என் மலர்
காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
- வைர வளையல் உடனடியாக காமாட்சி அம்மனுக்கு சாற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிலில் தரிசனம் செய்ய தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
தற்போது மாசி மக பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. தினந்தோறும் காலை,மாலை இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் காமாட்சி அம்மன், லட்சுமி-சரஸ்வதியுடன் 4 ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.இந்தநிலையில் கோவில் மூலவரான காமாட்சி அம்மனுக்கு மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் அஜய் கிருஷ்ணமூர்த்தி என்பவர் 26 வைர கற்கள் பதித்த ஒரு ஜோடி வளையல்களை காணிக்கையாக வழங்கி உள்ளார். இதனை அவரது சார்பில் சென்னையைச் சேர்ந்த ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் நடராஜன் கோவில் அர்ச்சகர் சுந்தரேசனிடம் வழங்கினார். இந்த வைர வளையல் உடனடியாக காமாட்சி அம்மனுக்கு சாற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
- மாசிமக தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று காலை மாமல்லபுரம் கடற்கரையில் நடந்தது.
- முன்னதாக நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய ஆட்டம் பாட்டத்துடன் விழா தொடர்ந்து நடைபெற்றது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வடபகுதியில் மாசி மக விழாவை இருளர்கள் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான இருளர்கள் குடும்பத்துடன் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் குவிந்து உள்ளனர். அவர்கள் குடில் அமைத்து தங்கி இருக்கிறார்கள். நேற்று நடைபெற்ற விழாவின்போது சுமார் 25-க்கும் மேற்பட்ட ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர். அவர்களது பாரம்பரிய வழிபாடும் நடைபெற்றது.
இன்று காலை மாசிமக தீர்த்தவாரி நிகழ்ச்சி மாமல்லபுரம் கடற்கரையில் நடந்தது. முன்னதாக நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய ஆட்டம் பாட்டத்துடன் விழா தொடர்ந்து நடைபெற்றது.
இந்தநிலையில் வாலிபர் ஒருவர் கையில் மாலையுடன் புது மாப்பிள்ளை கோலத்தில் கடற்கரையில் இறந்து கிடப்பதாக தகவல் பரவியது. இதனால் அங்கு குவிந்து இருந்த இருளர்கள் மத்தியில் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து விசாரித்தபோது அது இருளர்கள் பற்றிய குறும்படத்திற்காக எடுக்கப்பட்ட படப்பிடிப்பு என்பதும், அதை தத்ரூபமாக எடுப்பதற்காக டிரோன் கேமரா வைத்து படப்பிடிப்பு நடத்தியதும் தெரிந்தது.
இதையடுத்து படப்பிடிப்பு நடத்தியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.
- ழைகாலத்தில் தண்ணீர் செல்லாதவாறு கோவிலில் உண்டியல்களை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
காஞ்சிபுரம்:
பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவில் பஞ்ச பூத தலங்களில் மண் தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்கள் காணிக்கையை செலுத்த உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இவை 3 மாதத்துக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. அப்போது 3 உண்டியல்களில் கடந்த வடகிழக்கு பருவ மழையின் போது மழைநீர் தேங்கியதால் அதில் இருந்த ரூபாய் நோட்டுகள் சேதம் அடைந்து இருந்தன.
பல ரூ.500 மற்றும் ரூ.100 ரூபாய் நோட்டுகள் முழுவதும் தண்ணீரில் நனைந்து நாசமாகி இருந்தன. இதனை அறிந்து பக்தர்கள் வேதனை அடைந்து உள்ளனர். மழைகாலத்தில் தண்ணீர் செல்லாதவாறு கோவிலில் உண்டியல்களை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- இந்த ஆண்டு ஜனவரியில் 3.40 லட்சம் கிலோ சரக்குகள் மட்டுமே கையாளப்பட்டுள்ளன.
- மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்வது மிகப்பெரும் அளவு குறைந்துவிட்டது.
மீனம்பாக்கம் :
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு சரக்கக முனையம், தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களின் சரக்குகளையும் கையாண்டு வருகிறது.
சென்னை விமான நிலைய சரக்ககத்தில் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 2 கோடியே 35 லட்சத்து 93 ஆயிரம் கிலோ சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 2 கோடியே 57 லட்சத்து 78 ஆயிரம் கிலோ சரக்குகள் கையாளப்பட்டு இருந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜனவரியில் சென்னை விமான நிலைய சரக்கரகத்தில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு 21 லட்சத்து 85 ஆயிரம் கிலோ குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களில் உள்ள பன்னாட்டு சரக்கங்களிலும் கடந்த ஆண்டு ஜனவரியை விட இந்த ஆண்டு ஜனவரியில் சரக்குகள் கையாளப்பட்ட அளவு குறைந்துள்ளது.
கோவை விமான நிலைய பன்னாட்டு சரக்ககத்தில் கடந்த ஆண்டு ஜனவரியில் 6.22 லட்சம் கிலோ சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் 3.40 லட்சம் கிலோ சரக்குகள் மட்டுமே கையாளப்பட்டுள்ளன.
இது பற்றி சென்னை விமான நிலைய பன்னாட்டு சரக்கக அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை விமான நிலைய சரக்ககத்தில் ஒவ்வொரு மாதமும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது சகஜம். இந்த கையாளப்பட்ட சரக்குகளில் இறக்குமதி செய்யப்படும் சரக்குகளின் அளவு தான் குறைந்துள்ளது. ஏற்றுமதி சரக்குகள் அதே நிலையில் தான் இருக்கிறது. தற்போது நாம் சொந்தமாக பொருட்களை பெருமளவு உற்பத்தி செய்யப்படுவதால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிக்காக காத்திருக்கவில்லை. மிக முக்கியமாக 2022-ம் ஆண்டு கொரோனா 3-ம் அலை பெருமளவு தாக்கம் இருந்தது. அந்த நேரத்தில் மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு கொண்டு இருந்தன. அதில் உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் முக்கிய பங்கு வகித்தது.
ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதால் வெளிநாடுகளில் இருந்து மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்வது மிகப்பெரும் அளவு குறைந்துவிட்டது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஜனவரியில் சென்னை உள்பட தமிழ்நாட்டில் உள்ள விமான நிலைய சரக்ககங்களில் இறக்குமதி சரக்குகள் கையாளப்பட்டது குறைவுக்கு இதுதான் காரணம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- காஞ்சிபுரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த சிறு காவேரிப்பாக்கம், ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 48). தொழிலாளி. இவருக்கு முதுகு தண்டுவடத்தில் அதிகவலி இருந்து வந்ததால் 3 ஆண்டுகளுக்கு முன்னர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்த பிறகும் முதுகு தண்டுவட வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் வலியை தாங்கமுடியாமல் இருந்து வந்த ஜானகிராமன் மனமுடைந்து அரளி விதையை அரைத்து மதுவில் கலந்து குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு ஜானகிராமனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து உயிரிழந்த ஜானகிராமன் மகன் பூவரசன் கொடுத்த புகாரின் பேரில் பாலுச்செட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்தன.
- தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் அருகே மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 21 வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன. இதில் 2 சிலிண்டர்கள் வெடித்து சிதறியது, 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் தீயில் எரிந்து சேதமாகின. தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்தன. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் மக்களுக்கு நல திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
- தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
துரித மின் இணைப்பு 2022-2023-ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தில் மின் மோட்டார் குதிரை திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மானியத்தில் ஆதிதிராவிடர்களுக்கு 900 எண்ணிக்கையும், பழங்குடியினருக்கு 100 எண்ணிக்கையில் மொத்தம் 1,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். முன்னுரிமை அளிக்கப்படும் மேலும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்ட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.
துரித மின் இணைப்பு திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.25 ஆயிரமும், 7.5 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.27 ஆயிரத்து 500-ம், 10 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.3 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.30 ஆயிரமும், 15 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.4 லட்சத்துக்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.40 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலை அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும். கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீதம் பயனாளி பங்குத்தொகையுடன் புதிதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், 'அ' பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைபடம், சர்வே எண், மின்வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல் மற்றும் புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு தாட்கோ, காஞ்சிபுரம், மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காமாட்சி அம்மனை வழிநெடுக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- தேரோட்டத்தையொடடி சுமார் 30 நிமிடம் கண்கவரும் வாணவேடிக்கை நடைபெற்றது.
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் எராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
இதையொட்டி 9-ம் நாள் விழாவாக நேற்று இரவு வெள்ளித்தேரோட்டம் விமரிசையாக நடை பெற்றது. பச்சை நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், பல்வேறு மலர் அலங்காரத்தில் காமாட்சி அம்மன், லட்சுமி-சரஸ்வதி உடன் வெள்ளித்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் மேள தாளங்கள் முழங்க வேத பாராயண பாடலுடன் காஞ்சீபுரம் நகரின் ராஜ வீதிகளில் தேர் வலம் வந்தது.
ராஜ வீதிகளில் வலம் வந்த காமாட்சி அம்மனை வழிநெடுக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொடடி கச்சபேஸ்வரர் கோவில் அருகே சுமார் 30 நிமிடம் கண்கவரும் வாணவேடிக்கை நடைபெற்றது. இதனை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
- பயிற்சியாளர் முருகேசன் திடீரென கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கற்பழிக்க முயன்றாக தெரிகிறது.
- அனைத்து மகளிர் போலீசார் கற்பழிப்பு முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு கால்பந்து, ஆக்கி, தடகளம், கூடைப்பந்து, வாலிபால், நீச்சல் உள்ளிட்டவற்றுக்கு பயிற்சி மைதானங்கள் உள்ளது.
இங்கு தினமும் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி ஒருவர் ஸ்குவாஷ் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் பயிற்சி முடித்த கல்லூரி மாணவி தனக்கு அளிக்க வேண்டிய சான்றிதழ் தொடர்பாக பயிற்சியாளரான முருகேசன் என்பவரிடம் கேட்டார்.
அப்போது, சான்றிதழ் விளையாட்டு அரங்கம் அருகே உள்ள தனது வீட்டில் உள்ளதாகவும், அதை அங்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறும் மாணவியிடம் பயிற்சியாளர் முருகேசன் கூறினார். இதைத்தொடர்ந்து மாணவி பயிற்சியாளரின் வீட்டுக்கு சென்றார். அப்போது தனிமையில் இருந்த பயிற்சியாளர் முருகேசன் திடீரென கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கற்பழிக்க முயன்றாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவரிடம் இருந்து தப்பிக்க வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார்.
அங்கிருந்து தப்பிய மாணவி இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி பயிற்சியாளர் முருகேசனை கைது செய்தனர்.
அவர் மீது அனைத்து மகளிர் போலீசார் கற்பழிப்பு முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
கைதான பயிற்சியாளர் முருகேசன் மீது ஏற்கனவே ரெயில்வே சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்காலிக பயிற்சியாளர் பணியில் இருந்து மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிடை நீக்கம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
- வீட்டு வேலைகளை செய்யாமல் இருந்ததால் மாணவியை பாட்டி சுமதி திட்டியதாக கூறப்படுகிறது.
- மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த சாலவான் குப்பம் பகுதியை சேர்ந்தவர் தாஸ். இவரது மகள் பிரியங்கா (வயது15). அப்பகுதியில் உள்ள பாட்டி சுமதியின் வீட்டில் தங்கி இருந்து நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டு வேலைகளை செய்யாமல் இருந்ததால் மாணவி பிரியங்காவை பாட்டி சுமதி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரியங்கா வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த வயலூர் கிராமம், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 24). இவர் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் வழக்கம்போல் சரவணன் பணியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
தலையில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த சரவணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மாகரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளி கல்லூரி, மாணவர்கள் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
- படப்பை, செரப்பணஞ்சேரி பகுதியில் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
படப்பை:
படப்பை, கரசங்கால் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக வண்டலூர் - வாலாஜாபாத் செல்லும் 6 வழி சாலை வரதராஜபுரம், கரசங்கால், படப்பை வழியாக செல்கிறது. இந்த சாலையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலை பகுதியில் முக்கிய இடமாக மணிமங்கலம் கரசங்கால், ஸ்ரீபெரும்புதூர் செல்லும் பகுதி உள்ளது. இங்கு பள்ளி கல்லூரி, மாணவர்கள் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதேபோல் படப்பை, செரப்பணஞ்சேரி பகுதியில் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்த இடங்களில் சிக்னல் அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுக்கவும் காலை, மாலை நேரங்களில் அதிவேகமாக வரும் லாரிகளால் விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும் போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு துறை போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
அப்படியே சாலையை கடக்க முற்பட்டால் விபத்து ஏற்படுகிறது. ஒரு சில நேரங்களில் உயிர் பலியும் ஏற்படுகிறது. எனவே கரசங்கால், படப்பை, செரப்பணஞ்சேரி பகுதிகளில் போக்குவரத்து போலீசாரை பணியில் ஈடுபடுத்தவும் இந்த 2 பகுதிகளிலும் சிக்னல் அமைக்கவும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






