என் மலர்
காஞ்சிபுரம்
- புஞ்சை அரசன் தாங்கல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 உயர்ரக மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
- செவிலிமேடு பகுதியை சேர்ந்த ஜவகர் மற்றும் 3 மாணவர்கள் என்பது தெரியவந்தது. 4 பேரும் ராணிப்பேட்டை பகுதியில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து விற்பனை செய்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் கண்காணிக்கும் பணியை மாவட்ட போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
புஞ்சை அரசன் தாங்கல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 உயர்ரக மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் செவிலிமேடு பகுதியை சேர்ந்த ஜவகர் மற்றும் 3 மாணவர்கள் என்பது தெரியவந்தது. 4 பேரும் ராணிப்பேட்டை பகுதியில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து விற்பனை செய்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் காஞ்சிபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி 57 பொட்டலங்கள் கொண்ட ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவையும், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய விலை உயர்ந்த 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்ரக 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 3 சிறுவர்களை சீர்திருத்தப் பள்ளிக்கும், ஜவகரை ஜெயிலுக்கும் அனுப்பி வைத்தனர்.
- மின்னல் வேகத்தில் வந்த லாரி ராஜேஷ் மீது பயங்கரமாக மோதியது.
- போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சுங்குவார்சத்திரம்:
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). தனியார் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சை ஓட்டி சென்றார். சுங்குவார்சத்திரம் அருகே சந்தவேலுார் என்னும் இடத்தில் பஸ் நிறுத்ததில் பயணிகள் இறங்கும் போது, டிரைவர் ராஜேஷ் வலது புறமாக சாலையில் இறங்கி உள்ளார்.
அப்போது மின்னல் வேகத்தில் வந்த லாரி ராஜேஷ் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
- மனுநீதி நாள் முகாமை முன்னிட்டு பெறப்பட்ட மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
- வில்லிவலம் நியாய விலைக்கடையை பார்வையிட்டு, வழங்கப்படும் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தார்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், வில்லிவலம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 181 பயனாளிகளுக்கு ரூ.93.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி வழங்கினார். அப்போது பேசிய அவர் மனுநீதி நாள் முகாமை முன்னிட்டு பெறப்பட்ட மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
பின்னர் வில்லிவலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு சமையல் கூடத்தை ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, உணவின் தரத்தை ஆய்வு செய்தார். பின்னர் வில்லிவலம் கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடையை பார்வையிட்டு, வழங்கப்படும் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் இருப்பு பதிவேட்டினை ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- ஏ.டி.எம். எந்திரம் பாதுகாப்பான முறையில் உள்ளதா? காவலாளிகள் பணியில் உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
- வங்கி ஏ.டி.எம்.மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரத்தின் அண்டை மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டத்தில் நள்ளிரவில் அடுத்தடுத்து தொடர்ந்து 4 ஏ.டி.எம்.களில் மர்மநபர்கள் ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின் பெயரில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் உள்ள இடங்களில் தடுப்புகள் வைத்து கண்காணித்தல், பஸ் நிலையங்களின் அருகே விடுதிகளில் சந்தேகத்திற்கிடமாக யாரேனும் தங்கி உள்ளனரா? என ரோந்து பணியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிர கண்காணிப்பு இந்த நிலையில் காஞ்சிபுரம் நகர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வங்கி ஏ.டி.எம்.மையங்களில், பெரிய காஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மேற்பார்வையில், போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஏ.டி.எம்.மையங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயங்குகிறதா? ஏ.டி.எம். எந்திரம் பாதுகாப்பான முறையில் உள்ளதா? காவலாளிகள் பணியில் உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும், அங்கு பணியில் உள்ள காவலாளிகளிடம் ஏ.டி.எம்.மையத்திற்கு பணம் எடுக்க வருபவர்களில் சந்தேகத்திற்கிடமாக யாராவது வந்தாலோ, அடிக்கடி ஒரே நபர் நோட்டம் விட்டபடி அப்பகுதியில் சுற்றித்திரிந்தாலோ உடனடியாக போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். இதேபோல் அந்தந்த போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வங்கி ஏ.டி.எம்.மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மகாபாரத பெருவிழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
- ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துக்கொண்டு தங்களின் வேண்டுதல் காணிக்கையை செலுத்தி அம்மனை வழிபட்டுச்சென்றனர்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி, திரவுபதி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் மகாபாரத பெருவிழா நடைபெறுவது வழக்கம்.
அவ்வகையில் இந்தாண்டு மகாபாரத பெருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் பல்வேறு சொற்பொழிவு நிகழ்ச்சிகள், நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிலையில் மகாபாரத பெருவிழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. அதையொட்டி பிரமாண்டமாக துரியோதனன் மண்சிலை வடிவமைக்கப்பட்டு கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன்-துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சி தத்ரூபமாக நடத்தப்பட்டது.
இதில் பீமன் வேடமணிந்த ஒருவர் துரியோதனன் சிலையின் தொடைப்பகுதியில் கதாயுதத்தால் ஓங்கி அடித்ததில் அந்த இடத்தில் இருந்து சிவப்பு நிற திரவம் வடிந்ததையடுத்து அதை திரவுபதி வேடமணிந்தவர் கூந்தலில் பூசியப்பின் துரியோதனன் சிலையை மூன்று முறை வலம் வந்து சபதம் முடிந்ததையடுத்து, அம்மனுக்கு மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.
மேலும் இந்த துரியோதனன் படுகளம் காட்சியை தீமிதி விழாவிற்காக காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துக்கொண்டு தங்களின் வேண்டுதல் காணிக்கையை செலுத்தி அம்மனை வழிபட்டுச்சென்றனர்.
மேலும் மாலை தீமிதி திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
- காரை ஓட்டி வந்த நபரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
- குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் பூபதியை காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நள்ளிரவில் 4 ஏ.டி.எம். மையங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற தொடர் கொள்ளை தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் விடுதிகளில் சோதனை, வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் மாகரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் கமலக்கண்ணன், கோபிநாத், மணிகண்டன் ஆகியோர் களக்காட்டூர் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த காரில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்கா 15 மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காரை ஓட்டி வந்த நபரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் வாலாஜாபாத் ஆறுமுகம் பேட்டையை சேர்ந்த பூபதி(வயது 34) என்பதும், குட்காவை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் பூபதியை காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தாமல் துணை மின் நிலையம் மற்றும் முசரவாக்கம் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடைப்படும்.
காஞ்சிபுரம்:
தாமல் துணை மின் நிலையம் மற்றும் முசரவாக்கம் துணைமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி பாலுசெட்டிசத்திரம், தாமல், வதியூர்
ஒழுக்கோல்பட்டு, கிளார், களத்தூர், அவளுர், பெரும்புலிபாக்கம், பொய்கைநல்லூர், ஜாகீர்தண்டலம், பனப்பாக்கம், முசரவாக்கம், முத்துவேடு, பெரும்பாக்கம், கூத்திரமேடு, திருப்புட்குழி, சிறுணை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடைப்படும் என காஞ்சிபுரம் செயற்பொறியாளர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
- படப்பை அருகே மகள் வீட்டில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மாடம்பாக்கம் சரஸ்வதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்புராம் (வயது 87). இவருடைய மனைவி காமாட்சி (84). இவர்களுக்கு பாரதி (50) என்ற மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள் பாரதியின் வீட்டில் சுப்புராம், காமாட்சி இருவரும் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாரதி தனது குடும்பத்தினருடன் ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தேவாலயத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டில் இருந்த தனது தாய், தந்தை இருவரும் பிணமாக தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
இது குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளார். புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி தூக்கில் பிணமாக தொங்கிய சுப்புராம், காமாட்சி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டில் இருந்த வயதான தம்பதி தூக்குப்போட்டு எப்படி இறந்தார்கள் காரணம் என்ன? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இருவரும் நோய்வாய் பட்டு இருந்ததாக தெரியவந்துள்ளது.
- 12 வாகனங்களுக்கு, பல்வேறு விதி மீறல்களுக்காக அபாரதமாக ரூ.93 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
- தண்ணீர் கேன் ஏற்றி சென்ற ஒரு வாகனம் சிறைபிடிக்கப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் நகரில் காஞ்சிபுரம், விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையம் அருகே காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த 12 வாகனங்களுக்கு, பல்வேறு விதி மீறல்களுக்காக அபாரதமாக ரூ.93 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் தகுதி சான்று இல்லாத தண்ணீர் கேன் ஏற்றி சென்ற ஒரு வாகனம் சிறைபிடிக்கப்பட்டு விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
- தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இந்த பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி உள்ளனர்.
- பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரகடம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மாத்தூர் ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இந்த பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் ஊராட்சியில் நீர்நிலைகள் உள்ள பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நீர்நிலை பகுதிகள் மாசடைந்து வருகிறது.
கொட்டப்படும் குப்பைகளை கால்நடைகள் தின்று பாதிப்படைந்து வருகிறது. எனவே நீர்நிலை பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற ஊரக வளர்ச்சி துறை, ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய வட்டார வளர்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடலில் மீன்பிடிப்பதில் தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இந்தியா- இலங்கை நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்தில் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
- காதலர் தினத்தன்று பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என கூறிய விலங்குகள் நல வாரியம் ஒரு தன்னிச்சையான அமைப்பு.
ஆலந்தூர்:
இலங்கை, யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோர் 3 நாள் சுற்றுப்பயணமாக இலங்கைக்கு சென்று இருந்தனர்.
அவர்கள் இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை சிறையில் நேற்றைய தினம் வரை தமிழக மீனவர்கள் யாரும் இல்லை. மீனவர்களின் படகுகளை விடுவிக்கும் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து ஏற்கனவே பேசி உள்ளோம்.
கடலில் மீன்பிடிப்பதில் தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இந்தியா- இலங்கை நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்தில் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இரண்டு நாடுகளும் முன்வைத்துள்ள சில முக்கிய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். காதலர் தினத்தன்று பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என கூறிய விலங்குகள் நல வாரியம் ஒரு தன்னிச்சையான அமைப்பு. பசுக்களை அரவணைக்கும் நோக்கில் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகா பெரியவரின் உருவச்சிலைக்கு அணிவிக்கும் வகையில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகையை காணிக்கையாக வழங்கி இருக்கிறார்கள்.
- உருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேகமும், வைரக்கல் பதித்த தங்ககவசமும் அணிவித்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர் திருஉருவச் சிலைக்கு வெளி நாட்டு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய வைரக்கல் பதித்த தங்க கை காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் கூறியதாவது:-
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி யாக உள்ள ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தற்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முகாமிட்டுள்ளார். இவரது ஜெயந்தி உற்சவம் வருகிற 16-ந்தேதி தொடங்கி வரும் 18-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த 3 நாட்களும் வேதபாராயணம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், நாம சங்கீர்த்தனம், இன்னிசைக் கச்சேரிகள் ஆகியன சங்கர மடத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற உள்ளது. வருகிற 18-ந் தேதி விஜயேந்திரரின் பிறந்த நாளும் அதே நாளில் சிவராத்திரி விழாவும் சங்கர மடத்தில் கொண்டாடப்படுகிறது.
அன்றைய நாளில் சங்கர மடத்தின் வெளிநாட்டு பக்தர்கள் பலரும் ஒன்றிணைந்து மகா பெரியவரின் உருவச்சிலைக்கு அணிவிக்கும் வகையில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகையை காணிக்கையாக வழங்கி இருக்கிறார்கள்.
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆதிசங்கரர் சந்நிதியில் இருந்து வைரக்கை பக்தர்களால் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சங்கர மடத்துக்கு வந்து சேரும்.
இதன் பின்னர் சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் மகாபெரியவர் உருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேகமும், வைரக்கல் பதித்த தங்ககவசமும் அணிவித்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறும்.
விஜயேந்திரர் ஜெயந்தி நாளன்று அவர் முகாமிட்டுள்ள விசாகப்பட்டினத்திலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.






