என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார்
    • நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக் பப்பட்டனர்.

    நாகர்கோவில் :

    ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகரை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 58) செங்கல் சூளை அதிபர். இவரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக ஆரல் வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகரை சேர்ந்த அன்பு என்ற அன்பழகன் (36), விஜயன் (25) உள்பட 5 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அன்பு, விஜயன் இருவர் மீதும் ஏற்கனவே பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் இவர்களது பெயர் இடம் பெற்று இருந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார்.அதனை ஏற்று கலெக்டர் ஸ்ரீதர் அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதையடுத்து அன்பு, விஜயன் இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

    • சத்தியமங்கலத்தில் இருந்து நவீன கேமிரா கொண்டுவர ஏற்பாடு
    • பேச்சிப்பாறை பகுதியில் இன்று டிரோன் மூலம் கண்காணிப்பு

    நாகர்கோவில் :

    பேச்சிப்பாறை அருகே சிற்றார் ரப்பர் கழக தொழி லாளர் குடியிருப்பு மற்றும் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு புலி அட்டகாசம் செய்தது. தொழிலாளர்களுக்கு சொந்த மான ஆடு, மாடுகளை வேட் டையாடியதால் பொதுமக்கள் அச்சமடை ந்தனர்.

    இதையடுத்து புலியை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். 50-க்கும் மேற்பட்ட நவீன கேமராக்கள் அமைக்கப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 2 இடங்களில் கூண்டுகள் அமைத்து புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    ஆனால் புலி சிக்கவில்லை. இருப்பினும் புலி அட்டகாசம் செய்து வந்ததை தொடர்ந்து பொதுமக்கள் அச்சமடைந்தனர் இந்த நிலையில் புலியை பிடிக்க களக்காட்டில் இருந்து மருத்துவ குழுவினரும் தேனி மாவட்டம் வைகை ஆறு பகுதியில் இருந்து எலைட் படையினரும் வருகை தந்தனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள காட்டுப் பகுதிகளில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் புலியை பிடிக்க நெல்லையிலிருந்து 5 பேர் கொண்ட விரைவுப்படை இன்று வருகை தரவுள்ளது. மேலும் குல சேகரம், அழகிய பாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்த வன ஊழியர்கள் 5 பேரும் இவர்களுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளனர். டிரோன்கேமரா மூலமாக இன்று காலையில் பேச்சிபாறை முழுவதும் மூலம் கண் காணிக்கும் பணிநடந்தது.

    கடந்த 5 நாட்களாகவே புலி நகர்வுகள் இல்லாமல் உள்ளது. எனவே புலி அடர்ந்த காட்டுக்குள் உள்ள விலங்குகளை வேட்டை யாடி வாழ்ந்து வரலாம் என்று தெரிகிறது. இது குறித்து வனத்துறை அதிகாரி இளையராஜா கூறுகையில், புலியின் கால் தடத்தை வைத்து பார்க்கும் போது, வயதான புலி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் புலியை பிடிக்க எலைட் படையினரும் வனத்துறையி னரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    ஆனால் புலி சிக்கவில்லை. கடந்த 5 நாட்களாக எந்த ஒரு நகர்வும் இன்றி புலி உள்ளது. புலியை பிடிக்க நெல்லையிலிருந்து விரைவு படையும் வருகை தர உள்ளனர். மேலும் டிரோன் கேமரா மூலமாக கண் காணித்து வருகிறோம். சத்தியமங்கலத்தில் இருந்து நவீன கேமரா கொண்டு வந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். இதற்காக வனத்துறையினர் அங்கு சென்று அந்த கேம ராவை வாங்கி உள்ளனர்.

    இன்று மாலை நவீன கேமரா பேச்சிப்பாறை வனப் பகுதிக்கு கொண்டு வரப்படும். இந்த கேமராவின் மூலமாக இரவு நேரத்தில் விலங்கு களின் நடமாட் டத்தை கண்காணிக்கலாம். அதை வைத்து புலியை பிடிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொது மக்கள் அச்சப்பட தேவை யில்லை என்றார்.

    • கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி திட்டம்
    • காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்தும், அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது

    நாகர்கோவில் :

    தோவாளை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசின்சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

    இதில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கியது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைககப்பட்டதை நேரில் பார்வையிட்டது.

    இன்னுயிர் காப்போம் – நம் மைக்காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டம், காணி பழங்குடியினர்களுக்கு நில உரிமை ஆணை வழங்கியது, மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலையங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது, முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித்தோட்டம் திட்டம், புதிய வேளாண்காடு வளர்ப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் முதல்-அமைச்சரால் வழங்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின்போது காலமானவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதி வண்டிகள் வழங்கியது, காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்தும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது.

    இந்த கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயனடைந்தனர்.

    • வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை
    • கூண்டுகள் அமைத்து அதில் ஆடுகளை உள்ளே கட்டி வைத்து கண்காணித்து வந்தனர்.

    கன்னியாகுமரி :

    பேச்சிப்பாறை கோதையாறு அருகே மூக்கறைக்கல் என்ற பகுதியிலும் சிற்றாறு சிலோன் காலனி குடியிருப்பு பகுதியிலும் கடந்த சில நாட்களக காட்டில் இருந்து புலி வந்து குடியிருப்பு பகுதிகளில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடுகளை கடித்து கொன்றது. இதனால் தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது. வனத்துறையினர் புலியை பிடிப்பதற்காக 2 பகுதிகளிலும் சுமார் 28-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்களை மாட்டி தேடி வந்தனர். புலி எந்த காமிராவிலும் தென்படவில்லை. இதையெடுத்து 3 கூண்டுகள் அமைத்து அதில் ஆடுகளை உள்ளே கட்டி வைத்து ஆட்டு கொட்டகை வடிவத்தில் அமைத்து கண்காணித்து வந்தனர்.

    உடனே புலி அதன் நடமாட்டத்தை வேறு பகுதிக்கு மாற்றி கொண்டது. புலியை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். சத்தியமங்கலம் வனத்துறையை சேர்ந்த புலியை பிடிப்பதில் திறம்பட வீரர்களான எலைட் படை வீரர்கள் அதிநவீன கருவிகளுடனும் 2 பிரிவுகளாக பிரிந்து சென்று தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். முண்டந்துறை வனப்பகுதி யில் இருந்து கால்நடை மருத்துவ குழுவினர் 2 பிரிவுகளாக பிரிந்து சென்று தேடி வருகின்றனர். புலியின் நடமாட்டத்தை பார்த்து மயக்க மருந்து ஊசி மூலம் செலுத்தி பிடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளை வனத்துறையினர் தீவிரமாக இறங்கி தேடி வருகின்றனர்.

    • நடைபயணம் மேற்கொள்வது ஆண்டுதோறும் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பக்தி முயற்சியாகும்.
    • நாட்டு மக்களுக்காக ஜெபமாலை செபித்தும், இறைவேண்டல் பாடல்கள் பாடியும் சென்றனர்.

    நாகர்கோவில் :

    இந்திய மரபில் வழிபாட்டு முறைகளில் ஒன்றாகவும், தியாகத்தின் வெளிப்பாடாகவும் மக்கள் தங்கள் சமயம் சார்ந்த புன்னிய தலங்களுக்கு நடைப்பயணம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணி திருத்தலம், பூண்டி மாதா கோயில், மலையாற்றூர் தோமையார் திருத்தலம் ஆகிய திருதலங்களுக்கு நடைபயணம் மேற்கொள்வது ஆண்டுதோறும் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பக்தி முயற்சியாகும்.

    இந்திய திருநாட்டில், கேரள மாநிலம் பரணங்கா னத்தில் பிறந்து சீரோ மலபார் திருச்சபை யில் தூய துறவியாக வாழ்ந்து 1946-ம் ஆண்டு விண்ணகம் சென்ற அருட்சகோதரி அல்போன்சாவை 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந்தேதி திருத்தந்தை 16 பெனடிக்ட் கத்தோலிக்க திருச்சபையின் ஒரு புனிதையாக அறிவித்தார். தமிழ்நாட்டில் புனித அல்போன்சாவை பாதுகாவலியாக கொண்ட முதல் ஆலயம் நாகர்கோ வில் புனித அல்போன்சா ஆலயமாகும்.

    அல்போன்சா புனித நிலைக்கு உயர்த்தப்பட்ட ஆண்டு முதல் கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் இத்திருத்தலம் நோக்கி நடைப்பயணம் மேற்கொ ண்டு வருகின்றனர். அந்த வகையில் இத்திருத்தலத்தின் இரண்டாம் திருவிழாவின் போது குமரி மாவட்டத்தின் தக்கலை மறைமாவட்டத் திற்கு உரிய 6 மறை வட்டங்களிலிருந்தும், தென்காசி மாவட்டம் புளியறை மறை வட்டத்திலி ருந்தும் நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் அமைந்துள்ள புனித அல்போன்சா திருத்தலத்திற்கு மக்கள் நடைபயணம் வந்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.

    இதில் 1000-க்கும் மேற்பட்ட விசுவாசிகளுடன், 20-க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்களும், 50-க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகளும் கலந்து கொண்டனர். திருத்தல பயணமானது காலை 6மணிக்கு ஆரம்பமாகி காலை 11 மணிக்கு நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்தை வந்து சேர்ந்தது. திருநடைப்பயணத்தின் போது திருப்பயணிகள் தங்களுக்காகவும், தங்கள் குடும்பத்தினர்க்காகவும், நாட்டு மக்கள் அனைவருக்காகவும் ஜெபமாலை செபித்தும், இறைவேண்டல் பாடல்கள் பாடியும் சென்றனர்.

    இந்த திருப்பயணத்தை தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்தந்தை தாமஸ் பௌவத்துப்பறம்பில் தொடங்கிவைத்தார். தக்கலை மறைமாவட்ட இளைஞர் இயக்க இயக்குநர் பேரருட்தந்தை ஜோசப் சந்தோஷ் தலைமை தாங்கி வழிநடத்தினார்.

    நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்த லத்தல்திற்கு நடைபயணமாக வந்த திருப்பயணிகளை திருத்தல பங்குத்தந்தை பேரருட்தந்தை சனில் ஜாண் பந்திச்சிறக்கல், திருத்தல துணை பங்குத்தந்தை அருட்தந்தை ஜார்ஜ் கண்டத்தில் மற்றும் திருத்தல பங்குமக்கள் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் திருத்தலத்தில் திருப்பயணிக ளுக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாள் மற்றும் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. திருத்தல பயணிகளுக்கு திருத்தலத்தில் தேவையான வசதி மற்றும் ஏற்பாடுகளை புனித அல்போன்சா திருத்தல பங்குமக்கள் செய்திருந்தனர்.

    • 7 சாலைகள் தார் போட்டு முழுமையாக சீரமைப்பதற்காக ரூ.78 லட்சம் ஒதுக்கப்பட்டது.
    • மார்த்தாண்டம் மார்க்கெட் ரூ.14 கோடியே 50 லட்சத்தில் கட்டப்படுகிறது

    கன்னியாகுமரி :

    குழித்துறை நகராட்சி பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் புதிய குடிநீர் திட்டத்திற்கான பைப் பதிக்கும் பணி நடந்ததை தொடர்ந்து அனைத்து ரோடுகளும் பழுத டைந்து காணப்படு கிறது. நகராட்சி சார்பில் ஒவ்வொரு சாலையும் சீரமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் குழித்துறை கோர்ட் முதல் பெருந்தெரு வரை, கழுவன்திட்டை சந்திப்பு முதல் இடத்தெரு வரை, பெருந்தெரு முதல் மீன் மார்க்கெட் வரை, பன்னியாணி முதல் வடக்கு தெரு வரை, வார்டு நம்பர் 13 க்கு உட்பட்ட பன்னியாணி சாலை, சிறியக்காட்டுவிளை சானல் சாலை, இடவிளாகம் மிட்ஸ் அலுவலக சாலை ஆகிய 7 சாலைகள் தார் போட்டு முழுமையாக சீரமைப்பதற்காக ரூ.78 லட்சம் ஒதுக்கப்பட்டது.

    இதைப்போல் 6-வது நிதிக்குழு மானியத் திட்டத்தில் 16-ம் வார்டுக்குட்பட்ட சிறிய காட்டுவிளை சாலை, 6-ம் வார்டுக்கு உட்பட்ட மகாதேவர் கோயில் மேட்டு கிராமம் சாலை, 17-ம் வார்டுக்கு உட்பட்ட பன்னியாணி கிளை சாலை, 14-ம் வார்டுக்குட்பட்ட கொல்லங்குளம் வடக்கு தெரு சாலை, 20 ம் வார்டுக்கு உட்பட்ட நந்தன் காடு சாலை, 2ம் வார்டுக்கு உட்பட்ட வள்ளி கோடு அம்பலத்துவிளை சாலை, 6ம் வார்டுக்கு உட்பட்ட அம்மன் கோயில் சாலை, 11 ஆம் வார்டுக்கு உட்பட்ட கண்ணக்கோடு சாலை ஆகிய 8 ரோடுகள் சிமெண்ட் போட்டு சீரமைப்பதற்கு ரூ.68 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

    இந்தத் திட்டப் பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மார்த்தாண்டம் மார்க்கெட் ரூ.14 கோடியே 50 லட்சத்தில் கட்டப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மார்த்தாண்டம் பகுதியின் முக்கியமான மைய பகுதி யில்அமைய உள்ளதால் மக்களுக்கு நல்ல முறையில் பயன்படும் விதத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அழகான நிலையில் வசதியாக அமைக்கப்பட உள்ளது. அனுபவம் வாய்ந்த கட்டடக்கலை பொறியாளர்கள் மூலம் வரைபடம் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இதில் வணிக வளாகம், வாகன நிறுத்தம், கடைகள் போன்றவை இடம்பெறு கிறது. இதற்கான பணி 2 மாதத்தில் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன். ஆசைத்தம்பி, ஆணையாளர் ராமதிலகம், நகராட்சி வழக்கறிஞர் ஷாஜி குமார், கவுன்சிலர்கள் மெர்லின் தீபா, அருள்ராஜ், விஜு, ஆட்லின்கெனில், கிள்ளியூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் டி.பி.ராஜன், குழித்துறை நகர திமுக செயலாளர் வினு குமார், குழித்துறை நகர திமுக.இளைஞரணி அமைப்பாளர் ஆசாத் அலி, திமுக நிர்வாகிகள் ஷாஜி லால், ஜீவகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    • கடைகளில் ஷட்டர்களை 10 நாட்களுக்குள் அமைக்காவிட்டால் சீல் வைக்க உத்தரவு
    • வடசேரி பஸ் நிலைய விரிவாக்க பணிகள் நடைபெறுகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் மேயர் மகேஷ் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு சில கடைகளில் நடைபாதையில் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதை உடனடியாக அகற்ற மேயர் மகேஷ் உத்தரவிட்டார்.

    பின்னர் கடைகளில் ஷட்டர்கள் இல்லாமல் சீட்டுகளால் மூடப்பட்டு இருந்தது. அதை உடனடியாக மாற்றிவிட்டு ஷட்டங்கள் அமைக்க உத்தரவிட்டார். 10 நாட்களுக்குள் ஷட்டர் அமைக்காத கடைகளை சீல் வைக்கவும் மேயர் மகேஷ் உத்தரவிட்டார். மேல் கூரை சேதமடைந்ததை சீரமைக்க வும் அறிவுறுத்தினார்.

    குடிநீர் தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் இருந்தது. அந்த தொட்டியை உடனடியாக மாற்றி விட்டு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்க மேயர் மகேஷ் உத்தரவிட்டார். தாய்மார்கள் பாலூட்டும் அறையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மேல் கூரை சேதமடைந்து இருந்தது.

    அந்த மேல்கூரையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன் அங்கு இருக்கைகள் அமைக்கவும் அறிவுறுத்தினார். அந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையை இரவு 9 மணிக்கு மேல் மூடி பராமரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் கட்டண கழிப்பறையை பார்வையிட்டார்.

    கழிவறை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து அங்கிருந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியிடம் மகேஷ் குறைகளை கேட்டு அறிந்தார். மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் கழிவறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த கட்டுமான பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தையொட்டியுள்ள வடசேரி கூட்டுறவு பண்டகசாலை பல்பொருள் அங்காடியை ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் தங்களுக்கு பாமாயில் வழங்கவில்லை என்றும், பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டினார்கள். பின்னர் வடசேரி பஸ்நிலையம் விரிவாக்க பணிகள் நடைபெறுவதையடுத்து வடசேரி கனக மூலம் சந்தையில் செயல்படும் கடைகளை அண்ணா பஸ்நிலையத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆய்வு செய்தார். தற்காலிக கடைகளை எந்த பகுதியில் அமைக்கலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண் டார்.

    அப்போது பஸ் நிலையத்தின் சுரங்க நடைபாதையையொட்டியுள்ள காலி இடத்தில் தற்காலக கடைகளை அமைப்பது தொடர்பாக ஆலோசிக் கப்பட்டது. பஸ் நிலை யத்திற்குள் இருந்த இருசக்கர வாகனங்களையும் உடனடியாக அப்புறப்படுத்த மேயர் மகேஷ் அறிவுறுத்தினார்.

    காமராஜர் பில்டிங்கில் செயல்பட்டு வரும் கடைகளையும் ஆய்வு செய்தார். கட்டிடத்தின் முன் பகுதியில் வேறு நபர்கள் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று கூறினார். மேலும் அண்ணா பஸ் நிலையத்தில் கட்டண பார்க்கிங் வசதி ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வின்போது என்ஜினீயர் பாலசுப்ரமணியன், நகர்நல அதிகாரி ராம்குமார், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ரோஸிட்டா, இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், மாநகராட்சி மண்டல தலைவர் செல்வ குமார் மற்றும் திருமால், தி.மு.க. நிர்வாகி சரவணன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • போக்குவரத்து கழக அதிகாரிகள் பெண்ணிடம் வழங்கினர்
    • பிரேஸ்லெட்டை வழங்கிய கண்டக்டருக்கு பூர்ணிமா வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    நாகர்கோவில் :

    கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் பூர்ணிமா (வயது 35). இவர் குமரி மாவட்டம் குழித்துறை அருகே இடைக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் தனது தாயாரை பார்ப்பதற்காக நேற்று இரவு பஸ்சில் புறப்பட்டு நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்தார். இன்று காலை வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பஸ்சில் குழித்துறைக்கு சென்றார்.

    பஸ்சை விட்டு இறங்கி பூர்ணிமா பார்த்தபோது தனது கையில் கிடந்த 1¼ பவுன் பிரேஸ்லெட்டை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பூர்ணிமா அந்த பகுதியில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்து போக்குவரத்து கழக அதிகாரியிடம் தெரிவித்தார்.

    அவரிடம் இருந்து டிக்கெட்டை பரிசோதித்த அதிகாரிகள் அவர் சென்ற பஸ்சை கண்டுபிடித்தனர். உடனடியாக பஸ் கண்டக்டரை தொடர்பு கொண்டு போக்குவரத்து கழக அதிகாரிகள் பேசினார்கள். அப்போது கண்டக்டர்கள் பஸ்சில் கிடந்த பிரேஸ்லெட்டை எடுத்து வைத்திருப்பதாக கூறினார்கள். இதற்கிடையில் திருவனந்தபுரத்திற்கு சென்ற பஸ் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. பஸ் நிலையம் வந்ததும் கண்டக்டர்கள் முத்துராஜன் போக்குவரத்து கழக அதிகாரியிடம் பிரேஸ்லெட்டை ஒப்படைத்தார். போக்குவரத்து கழக அதிகாரிகள் பூர்ணிமாவிடம் பிரேஸ்லெட்டை ஒப்படைத்தனர். பிரேஸ்லெட்டை வழங்கிய கண்டக்டருக்கு பூர்ணிமா வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    • ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து எவ்வாறு இறந்தார்? என்ன காரணம் என விசாரணை

    இரணியல், ஜூலை.25-

    இரணியல் அருகே உள்ள மணக்கரை புதுக்கிராமத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 44), மாற்றுத்திறனாளி. இவரது மனைவி ரதி (35). இவர் அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வீட்டு வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் ரதி வீட்டு வேலைக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பி உள்ளார்.

    அப்போது வீட்டு கட்டிலில் கிறிஸ்டோபர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கிறிஸ்டோபர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ரதி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிறிஸ்டோபர் எவ்வாறு இறந்தார்? என்ன காரணம் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாற்று பாதை இன்றி சுமார் 5 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள்ளது.
    • கிளை கால்வாயில் தண்ணீர் செல்வதையும் அவர் பார்வையிட்டார்

    கன்னியாகுமரி :

    இரணியல் கிளைக் கால்வாயில், பாலம் தாழ்வாக கட்டப்பட்டதால் தண்ணீர் பெருமளவு செல்லமுடியாமல் பாலம் பகுதியிலேயே தேங்கி காணப்படுகிறது. அதனால் புதுவிளை லட்சுமி புரம் போன்ற கடை வரம்பு பகுதிகளில் தண்ணீர் குறைவாக செல்லும் நிலை உள்ளது அதுபோல ெரயில்வே பாலத்தின் மேல் ஆத்திவிளை பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட பாலத்தை திறக்காததால் பரம்பை பகுதியில் துண்டிக்கப்பட்ட பாலத்திற்கு மாற்று பாதை இன்றி சுமார் 5 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள்ளது.

    இது குறித்த புகாரின்பேரில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். கிளை கால்வாயில் தண்ணீர் செல்வதையும் அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கால்வாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலை பகுதிகளை தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இரணியல் பகுதியில் ரெயில்வே இரட்டை பாதை பணிகளுக்காக புதிதாக கட்டப்பட்ட கால்வாய் பாலத்தின் வழியாக, முன்னோட்டமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது குறித்தும், பாலத்தினை மேம்படுத்துவது குறித்தும் விவசாய சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இரணியல் கால்வாயானது பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடங்கி, புத்தன் அணையிலிருந்து பிரிந்து, சித்திரங்கோடு, திருவிதாங்கோடு, இரணியல் வழியாக சென்று சேரமங்கலம் மேஜர், சேரமங்கலம் மைனர், நெய்யூர், மண்டைக்காடு உள்ளிட்ட கடை வரம்பு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் பாசனத்திற்கு பேருதவியாக அமைந்து வருகிறது.

    இந்த கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

    ஆய்வின்போது சப்-கலெக்டர் கவுசிக், தக்கலை பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் கதிரவன், தக்கலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கோல்டன் மெல்பா, காங்கிரஸ் மாவட்ட விவசாய அணி பிரிவு தலைவர் வக்கீல் ஜாண்சவுந்தர், முன்னாள் மாவட்ட பாசன துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, காங்கிரஸ் மாவட்ட விவசாய அணி துணை தலைவர் ஜேக்கப் அருள்பால் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ்- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
    • தமிழ்நாடு அரசால் ரூ.80 லட்சம் திருத்திய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி : 

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூசாரி-–பாலூர் சாலையானது சுமார் 420 மீட்டர் நீளம் கொண்டது. இந்த சாலை கருங்கல்-– மார்த்தாண்டம், கருங்கல்-–புதுக்கடை ஆகிய 2 நெடுஞ்சாலைகளை இணைப்பதும், திப்பிறமலை கிராம ஊராட்சியையும், பாலூர் கிராம ஊராட்சியையும் இணைப்பதுமான இணைப்பு சாலையாகும்.

    இந்த சாலை 2 மாநில நெடுஞ்சாலைகளையும் இணைக்கின்ற இணைப்பு சாலையாக இருப்பதால் அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்கின்றன. நீண்ட காலமாக இந்த சாலை செப்பனிடாத காரணத்தினாலும், கடந்த வருடம் பெய்த மழையினாலும் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.

    இந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் முடியாத நிலை இருந்தது. இதனால் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அவர் நபார்டு மற்றும் கிராம சாலைகள் துறையின் மூலமாக உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கள் அளித்து கோரிக்கை வைத்து வந்தார்.

    இதனையடுத்து இந்த சாலையை கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நெடுஞ்சாலை துறைக்கு ஒப்படைப்பு செய்யப் பட்டதா கும். நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராம சாலை அலகினால் மாவட்ட இதர சாலையாக தரம் உயர்த்தி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு அரசால் ரூ.80 லட்சம் திருத்திய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதனையடுத்து சாலை சீரமைக்கும் பணியை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோபால், ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணிபாய் மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராள மானோர் கலந்துகொண்டனர்.

    • சம்பவத்தன்று பண பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது
    • இந்திய தண்டனை சட்டம் 294பி 323, 506 2 ஐபிசி ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் வடலிவிளை தெற்கு தெருவை சேர்ந்தவர் ராம் பிரதாப் (வயது 42). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அகிலேஸ்வரி (37). இவர்களுக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்துக்கு பிறகு வெளிநாட்டிற்கு சென்ற ராம் பிரதாப் தற்போது ஊருக்கு வந்துள்ளார். கணவன்-மனைவிக்கி டையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று பண பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ராம் பிரதாப் மனைவி அகிலேஷ்வரியை தாக்கியுள்ளார். மேலும் அவரது தந்தை செல்லத்துரை மருமகளை பேசியதாக தெரிகிறது. படுகாயம் அடைந்த அகிலேஸ்வரி நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளார்.

    இது குறித்து அகிலேஸ்வரி கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ராம் பிரதாப், மாமனார் செல்லத்துரை மீது இந்திய தண்டனை சட்டம் 294பி 323, 506 2 ஐபிசி ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×