என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
    • பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள மருங்கூர் சந்திப்பு பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆயில் கசிந்து கீழே கொட்டிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் அந்த மின்சார டிரான்ஸ்பார்ம ரின் அடிப்பகுதியில் திடீரென தீ பிடித்தது.அப்போது அந்த பகுதியில் காற்று பலமாக வீசியது.இதனால் தீ மளமளவென்று பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.

    இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. இது பற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதனால் அந்த பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. தீயணைக்கும் படை வீரர்கள் தீயை உடனே அணைத்ததால் அந்த பகுதியில் இருந்த ஓட்டல் கடைகள் மற்றும் வீடுகள் தீவிபத்தில் இருந்து தப்பின.

    • போலீசார் விசாரணை நடத்தி 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே உள்ள தலைகாட்டுவிளை ஹேமானூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 23), பிளம்பர். இவருக்கும், ராஜ்குமார் என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்றும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், வீட்டில் இருந்த வெட்டுக் கத்தியை எடுத்து வந்து தாக்கினாராம். இதில் ரமேஷ் காயம் அடைந்தார். மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் ராஜ்குமார் சேதப்படுத்தினாராம்.

    அரிவாள் வெட்டை தடுக்க வந்த சிம்சன் என்பவர் தடுக்க முயன்றுள்ளார். இந்த நிலையில் அவரும் மணிகண்டன், பிரசாந்த் ஆகியோர் சேர்ந்து தாக்கியதில் ராஜ்குமார் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. காயம் அடைந்த ராஜ்குமார் மற்றும் ரமேஷ் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • புதுக்கடை போலீசார் இரு தரப்பிலும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    • புதுக்கடை போலீசில் அளித்த புகாரின் பேரில் சஜின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே விழுந்தயம்பலம் பகுதியை சேர்ந்தவர் அஜின் (வயது 40). இவர் தனது அண்ணன் ஸ்டாலின் என்பவருடன் சேர்ந்து விழுந்தயம் பலம் பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார்.

    கடந்த மார்ச் மாதம் அதே பகுதி அருவை என்ற இடத்தை சேர்ந்த அஸ்வின் (27) என்பவர் ஸ்டாலினை சிலருடன் சேர்ந்து கும்பலாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக புதுக்கடை போலீசில் வழக்கு பதிவாகியுள்ளது. இதனால் இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஸ்டாலின் தம்பி அஜின் நடந்து செல்லும்போது, அங்கு வந்த பிரபு (23), அஸ்வின், விஷ்ணு (27), அபி (24) ஆகியோர் அஜினை தடுத்து நிறுத்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த அஜின் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். புதுக்கடை போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இது தொடர்பாக பிரபு என்பவர் சம்பவவத்தன்று இரவு அஜின், ஸ்டாலின் இணைந்து தன்னை தாக்கியதாக புகார் கொடுத்துள்ளார். இதில் காயமடைந்ததால் பிரபுவும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுக்கடை போலீசார் இரு தரப்பிலும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேங்காபட்டணம் அருகே உள்ள பனங்கால்முக்கு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் சுஜின் (23). இவர் டிரைவர் வேலை செய்கிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சஜின் (26) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சுஜின் தனது வாகனத்தை அங்குள்ள பெட்ரோல் பாங்க் அருகே நிறுத்திவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு எதிரில் வந்த சஜின் வழிமறித்து சுஜினை தாக்கியுள்ளார். மேலும் அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க சங்கிலியும் பறித்து சென்றுள்ளார். இது தொடர்பாக சுஜின் புதுக்கடை போலீசில் அளித்த புகாரின் பேரில் சஜின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    • ஊராட்சி மன்ற தலைவர்கள் நல அமைப்பு அறிவிப்பு
    • ஒரு பணியும் அவர்கள் ஒப்புதல் இன்றி செய்ய முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் நல அமைப்பின் தலைவர் முத்து சரவணன் நிருபர்களி டம் கூறியதாவது:-

    தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் தற்போது மத்திய அரசு நிதியை கூட செலவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு வருகி றது. இதனால் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீர், சுகாதாரம், சாலை பணிகள் ஆகியவை கூட தற்போது தடைபடும் நிலையில் உள்ளது.

    மேலும் செய்த வேலைகளுக்கு வழக்கமாக ஊராட்சி தலைவர் மூலம் காண்ட்ராக்டர்களுக்கு பில் வழங்கப்பட்டு வருகிறது. பில் பி.எப்.எம்.எஸ். எனும் முறை மூலம் தற்போது வழங்கப் பட்டு வருகிறது.

    அதில், தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோர் கையெழுத்திட வேண்டும் தற்போது ஆணையர், தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் கையெழுத்தி டவேண்டும் என அறிவுறுத்துள்ளார்.

    இதனால் காண்ட்ராக்டர்க ளுக்கு வழங்கக்கூடிய தொகை கூட முறையாக வழங்க முடியாமல் தடைபட்டு வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் அதி காரத்தை அரசு வேண்டுமென்றே குறைத்து வருவதால் தங்களுக்கு ஒரு பணியும் அவர்கள் ஒப்புதல் இன்றி செய்ய முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.

    இது கிராம ஊராட்சி விதிகளுக்கு அப்பாற்பட்ட தாகும். இதனால் இதனை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் நல அமைப்பு சார்பில் நாளை (25-ந்தேதி) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி தலைவர்கள் நல அமைப்பு தலைவர் அஜித்கு மார் தலைமை தாங்குகிறார். ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்து சரவணன், மெற்றில்டா, சதீஷ்குமார், தாமஸ்கென்னடி, அருள்ராஜ், சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மேலும் ஊராட்சி தலை வர்கள் நலஅமைப்பு மாநில தலைவர் முனியாண்டி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • அய்யாவுக்கு பணிவிடை, வாகன பவனி, அன்னதர்மம் போன்றவை நடைபெற்றது.
    • புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யா வைகுண்டசாமியை வணங்கி வழிபட்டு சென்றனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் முட்டப்பதி அய்யா வைகுண்ட சாமி பதி உள்ளது. இந்த வைகுண்டசாமி பதியில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முட்டப்பதி அய்யா வைகுண்ட சாமி பதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு அய்யாவுக்கு பணிவிடைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து உகப்படிப்பு நடந்தது. பின்னர் வாகன பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும் அதைத்தொடர்ந்து நித்திய பால் தர்மமும் அன்னதானமும் நடந்தது.

    இதில் கலந்துகொண்ட அய்யா வழி பக்தர்களுக்கு இனிப்பு, தேங்காய், பழம், திருநாமம், வெற்றிலை, பாக்கு மற்றும் பழங்கள் உள்ளிட்டவை இனிமமாக வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியின் மூத்த தர்மகர்த்தா பாலசுந்தரம் அய்யா வைகுண்டசாமியின் அற்புதங்கள் குறித்து பக்தர்களிடையே ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். மாலையில் அய்யாவுக்கு பணிவிடை, வாகன பவனி, அன்னதர்மம் போன்றவை நடைபெற்றது.

    ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் அய்யாவழி பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    அதிகாலை முதலே கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் முட்டப்பதியில் குவிந்திருந்தனர். அவர்கள் முட்டப்பதி தீர்த்தக்கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யா வைகுண்டசாமியை வணங்கி வழிபட்டு சென்றனர்.

    இதே போல முட்டப்பதியில் உள்ள அய்யா மூத்த நயினார் பதி, கன்னியாகுமரி அருகே நரியன் விளையில் உள்ள தெட்சணத்து துவாரகாவதி, ஆமணக்கின்விளை வாவைப்பதி, ரஸ்தாகாடு காயாம்பூபதி உள்பட அனைத்து அய்யா வைகுண்டசாமி பதிகளில் ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அய்யாவுக்கு பணிவிடைகள் நடந்தது.

    • தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    • தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்

    நாகர்கோவில் :

    அ.தி.மு.க. பொதுச்செயலா ளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் ஆணைப்படி அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தள வாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் ஆகஸ்டு 20-ந்தேதி நடைபெற இருக்கின்ற வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாட்டில் குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்வது குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே உள்ள கூட்ட அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கிருஷ்ணதாஸ், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் சிவசெல்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநகராட்சி கவுன்சிலர் அக்சயா கண்ணன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் மதுரையில் ஆகஸ்டு 20 -ந்தேதி நடைபெறும் மாநாட்டில் குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்வது குறித்தும், மாநாடு செல்வது குறித்த ஏற்பாடுகள் குறித்தும், மதுரையில் நடைபெறும் மாநாடு குறித்து வருகிற 2-ந்தேதி நாகர்கோவிலில் நடைபெறும் தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா நன்றி கூறினார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், பகுதி செயலாளர்கள் ஜெயகோபால், முருகேஸ்வரன், ஜெவின் விசு, ஒன்றிய செயலாளர்கள் பொன் சுந்தர் நாத், வீராசாமி, ராஜ்குமார், பொன்சேகர், ராதா கிருஷ்ணன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், கவுன்சிலர் ஆறுமுகராஜா, அணி செயலாளர்கள் ராஜாராம், சுகுமாரன், மனோகரன், முன்னாள் நகர செயலாளர் சந்துரு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • கல்லடிவிளையை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜ்குமார் வந்துள்ளார்.
    • ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் (வயது 50). இவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹரிகுமார், டேவிட் ஜெயக்குமார் ஆகியோருடன் நேற்று காலை புத்தளம் ஜங்ஷனில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

    அப்போது கல்லடிவிளையை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜ்குமார் வந்துள்ளார். அவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜை அவதூறாக பேசினா ராம். இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக அங்கு இவரது மகன்கள் அபினேஷ் (21), ஆகாஷ் (20) மற்றும் புத்தளத்தை சேர்ந்த சதீஷ் (43) ஆகியோரும் வந்துள்ள னர். அவர்கள் 4 பேரும் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜை தாக்கியதோடு மிரட்டலும் விடுத்ததாக சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி ராஜ்குமார் உள்பட 4 பேர் மீதும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதில் ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.படுக்காயம் அடைந்த சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • பொதுப்பணித்துறை அதிகாரியிடம் தக்கலை ஒன்றிய கவுன்சிலர் மனு
    • இன்னல்களை கொடுத்து வருகிற தென்னக ரெயில்வே துறையினர் மீது மாவட்ட கலெக்டருக்கு பல புகார்

    கன்னியாகுமரி : 

    தக்கலை ஊராட்சி ஒன்றி யம் ஆத்திவிளை ஊராட்சி பகுதியில் உள்ள தென்னக ரெயில்வே துறையினரின் இரணியல் ரெயில் நிலைய விரிவாக்க பணி தொடங்கி 18 மாதங்களாகியும் மிகவும் மந்த நிலையில் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதனால் பெருமளவில் பொதுமக்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    குறிப்பாக 18 மாதங்களாக திங்கள்நகர்-அழகிய மண்ட பம் சாலை போக்குவரத்து பாதிப்பு, இரணியல் கிளை கால்வாயில் பாலம் தாழ்வாக கட்டப்பட்டுள்ளதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடினால் உள்ள மக்களின் பாதிப்பு, ஆத்திவிளை பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட பாலத்தை திறக்காததால் பரம்பை பகுதியில் துண்டிக்கப்பட்ட பாலத்திற்கு மாற்று பாதை இன்றி மக்களின் பெருமள விலான பாதிப்பு, மண்டைக் காடு, தக்கலை, குமார கோவிலுக்கு இரணியல் கோணம் வழியாக சென்று வந்த அரசு பேருந்து வழித்தடத்தில் இரணியல் கோணம் பகுதியில் உள்ள சாலையை எந்த முன்னறிவிப்பும் இன்றி துண்டித்து தொடர்ந்து மக்களுக்கு பல இன்னல்களை கொடுத்து வருகிற தென்னக ரெயில்வே துறையினர் மீது மாவட்ட கலெக்டருக்கு பல புகார் மனுக்கள் கொடுத்தும் நட வடிக்கை எடுக்கப்ப டவில்லை.

    அதனைத்தொடர்ந்து அதன் ஒரு பகுதியாக இரணியல் கிளை கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்திட வேண்டி நாகர்கோவில் பொதுப்பணி துறை அலு வலகத்தில் தக்கலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கோல்டன் மெல்பா, திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஹரிதாஸ், ஜேக்கப், பாச னத்துறை தலைவர் ஜேசுதாஸ் மற்றும் விவசாய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜான் சவுந்தர், துணை தலைவர் ஜேக்கப் அருள் பால் மற்றும் காங்கிரஸ் பிர முகர்கள், பொதுமக்கள் மனு அளித்தனர்.

    • பெருஞ்சாணியில் 15.8 மில்லி மீட்டர் மழை பதிவு
    • 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் சரிந்து காணப்படுகிறது. பாசன குளங்களிலும் போது மான அளவு தண்ணீர் இல்லை. இருப்பினும் விவ சாயிகள் பருவமழையை நம்பி சாகுபடி செய்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் மழை கண்ணாமூச்சி காட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் நாகர்கோ வில் பகுதியில் வானத்தில் கரு மேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப் பட்டது. பின்னர் திடீரென மழை பெய்தது. ½ மணி நேரமாக மழை தூறியது.

    இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. பள்ளி சென்ற மாணவிகள் குடைபிடித்த வாறு பள்ளிக்கு சென்றனர். சுசீந்திரம், தடிக்காரன் கோணம், கீரிப்பாறை, குல சேகரம், தக்கலை, ஆரல் வாய்மொழி, மார்த்தாண்டம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் நேற்றிரவு மழை பெய்தது.

    திற்பரப்பு அருவியிலும் மழை பெய்து வருவதையடுத்து அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. பெருஞ்சாணியில் அதிகபட்ச மாக 15.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    அணைகளுக்கு வரக்கூ டிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 31.69 அடியாக இருந்தது. அணைக்கு 366 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 689 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி நீர்மட்டம் 22.95 அடியாக உள்ளது. அணைக்கு 193 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட் டம் தொடர்ந்து மைனஸ் அடியில் இருந்து வருகிறது.

    இதையடுத்து 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் பிரச்சினை சமா ளிக்கும் வகையில் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் புத்தன் அணையில் இருந்து கொண்டுவரப்பட்ட தண் ணீரை பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருஞ்சாணி 15.4, களியல் 14.5, திற்பரப்பு 12.8, பாலமோர் 12.2, கோழி போர்விளை 8.2, பூதப்பாண்டி 7.4, குழித்துறை 6.2, குருந்தன்கோடு 4.8, நாகர் கோவில் 4.2, அடையாமடை 4.2, மயிலாடி 2.6, பேச்சிப்பாறை 2.4, ஆணைக் கிடங்கு 2.1, கொட்டாரம் 1.2.

    • நீண்ட நேரம் ஆகியும் கணேஷ் வீடு திரும்பவில்லை
    • செல்போன் சிக்னல் உதவியுடன் தேடும் பணி நடந்து வருகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ரேச்சல் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் காந்தி. இவர் வடசேரியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மகன் குர்சான் என்ற கணேஷ் (வயது 28), சாப்ட்வேர் என்ஜினியர். இவர் தற்போது தந்தையின் பேக்கரி கடையை கவனித்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த கணேஷ் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன்பிறகு நீண்ட நேரம் ஆகியும் கணேஷ் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல்வேறு இடங்களிலும் தேடினார்கள். ஆனால் கணேஷ் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து காந்தி, வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து மாயமான கணேசை தேடி வருகிறார். அவரது செல்போன் சிக்னல் உதவியுடன் தேடும் பணி நடந்து வருகிறது.

    வியாபார விஷயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணேஷ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கலாமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
    • 2 நாள் சுற்றுப்பயணம்

    கன்னியாகுமரி,ஜூலை.24-

    தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கன்னியாகுமரிக்கு வருகிறார். அவர் இன்று (திங்கட்கிழமை) மதியம் விமானம் மூலம் தூத்துக் குடிக்கு வருகிறார். பின்பு அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தி னர் மாளிகைக்கு வருகிறார்.

    அங்கு கவர்னர் ஆர்.என். ரவிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் கவர்னர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்பு சன்செட் பாயிண்ட் கடற் கரைக்கு சென்று சூரியன் மறையும் காட்சியை கண்டு ரசிக்கிறார்.

    இரவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், நாளை (25-ந்தேதி) காலையில் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசிக்கிறார். அதன்பிறகு கடல் நடுவில் அமைந்துள்ள விவே கானந்தர் நினைவு மண்ட பத்துக்கு தனிப்படகில் சென்று தியானம் செய்கிறார்.

    பின்னர் விவேகானந்தபு ரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு செல்லும் கவர்னர், அங்கு பாரத மாதா கோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை பார்வையிடுகிறார். தொடர்ந்து அவர் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவி லுக்கு சென்று தரிசனம் செய்கிறார். அதன்பிறகு அவர் கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி செல்கிறார்.

    கவர்னர் வருகையை யொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியா குமரி நகரப்பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர காண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரிக்கு வரக்கூ டிய அனைத்து வாகனங்களை யும் போலீசார் தீவிர சோதனை செய்தபிறகே அனுமதிக்கி றார்கள். கவர்னர் பயணிக்கக் கூடிய அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    கவர்னர் தங்கக்கூடிய அரசு விருந்தினர் மாளிகை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம், விவேகானந்தர் மண்டபம், விவேகானந்தா கேந்திரா, சுசீந்திரம் கோவில் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் முழுவது மாக போலீஸ் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டு உள்ளது.

    கன்னியாகுமரியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடு களை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • 2 பேருக்கு அரிவாள் வெட்டு
    • கன்னியாகுமரியில் நள்ளிரவில் பரபரப்பு

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட் டத்தில் கஞ்சா கும்பல்களை ஒழிக்க ேபாலீசார் பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் பல இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கன்னியாகுமரி சுனாமி காலனியில் கஞ்சா கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இதில் சுனாமி காலனியை சேர்ந்த ஆக்னல் (வயது20) என்ற வாலிபரை, எதிர் தரப்பை சேர்ந்த ஜெப்ரின் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

    பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் மூலம் தப்பிய அந்த கும்பல், கன்னியாகுமரி விவேகா னந்தபுரம் பகுதி யில் உள்ள ஒரு வங்கி முன்பு வந்து நின்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் அனுப்ப கன்னியாகுமரி ஐகிரவுண்ட் பகுதியை சேர்ந்த மீனவர் மோகன் தாஸ் என்பவர் வந்தார்.

    அவரை கஞ்சா போதையில் தகராறு செய்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டி உள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆக்னல், மோகன்தாஸ் ஆகிய இருவரும் கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த இருவர்களிடமும் விசாரணை நடத்தினார். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

    அப்போது கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆக்னல் மற்றும் மோகன் தாஸ் இருவரையும் மீண்டும் தாக்க வந்த ஜெப்ரினை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்று கீழே விழுந்து காயமடைந்த அவரை போலீசார் சிகிச்சைக்காக கன்னியா குமரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு கஞ்சா போதையில் இருந்த அவர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் மிரட்டல் விடுத்து பேசி ரகளையில் ஈடுபட்டார். சிகிச்சை முடிந்ததும் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×