என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    ஓடையை சிலர் ஆக்கிரமித்திருந்ததால் தண்ணீர் பாய்ந்தோடுவதற்கும், அறுவடை செய்த விளை பொருட்களை வெளியே கொண்டு செல்வதற்கும் சிரமமாக இருந்தது.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் பள்ளிப்பட்டு ஏரியில் இருந்து சூளாங்குறிச்சி ஏரிக்கு தண்ணீர் செல்லும் ஓடை உள்ளது. அந்த ஓடை வழியாக அதை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் அறுவடை செய்யப்படும் விளைபொருட்களை விவசாயிகள் எடுத்துச் செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் ஓடையை சிலர் ஆக்கிரமித்திருந்ததால் தண்ணீர் பாய்ந்தோடுவதற்கும், அறுவடை செய்த விளை பொருட்களை வெளியே கொண்டு செல்வதற்கும் சிரமமாக இருந்தது. எனவே ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயி மாரிமுத்து கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

    அதன்பேரில் சங்கராபுரம் வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணியை தொடங்கினர். தொடர்ந்து ரிஷிவந்தியம் வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், பள்ளிப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார், நில அளவையாளர் ஜெயவேல் மற்றும் அலுவலர்கள் அளவீடு செய்து பொக்லைன் எந்திரம் மூலம் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது, அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருநாவலூர் அருகே ஈஸ்வர கண்டநல்லூரில் கண்காணிப்பு கேமிராவை உளுந்தூர்பேட்டை போலீஸ் டி.எஸ்.பி.மகேஷ் திறந்துவைத்து பேசினார்.

    திருநாவலூர்:

    உளுந்தூர்பேட்டை உட்கோட்ட பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் சாலை விபத்து குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை குறைக்கும் பொருட்டு கிராம பகுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருநாவலூர் அருகே ஈஸ்வர கண்ட நல்லூரில் கண்காணிப்பு கேமிராவை உளுந்தூர்பேட்டை போலீஸ் டி.எஸ்.பி.மகேஷ் திறந்துவைத்து பேசினார். நிகழ்ச்சியில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி, விநாயகம், தனிப்பிரிவு தலைமை காவலர் மனோகர் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கொடுக்கல், வாங்கல் தகராறில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி செல்வி (வயது 28). அதே ஊரைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி பிரியா (42). செல்விக்கும், பிரியாவுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண விவகாரம் தொடர்பாக செல்விக்கும், பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் சம்பவத்தன்று செல்வி அதே ஊரில் உள்ள தனது உறவினர் ஒருவரது வீட்டுக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக பிரியாவை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரியா தான் வைத்திருந்த அரிவாளால் செல்வியின் இடது கையில் வெட்டினார்.

    இதில் காயமடைந்த செல்வி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து சங்கராபுரம் போலீசில் செல்வி புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் பிரியா மீது வழக்குப்பதிவு செய்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் விசாரணை நடத்தி வருகிறார்.
    முடியனூர் கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 28 ஹெக்டேர் (சுமார் 70 ஏக்கர்) பரப்பளவிலான ஏரியில் தற்போது சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகேயுள்ள டி.முடியனூர் கிராம விவசாயிகள் கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருக்கோவிலூர் அருகே உள்ள டி.முடியனூர் கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 28 ஹெக்டேர் (சுமார் 70 ஏக்கர்) பரப்பளவிலான ஏரியில் தற்போது சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதில் விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும் சிலர் ஏரிக்கரையில் வீடுகளும் கட்டி உள்ளனர். இதனால் ஏரியின் நீர்ப்பிடிப்பு அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

    எனவே மாவட்ட கலெக்டர் டி.முடியனூர் கிராமத்திலுள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியை நேரில் வந்து பார்வையிட்டு அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், ஏரியின் பல்வேறு பகுதிகளில் உள்ள முட்புதர்களையும் அகற்றி அதிக அளவு நீர் பிடிக்கும் வகையில் ஏரியை ஆழப்படுத்தி தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

    அவ்வாறு செய்வதன் மூலம் இந்த ஏரியை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் பயன்பெறுவார்கள். மேற்கண்டவாறு அந்த கோரிக்கை மனுவில் விவசாயிகள் கூறியுள்ளனர்.
    கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் ஊராட்சியில் தேசிய ஊராட்சிகள் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் ஊராட்சியில் தேசிய ஊராட்சிகள் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ந் தேதி தேசிய ஊராட்சிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. தமிழ் நாடு முதலமைச்சர் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் தன்னிறைவு பெற்ற கிராமங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் சமூக நீதியை ஏற்படுத்தவும், சாதி சமயமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சிகளும் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடையும் வகையில், வறுமை ஒழிப்பு, ஆரோக்கியமான வாழ்வு, குழந்தை நேயம், குடிநீர் வசதி, சமூகப்பாது காப்பு, சிறந்த நிர்வாகம், அடிப்படை வசதிகள், பசுமையும் தூய்மையும் மற்றும் பாலின சமத்துவம் ஆகிய 9 இலக்குகளை அடைய வேண்டும்என்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின் விருப்பத்தினை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    மேலும் ஆரோக்கியமான வாழ்வு, பசுமை மற்றும் தூய்மை கிராமம் மற்றும் பாலின சமத்துவ வளர்ச்சி ஆகிய சாரம்சங்கள் கொண்டு சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி தலைவர்களுக்கு வரும் ஆண்டில் உத்தமர் காந்தி விருது தமிழக அரசால் வழங்கப்படவுள்ளது. எனவே நீலமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் இந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி விருதினைபெற வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு பேசினார்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்து அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தில் அனைவரும் மேம்பட்ட வாழ்க்கை மற்றும் உடல்நலத்துடன் வாழ நடவடிக்கை மேற்கொள்ளுதல், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சி வளர்சிக் குழு உறுப்பினர் நியமனம் செய்தல் உள்ளிட்ட 19 தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி, வேளாண்மை இணை இயக்குனர் வேல் விழி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் ஆகியோர் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு விளக்கமாக கூறினர்.

    அப்போது உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரெத்தின மாலா, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ராதிகா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசங்கர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    நீர்த்தேக்க தொட்டியில் பயன்படுத்தப்பட்டு வீணாகும் நீர் அதே பகுதியில் பள்ளம் அமைத்து அதனை சுற்றி உரைகள் அமைக்கப்பட்டு மூடி போட்டு மூடப்பட்டிருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ.கே.டி நகர் உள்ளது. இங்கு தியாகதுருகம் சாலை அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளை கிணறு அமைத்து, மினி நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. இதனை அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் பயன்படுத்திவந்தனர்.

    இந்நிலையில் நீர்த்தேக்க தொட்டியில் பயன்படுத்தப்பட்டு வீணாகும் நீர் அதே பகுதியில் பள்ளம் அமைத்து அதனை சுற்றி உரைகள் அமைக்கப்பட்டு மூடி போட்டு மூடப்பட்டிருந்தது. ஆனால் இந்த பள்ளம் தற்போது தூர்ந்து போனதால் கழிவுநீர் செல்ல வழியின்றி மினி நீர்த்தேக்கத் தொட்டி, ஆழ்துளை கிணறு மற்றும் அதன் அருகே உள்ள கழிவு நீர் பள்ளம் ஆகிய பகுதிகளில் குளம்போல தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், கொசுக்களின் உற்பத்தி கூடாரமாக விளங்குவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்து, தூர்ந்து போன கழிவுநீர் பள்ளத்தை சரி செய்து தரவேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    தியாகதுருகத்தில் உள்ள பெரியமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த கட்டிடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் பழுதடைந்த நிலையில், மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் இருந்த கட்டிடங்கள் குறித்த விபரங்கள் கல்வித்துறை அதிகாரியிடமிருந்து பெறப்பட்டன.

    இதையொட்டி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள 42 பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டார். அதன்படி தியாகதுருகத்தில் உள்ள பெரியமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த கட்டிடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது.

    இந்த பணியை வார்டு கவுன்சிலர் சிலம்பரசன் பார்வையிட்டார். இதேபோல் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வட தொரசலூர், பல்லகச்சேரி, பிரிதிவிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ளபழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடும் அந்தோணிசாமியை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீசார் குற்றவாளியை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
    கள்ளக்குறிச்சி:

    கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி சங்கராபுரம் அருகே அருளம்பாடி கிராமத்தை சேர்ந்த பாபு என்கிற அந்தோணிசாமி என்பவர் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்யும் போது மூங்கில்துறைப்பட்டு காவல்துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சுமார் 14 கிலோ எடையுள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

    இவர் மீது ஏற்கனவே மூங்கில்துறைப்பட்டு காவல் நிலையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து இதுபோல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால் இவர் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடும் அந்தோணிசாமியை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீசார் குற்றவாளியை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
    ரிஷிவந்தியம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ரிஷிவந்தியம் காமராஜர் தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் ரிஷிவந்தியம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

    தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாபு, பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் போலீசாரின் சமாதானத்தை ஏற்கவில்லை. அப்போது சிலர் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    இதன் மூலம் 3 பெண்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் கோவில் வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை கிராம மக்கள் தொடர்ந்து நடத்தினர். இவர்களிடம் மாலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி நடத்திய பேச்சுவார்த் தையின் பேரில் கலைந்து சென்றனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மால யில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே விருகாவூரில் விவசாய நிலங்களில் இருந்து ஏரிக்கு தண்ணீர் செல்லும் ஓடையை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதில் உயர்நீதிமன்றம் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு நில அளவையர் விஜயசாந்தி தலைமையிலான வருவாய்த் துறையினரின் ஓடையை அளவீடு செய்யும் பணி நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. இதில் தனிநபர் 4 பேர் ஆக்கிரமித்து இருந்து சுமார் 500 மீட்டர் அளவிலான ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

    அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி, வருவாய் ஆய்வாளர் பாலு, கிராம நிர்வாக அலுவலர் பஞ்சமாதேவி, ஊராட்சி மன்ற தலைவர் சந்திரலேகா, ஊராட்சி செயலாளர் முத்துவேல் ஆகியோர் உடனிருந்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க வரஞ்சரம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    வேலைவாய்ப்பு முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்தனர். முகாமில் தேர்வு செய்யப்பட்ட111 பேருக்கு யூனியன் தலைவர் அலமேலு ஆறுமுகம்பணி நியமன ஆணையை வழங்கினார்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு கள்ளக்குறிச்சி யூனியன் தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொழிற்பயிற்சி, டிப்ளமோ, பட்டதாரிகள் உள்ளிட்ட 245 பேர் பங்கேற்றனர்.

    முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்தனர். முகாமில் தேர்வு செய்யப்பட்ட111 பேருக்கு யூனியன் தலைவர் அலமேலு ஆறுமுகம்பணி நியமன ஆணையை வழங்கினார்.

    அப்போது மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வாணியந்தல் ஆறுமுகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பார்வதி, ஒன்றிய கவுன்சிலர்கள் தேவராஜ், கரிகாலன், மணிவேல், வாழ்வாதார இயக்கம் மேலாளர் சதீஷ்குமார், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மனோகரன், இளநிலை உதவியாளர் ரஞ்சித்குமார், சுவாதி ஆகியோர் உடன் இருந்தனர்.
    உளுந்தூர்பேட்டை அருகே விவசாயியை யாராவது கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே பெரும்பாக்கம் காலனியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 36). விவசாய தொழிலாளி. இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு புஷ்பா குழந்தைகளை அழைத்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் நாகராஜ் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக செல்போன் மூலம் புஷ்பாவிடம் பேசி மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு நாகராஜ் அழைத்தார். ஆனால் புஷ்பா வர மறுத்துவிட்டார். இதில் நாகராஜ் மன உளைச்சலில் இருந்துவந்தார்.

    இன்று காலை நாகராஜின் வீடு திறக்கப்படாமல் இருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் ஜன்னல்வழியாக உள்ளே பார்த்தபோது நாகராஜ் வேட்டியால் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது.

    இதுகுறித்து திருநாவலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் விரைந்து வந்து நாகராஜின் உடலை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மனைவி குடும்பம் நடத்த வராததால் மனமுடைந்து நாகராஜ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

    ஆனால் நாகராஜின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் உள்ளது. எனவே அவரை யாராவது கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருநாவலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×