search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி விடுதியில் தீ விபத்து- சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்
    X

    கன்னியாகுமரி விடுதியில் தீ விபத்து- சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்

    • புகை மண்டலம் காரணமாக விடுதியின் பால்கனியில் நின்று கொண்டிருந்த ஒரு சில சுற்றுலா பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
    • தீயை மேலும் பரவ விடாமல் பல மணி நேரம் போராடி அணைத்தனர்.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாட்டினரும் கன்னியாகுமரி வந்து சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காட்சியை பார்த்து ரசிப்பது வழக்கம்.

    அவர்கள் கன்னியாகுமரியில் தங்கி மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலா தலங்களையும் பார்வையிட்டு செல்வார்கள். இதனால் கன்னியாகுமரியில் உள்ள விடுதிகள் எப்போதும் சுற்றுலா பயணிகள் நிறைந்தே இருக்கும். இங்குள்ள புதிய பஸ் நிலையம் அருகில் 4 வழிச்சாலை முடியும் சீரோ பாயிண்ட் பகுதியில் ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது.

    இந்த விடுதியின் 4-வது மாடியில் உள்ள மேல் தளத்தில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விடுதி ஊழியர்கள் அந்த தளத்திற்கு சென்று பார்த்த போது, அங்குள்ள பூட்டிக்கிடந்த ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து தீயை அணைப்பதற்கு ஊழியர்கள் முயன்றனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. அதற்குள் காற்றின் வேகத்தில் தீ மற்ற அறைகளுக்கும் பரவியது. இதைப் பார்த்து அந்த அறைகளில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்தனர்.

    இதற்கிடையில் புகை மண்டலம் காரணமாக விடுதியின் பால்கனியில் நின்று கொண்டிருந்த ஒரு சில சுற்றுலா பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் தீ விபத்து குறித்து உடனே கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி மற்றும் நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் முதலில் தீ விபத்து ஏற்பட்ட தளத்தில் உள்ள கண்ணாடி ஜன்னல்களை உடைத்து புகையை வெளியேற்றினார்கள்.

    தீ விபத்து ஏற்பட்ட அறைக்கு பக்கத்து அறைகளில் தங்கி இருந்த 20-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளையும் புகைமண்டலத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதன்பிறகு தீப்பிடித்த அறையை உடைத்து உள்ளே சென்று தீயை அணைக்க முயன்றனர்.

    தீயை மேலும் பரவ விடாமல் பல மணி நேரம் போராடி அணைத்தனர். இருப்பினும் விடுதி அறையில் இருந்த குளிர்சாதன பெட்டி, டி.வி., கட்டில் மற்றும் அழகு சாதன பொருட்கள், திரைச் சீலை போன்றவை எரிந்து சாம்பலானது. சுமார் ரூ.10லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அறையில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருந்து தீ பிடித்து இருப்பது தெரியவந்தது. தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×