ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து துரித மின் இணைப்பு வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து துரித மின் இணைப்பு வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

துரித மின் இணைப்பு 2022-2023-ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தில் மின் மோட்டார் குதிரை திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மானியத்தில் ஆதிதிராவிடர்களுக்கு 900 எண்ணிக்கையும், பழங்குடியினருக்கு 100 எண்ணிக்கையில் மொத்தம் 1,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். முன்னுரிமை அளிக்கப்படும் மேலும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்ட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.

துரித மின் இணைப்பு திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.25 ஆயிரமும், 7.5 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.27 ஆயிரத்து 500-ம், 10 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.3 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.30 ஆயிரமும், 15 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.4 லட்சத்துக்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.40 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலை அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும். கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீதம் பயனாளி பங்குத்தொகையுடன் புதிதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், 'அ' பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைபடம், சர்வே எண், மின்வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல் மற்றும் புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு தாட்கோ, காஞ்சிபுரம், மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com