search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீரிப்பாறை பகுதியில் மாடு, கோழிகளை வேட்டையாடியது சிறுத்தை புலி
    X

    கீரிப்பாறை பகுதியில் மாடு, கோழிகளை வேட்டையாடியது சிறுத்தை புலி

    • சிறுத்தை புலி மற்றொரு பகுதியில் புகுந்திருப்பது குமரி மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது
    • 2 வாத்து கோழிகளையும் சிறுத்தை கடித்துள்ளது. மற்றொரு வீட்டில் ஆட்டை கடித்துக் கொன்றுள்ளது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் சிற்றாறு பகுதியில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் இருப்பதால் அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். புலியை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்த போதிலும் அது இன்று வரை சிக்கவில்லை. அதே நேரம் இடத்தை மாற்றி மாற்றி புலி, மாடு, ஆடு போன்றவற்றை இரையாக்கி வருகிறது. இந்த பீதியே இன்னும் அடங்காத நிலையில், சிறுத்தை புலி மற்றொரு பகுதியில் புகுந்திருப்பது குமரி மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    பூதப்பாண்டி அருகே உள்ள தடிக்காரன்கோணத்தை அடுத்துள்ள கீரிப்பாறை லேபர் காலனி பகுதியில் சுமார் 50 வீடுகளுக்கு மேல் உள்ளது. இந்த வீடுகளில் கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குடியிருந்து வருகிறார்கள். இதில் உதயன் என்பவரது வீட்டில் தான் சிறுத்தை புலி கைவரிசை காட்டியுள்ளது.

    அவரது வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த கன்று குட்டியை சிறுத்தை புலி கடித்து தின்று கொண்டிருந்தது. சத்தம் கேட்டு வீட்டின் பின்புறம் வந்த உதயன், இதனை பார்த்ததும் சத்தம் போட்டு பட்டாசுகளை வெடித்தார். இதனை தொடர்ந்து சிறுத்தை அங்கிருந்து ஓடி விட்டது.

    அதே பகுதியை சேர்ந்த கேசவன் என்பவரது வீட்டில் பின்னால் இரும்பு கூட்டில் அடைக்கப்பட்டிருந்த 2 வாத்து கோழிகளையும் சிறுத்தை கடித்துள்ளது. மற்றொரு வீட்டில் ஆட்டை கடித்துக் கொன்றுள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் அழகியபாண்டிபுரம் வனச்சரகத்திற்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிறுத்தை புலி நடமாட்டம் அந்தப் பகுதியில் உள்ள தொழிலாளர்கள், பால் வெட்டும் தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே சிறுத்தை நடமாட்டத்தை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×