என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • 6-ந்தேதி தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.
    • 8-ந்தேதி விஸ்வரூப தரசனம் நடக்கிறது.

    காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 25-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நாள்தோறும் காமாட்சி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காலை மாலை வேளைகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

    7-ம் நாள் விழா உற்சவத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் ரோஸ் நிற பட்டு உடுத்தி மனோரஞ்சிதம் மல்லி உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு யாகசாலையில் அருகே எழுந்தருளினார்.

    8-ம் நாள் விழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. லட்சுமி சரஸ்வதி தேவியருடன் காமாட்சி அம்பிகையும் இணைந்து தேரில் மங்கள மேள வாத்தியங்களுடன் காஞ்சீபுரம் ராஜவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தபடியே காஞ்சீபுரம் சங்கர மடத்தில் எழுந்தருளினார்.

    மடத்தின் வாயிலில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் தேரில் கோவிலுக்கு எழுந்தருளினார்.

    இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    10-ம் நாள் விழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெள்ளித்தேரோட்டம் நடக்கிறது. இதில் வெள்ளித் தேரில் காமாட்சி அம்மன் பவனி வருகிறார். இது காணக்கிடைக்காத கண்கொள்ளாக் காட்சியாகும். வருகிற 6-ந்தேதி தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. 7-ந் தேதி அம்மன் தங்க காமகோடி விமானத்தில் பவனி வருகிறார். 8-ந் தேதி காலையில் விஸ்வரூப தரசனம் நடக்கிறது. இரவு விடையாற்று உற்சவத்தோடு விழா நிறைவு பெறுகிறது.

    • எல்லப்பா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் மனோகரன் இவரது மகன் விக்னேஸ்வர்.
    • காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், எல்லப்பா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் மனோகரன் இவரது மகன் விக்னேஸ்வர் (33). இவர் பட்டுசேலை வியாபாரம் செய்து வந்தார். இந்ந நிலையில் பட்டுசேலை வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் இருந்த கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், விக்னேஸ்வரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 10.5 சதவீதம் வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வன்னியர் மக்கள் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
    • 1000-க்கும் மேற்பட்ட வன்னியர் மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வன்னியர் மக்கள் கட்சி சார்பில் 10.5 சதவீத வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த கோரி காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தை வன்னியர் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சக்தி படையாட்சி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    வன்னியர் மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் நாயகர் முன்னிலையில் அமைப்பு செயலாளர் குணசேகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கன்னியப்பன் வரவேற்று பேசினார். திருபெருமந்தூர் தொகுதி செயலாளர் பூபாலன், மாநில தொண்டர் அணி செயலாளர் முரளி, மாநில துணை தலைவர் ராஜா, தலைமை நிலைய செயலாளர் ராமலிங்கம், கொள்கை பரப்பு செயலாளர் கண்ணன், தமிழ்நாடு விவசாய அணி பொது செயலாளர் திருக்குறள் ஆறுமுகம், தமிழ்நாடு வன்னியர் பேரவையின் மாநில தலைவர் ஐயப்பன், பொது செயலாளர் ஆனந்த், தமிழ் பத்திரிகையாளர்கள் சங்க பொது செயலாளர் கண்ணன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சுகந்த், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் சம்பத், மத்திய மாவட்ட தலைவர் கண்ணன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் தாமோதரன், அருண்குமார், மணிகண்டன், ஹரிகரன், சூர்யா, அஜித்குமார், இளையா, சுந்தரி, ராஜேஸ்வரி சதீஷ்குமார், ஹரிஹரன், சக்தி, சதீஷ், ரவிச்சந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    10.5 சதவீதம் வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வன்னியர் மக்கள் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    இதில் 1000-க்கும் மேற்பட்ட வன்னியர் மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

    • கெருகம்பாக்கம் பகுதியில் மறைத்து வைத்திருக்கும் மோட்டார் சைக்கிளை அவர் காண்பித்து கொண்டிருந்த போது திடீரென போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச்சென்றார்.
    • கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் தப்பி சென்றதால் போலீசார் அவரை தேடி வந்தனர்.

    மாங்காடு:

    மாங்காடு போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் ஒருவர் தனது குடும்பத்துடன் முகலிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த மாதம் அவரது வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இது குறித்து அவர் மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தண்டலம், மணிமேடு, பெரியார் தெருவை சேர்ந்த விஷ்ணு (21), என்பவர் சப்- இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

    கடந்த மாதம் விஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்வதற்காக அவர் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படும் இடத்திற்கு அழைத்து சென்றனர். கெருகம்பாக்கம் பகுதியில் மறைத்து வைத்திருக்கும் மோட்டார் சைக்கிளை அவர் காண்பித்து கொண்டிருந்த போது திடீரென போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச்சென்றார். இதனை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் அவனை விரட்டி பிடிக்க முயன்றனர்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் தப்பி சென்றதால் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர் திருவண்ணாமலையில் பதுங்கியிருப்பதாக மாங்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் அங்கு பதுங்கியிருந்த விஷ்ணுவை மடக்கி பிடித்து கைது செய்தனர்

    • புதிய விமான நிலையத்திற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
    • புதிய விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இந்த புதிய விமான நிலையத்திற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலானவை விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் என்பதால் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களும் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏகனாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலைய அறிவிப்பு வந்தது முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். புதிய விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் பிரபல சமூக ஆர்வலர் மேதா பட்கர் ஏகனாபுரம் கிராமத்திற்கு வந்து அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க திட்டமிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து ஏகனாபுரம் பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏகனாபுரம் கிராமத்திற்கு செல்லும் அனைத்து பாதைகளில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து உள்ளனர். புதிய விமான நிலைய எதிர்ப்பாளர்களை கண்காணித்து வருகிறார்கள். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • பழங்குடியினர் இன மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்காக இணையதளம் திறக்கப்பட்டுள்ளது.
    • மாணவர்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    பழங்குடியினர் இன மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்காக இணையதளம் (https://tnadtwscholarship.tn.gov.in) திறக்கப்பட்டுள்ளது.

    அனைத்து வகை கல்லூரிகளில் படிக்கும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை இணையவழியில் விண்ணப்பிக்கப்பட்டதை சம்பந்தப்பட்ட கல்லூரி பொறுப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அதே போல் மாணவர்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • காஞ்சிபுரத்துக்கு சுற்றுலா வருபவர்கள் கோவில்களை பார்த்து விட்டு நெசவு பட்டுச்சேலைகள் வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டுவார்கள்.
    • போக்குவரத்து புதிய விதி மீறல்களால் ஏற்படும் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கோவில்கள் நிறைந்த ஆன்மிக சுற்றுலா தலமாகவும், பட்டுச்சேலைக்கு பிரபலமானதாகவும் திகழ்கிறது. இங்குள்ள காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், அத்திவரதர் உற்சவம் பிரசித்தி பெற்றது.

    இதனால் காஞ்சிபுரத்திற்கு சுற்றுலாவாக தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். அவர்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்து விட்டு பட்டுச்சேலைகள் வாங்கிச் செல்வது வழக்கம். இதன் காரணமாக காஞ்சிபுரம் நகரில் தினந்தோறும் லட்சக்கணக்கான வியாபாரம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சுற்றுலா வேன், பஸ்கள் நகருக்குள் வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பஸ், வேன்களில் வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சுமார் 2 கி.மீட்டர் தூரத்திற்கு முன்பே நிறுத்தி விட்டு நடந்து வரும் நிலை உள்ளது.

    தற்போது வெயில் அதிகரித்து வரும் நிலையில் மதியம் நேரங்களில் கொளுத்தும் வெயிலில் சுற்றுலா பயணிகள் சிரமத்துடன் நடந்து செல்கிறார்கள்.

    இதில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் நிலைமை மோசமாக உள்ளது.

    மேலும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள ஒவ்வொரு கோவில்களுக்கும் நடந்து செல்லும் நிலை உள்ளதால் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் பட்டுச்சேலை வாங்கி செல்ல விரும்புவார்கள். தற்போது உள்ள போக்குவரத்து புதிய விதியால் பட்டுச்சேலை கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டு இருப்பதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது, இந்த புதிய போக்குவரத்து விதிமுறையால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரத்துக்கு சுற்றுலா வருபவர்கள் கோவில்களை பார்த்து விட்டு நெசவு பட்டுச்சேலைகள் வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது பட்டுச்சேலை கடைகளுக்கு சுற்றுலா பயணிகள் வருகை எண்ணிக்கை குறைந்து உள்ளது.

    அவர்கள் கார் அல்லது ஆட்டோவை கூடுதலாக வாடகைக்கு எடுத்து செல்லும் நிலை உள்ளது. இதனால் நகருக்குள் மேலும் போக்குவர்தது நெரிசல் அதிகம் ஆகும்.

    சுற்றுலா பயணிகள் காஞ்சிபுரத்தை தேர்வு செய்து வர இனி தயங்குவார்கள். போக்குவரத்து புதிய விதி மீறல்களால் ஏற்படும் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'காஞ்சிபுரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளது' என்றார்.

    சுற்றுலா பயணிகள் கூறும்போது, 'காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றுலா பயணிகளை பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படியானால் தான் காஞ்சிபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும், வியாபாரமும் பாதிக்காது' என்றார்.

    • மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் நாளை மின்தடை.
    • மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் மாருதி நகர், ஐயப்பா நகர், மணவாளன் நகர், கற்பகம் அவென்யூ, பாக்கியம் நகர், திருமூர்த்தி நகர், சாம்ராஜ் நகர் 8-வது தெரு மற்றும் அனைத்து பகுதிகள், மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காஞ்சிபுரத்தில் உள்ள திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில் கோடைக்கால இலவச சமயபயிற்சி வகுப்பு.
    • பயிற்சி வகுப்பில் சைவ சித்தாந்த நூல்கள் விரிவாக பயிற்றுவிக்கப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில் கோடைக்கால இலவச சமயபயிற்சி வகுப்பு வருகிற மே மாதம் 4-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த பயிற்சி வகுப்பில் சைவ சித்தாந்த நூல்கள் விரிவாக பயிற்றுவிக்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்களுக்கு வயது வரம்பு 70-க்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்கான விண்ணப்பத்தினை காஞ்சிபுரம், பங்காரம்மன் தோட்டத்தில் உள்ள அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் 24-ந்தேதிக்குள் வந்து சேரவேண்டும். இந்த தகவலை அறக்கட்டளை நிறுவனர் சதாசிவம் தெரிவித்து உள்ளார்.

    • படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா, ஆனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன. இவரது மகன் அருண்குமார் (வயது 25). மாற்றுத்திறனாளி. எலெக்ட்ரிகல் வேலை செய்து வந்தார்.

    இவர் கடந்த 21-ந்தேதி ஆனம்பாக்கத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்வதற்காக உத்திரமேரூர் சாலையில் தன்னுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேகமான மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    மேல்பேரமநல்லூர் அருகே சாலை வளைவில் திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அருண்குமார் சிசிக்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது.
    • கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் போன்ற காரணங்களால் இந்த நோய் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கால்நடைகளில் ஏற்படும் தொற்று நோயான கால் மற்றும் வாய்நோய் எனப்படும் கோமாரி நோய் மூலம் விவசாயிகளுக்கு கால்நடைகளில் இறப்பும் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. மேலும், பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளில் எடைகுறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. பெரும்பான்மையான கால்நடை உரிமையாளர்கள் சிறு குறு விவசாயிகளாக உள்ளதால், கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தாங்க இயலாத நிலையில் உள்ளனர்.

    எனவே, கால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது.

    மேலும், இந்த நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள் சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் போன்ற காரணங்களால் இந்த நோய் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. மேலும், இந்நோய்பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் போன்றவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.

    எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்து 69 ஆயிரத்து 200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் 3-ம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணி வருகிற 1-ந்தேதி முதல் 21-ந்தேதி முடிய 21 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

    எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் போன்றவற்றுக்கு கால் மற்றும் வாய்கோமாரி நோய் தடுப்பூசி தவறாது போட்டு கொள்ளுங்கள்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 2 இலங்கை வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
    • துணிகளுக்கு அடியில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    மீனம்பாக்கம்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 2 இலங்கை வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் இருவரும் தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    அதேபோல் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த 2 பேரின் உடைமைகளை சந்தேகத்தின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது துணிகளுக்கு அடியில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

    இந்த நிலையில் விமான நிலைய பன்னாட்டு வருகை பகுதியில் இருந்த விமான நிறுவன ஊழியர் ஒருவர், திடீரென புறப்பாடு பகுதியில் வெளியேற முயற்சிப்பதை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டனர். அந்த ஊழியரிடம் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரை சோதனை செய்தனர்.

    அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். வெளிநாடுகளில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்த ஆசாமி, சுங்க இலாகா அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க தங்கத்தை விமான நிறுவன ஊழியரிடம் கொடுத்து அதனை விமான நிலையத்துக்கு வெளியே கொண்டு வந்து கொடுக்கும்படி கூறியது தெரிந்தது.

    சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் மொத்தம் ரூ.2 கோடியே 16 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தங்கம் கடத்தல் ஆசாமிகளுக்கு உதவிய விமான நிறுவன ஊழியர் உள்பட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×