என் மலர்
காஞ்சிபுரம்
- ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் சாம்சங் நிறுவன தொழிற்சாலை உள்ளது.
- தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஆலை நிர்வாகம் ஈடுபடுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் சாம்சங் நிறுவன தொழிற்சாலை உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் கடந்த செப்டம்பர் மாதம் தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போராட்டம் முடிவுக்கு வந்தது. ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.
இந்த நிலையில் சாம்சங் நிறுவன ஊழியர்கள் நாளை மறுநாள்(19-ந்தேதி) ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து உள்ளனர். தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஆலை நிர்வாகம் ஈடுபடுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு திரும்பிய பெரும்பாலான தொழிலாளர்களுக்கு முந்தைய பணி வழங்கப்படவில்லை என்றும் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. மேலும் நிர்வாகத்தின் அழுத்தம் தாங்காமல் ஊழியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் சி.ஐ.டி.யூ. போராட்டம் நடத்த முடிவு எடுத்து இருப்பதாக தெரிகிறது. தொழிற்சாலைக்கு உள்ளேயே அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- கோட்டை கயப்பாக்கம் ஏரி, காட்டு கூடலூர் ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி உள்ளன.
- உக்கோட்டை, சான்டாரா சிட்டி ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
வங்கடலில் உருவான ஃபெஞ்ஜல் புயல் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டியது.
இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 377 ஏரிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 112 ஏரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் 210 ஏரிகள் என மொத்தம் 699 ஏரிகள் முழுவது நிரம்பி உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகள் என மொத்தம் 909ஏரிகள் உள்ளன. இதில் 489 ஏரிகள் முழு கொள்ளள எட்டி உள்ளது.
அனுமன் தண்டலம், இளநகர் சித்தேரி நந்திவரம் கூடுவாஞ்சேரி ஏரி, திம்மாவரம் ஏரி, ஆத்தூர் ஏரி, வில்லியம்பாக்கம், அச்சரப்பாக்கம் ஏரி, பாக்கம் ஏரி, பிள்ளை பட்டி ஏரி, மாத்தூர் ஏரி, ஓரத்தூர் ஏரி, கடமலைபதூர் ஏரி , விளங்காடு பெரிய ஏரி, உண்ணாமலை பல்லேரித்தாங்கல், பருக்கள் தாங்கள், களவேரி, பள்ளிப்பேட்டை ஏரி, அட்டுப்பட்டி கோட்டை ஏரி, புஞ்சை ஏரி, கோட்டை கரை மாம்பட்டு ஏரி, கயப்பாக்கம் கோட்டை ஏரி, சின்ன கயப்பாக்கம் ஏரி, கோட்டை கயப்பாக்கம் ஏரி, காட்டு கூடலூர் ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 581 ஏரிகள் உள்ளன. இதில் 210 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மேலும் 75 சதவீதம் 175 ஏரிகளும், 50 சதவீதம் 119 ஏரிகளும், 25 சதவீதம் 73 ஏரிகளும், 20 சதவீதம் 7 ஏரிகளும் நிரம்பி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கேசாவரம் அணைக்கட்டு திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள கேசாவரம் அணைக்கட்டு நிரம்பியதால் 5 ஷட்டர்கள் மூலம் கூவம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பேரம்பாககம், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக சென்னைக்கு செல்கிறது. இதேபோல் 100 கனஅடி தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் வகையில் உள்ள கால்வாய் வழியே செல்கிறது.
இதனால்ஏரி கரையோரம் உள்ள நேமம், படூர், குத்தம்பாக்கம், இருளப்பாளையம், உக்கோட்டை, சான்டாரா சிட்டி ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.
- 112 ஏரிகள் 25 சதவீதம் நிறைந்து உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. இதில் 416 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
248 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 132 ஏரிகள் 50 சதவீதம், 112 ஏரிகள் 25 சதவீதம் நிறைந்து உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
- சிறுவன் அவினேக் குமாரை காணவில்லை என அவரது பெற்றோர்கள் தேடி உள்ளார்.
- சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகேஷ் தாஸ்.இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பால்நல்லூர்பகுதியில் உள்ள புதியதாக கட்டி வரும் கட்டிடத்தில் வேலை செய்து வருகிறார்.
கட்டிடம் கட்டும் இடத்திற்கு அருகில் தன் குடும்பத்துடன் தங்கி முகேஷ் தாஸ் வேலை செய்து வந்தார். அவினேக் குமார் வயது 6,என்கிற மகனும், அனுகுமாரி வயது 2 என்கிற மகளும், லலிதா குமாரி என்கிற மனைவியும் உள்ளனர். நேற்று மாலை சிறுவன் அவினேக் குமாரை காணவில்லை என அவரது பெற்றோர்கள் தேடி உள்ளார்.
அப்போது முகேஷ் தாஸ் தங்கி உள்ள இடத்திற்கு அருகே அவர் வேலை செய்யும் புதிய கட்டுமான பணிக்கு தோண்டபட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் சிறுவன் மூழ்கி பேச்சு மூச்சு இல்லாமல் மிதந்து உள்ளார். அவரை மீட்டு மாத்துரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பள்ளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
- மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரகடம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. ஒரகடம்-வாலாஜாபாத் சாலையில் தொழிற்சாலைகளுக்கு ஏராளமான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் ஒரகடம் அடுத்த பண்ருட்டி கண்டிகை என்ற இடத்தில் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த பகுதியில் பள்ளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் சில உயிர் இழப்புகள் ஏற்படுகிறது.
கார் உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக வந்து பள்ளத்தை கண்டதும் திடீரென பிரேக் போடுவதால் பின்னால் வரும் வாகனம் மோதி விபத்துகள் ஏற்படுகின்றது. குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க இப்பகுதி மக்கள் பல முறை நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோபால் ராஜ், மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு பரமேஸ்வரியிடம், தகராறில் ஈடுபட்டுள்ளார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மாடம் பாக்கம், தாய்மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் கோபால் ராஜ் (33). இவர் அதே பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (26), இருவருக்கும் திருமணம் நடந்து 10 வயதில் மகனும், 6 வயதில் மகளும் உள்ளனர். கோபால்ராஜிக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு.
இந்த நிலையில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கோபால் ராஜ், மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு பரமேஸ்வரியிடம், தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர், பரமேஸ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, மணிமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
அவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார் பரமேஸ்வரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து கோபால்ராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பயணச்சீட்டு இல்லாத பயணத்தை மகளிர்க்கு வழங்குவது தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து.
- திமுகவுக்கு மகளிரின் ஆதரவு அமோகமாக இருக்கிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் தி.மு.க. மாணவரணி சார்பில் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் ஏற்பாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலையின் 108 -வது பிறந்த நாள் விழா தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் வரவேற்றார்.
விழாவில் 1131 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசினார்.
அவர் பேசியதாவது:
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் எல்லாம் தமிழகத்தை ஒவ்வொரு தேர்தலிலும் 3 முதல் 4 முறை வலம் வந்து தி.மு.க.வின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் உதயநிதி ஸ்டாலின். அதனால் தான் எதிர்க்கட்சிகள் வியந்து பார்க்கின்றன.பொறாமைப்படுகின்றன. இவரைப் போன்ற தலைவர்களால் தான் இன்றும் தி.மு.க. 75 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. பயணச்சீட்டு இல்லாத பயணத்தை மகளிர்க்கு வழங்குவது தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து. பிங்க் பஸ் என்று கூட சொல்லாமல் ஸ்டாலின் பஸ் என்று பெருமையாக சொல்கிறார்கள்.
புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம் என பெண்களின் நலனுக்கு பல புதிய, புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதை முறையாக செயல்படுத்தியும் வருவதால் வட நாட்டுப் பத்திரிக்கைகளும் பாராட்டுகின்றன. பெண்கள் எந்தப்பக்கம் இருக்கிறார்களோ அவர்களே தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள். திமுகவுக்கு மகளிரின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. புதிது, புதிதாக வருபவர்கள் தி.மு.க.வை அழிப்பேன் என்கிறார்கள். அவர்களின் கனவு ஒரு நாளும் நடக்காது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வரும், துணை முதல்வரும் நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கபட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள். வரக்கூடிய 2026 சட்ட பேரவைத் தேர்தலிலும் திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் குமார், சுகுமார், தசரதன், யுவராஜ், மலர்க்கொடி, குமார், எஸ்.கே.பி. சீனிவாசன் மற்றும் மாமன்ற மண்டலக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் பகுதி செயலாளர் திலகர் நன்றி கூறினார்.
- வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.
- வாடகைதாரர்கள் செலுத்த வேண்டிய பணம் பல கோடி ரூபாய் நிலுவையில் இருந்து வருகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பஸ்நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது. வாடகைதாரர்கள் செலுத்த வேண்டிய பணம் பல கோடி ரூபாய் நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ரவீந்திரன் உத்தரவின் படி மாநகராட்சி இணை ஆணையர் தலைமையில் அதிகாரிகள் காஞ்சிபுரம் பஸ் நிலையம் பகுதியில் ரூ.1 கோடியே 30 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்த உணவகம் உள்ளிட்ட 7 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.
- உத்தரமேரூர் தாலுகாவில் அதிகமாக மழை பெய்துள்ளது.
- 17 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.
சென்னை:
பெஞ்ஜல் புயல் மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நேற்று கரையை கடந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் மழை விட்டு விட்டு பெய்தது.
இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூர் தாலுகாவில் அதிகமாக மழை பெய்துள்ளது. மற்ற தாலுகாவில் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய மழை இல்லை.
இதுபற்றி மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறியதாவது:
பெஞ்ஜல் புயல்-பலத்த மழை சேதத்தை ஏற்படுத்தும் என கருதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. நிவாரண முகாம்கள் 30 இடங்களில் ஏற்படுத்தப்பட்டன.
இதில் நேற்றிரவு 849 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு சாப்பாடு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் 65 இடங்களில் தேங்கி நின்ற தண்ணீர் முழுமையாக வடிய வைக்கப்பட்டன. 17 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. அதையும் அப்புறப்படுத்திவிட்டோம். 5 குடிசை வீடுகள் இடிந்துள்ளது. அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்க அரசு ஏற்பாடு செய்யும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
- புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து நாளை சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- செம்மொழி சிற்ப பூங்காவை பராமரித்து பிரபலமாக்க அறிவுறுத்தினார்.
- கோயில் வளாகத்தில் 3டி அனிமேஷன் திட்டப்பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது பயணிகள் தங்கும் அறைகள், நீச்சல் குளம், கழிப்பறைகள், கட்டிடங்கள், சமையல் கூடம் மற்றும் வளாகத்தில் உள்ள செம்மொழி சிற்ப பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டார். பூங்காவை பராமரித்து பிரபலமாக்க அறிவுறுத்தினார்.

பின்னர், மாமல்லபுரத்தில் பழைய சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி, பேருந்து நிலையம் அருகே மரகத பூங்காவில், ரூ.8 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் விளக்குகள் மூலம் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணி மற்றும் 5கோடி மதிப்பீட்டில் தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் 3டி அனிமேஷன் திட்டப்பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
முன்னதாக, திருவிடந்தையில் நித்தியகல்யாண பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் 223 ஏக்கரில் "ஆன்மீக கலாச்சார பூங்கா" அமைய உள்ள இடத்தையும் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, சுற்றுலா வளர்ச்சிக் கழக இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், செங்கல்பட்டு கலெக்டர் அருண் ராஜ், சப்-கலெக்டர் நாராயண சர்மா, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், காஞ்சிபுரம் திமுக மாவட்ட பொருளாளர் விசுவநாதன், பேரூராட்சி கவுன்சிலர் மோகன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பேருந்து படியில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர்.
- தாக்குதலுக்கு உள்ளான கண்டக்டர் நாராயணசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி மாணவர்கள் பேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். அவர்களை பேருந்துக்குள் வருமாறு கண்டக்டர் கூறி உள்ளார். இதனையடுத்து அவர்கள் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து பேருந்துகளை சாலையில் நிறுத்தி டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டம் நடத்தினர். பேருந்துகளை சாலையிலேயே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான கண்டக்டர் நாராயணசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், படியில் நின்று கொண்டிருந்த மாணவர்களை பேருந்துக்குள் வருமாறு கண்டக்டர் கண்டித்ததால் தாக்குதல் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.






