என் மலர்
கன்னியாகுமரி
- வள்ளத்தை சோதனை செய்தபோது சட்ட விரோதமாக 600 லிட்டர் மண்எண்ணெய் மற்றும் 30 கிலோ பீடி இலை இருப்பது தெரியவந்தது.
- கூடங்குளம் கடலோர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் சரகத்திற்குட்பட்ட கடல் பகுதியில் கடலோரபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் கிங்சிலி கிறிஸ்டோபர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுகுமாரன், சுரேத்திரகுமார், ஏட்டுகள் முருகன், ரவிசந்திரன், ஐசக் சாம், போலீஸ்காரர்கள் ஜெகதீஸ், கிருஷ்ணகுமார் ஆகியோர் ரோந்து சென்றனர்.
உவரி வேளாங்கண்ணி மாதா கோவில் தூண்டில் வளைவு அருகே சென்றபோது, பதிவு எண் இல்லாத பைபர் வள்ளம் நிற்பதை பார்த்தனர். அதில் தூத்துக்குடி வடக்கு கடற்கரை அண்ணா காலனியை சேர்ந்த பிரவின் (வயது 38), தெற்கு பீச் ரோடு இனிகோ நகரைச் சேர்ந்த கிஷோர் (34) ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளனர்.
இதனை தொடர்ந்து வள்ளத்தை சோதனை செய்தபோது சட்ட விரோதமாக 600 லிட்டர் மண்எண்ணெய் மற்றும் 30 கிலோ பீடி இலை இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து 2 பேரிடமும் விசாரணை நடத்தியபோது, அதனை அவர்கள் இலங்கைக்கு கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு சுமார் ரூ.9 லட்சம் ஆகும். அதனை கைப்பற்றிய போலீசார், பிரவிண் மற்றும் கிசோரை கைது செய்தனர்.
அவர்களோடு வந்த நெல்லை மாவட்டம் மாடன்பிள்ளை தர்மம் பகுதியை சேர்ந்த துளசிமணி தப்பிச்சென்று விட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அவரை பிடிக்க கன்னியாகுமரி கடலோர பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கூடங்குளம் கடலோர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 30 மது பாட்டில்கள் பறிமுதல்
- இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
களியக்காவிளை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் களியக்காவிளை போலீசார், படந்தாலுமூடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது 30 மது பாட்டில் இருந்தது தெரியவந்தது. படந்தாலுமூடு, குழித்துறை பகுதிகளில் அவர்கள் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த கணேசன், குழித்துறையை சேர்ந்த ஜீவன் என்பதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- சிறுத்தை புலி மற்றொரு பகுதியில் புகுந்திருப்பது குமரி மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது
- 2 வாத்து கோழிகளையும் சிறுத்தை கடித்துள்ளது. மற்றொரு வீட்டில் ஆட்டை கடித்துக் கொன்றுள்ளது.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் சிற்றாறு பகுதியில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் இருப்பதால் அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். புலியை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்த போதிலும் அது இன்று வரை சிக்கவில்லை. அதே நேரம் இடத்தை மாற்றி மாற்றி புலி, மாடு, ஆடு போன்றவற்றை இரையாக்கி வருகிறது. இந்த பீதியே இன்னும் அடங்காத நிலையில், சிறுத்தை புலி மற்றொரு பகுதியில் புகுந்திருப்பது குமரி மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
பூதப்பாண்டி அருகே உள்ள தடிக்காரன்கோணத்தை அடுத்துள்ள கீரிப்பாறை லேபர் காலனி பகுதியில் சுமார் 50 வீடுகளுக்கு மேல் உள்ளது. இந்த வீடுகளில் கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குடியிருந்து வருகிறார்கள். இதில் உதயன் என்பவரது வீட்டில் தான் சிறுத்தை புலி கைவரிசை காட்டியுள்ளது.
அவரது வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த கன்று குட்டியை சிறுத்தை புலி கடித்து தின்று கொண்டிருந்தது. சத்தம் கேட்டு வீட்டின் பின்புறம் வந்த உதயன், இதனை பார்த்ததும் சத்தம் போட்டு பட்டாசுகளை வெடித்தார். இதனை தொடர்ந்து சிறுத்தை அங்கிருந்து ஓடி விட்டது.
அதே பகுதியை சேர்ந்த கேசவன் என்பவரது வீட்டில் பின்னால் இரும்பு கூட்டில் அடைக்கப்பட்டிருந்த 2 வாத்து கோழிகளையும் சிறுத்தை கடித்துள்ளது. மற்றொரு வீட்டில் ஆட்டை கடித்துக் கொன்றுள்ளது.
இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் அழகியபாண்டிபுரம் வனச்சரகத்திற்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிறுத்தை புலி நடமாட்டம் அந்தப் பகுதியில் உள்ள தொழிலாளர்கள், பால் வெட்டும் தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே சிறுத்தை நடமாட்டத்தை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- சி.சி.டி.வி.காமிரா பதிவுகளை கைப்பற்றி தனிப்படை விசாரணை
- மோட்டார் சைக்கிளில் சமையல் செய்வதற்கான பாத்திரங்களும் இருந்தது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் அருணாங்குளம் சந்திப்பில் கடந்த 3 நாட்களாக மோட்டார் சைக்கிள் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்தது. அதில் இருந்து துர்நாற்றம் வீசியதால் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டை ஒன்று இருந்தது. அந்த சாக்கு மூட்டையில் இருந்து தான் துர்நாற்றம் வீசியது தெரிய வந்தது. போலீசார் அந்த சாக்கை பிரித்து பார்த்த போது மயில் ஒன்றை கொன்று தோலை உரித்து வைத்திருந்தனர். இதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மோட்டார் சைக்கிளில் சமையல் செய்வதற்கான பாத்திரங்களும் இருந்தது.
எனவே மயிலை கொன்று சமைத்து சாப்பிட கொண்டு வந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் அதனை மோட்டார் சைக்கிளுடன் விட்டுச் சென்றது ஏன்? என்பது தெரியவில்லை. வேறு ஏதும் காரணங்களுக்காக அதனை கொண்டு வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை பாதியில் நிறுத்திவிட்டு தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.
இதனை தொடர்ந்து போலீசார் மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதில் அது வடசேரி பகுதியைச் சேர்ந்த ஒருவருடையது என்பது தெரிய வந்தது. வனத்து றையினர் அவரிடம் விசாரணை நடத்தி னார்கள். அப்போது தனது மோட்டார் சைக்கிள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே மாயமாகி விட்டதாகவும் இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தி ருப்பதாகவும் அவர் கூறினார்.
இதை கேட்டு வனத்துறை யினர் அதிர்ச்சி அடைந்தனர். மோட்டார் சைக்கிளை திருடிய நபர் தான் மயிலையும் கொன்று சமைத்து சாப்பிட எடுத்துச் சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மயிலை கொன்ற கும்பலை பிடிக்க வனத்துறையினர் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை பற்றி விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.
- அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
- ஆரோக்கியபுரம் பஞ்சாயத்து பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட் பட்ட கோவளம் மற்றும் ஆரோக்கியபுரம் பஞ்சாயத்து பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.52 லட்சத்து 25 ஆயிரம் செலவில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.
இந்தப் பணியின் தொடக்க விழா இன்று காலை நடந்தது. விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாநில தி.மு.க. வர்த்தக அணி இணை செயலாளர் தாமரைபாரதி, கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன், ஊராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சங்கர், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர், ஒன்றிய பொறியாளர் ஹெலன், அரசு ஒப்பந்ததாரர்கள் சுதா பாஸ்கர், ரமேஷ், மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.]
- நள்ளிரவு 12 மணிக்கு சாஸ்தாவுக்கு பூஜையும் நடைபெற உள்ளது.
- கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் குடும்ப வாரிசுதாரர்கள் செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி :
சூரங்குடி அருகே உள்ள வத்தக்காவிளை இசக்கியம்மன் கோவில் கொடை விழா நாளை (27-ந்தேதி) தொடங்கி 29-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
விழாவையொட்டி நாளை மாலை 5 மணிக்கு பக்தி காணமும், 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு நையாண்டி மேளமும், 9 மணிக்கு சாஸ்தா கதை வில்லிசையும், நள்ளிரவு 12 மணிக்கு சாஸ்தாவுக்கு பூஜையும் நடைபெற உள்ளது.
நாளை மறுநாள் (28-ந்தேதி) காலை 5 மணிக்கு பக்தி காணமும், 8 மணிக்கு நையாண்டி மேளமும், 9 மணிக்கு இசக்கியம்மன் கதை வில்லிசையும், பகல் 1 மணிக்கு இசக்கியம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், 1.30 மணிக்கு அன்ன தானமும், மாலை 4 மணிக்கு பக்தி காணமும், மாலை 5 மணிக்கு நையாண்டி மேள மும், 6 மணிக்கு காலசுவாமி கதை வில்லிசையும், இரவு 7 மணிக்கு கால சுவாமிக்கு தீபாராதனையும், 8 மணிக்கு நையாண்டி மேளமும், 9 மணிக்கு வில்லிசையும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், நடைபெற உள்ளது.
விழாவின் 3-ம் நாளான 29-ந்தேதி காலை 6 மணிக்கு சுடலை மாடசுவாமி கதை வில்லிசையும், 7 மணிக்கு சுடலைமாட சுவாமிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளது.
கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் குடும்ப வாரிசுதாரர்கள் செய்து வருகின்றனர்.
- 31-ந்தேதி தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது
- காலை 10 மணிக்கு அம்மனுக்கு களப அபிஷேகம் நடக்கிறது.
கன்னியாகுமரி :
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவி லில் ஆடி மாதத் தில் 12 நாட்கள் களப பூஜை நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 12 நாட்கள் விழா நடக்கிறது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 12 நாட்கள் தொடர்ந்து காலை 10 மணிக்கு அம்மனுக்கு களப அபிஷேகம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ரெத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்
- நாளை (27-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை
- பொது மக்கள் ஒத்துழைப்பு வேண்டும் என குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி :
குழித்துறை உப கோட்டத்திற்குட்பட்ட மார்த்தாண்டம், குழித்துறை, அருமனை, களியக்காவிளை, புத்தன்சந்தை, கண்ணுமாமூடு, களியல் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளில் நாளை (27-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மார்த்தாண்டம் பிரிவுக்குட்பட்ட கொல்லஞ்சி, மாம்பள்ளித்தோட்டம், விரிகோடு மற்றும் மாமூட்டுக்கடை, குழித்துறை பிரிவுக்குட்பட்ட நெடியப்பனவளை, பாறைகுளம், ஆசாரிகுடிவிளை, குலகுழிகுளம் மற்றும் இளம்பிலாந்தோட்டம், அருமனை பிரிவுக்கு உட்பட்ட மஞ்சாலுமூடு, தாணிமூடு, ஜெயந்தி காலனி மற்றும் முக்கூட்டுகல், களியக்காவிளை பிரிவுக்குட்பட்ட சமுதாயப்பற்று, மலையடி, மலைகோயில் மற்றும் மூவோட்டுகோணம், புத்தன்சந்தை பிரிவுக்குட்பட்ட தெற்றிகுழி, மேக்கேதட்டுவிளை, மணலுக்காலை மற்றும் அம்பேற்றின்காலை, கண்ணுமாமூடு பிரிவுக்குட்பட்ட மேழக்கோடு, வெட்டுக்குழி மற்றும் குருவிக்குந்நு, களியல் பிரிவுக்குட்பட்ட ஆலஞ்சோலை, மருதம்பாறை, பத்துகாணி, ஆறுகாணி மற்றும் அணைமுகம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
மின் தடை நாட்களில் பொது மக்கள் ஒத்துழைப்பு வேண்டும் என குழித்துறை மின்விநியோக செயற்பொறி யாளர் தெரிவித்துள்ளார்.
- கோபால கிருஷ்ணன் மீது பாய்ந்து அரிவாளால் வெட்டி பணத்தை பறிக்க முயற்சித்தார்.
- குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்
கன்னியாகுமரி :
குளச்சல் அருகே உள்ள இரும்பிலி பொட்டல் கரையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 53), டாஸ்மாக் ஊழியர். இவர் கடந்த 8-ந் தேதி இரவு டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு பணத்துடன் வீட்டிற்கு சென்றார். வீட்டின் அருகே சென்ற போது இருளில் பதுங்கியி ருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென கோபால கிருஷ்ணன் மீது பாய்ந்து அரிவாளால் வெட்டி பணத்தை பறிக்க முயற்சித்தார்.
ஆனால் கோபால கிருஷ்ணன் அவனுடன் போராடியதால் வசூல் பணம் ரூ.6.55 லட்சம் தப்பியது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தொடர்புடையதாக மேற்கு நெய்யூர் சரலை சேர்ந்த அருள் சஜு (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் இரணியல் கோர்ட்டில் ஆஜர்ப்ப டுத்தப்பட்டார்.
- பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வுக்கு 10.8.2023-க்குள் https://yet.nta.ac.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
2023-24-ம் நிதி யாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர் மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 93 மாணவ, மாணவிகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப் படும் என மத்திய அரசால் அறி விக்கப்பட்டு ள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்ப டும். தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடி ப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வுக்கு 10.8.2023-க்குள் https://yet.nta.ac.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 29-ந் தேதி நடைபெறும்.
மேலும் விவரங்கள் https://hyet.nta.ac.inமற்றும் https://socialjustice.gov. ஆகிய இணையதள முகவரி களில் வெளியி டப் பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குழித்துறையில் 12.4 மில்லி மீட்டர் மழை
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 22.30 அடியாக உள்ளது.
நாகர்கோவில் :
குமரியில் கடந்த 3 நாட்க ளாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சற்று வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசி வருகிறது. குழித்துறை பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டியது.
அங்கு அதிகபட்சமாக 12.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, கன்னிமார், நாகர்கோவில், சுருளோடு, இரணியல், ஆரல்வாய்மொழி பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
அருவியில் மித மான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் மழை பெய்து வருவதையடுத்து அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணைகளில் இருந்து பாசனத்திற்காக 934 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் தோவாளை சானல், அனந்தனார் சானல், நாஞ்சில்நாடு,புத்தனார் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்துவிடப்பட்டுள்ளது.
பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 31.25 அடியாக உள்ளது. அணைக்கு 452 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 684 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 22.30 அடியாக உள்ளது. அணைக்கு 248 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
- பலியானவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று தெரியவில்லை
நாகர்கோவில் :
நாகர்கோவில் தேரைக் கால் புதூர் பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர், அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதிய தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அந்தப்ப பகுதியினர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். பலியானவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இது குறித்து போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






