search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் ரெயில் நிலையம் அருகே புதிதாக கட்டிய பாலம் மேம்படுத்தப்படும்
    X

    இரணியல் ரெயில் நிலையம் அருகே புதிதாக கட்டிய பாலம் மேம்படுத்தப்படும்

    • மாற்று பாதை இன்றி சுமார் 5 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள்ளது.
    • கிளை கால்வாயில் தண்ணீர் செல்வதையும் அவர் பார்வையிட்டார்

    கன்னியாகுமரி :

    இரணியல் கிளைக் கால்வாயில், பாலம் தாழ்வாக கட்டப்பட்டதால் தண்ணீர் பெருமளவு செல்லமுடியாமல் பாலம் பகுதியிலேயே தேங்கி காணப்படுகிறது. அதனால் புதுவிளை லட்சுமி புரம் போன்ற கடை வரம்பு பகுதிகளில் தண்ணீர் குறைவாக செல்லும் நிலை உள்ளது அதுபோல ெரயில்வே பாலத்தின் மேல் ஆத்திவிளை பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட பாலத்தை திறக்காததால் பரம்பை பகுதியில் துண்டிக்கப்பட்ட பாலத்திற்கு மாற்று பாதை இன்றி சுமார் 5 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள்ளது.

    இது குறித்த புகாரின்பேரில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். கிளை கால்வாயில் தண்ணீர் செல்வதையும் அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கால்வாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலை பகுதிகளை தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இரணியல் பகுதியில் ரெயில்வே இரட்டை பாதை பணிகளுக்காக புதிதாக கட்டப்பட்ட கால்வாய் பாலத்தின் வழியாக, முன்னோட்டமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது குறித்தும், பாலத்தினை மேம்படுத்துவது குறித்தும் விவசாய சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இரணியல் கால்வாயானது பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடங்கி, புத்தன் அணையிலிருந்து பிரிந்து, சித்திரங்கோடு, திருவிதாங்கோடு, இரணியல் வழியாக சென்று சேரமங்கலம் மேஜர், சேரமங்கலம் மைனர், நெய்யூர், மண்டைக்காடு உள்ளிட்ட கடை வரம்பு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் பாசனத்திற்கு பேருதவியாக அமைந்து வருகிறது.

    இந்த கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

    ஆய்வின்போது சப்-கலெக்டர் கவுசிக், தக்கலை பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் கதிரவன், தக்கலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கோல்டன் மெல்பா, காங்கிரஸ் மாவட்ட விவசாய அணி பிரிவு தலைவர் வக்கீல் ஜாண்சவுந்தர், முன்னாள் மாவட்ட பாசன துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, காங்கிரஸ் மாவட்ட விவசாய அணி துணை தலைவர் ஜேக்கப் அருள்பால் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×