search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காஞ்சிபுரம் அருகே கல்வெட்டில் தகவல்: 1100 ஆண்டுக்கு முன்பே சொத்து கணக்கு- ஆராய்ச்சியாளர்கள் வியப்பு
    X

    காஞ்சிபுரம் அருகே கல்வெட்டில் தகவல்: 1100 ஆண்டுக்கு முன்பே சொத்து கணக்கு- ஆராய்ச்சியாளர்கள் வியப்பு

    • 1100 ஆண்டுக்கு முன்பே மிகச்சிறந்த ஊராட்சி நிர்வாக முறை இருந்து இருப்பது கல்வெட்டில் கண்டறியப்பட்டுள்ளது.
    • நிர்வாகத்தின் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன் தங்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்து உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் கிராமத்தில் வைகுண்டநாதர் பெருமாள் கோவில் உள்ளது. இது 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் 1100 ஆண்டுக்கு முன்பே மிகச்சிறந்த ஊராட்சி நிர்வாக முறை இருந்தது பதிவு செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மரியாதை நிமித்த வாக்கியமான "பெருமக்கள்" என வாரிய பொறுப்பாளரை அழைத்து உள்ளனர். அவர்கள் நிர்வாகத்தின் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன் தங்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்த தகவலும் உள்ளது. இது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

    இதுகுறித்து வரலாற்று ஆராய்ச்சியாளர் அஜய்குமார் என்பவர் கூறியதாவது:-

    1100 ஆண்டுக்கு முன்பே மிகச்சிறந்த ஊராட்சி நிர்வாக முறை இருந்து இருப்பது கல்வெட்டில் கண்டறியப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன் தங்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்து உள்ளனர். இந்த செய்தி கோவிலில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அதுமட்டுமல்லாது, இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஒருவரின் பதவிக்காலம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு முறை தேர்வு செய்யப்படுபவர் மறுமுறை மீண்டும் போட்டியிட முடியாது. மேலும் வாரியம் செய்வோர் பிற ஊர்களுக்கும் சென்று வாரியம் செய்த செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏரி வாரியம், சம் வத்சர ஆண்டு வாரியம் என இரண்டு வாரியங்கள் செயல்பட்டு வந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வாரியப் பெருமக்கள் கணக்கு காட்ட வேண்டும் என்றும், வாரியப் பணிகளை செய்யாமல் இருத்தல் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    விண்ணபுரத்து பெருங்குறி சபையார் சீர்குட்டி அம்பலத்தில் கூடி வாரியஞ்செய்பவரை தேர்ந்தெடுப்பர் என்றும், அவருக்கு 2 கழஞ்சு பொன் அதாவது 10 கிராம் தங்க நகை ஊதியமாக வழங்கி, அவர்கள் லஞ்சம் லாவண்ணியத்தில் சிக்காதவாறு வருமானத்தை அளித்து வந்ததும் உள்ளது.

    10-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பார்த்தி வேந்திராதிபதி மற்றும் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டுக்கள் இந்த கோவிலில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×