என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
    • ஆற்றில் கரை புரண்டு வெள்ளம் சென்றாலும் தண்ணீர் செல்லும் வகையில் 240 சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் பாலாற்றின் குறுக்கே வாகன போக்குவரத்துக்கு வசதியாக, 25 ஆண்டுகளுக்கு முன் தரை மட்ட பாலம் கட்டப்பட்டது.

    இந்த பாலத்தின் வழியாக காஞ்சிபுரத்தில் இருந்து, பிரமதேசம், ஆற்காடு, வேலுார் போன்ற பகுதிகளுக்கு பஸ் இயங்கி வருகிறது.

    மேலும் இந்த ஆற்றுக்கு மறுகரையில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட எல்லை தொடங்குகிறது.

    அதிகளவில் வட இலுப்பை, செய்யனுார், பேட்டை, பட்டரை, சித்தனகால், சீவரம், சிறுநாவல்பட்டு, பிரமதேசம், நாட்டேரி, கல்பாக்கம், தென்னம்பட்டு, புத்தனுார், ஐவர்தாங்கல் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். வடகிழக்கு பருவ மழையின் போது பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தற்காலிகமாக அங்கு மண் சாலை அமைக்கப்பட்டது.

    இந்த மண்சாலை மழைக்காலத்தில் தாக்கு பிடிக்காது என்பதால் இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் புதிய தரைமட்ட பாலம் 4 கோடி ரூபாய் செலவில் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    ஆற்றில் கரை புரண்டு வெள்ளம் சென்றாலும் தண்ணீர் செல்லும் வகையில் 240 சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட உள்ளது.

    இதன் மூலம் ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது தண்ணீர் பிரிந்து செல்லும், பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்து உள்ளனர்.

    • வருகிற 24-ந் தேதி காமாட்சி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
    • கோவிலை சுற்றி உள்ள பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த நிலையில் சன்னிதி தெருவில், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக, பல கடைகள் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டு இருந்தன. இதனால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

    கோவிலை சுற்றியுள்ள சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, அவ்வப்போது அதிகாரிகள் அகற்றினாலும் மீண்டும் பழைய நிலையே காணப்படுகிறது. வருகிற 24-ந் தேதி காமாட்சி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து கோவிலை சுற்றி உள்ள பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மாநகராட்சி கமிஷனர் கண்ணன் உத்த ரவுப்படி சன்னிதி தெருவில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டு இருந்த சுமார் 25 கடைகள் அகற்றப்பட்டன.

    இதேபோல் வடக்கு மாட வீதியில் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மீண்டும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வாலிபர்கள் இருவரும் கடையிலேயே கேக்கை சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் இருவருக்கும் வாந்தி, வயிற்று வலி, மயக்கம் ஏற்பட்டது.
    • அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜேஷ், சக்திவேலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த ஏகனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் (18), சக்திவேல் (20). இவர்கள் இருவரும் தங்களது சித்தி மகளின் பிறந்தநாளுக்காக கருக்குப்பேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள பேக்கரி கடையில் கேக் வாங்கி இருந்தனர்.

    அவர்கள் பிறந்தநாள் விழாவை உற்சாகத்துடன் கொண்டாடி கேக்கை வெட்ட முயன்றனர். அப்போது வெட்ட முடியாத அளவுக்கு கேக் மிகவும் கடினமாக இருந்ததாக தெரிகிறது.

    இதையடுத்து ராஜேசும், சக்திவேலும் அந்த கேக்கை எடுத்துக்கொண்டு பேக்கரி கடைக்கு சென்று இது குறித்து அங்கிருந்த ஊழியரிடம் தெரிவித்தனர்.

    ஆனால் பேக்கரி கடை ஊழியர்கள் கேக் நன்றாக உள்ளது. இப்போதே நீங்கள் கேக்கை சாப்பிடலாம் என்று கூறினர்.

    இதையடுத்து ராஜேசும், சக்திவேலும் கடையிலேயே அந்த கேக்கை சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் இருவருக்கும் வாந்தி, வயிற்று வலி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜேஷ், சக்திவேலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கெட்டுப்போன கேக்கை சாப்பிட்டதால் அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானத்தில் என்ஜினீயரிங் மாணவர் ஒருவர் பயணம் செய்தார்.
    • என்ஜினீயரிங் மாணவர் விமானத்தில் உள்ள அவசர கால கதவை திறக்க முயன்றார்.

    ஆலந்தூர்:

    விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அவசர கால கதவை திறக்க முயற்சி செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானத்தில் பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா விமானத்தின் அவசர கதவை திறந்து சர்ச்சையில் சிக்கினார். இதே போல் மேலும் சில சம்பவங்கள் நடந்தன.

    இதைத் தொடர்ந்து விமானத்தின் அவசர கதவு தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியது. அத்துமீறலில் ஈடுபடும் பயணிகள் மீது விமான நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் அவசர கதவை தொட்ட மாணவர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானத்தில் என்ஜினீயரிங் மாணவர் ஒருவர் பயணம் செய்தார். அவர் விமானத்தில் உள்ள அவசர கால கதவை திறக்க முயன்றார்.

    இதனை கவனித்த விமான பணிப்பெண்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் இதுபற்றி விமான கேப்டனிடமும் தெரிவித்தனர்.

    இதையடுத்து விமானம் டெல்லியில் தரையிறங்கியதும் மாணவரின் செயல் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் என்ஜினீயரிங் மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இது தொடர்பாக அந்த மாணவர் கூறும்போது, "நான் விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயற்சி செய்யவில்லை. அதன் கைப்பிடியை தொட்டுப் பார்த்தேன்" என்றார்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, "விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயன்றதாக மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். மாணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. ஆனால் மாணவர் கைது செய்யப்படவில்லை" என்றனர்.

    • சாலை தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரகடம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 26). இவர் சொந்தமாக சோலார் பேனல் தொடர்பான வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் ஒரகடம் அடுத்த தாழம்பட்டு பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலை தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஹரிகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். அங்கு இருந்தவர்கள் இதுகுறித்து ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஹரிகிருஷ்ணன் சிறிது நேரத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பள்ளியின் அருகே அபாயகரமான சாலை வளைவில் சிக்னல் இல்லாமலும் எந்தவிதமான எச்சரிக்கை பலகை வைக்கப்படாமல் தடுப்புச்சுவர் உள்ளதாகவும் இதனால் விபத்து நேர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1100 ஆண்டுக்கு முன்பே மிகச்சிறந்த ஊராட்சி நிர்வாக முறை இருந்து இருப்பது கல்வெட்டில் கண்டறியப்பட்டுள்ளது.
    • நிர்வாகத்தின் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன் தங்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்து உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் கிராமத்தில் வைகுண்டநாதர் பெருமாள் கோவில் உள்ளது. இது 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் 1100 ஆண்டுக்கு முன்பே மிகச்சிறந்த ஊராட்சி நிர்வாக முறை இருந்தது பதிவு செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மரியாதை நிமித்த வாக்கியமான "பெருமக்கள்" என வாரிய பொறுப்பாளரை அழைத்து உள்ளனர். அவர்கள் நிர்வாகத்தின் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன் தங்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்த தகவலும் உள்ளது. இது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

    இதுகுறித்து வரலாற்று ஆராய்ச்சியாளர் அஜய்குமார் என்பவர் கூறியதாவது:-

    1100 ஆண்டுக்கு முன்பே மிகச்சிறந்த ஊராட்சி நிர்வாக முறை இருந்து இருப்பது கல்வெட்டில் கண்டறியப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன் தங்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்து உள்ளனர். இந்த செய்தி கோவிலில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அதுமட்டுமல்லாது, இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஒருவரின் பதவிக்காலம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு முறை தேர்வு செய்யப்படுபவர் மறுமுறை மீண்டும் போட்டியிட முடியாது. மேலும் வாரியம் செய்வோர் பிற ஊர்களுக்கும் சென்று வாரியம் செய்த செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏரி வாரியம், சம் வத்சர ஆண்டு வாரியம் என இரண்டு வாரியங்கள் செயல்பட்டு வந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வாரியப் பெருமக்கள் கணக்கு காட்ட வேண்டும் என்றும், வாரியப் பணிகளை செய்யாமல் இருத்தல் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    விண்ணபுரத்து பெருங்குறி சபையார் சீர்குட்டி அம்பலத்தில் கூடி வாரியஞ்செய்பவரை தேர்ந்தெடுப்பர் என்றும், அவருக்கு 2 கழஞ்சு பொன் அதாவது 10 கிராம் தங்க நகை ஊதியமாக வழங்கி, அவர்கள் லஞ்சம் லாவண்ணியத்தில் சிக்காதவாறு வருமானத்தை அளித்து வந்ததும் உள்ளது.

    10-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பார்த்தி வேந்திராதிபதி மற்றும் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டுக்கள் இந்த கோவிலில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புஞ்சை அரசன் தாங்கல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 உயர்ரக மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
    • செவிலிமேடு பகுதியை சேர்ந்த ஜவகர் மற்றும் 3 மாணவர்கள் என்பது தெரியவந்தது. 4 பேரும் ராணிப்பேட்டை பகுதியில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து விற்பனை செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் கண்காணிக்கும் பணியை மாவட்ட போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    புஞ்சை அரசன் தாங்கல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 உயர்ரக மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் செவிலிமேடு பகுதியை சேர்ந்த ஜவகர் மற்றும் 3 மாணவர்கள் என்பது தெரியவந்தது. 4 பேரும் ராணிப்பேட்டை பகுதியில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து விற்பனை செய்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர்களிடம் காஞ்சிபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி 57 பொட்டலங்கள் கொண்ட ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவையும், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய விலை உயர்ந்த 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்ரக 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 3 சிறுவர்களை சீர்திருத்தப் பள்ளிக்கும், ஜவகரை ஜெயிலுக்கும் அனுப்பி வைத்தனர்.

    • மின்னல் வேகத்தில் வந்த லாரி ராஜேஷ் மீது பயங்கரமாக மோதியது.
    • போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    சுங்குவார்சத்திரம்:

    திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). தனியார் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சை ஓட்டி சென்றார். சுங்குவார்சத்திரம் அருகே சந்தவேலுார் என்னும் இடத்தில் பஸ் நிறுத்ததில் பயணிகள் இறங்கும் போது, டிரைவர் ராஜேஷ் வலது புறமாக சாலையில் இறங்கி உள்ளார்.

    அப்போது மின்னல் வேகத்தில் வந்த லாரி ராஜேஷ் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • மனுநீதி நாள் முகாமை முன்னிட்டு பெறப்பட்ட மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
    • வில்லிவலம் நியாய விலைக்கடையை பார்வையிட்டு, வழங்கப்படும் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தார்

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், வில்லிவலம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 181 பயனாளிகளுக்கு ரூ.93.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி வழங்கினார். அப்போது பேசிய அவர் மனுநீதி நாள் முகாமை முன்னிட்டு பெறப்பட்ட மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

    பின்னர் வில்லிவலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு சமையல் கூடத்தை ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, உணவின் தரத்தை ஆய்வு செய்தார். பின்னர் வில்லிவலம் கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடையை பார்வையிட்டு, வழங்கப்படும் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் இருப்பு பதிவேட்டினை ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • ஏ.டி.எம். எந்திரம் பாதுகாப்பான முறையில் உள்ளதா? காவலாளிகள் பணியில் உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
    • வங்கி ஏ.டி.எம்.மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காஞ்சிபுரத்தின் அண்டை மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டத்தில் நள்ளிரவில் அடுத்தடுத்து தொடர்ந்து 4 ஏ.டி.எம்.களில் மர்மநபர்கள் ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின் பெயரில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் உள்ள இடங்களில் தடுப்புகள் வைத்து கண்காணித்தல், பஸ் நிலையங்களின் அருகே விடுதிகளில் சந்தேகத்திற்கிடமாக யாரேனும் தங்கி உள்ளனரா? என ரோந்து பணியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தீவிர கண்காணிப்பு இந்த நிலையில் காஞ்சிபுரம் நகர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வங்கி ஏ.டி.எம்.மையங்களில், பெரிய காஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மேற்பார்வையில், போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஏ.டி.எம்.மையங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயங்குகிறதா? ஏ.டி.எம். எந்திரம் பாதுகாப்பான முறையில் உள்ளதா? காவலாளிகள் பணியில் உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    மேலும், அங்கு பணியில் உள்ள காவலாளிகளிடம் ஏ.டி.எம்.மையத்திற்கு பணம் எடுக்க வருபவர்களில் சந்தேகத்திற்கிடமாக யாராவது வந்தாலோ, அடிக்கடி ஒரே நபர் நோட்டம் விட்டபடி அப்பகுதியில் சுற்றித்திரிந்தாலோ உடனடியாக போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். இதேபோல் அந்தந்த போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வங்கி ஏ.டி.எம்.மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மகாபாரத பெருவிழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துக்கொண்டு தங்களின் வேண்டுதல் காணிக்கையை செலுத்தி அம்மனை வழிபட்டுச்சென்றனர்.

    காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி, திரவுபதி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் மகாபாரத பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அவ்வகையில் இந்தாண்டு மகாபாரத பெருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் பல்வேறு சொற்பொழிவு நிகழ்ச்சிகள், நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்நிலையில் மகாபாரத பெருவிழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. அதையொட்டி பிரமாண்டமாக துரியோதனன் மண்சிலை வடிவமைக்கப்பட்டு கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன்-துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சி தத்ரூபமாக நடத்தப்பட்டது.

    இதில் பீமன் வேடமணிந்த ஒருவர் துரியோதனன் சிலையின் தொடைப்பகுதியில் கதாயுதத்தால் ஓங்கி அடித்ததில் அந்த இடத்தில் இருந்து சிவப்பு நிற திரவம் வடிந்ததையடுத்து அதை திரவுபதி வேடமணிந்தவர் கூந்தலில் பூசியப்பின் துரியோதனன் சிலையை மூன்று முறை வலம் வந்து சபதம் முடிந்ததையடுத்து, அம்மனுக்கு மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.

    மேலும் இந்த துரியோதனன் படுகளம் காட்சியை தீமிதி விழாவிற்காக காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துக்கொண்டு தங்களின் வேண்டுதல் காணிக்கையை செலுத்தி அம்மனை வழிபட்டுச்சென்றனர்.

    மேலும் மாலை தீமிதி திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    • காரை ஓட்டி வந்த நபரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
    • குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் பூபதியை காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நள்ளிரவில் 4 ஏ.டி.எம். மையங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற தொடர் கொள்ளை தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் விடுதிகளில் சோதனை, வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    அதன் அடிப்படையில் மாகரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் கமலக்கண்ணன், கோபிநாத், மணிகண்டன் ஆகியோர் களக்காட்டூர் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த காரில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்கா 15 மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காரை ஓட்டி வந்த நபரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் வாலாஜாபாத் ஆறுமுகம் பேட்டையை சேர்ந்த பூபதி(வயது 34) என்பதும், குட்காவை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் பூபதியை காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×