என் மலர்
கரூர்
- நொய்யலில் நாளை மறுநாள் மின்தடை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற விருப்பதால் காலை 9 முதல் மாலை 5 வரை மின்தடை
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 4-ந்தேதி, சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான அத்திப்பாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திப்பாளையம் புதூர், வலையாபாளையம், இந்திரா நகர் காலனி, வடக்கு நொய்யல் ஆகிய ஊர்களுக்கும் மேலும் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- நடையனூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்
- வேலாயுதம்பாளையம் போலீசார் நடவடிக்கை
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே நடையனூர் பகுதி கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக வேலாயுதம்பாளையம் போலீசருக்கு தகவல் வந்துள்ளது. அதன்படி சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு கடையில் பான் மசாலா, குட்கா விற்பனை செய்யப்படுவதை பார்த்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, சரவணன் (வயது 45) என்பவரை கைது செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.
- கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் விற்பனை மையம் திறப்பு விழா நடைபெற்றது
- கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா திறந்து வைத்து பார்வையிட்டார்
கரூர்,
கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கூட்டுறவு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை மையம் திறக்கப்பட்டது. கோவாப்மார்ட் என்ற இந்த விற்பனை நிலையம் மற்றும் இசேவை மையம் ஆகியவற்றை கரூர் ஜவஹர் பஜாரில், கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா திறந்து வைத்து பார்வையிட்டார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் தயாரிக்கும் அனைத்து பொருட்களும் கோவாப்மார்ட்டில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இசேவை மையமும் துவங்கப்பட்டுள்ளது. இந்த இசேவை மையத்தில் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களும் பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் பெற்றுப்பயனயடைலாம் எனவும் இணைப்பதிவாளர் தெரிவித்தார். திறப்பு விழாவில் கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குநரும், பொதுவிநியோகத்திட்ட துணைப்பதிவாளருமான அபிராமி, கரூர் சரக துணைப்பதிவாளர் ஆறுமுகம் மற்றும் சங்கப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கரூர் மாவட்டம் 66 ஊராட்சி மன்றங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட சுமார் 66 ஊராட்சி மன்றங்களில் உள்ளாட்சி தேர்தல் தினவிழா கிராம சபை கூட்டம் நடைபெற்றது, பெரும்பாலான கிராம சபை கூட்டங்களில் ஊராட்சி செயலர் சாந்தி கலந்து கொண்டார்.
அனைத்து கிராம சபை கூட்டங்களில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும், சொத்து வரி வீட்டு வரி செலுத்துதல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- சாலைப்புதூர் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ21.52 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது
- 12 ஆயிரத்து 600 தேங்காய் விற்பனையானது
வேலாயுதம்பாளையம்,
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இந்த வாரம் நடந்த ஏலத்தில் 42.91 1/2 குவிண்டால் எடை கொண்ட 12 ஆயிரத்து 600 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.28.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.24.69-க்கும், சராசரி விலையாக ரூ.27.89-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 825-க்கு விற்பனையானது.
அதேபோல் 241.86 குவிண்டால் எடை கொண்ட516-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.90.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.85.89-க்கும், சராசரி விலையாக ரூ.90.59-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.89.25-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.68.99-க்கும், சராசரி விலையாக ரூ.87.89-க்கும் என மொத்தம் ரூ.20லட்சத்து35ஆயிரத்து037 -க்கு விற்பனையானது.சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 21 லட்சத்து52 ஆயிரத்து 862-க்கு விற்பனையானது.
- புஞ்சை தோட்டக்குறிச்சி பகுதியில் 1500 ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது
- ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பகுதியில் ஆடுகளுக்கான ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் பாஸ்கர், உதவி இயக்குனர் லில்லி அருள்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சாந்தி தலைமை வகித்து ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். முகாமில் தளவாபாளையம் கால்நடை மருத்துவர் டாக்டர் கோபிநாத் தலைமையில் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டனர். முகாமில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது.
- புகளூர் காகித ஆலை நிறுவனத்தில் ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
- தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு கூறும் விதமாக தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி டிஎன்பிஎல் காகித ஆலை நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள கால அலுவலகத்தின் அருகில் நடைபெற்றது. உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் பொது மேலாளர் நாகராஜன், பாதுகாப்பு பிரிவு துணைப் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், மனிதவளம் பிரிவு முதுநிலை மேலாளர் சிவக்குமார், மேலாளர் வெங்கடேஷ், பாதுகாப்பு பிரிவு துணை மேலாளர் சங்கிலி ராஜன் ஆகியோர் தலைமையில் காகித ஆலை நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்
- வேலாயுதம்பாளையம் அருகே நூதன முறையில் செல்போன், வெள்ளி செயினை பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- பெண் குரலில் பேசி இளைஞரை வரவழைத்து கொள்ளையடித்தனர்
வேலாயுதம்பாளையம்,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சதீஷ்குமார்(வயது 30). இவர் வீட்டில் இருந்தபோது இவருக்கு ஹோண்டா ஆப் மூலம் பெண் குரலில் நைசாக ஆசை வார்த்தை கூறி பேசியுள்ளனர். பின்னர் சதீஷ்குமாரை கரூர் மாவட்டம் புகளூர் அருகே தட்டங்காடு பகுதியில் உள்ள தைலத்தோப்பு பகுதிக்கு வரவழைத்துள்ளனர். இதில் மயங்கிய சதீஷ்குமார் சம்பந்தப்பட்ட தட்டங்காடு தைலத்தோப்பு பகுதிக்கு இவர் மட்டும் தனியாக சென்றுள்ளார். அப்போது அங்கு தயாராக மறைந்து நின்று கொண்டிருந்த5 வாலிபர்கள் திடீரென சதீஷ்குமாரை பிடித்து சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனையும், அவர் கையில் அணிந்திருந்த வெள்ளி கை செயினையும் மிரட்டி பறித்துக் கொண்டு சதீஷ்குமாரை மிரட்டி விரட்டி அடித்து அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார்
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில் சதீஷ்குமாரை பெண் குரலில் பேசி வரவழைத்து புகளூர் ஹை ஸ்கூல் மேடு பகுதியை சேர்ந்த சரவணன் (20), அதே பகுதியை சேர்ந்த சூர்யா(21), விஜய்(19), மதுரை மாவட்டம் மேலூர் இந்திரா குடியிருப்பு காலனி பகுதியில் குடியிருந்து தற்பொழுது நாமக்கல் மாரியம்மன் கோவில் அண்ணா நகரில் இருந்து வரும் கார்த்திகேயன் (19), தளவாபாளையம் அருகே கிழக்கு தவுட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரூபன் (21) என்பது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் 5 பேரையும்சிறையில் அடைக்கப்பட்டனர்.
- அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோருக்கு நாங்கள் எதிரி என்று கரூரில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்
- செந்தில்பாலாஜி கைதுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை
கரூர்,
கரூரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெரம்பலூரில் பா.ஜ.க . நிர்வாகியை தாக்கி பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தி.மு.க., பா.ஜ.க.வை பழிவாங்க ஆரம்பித்திருக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தி.மு.க.வினர் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கைது செய்யவில்லையென்றால் நாளை மறுநாள் பெரம்பலூரில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். இதுவரை நடந்த யாத்திரையில் 6 தொகுதிகளை தள்ளி வைத்துள்ளோம். டிச, ஜனவரியில் இந்த யாத்திரை நடைபெறும். கர்நாடக நீர் பிரச்னையில் கர்நாடகா அரசுக்கு பாஜக தான் துணையாக இருப்பது எனக்கூறுவதில் உண்மையில்லை.
தமிழக பாஜகவை பொறுத்தவரை தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இந்த பிரச்னையில் யார், யாருக்கோ கடிதம் எழுதும் முதல்வர் மௌனம் சாதிப்பது எதற்கு எனத் தெரியவில்லை.
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்படாததற்கு இன்னும் அவர் அமைச்சராகியிருக்கிறார், அவர் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைக்கலாம், செந்தில்பாலாஜியின் தம்பி தலைமறைவாகியிருக்கிறார். தம்பியையே பிடிக்க முடியாத காவல்துறையினர் அண்ணன் வெளியே வந்து சாட்சியங்களை திரட்டினால் என்ன நியாயம் கிடைக்கும் என நீதிபதி கேட்டுள்ளார். இதனால் செந்தில்பாலாஜியின் கைதுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் யாருக்கும் எதிரி இல்லை, ஊழலுக்கு எதிரி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிரி. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கரூர் மாவட்டத்தலைவர் வி.வி.செந்தில்நாதன், மாவட்டச் செயலாளர் ஆர்.வி.எஸ்.செல்வராஜ், உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக கரூர் மாவட்டம் என்.புதூரைச் சேர்ந்த கனராஜ் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் இறந்தபோது, அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதில் சிரமம் இருந்த நிலையில், பாஜகவினர் மற்றும் இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் மூலம் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து கனகராஜின் குடும்பத்தினருக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார்.
- வீட்டில் வந்து பார்த்தபோது, மனைவி, குழந்தைகளை காணவில்லை.
- தோகைமலை அரசு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர், வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை என தெரியவந்தது
கரூர்
தோகைமலை, நாடக்காப்பட்டி காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 32). இவர் கொத்தனாராக பணிபுரிகிறார். இவரது மனைவி மீனா(27). இவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் களுக்கு சிவக்குமார், சஞ்சித்குமார் என இரு குழந்தைகள் உள்ளனர். கணவர் மாரியப்பன் திருச்சிக்கு கொத்தனார் வேலைக்கு சென்று விட்டு, இரவு வீட்டில் வந்து பார்த்தபோது, மனைவி, குழந்தைகளை காணவில்லை. மதியம், தோகைமலை அரசு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறு விட்டு சென்றவர், வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை என தெரியவந்தது. தோகைமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தேடி வருகின்றனர்.
- மருத்துவமனை அருகே தார் சாலையின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- இருசக்கர வாகனம், சின்னக்கண்ணி மீது மோதியது.
வேலாயுதம் பாளையம்
கரூர் மாவட்டம் தளவாபாளையம் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த பிச்சைக்காரன் என்பவரின் மனைவி சின்னகண்ணி( வயது 73). கூலித் தொழிலாளியான இவர் தளவாபாளையம் கால்நடை மருத்துவமனை அருகே தார் சாலையின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கடம்பங்குறிச்சி ஓட்டக்குளம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (32) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், சின்னக்கண்ணி மீது மோதியது. படுகாயம் அடைந்த அவர், கரூர் அரசு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜப்பசி மாத தேய்பிறை கிருத்திகையை முன்னிட்டு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது
- இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜப்பசி மாத தேய்பிறை கிருத்திகையை முன்னிட்டு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேமே் நடைபெரற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல் நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் ஆலயத்தில் ஜப்பசி மாத தேய்பிறை கிருத்திகையை முன்னிட்டு சுப்பிரமணியருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேமே் நடைபெரற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அதேபோல் புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெரற்றது. மேலும் நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் ஜப்பசி மாத தேய்பிறை கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெரற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெரருமானை தரிசனம் செய்து அருள் பெரற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






