நடவடிக்கைகள், பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் காவல்துறைக்கு ரகசிய எண்ணிற்கு போன் செய்வது மற்றும் குழந்தைகள் தொடர்பான குற்றங்களுக்கு 1098 மற்றும் குழந்தை தொழிலாளர்கள் குறித்து புகார் தெரிவிக்க 8903331098 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் கொடுக்க வேண்டும் என்பன குறித்து பொதுமக்களிடையே எடுத் துரைக்கப்பட்டது. இதில் நங்கவரம் கிராம நிர்வாக அலுவலர்கள் வரதராஜன், வின்சென்ட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- க.பரமத்தியில் போலீஸ் அனுமதி பெறாமல்வீரவணக்கம் செலுத்த வந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர்
- பொதுமக்கள் இடையூறு ஏற்படுத்தியதாக கூறி போலீசார் கைது செய்தனர்
கரூர்,
கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு கல்குவாரி உரிமையாளரால் கொலை செய்யப்பட்ட ஜெகநாதனின் நினைவு நாளையொட்டி சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் வீரவணக்கம் நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் வீரவணக்கம் செலுத்துவதற்காக கோஷம் எழுப்பியபடி சாமானிய மக்கள் நலக் கட்சி பொதுச் செயலாளர் குணசேகரன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் உள்பட 13 பேர் வந்தனர். அவர்களை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி க.பரமத்தி போலீசார் கைது செய்தனர்.
- புகழுர் நகராட்சியில் பழமையான இடிக்கப்பட உள்ள பள்ளி கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடைபெற்றது
- பழமையான இடிக்கப்பட உள்ள கட்டிடத்தை நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் ஆய்வு நடத்தினார்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட 8 நகராட்சி துவக்க பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் கட்டிடங்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதையும்,பழமையான, சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடிப்பது தொடர்பாக பள்ளிகளுக்கு நேரடியாக சென்று புகழூர் நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் கள ஆய்வு மேற்கொண்டார் . அப்போது பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்களின் குறைகளை கேட்டறிந்தார். களஆய்வின் போது, நகராட்சி பொறியாளர் பூங்கொடி, பணி மேற்பார்வையாளர் ரவி, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- புகளூர் தாசில்தார் அலுவலகத்தில் ரேஷன் கார்டு திருத்த முகாம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது
- 27 வருவாய் கிராமங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகளூர் தாசில்தார் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் பானுமதி தலைமையில் குடும்ப அட்டை திருத்த முகாம் நடைபெற்றது. முகாமில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் புகளூர் தாலுகாவிற்கு உட்பட்ட 27 வருவாய் கிராமங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், முகவரி திருத்தம்,புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் கை பேசிஎண் மாற்றம் குறித்தும் மனுக்கள் கொடுத்து தீர்வு கண்டனர். அதேபோல் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகளின் குறைகள் குறித்தும் வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்தனர்.
- புன்னம் சத்திரம் அன்னை மகளிர் கல்லூரியில்பகடிவதை தடுப்பு - காவலர் அமைப்பு தொடக்க விழா நடைபெற்றது
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்களையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் 181, 1098, முதலான எண்கள் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம்-காகித ஆலை செல்லும் சாலையில் உள்ள அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பகடிவதை தடுப்பு மற்றும் காவலர் அமைப்பு துவக்கவிழா நடைபெற்றது. துவக்க விழாவிற்கு அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளை நிறுவனர் மலையப்பசாமி தலைமை வகித்தார். தலைவர் தங்கராசு, செயலாளர் டாக்டர் முத்துக்குமார், பொருளாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் சாந்தி வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் சாருமதி விழாவினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினரை ஒருங்கிணைப்பாளர்மேனகா அறிமுகம் செய்துவைத்தார். சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி, உதவி ஆய்வாளர் முத்துமணி , சிறப்பு உதவி ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் தலைமை காவலர் சாந்தி ஆகியோர்கள் கலந்து கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்களையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் 181, 1098, முதலான எண்கள் குறித்த விளக்கங்களை விரிவாக எடுத்துக்கூறினாகள். இவ்விழாவில் துணை முதல்வர், கலைப்புலத்தலைவர், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பகடிவதை மற்றும் காவலர் அமைப்பு' ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர். முடிவில் இளங்கலைத்தமிழ் இரண்டாமாண்டு மாணவி நதிமலர் நன்றி கூறினார்.
- கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட விழா நடைபெற்றது
- நாட்டு நலப்பணித் திட்டம் குறித்தும், நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்புகள் குறித்தும் மாணவிகளிடையே எடுத்து கூறப்பட்டது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே உப்புபாளையத்தில் உள்ள கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட விழா நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் மனோ சாமுவேல் தலைமை வகித்தார். கல்லூரியின் அறக்கட்டளை உறுப்பினர் பிரீத்தி கவுதமன் முன்னிலை வகித்தார். கல்லூரின் தலைவர் ராஜேஸ்வரி கதிர்வேல் விழாவினை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் தந்தை ஹான்ஸ் ரோவர் கல்லூரி உதவி பேராசிரியர் விவேக் கலந்துகொண்டு நாட்டு நலப்பணித் திட்டம் குறித்தும், நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்புகள் குறித்தும் மாணவிகளிடையே உரையாற்றினார்.நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் கீர்த்தி தேவி, ராகவி, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- கரூர் குளித்தலை அருகே உள்ள தண்ணீர்ப்பள்ளி கடைவீதியில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்
- அவரிடமிருந்த ஆன்லைன் லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன
கரூர்,
குளித்தலை அருகே உள்ள தண்ணீர்ப்பள்ளி கடைவீதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற குளித்தலை போலீசார் அந்த பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்ற தண்ணீர்ப் பள்ளி சேடர் தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 48) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ஆன்லைன் லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.






