என் மலர்tooltip icon

    கரூர்

    • கரூர் அருகே கோவிந்தம்பாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
    • கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார்

    கரூர்,

    கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் மேல்பாகம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார்.முகாமில் கலந்து கொண்ட தூய்மை பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா விரைவில் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

    தொடர்ந்து கோவிந்தம்பாளையம் பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தரம் பிரித்து வழங்குவது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதனைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக நீர்நிலைகள் தூர்வாரும் சிறப்பு திட்டத்தின் கீழ் கோவிந்தம்பாளையம் ராஜவாய்க்கால் வழியாக பிரியும் கிளை ஓடைகள் தூர்வாரும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி, ஊராட்சித் தலைவர் பெரியசாமி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மூதாட்டி கையில் இருந்து தவறி கிணற்றில் விழுந்த 6 மாத குழந்தை பலியானது
    • சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊத்துக்கரை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 38). இவரது மனைவி ஜெயமணி. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருந்தனர். ஜெயமணியின் மாமியார் பரமேஸ்வரி சற்று மனம் நலம் பாதிக்கப்பட்டவர்.இந்நிலையில், மாமியார் பரமேஸ்வரி, ஆறு மாத பெண் குழந்தை ஆத்யாவை, துாக்கி கொண்டு வீட்டுக்கு அருகே உள்ள, கிணற்று பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குழந்தை ஆத்யா, பரமேஸ்வரியின் கையில் இருந்து தவறி, கிணற்றில் விழுந்து உயிரிழந்தது.அருகில், இருந்தவர்கள் குழந்தையின் உடலை மீட்டனர். சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி நடத்த பட உள்ளது

    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்ட அறிக்கையில், கரூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக, பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், 621 காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா, ஆயுதப்படை, சிறப்பு காவல் படை) பணிகளுக்கு நேரடி தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்ள ஜூன் 1 முதல், 30ந்தேதி வரை விண்ணப் பிக்கலாம்.

    இத்தேர்வுக்கான இலவசபயிற்சி வகுப்பு நாளை தொடங்கப்பட உள்ளது. இதில், சேரவிரும்பவர்கள், 2 புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும். நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். மேலும், தங்களின் விவரத்தினை இமெயில் வாயிலாகவும் அனுப்பலாம. கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் அனைத்து போட்டித்தேர்வுக்கான காணொலி வழிகற்றல், மாதிரிதேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ஆங்கிலம் மற்றும் தமிழில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

    • பண்டுதகாரன்புதூரில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது
    • வரும், 16ந்தேதி, காலை, 10 மணி முதல் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது

    கரூர்:

    கரூர் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர் மாவட்டம், பண்டுதகாரன்புதுாரில் உள்ள கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் வரும், 16ந்தேதி, காலை, 10 மணி முதல் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் ஆடுகளை தேர்வு செய்தல், தீவன பராமரிப்பு, ஆடுகளை தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள் ஆகிய தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர், நேரடியாக வந்து பங்கேற்கலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அரவக்குறிச்சி அருகே சமையல் செய்ய தாமதமானதால் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்
    • இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி குளத்துார் பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் நவீன் (வயது 23). இவர் அரவக்குறிச்சி அரசு கலைக்கல்லுாரியில், பி.ஏ. தமிழ் முதலாமாண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் நவீனின் தாய் சமையல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நவீன் விஷம் குடித்தார். இதையடுத்து கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நவீன் உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பிளஸ் 2 பொதுத்தேர்வில் கரூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை பெற்றனர்
    • அரசு பள்ளிகளில் 4 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றது

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வினை அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் என 104 பள்ளிகளில் இருந்து 11 ஆயிரத்து 204 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் 33 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 4 நான்கு அரசுப் பள்ளிகள் இந்த சாதனை பட்டியலில் சேர்ந்துள்ளன. அதன்படி கரூர் பெரியகுளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, வாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி, நெரூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மணவாடி அரசு மேல்நிலைப்பள்ளி என 4 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் 4 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றது கரூருக்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    கரூர் மாவட்ட மைய நூலகத்தில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது

    கரூர்:

    கரூர் மாவட்ட மைய நூலகத்தில் கோடைகால பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. முகாமை டி.ஆர்.ஓ. கண்ணன் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவியர் 100 பேருக்கு நூலக உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. நாடக கலைஞர் ஜெயராமன் கதையல்ல விதைகள் என்ற தலைப்பில் குட்டி கதைகளை மாணவ, மாணவியருக்கு கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சக்திவேல், வாசகர் வட்ட தலைவர் சங்கர், நூலகர் கார்த்திக் நிவாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது
    • பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    கரூர்:

    எர்ணாகுளம்-காரைக்கால் செல்லும் ெரயிலில் மாலதி என்பவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி பயணம் செய்தார். அப்போது அதே ெரயில் பெட்டியில் பயணித்த கணேஷ்குமார்(வயது 62) என்பவர் துாங்கிக் கொண்டிருந்த சிறுமியிடம் (மாலதியின் மகள்) பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். இதுகுறித்து கரூர் ெரயில் நிலையத்தில் மாலதி புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி நசீமாபானு போக்சோ சட்டத்தின் கீழ் கணேஷ்குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் திறமையாக செயல்பட்ட திருச்சி இருப்புப்பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன சுந்தரி, அவருக்கு உதவியாக இருந்த கரூர் இருப்புப்பாதை சப் இன்ஸ்பெக்டர் கேசவன், நீதிமன்றக்காவலர் பூபதி ஆகியோரை தமிழ்நாடு ெரயில்வே காவல் துறை துணை இயக்குனர் வனிதா, சென்னை மாவட்ட இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு), திருச்சி மாவட்ட இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் ஆகியோர் பாராட்டினர்.

    • கிருஷ்ணராயபுரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது
    • டாக்டர் பார்த்திபன் மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினார்.

    கரூர்:

    கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,க்குட்பட்ட பிச்சம்பட்டி கிராமத்தில் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். தற்போது கோடைமழை பெய்து வருவதால் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. டாக்டர் பார்த்திபன் மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினார். முகாமில் சளி, காய்ச்சல், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கினர். இப்பணியில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    • வேலாயுதம்பாளையம் பகுதியில் பரவலாக மழை பெய்தது
    • சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றன

    கரூர்:

    கரூர் வேலாயுதம்பாளையம், மூலிமங்கலம், காகிதபுரம், புகழூர், நாணப்பரப்பு, செம்பாடம்பாளையம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றன. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம்

    கரூர் :

    கரூர் நொய்யல் அருகே முத்தனூரில் வருண கணபதி கோவில் உள்ளது. நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. வேலாயுதம்பாளையம் கடைவீதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சுவாமிக்கு பால், இளநீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல் நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வாலிபரிடம் தகராறு செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்
    • மது அருந்திய போது நடந்த சம்பவம்

    கரூர்.

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மணல் மேடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், (வயது 38) கூலி தொழிலாளி. இவர், அரவக்குறிச்சி அருகே டெக்ஸ் பார்க் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தி கொண்டிருந்தார்.அப்போது கவுதம் (26), பிரவின் (26), ராகுல் (23), ஜீவானந்தம் (20), சுதர்சன் (21) ஆகிய 5 பேர், சக்திவேலுவிடம் தகராறு செய்து மிரட்டியுள்ளனர்.இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார், வழக்கு பதிவு செய்து அந்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×