என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
    • சிற்றாறு 2 அணையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அதிநவீன புதிய படகுதளம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்து வதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்படுமென முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

    குறிப்பாக சிற்றாறு 2 அணையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அதிநவீன புதிய படகுதளம் அமைக்க வேண்டுமெனவும், மாத்தூர் தொட்டிப் பாலத்தை சுற்றி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்கிட வேண்டுமெனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நான் கோரிக்கை வைத்தேன். இக்கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் என வும், அதற்கான வரைவு திட்டத்தை தயாரிக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவுறுத்தினார்.

    அதன் அடிப்படையில் சென்னை தலைமைச் செயலகத்தில் என்னுடைய தலைமையில், சிற்றாறு 2 நீர்த்தேக்க பகுதியில் ரூ.3.4 கோடி மதிப்பிலும், மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதியில் ரூ.3 கோடி மதிப்பிலும் மேற்கொள்ளப்பட இருக்கும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாலோசனை கூட்டம் நடை பெற்றது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (நீர்வளத்துறை), சந்தீப் சக்சேனா, சுற்றுலா துறையின் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, கன்னியாகுமரி மாவட்டட அரசு அலுவலர்கள் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • புலி நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
    • கூண்டு அமைத்தும் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    திருவட்டார்:

    பேச்சிப்பாறை, சிற்றாறு சிலோன் காலனியில் குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டு இருந்த ஆடுகளை புலி கடித்துக் குதறியது. அடுத்தடுத்து ஆடு, மாடுகளை கடித்துக் கொன்றதால் அந்த பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் அச்சம் அடைந்தனர்.

    புலியை பிடிக்க 2 கூண்டுகள் அமைக்கப்பட்டது. மேலும் எலைட் படையினரும், டாக்டர் குழுவினரும், வனத்துறையினரும் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். டிரோன் கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்பட்டது. ஆனால் புலி சிக்கவில்லை. இதையடுத்து தேடுதல் வேட்டை கைவிடப்பட்டது.

    எலைட் படையினரும் டாக்டர் குழுவினரும் தேடுதல் வேட்டையை கைவிட்டனர். இந்த நிலையில் பத்துகாணி ஒரு நூறாம்வயல் குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த 4 ஆடுகளை புலி கடித்து குதறியது. இது குறித்து குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வன அதிகாரி இளையராஜா தலைமையில் வனக்குழுவினர் பத்துகாணி பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆடுகளை இழந்த பழங்குடியினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. கடந்த 16 நாட்களாக புலி தொந்தரவு இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் அட்டகாசத்தை தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    புலியை பிடிக்க முதுமலை காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற பழங்குடியினரும், எலைட் படையினரும், டாக்டர் குழுவினரும் மீண்டும் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. குமரி மாவட்ட வன அதிகாரிகளும் இவர்களுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் புலியை தேடும் பணியில் இறங்கி உள்ளார்கள். ஏற்கனவே சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் 2 கூண்டுகள் அமைக்கப்பட்ட நிலையில் பத்துகாணி பகுதியில் மேலும் 3 கூண்டுகளை அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்காக நெல்லை மற்றும் களக்காட்டில் இருந்து கூண்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் பத்துகாணி பகுதியில் கூண்டுகள் அமைக்கடுகிறது.

    மேலும் புலி நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வன அதிகாரி இளையராஜா கூறுகையில், சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியதை தொடர்ந்து அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் தேடுதல் வேட்டையை கைவிட்டு இருந்தோம்.

    இந்த நிலையில் பத்துகாணி பகுதியில் ஆடுகளை கடித்து கொன்றுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் தற்போது தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளோம். கூண்டு அமைத்தும் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. விரைவில் புலி பிடிபடும் என்றார்.

    • வீட்டில் இருந்த சுபிதாவிடம், ஜெயராஜ் தகராறு செய்தார்.
    • ஜெயராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அனந்த நகர் காந்தி நகர் காலனியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 49). ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர். இவரது மனைவி சுபிதா (39). இவர்களுக்கு ஒரு மகளும் 2 மகன்களும் உள்ளனர்.

    கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி மீதான சந்தேகத்தால் அவ்வப்போது ஜெயராஜ் மனைவியை கொன்று விடுவதாக மிரட்டி வந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த சுபிதாவிடம், ஜெயராஜ் தகராறு செய்தார்.

    குடிபோதையில் இருந்த அவர் திடீரென கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்தார். இதையடுத்து அவருக்கு ரத்தம் கொட்டியது. மயங்கி விழுந்த சுபிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் ஜெயராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • வேர்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட குளச்சல், –திருவட்டார் சாலையில் ரூ.1.22 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி
    • விராலிகாட்டுவிளை, –வீட்டுக்குழியில் சாலை அமைக்கும் பணியும் ஆய்வு செய்யப்பட்டது

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலை துறையின் சார்பில் பல்வேறு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் இன்றுநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பழு தடைந்துள்ள சாலைகளை சீரமைக்கும் பணி, தார் சாலைகள் அமைக்கும் பணி, புதிய சாலைகள் அமைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒருபகுதியாக வேர்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட குளச்சல்,–திருவட்டார் சாலையில் ரூ.1.22 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியும், விராலிகாட்டுவிளை, – வீட்டுக்குழியில் சாலை அமைக்கும் பணியும் ஆய்வு செய்யப்பட்டது. இப்பணி யினை தரமானதாகவும், விரைவாகவும் முடித்து பொது மக்களின் பயன்பா ட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவல ர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பொன்மனை-ஈஞ்சங்கோடு செல்லும் சாலையில் சாலைகள் பராமரிக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநி திகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அந்த பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து திட்ட அறிக்கை சமர்ப்பிக்குமாறு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மற்றும் பொன்மனை பேரூராட்சி செயல் அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன், உதவி கோட்ட பொறியாளர் தனேஷ் சேகர், உதவி இயக்குனர் விஜயா, பொன்மனை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலினி, ரெமோன், அரசு வழக்கறிஞர் ஜான்சன், பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 31-வது வார்டு மேலராமன்புதூர் கீழ தெருவில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியையும், 44-வது வார்டுக்குட்பட்ட கேம்ப் ரோடு பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார் தளம் அமைக்கும் பணியையும்

    மேயர் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து எஸ்.எல்.பி. பள்ளியில் நடந்த விழாவில் பங்கேற்ற அவர், மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    நிகழ்ச்சிகளில் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர் செல்வ குமார், மாமன்ற உறுப்பினர் சோபி, நவீன்குமார், தி.மு.க மீனவரணி மாநில துணைச் செயலாளர் நசரேத் பசலியான், மணி வேல்முரு கன், பகுதி செயலாளர் சேக்மீரான், ஜீவா, வட்ட செயலாளர்கள் துரைசாமி, இளைஞரணி அகஸ்தீசன், சரவணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்

    • 15-ந்தேதி நடக்கிறது
    • 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த போட்டி நடத்தப்படுகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே கொய்யன்விளையில் காளை வண்டி போட்டி வருகிற 15-ந்தேதி மதியம் 2 மணிக்கு நடக்கிறது. நிகழ்ச்சிக்கு தேவ் தலைமை தாங்குகிறார். காளை வண்டி போட்டியை நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மீனாதேவ் தொடங்கி வைக்கிறார். கந்தப்பன், ராஜ மன்னார், காமராஜ், சுதர்சன், சிவபிரபு ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    கொய்யன்விளை ஸ்ரீமன் நாராயணன் கோவில் அருகில் இருந்து தெற்கு சூரங்குடி தபால் நிலையம் வரை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த போட்டி நடத்தப்படுகிறது. முதல் பரிசாக ரூ.10,001 மற்றும் கேடயமும், 2-வது பரிசாக ரூ.6,501 மற்றும் கேடயமும், 3-வது பரிசாக ரூ.4,001 மற்றும் கேடயமும், 4-வது பரிசாக ரூ.2,001 மற்றும் கேடயமும் வழங்கப்படு கிறது.

    • முதல் விற்பனையை பேக்கரி உரிமையாளர் ஜெகனின் மனைவி ஷீபா தொடங்கி வைத்தார்.
    • விற்பனையாகும் அனைத்து பேக்கரி வகைகளும் இங்கே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் தேரேகா ல்புதூர் அப்டா மார்க்கெட் அருகே இரட்டைப்பனை டீ ஸ்டால் இயங்கி வருகிறது. இதன் அருகே இரட்டை ப்பனை பேக்கரி நேற்று புதிதாக திறக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும் மாநகராட்சி மேயரு மான மகேஷ் தலைமை தாங்கினார். திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பேக்கரி உரிமையாளர் ஜெகன் வரவேற்றார். பேக்கரியை புதுகுடியிருப்பு எல்ஷட மிஷன் ஸ்தாபகர் அருட் சகோதரி றோசம்மாள் திறந்து வைத்தார். எல்ஷட மிஷன் தலைவர் ஜான் ஜெயக்குமார் ஜெபம் செய்தார். முதல் விற்பனையை பேக்கரி உரிமையாளர் ஜெகனின் மனைவி ஷீபா தொடங்கி வைத்தார்.

    அதனை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவரும், பாரதிய ஜனதா பொருளா ளருமான முத்துராமன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேக்கரி உரிமையாளரின் குடும்பத்தி னர், உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    புதிதாக திறக்கப்பட்ட பேக்கரியில் சிப்ஸ் வகை கள், இனிப்பு, கார வகைகள், பிஸ்கட், விதவிதமான அல்வா, இனிப்பு வகை, முறுக்கு, கடலை, பாரம்பரிய இனிப்பு வகைகள், பப்ஸ் வகைகள், கம்பெனி குளிர்பானங்கள், பாதாம் பால், பிரபல நிறுவனங்கள் தயாரிப்பான சாக்லேட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு விற்பனையாகும் அனைத்து பேக்கரி வகைகளும் இங்கே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்ப டுகிறது.

    மேலும் பேக்கரியில் பலவிதமான கேக் வகைகள் ½ கிலோ முதல் பல்வேறு எடை பிரிவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆர்ட ரின் பேரிலும் கேக்குகள் விற்பனை செய்யப்படும் என உரிமையாளர் ஜெகன் தெரிவித்தார்.

    • அஸ்வத்தாமன் மீது பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்த காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
    • போராட்டத்தில் காவல்துறையை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

    கன்னியாகுமரி :

    தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் மீது பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்த காவல்துறையை கண்டித்து குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பாக திங்கள் நகர் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேக்கப் தலைமை தாங்கினார். ஐ.என். டி.சி.யு. மாவட்ட பொதுச் செயலாளர் ஜான் மில்டன் கண்டன உரை ஆற்றினார்.

    முன்னாள் திங்கள் நகர் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேவதாசன், திங்கள் நகர் பேரூராட்சி துணைத் தலைவர் ரீத்தாம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பொய் வழக்கை பதிவு செய்த காவல்துறையை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

    • இன்று ஆடி 4-வது செவ்வாய்
    • சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்

    கன்னியாகுமரி :

    அம்மன் கோவில்களில் ஆடி மாதம் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடும் ஒன்று. குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெறும் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடு மிகவும் சிறப்பானதாகும். இந்த நாளில் அம்மன் கோவில்களில் பெண் பக்தர்கள் பெருமளவு திரள்வார்கள். அப்போது பெண் பக்தர்கள் அம்ம னுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.

    அதேபோல இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில் களில் ஆடி 4-வது செவ்வாய் சிறப்பு வழிபாடு இன்று நடந்தது. கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், வடசேரி காமாட்சி அம்மன் கோவில், நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், தாழக்குடி அவ்வையாரம்மன் கோவில், பெருமாள்புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில், கிருஷ்ணன் கோவில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், முத்தாரம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி 4-வது செவ்வாயை யொட்டி இன்று சிறப்பு வழிபாடுகள், பூஜைகள், அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெற்றன.

    ஆடி 4-வது செவ்வாயையொட்டி தாழக்குடியில் உள்ள அவ்வையாரம்மன் கோவிலில் பெண் பக்தர்கள் கொழுக்கட்டை செய்து அம்மனுக்கு படைத்து வழிபட்டார்கள். மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    பகவதி அம்மன் கோவி லில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விசுவ ரூபதரிசன மும் நடந்தது. பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் அதைத்தொடர்ந்து 6 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. 7 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும் நிவேத்திய பூஜையும் நடந்தது. அதன் பிறகு உஷபூஜையும், உஷ தீபாராதனையும் நடந்தது.

    காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணை, பால், பன்னீர், இளநீர், தயிர், தேன், களபம், சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் 11 மணிக்கு அம்ம னுக்கு வைர கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்த நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை யும், இரவு 7.30 மணிக்கு மலர் முழுக்கு விழாவும், 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜை மற்றும் நிவேத்திய பூஜையும் நடக்கிறது. பின்னர் அம்மனை வெள்ளி பல்லக் கில் எழுந்தருள செய்து கோவிலின் உள்பிர காரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச்செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அத்தாள பூஜையும், ஏகாந்த தீபாராத னையும் நடக்கிறது.

    • கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.
    • 12 நெசவாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.6 லட்சத்திற்கு கடன் தொகை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கைத்த றித்துறை மற்றும் நெசவாளர் சேவை மையம் சார்பில் 9-வது தேசிய கைத்தறி தின விழா நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.

    தேசிய கைத்தறி தின விழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சியும் நடத்தப்பட்டது. அகஸ்தீஸ்வரம் கைத்தறி குழுமம் மூலம் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜவுளி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

    கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் கண்காட்சியை பார்வையிட்டனர்.

    பின்னர் நெசவாளர் நலவாழ்வு திட்டங்களான முத்ரா திட்டத்தின் கீழ் 12 நெசவாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.6 லட்சத்திற்கு கடன் தொகையும், 10 நெசவாளர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான அனுமதி ஆணைகளும் வழங்கப்பட்டது. 10 திறன்மிகு நெசவாளர்களும், 5 மூத்த நெசவாளர்களும் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

    மேலும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் 36 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை நெசவாளர் சேவை மைய துணை இயக்குனர் ஹிராலால் மற்றும் கைத்தறி துறை உதவி இயக்குனர் வரதராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • புகை மண்டலம் காரணமாக விடுதியின் பால்கனியில் நின்று கொண்டிருந்த ஒரு சில சுற்றுலா பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
    • தீயை மேலும் பரவ விடாமல் பல மணி நேரம் போராடி அணைத்தனர்.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாட்டினரும் கன்னியாகுமரி வந்து சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காட்சியை பார்த்து ரசிப்பது வழக்கம்.

    அவர்கள் கன்னியாகுமரியில் தங்கி மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலா தலங்களையும் பார்வையிட்டு செல்வார்கள். இதனால் கன்னியாகுமரியில் உள்ள விடுதிகள் எப்போதும் சுற்றுலா பயணிகள் நிறைந்தே இருக்கும். இங்குள்ள புதிய பஸ் நிலையம் அருகில் 4 வழிச்சாலை முடியும் சீரோ பாயிண்ட் பகுதியில் ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது.

    இந்த விடுதியின் 4-வது மாடியில் உள்ள மேல் தளத்தில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விடுதி ஊழியர்கள் அந்த தளத்திற்கு சென்று பார்த்த போது, அங்குள்ள பூட்டிக்கிடந்த ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து தீயை அணைப்பதற்கு ஊழியர்கள் முயன்றனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. அதற்குள் காற்றின் வேகத்தில் தீ மற்ற அறைகளுக்கும் பரவியது. இதைப் பார்த்து அந்த அறைகளில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்தனர்.

    இதற்கிடையில் புகை மண்டலம் காரணமாக விடுதியின் பால்கனியில் நின்று கொண்டிருந்த ஒரு சில சுற்றுலா பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் தீ விபத்து குறித்து உடனே கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி மற்றும் நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் முதலில் தீ விபத்து ஏற்பட்ட தளத்தில் உள்ள கண்ணாடி ஜன்னல்களை உடைத்து புகையை வெளியேற்றினார்கள்.

    தீ விபத்து ஏற்பட்ட அறைக்கு பக்கத்து அறைகளில் தங்கி இருந்த 20-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளையும் புகைமண்டலத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதன்பிறகு தீப்பிடித்த அறையை உடைத்து உள்ளே சென்று தீயை அணைக்க முயன்றனர்.

    தீயை மேலும் பரவ விடாமல் பல மணி நேரம் போராடி அணைத்தனர். இருப்பினும் விடுதி அறையில் இருந்த குளிர்சாதன பெட்டி, டி.வி., கட்டில் மற்றும் அழகு சாதன பொருட்கள், திரைச் சீலை போன்றவை எரிந்து சாம்பலானது. சுமார் ரூ.10லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அறையில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருந்து தீ பிடித்து இருப்பது தெரியவந்தது. தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு கிலோ ரூ.120 ஆக குறைந்தது
    • கேரட் ரூ.70, பீன்ஸ் ரூ.90, உருளைக்கிழங்கு ரூ.35, பல்லாரி ரூ.30, கத்தரிக்காய் ரூ.50, மிளகாய் ரூ.70

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை ஏறுமுகமாக இருந்தது. தக்காளியின் உற்பத்தி குறைந்ததையடுத்து விலை உயர்ந்து காணப்பட்டது. விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டது.

    ரேஷன் கடைகள் மூல மாகவும், தக்காளி விநியோகம் செய்யப்பட்டது. குமரி மாவட்டத்திற்கு ஏற்கனவே குமரி மாவட்டம், நெல்லை மாவட்டத்தில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதமாக இங்கிருந்து தக்காளி விற்பனைக்கு வரவில்லை. பெங்களூரில் இருந்து மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளியின் விலை தினமும் ஏறுமுகமாக காணப்பட்டது.

    அப்டா மார்க்கெட் மற்றும் கனகமூலம் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளியின் விலை உயர்ந்து காணப்பட்டதையடுத்து பொதுமக்கள் தக்காளியின் பயன்பாட்டை குறைத்தனர். தற்போது தக்காளியின் வரத்து அதிகரிக்க தொடங்கி யுள்ளது. ஆரல்வாய்மொழி மற்றும் பணகுடியிலிருந்து தக்காளி விற்பனைக்காக வர தொடங்கியதையடுத்து விலை குறைய தொடங்கி யுள்ளது. ஏற்கனவே ஆரல்வாய்மொழி, பணகுடி பகுதியில் இருந்து 5 பாக்ஸ் தக்காளிகள் வந்த நிலையில் தற்போது 100 பாக்ஸ் தக்காளி விற்பனைக்கு வருகிறது. உள்ளூரில் இருந்து தக்காளிகள் வரத் தொடங்கியதால் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று 1 கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்கப்பட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியா பாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நாகர்கோவில் மார்க்கெட்டில் இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்து வருகிறது. மிளகாய், கத்தரிக்காய், கேரட், பீன்ஸ் விலை குறைந்துள்ளது. நாகர்கோவில் மார்க்கெட்டில் விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

    கேரட் ரூ.70, பீன்ஸ் ரூ.90, உருளைக்கிழங்கு ரூ.35, பல்லாரி ரூ.30, தக்காளி ரூ.120, கத்தரிக்காய் ரூ.50, மிளகாய் ரூ.70, வழுதலங்காய் ரூ.50, சேனை ரூ.70, வெள்ளரிக்காய் ரூ.30, புடலங்காய் ரூ.25, தடியங்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.30, முட்டைக்கோஸ் ரூ.30, பீட்ரூட் ரூ.50.

    ×