என் மலர்
காஞ்சிபுரம்
- பெருமாளுக்கு காப்பு கட்டி நடத்தப்படும் உற்சவங்களில் இதுவும் ஒன்று.
- 18-ந்தேதி அன்று உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சி நடைபெறும்.
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதவிழா 8 நாட்கள் நடைபெறும். பெருமாளுக்கு காப்பு கட்டி நடத்தப்படும் உற்சவங்களில் இதுவும் ஒன்று. தற்போது தொடங்கியுள்ள இந்த உற்சவத்தில் நாளை பல்லவ உற்சவம் நடைபெற உள்ளது.
இதையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருள்வார். அங்கு பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம் நடக்கும். அஸ்திரி மகாத்மிய புராணத்தை பெருமாள் முன் வாசிப்பார்கள்.
பெருமாள் எப்படி அவதரித்தார் என்கின்ற அவதாரப் பகுதி வாசிக்கும் பொழுது, பெருமாள் ஏராளமான அலங்காரங்களுடன் காட்சி தருவார். பெருமாள் புறப்பாடும் உண்டு.
வாய்ப்பு உள்ளவர்கள் ஒரு நாளாவது காஞ்சீபுரம் சென்று இந்த உற்சவத்தில் பங்கு கொண்டால் நன்மைகளைப் பெறுவார்கள். வருகிற 18-ந்தேதி அன்று உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சி நடைபெறும்.
- லாரி டிரைவர், உதவியாளர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், சுமை இறக்கும் தொழிலாளர்கள் என 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
- காஞ்சிபுரம் தமிழ்நாடு வாணிபக் கழக டாஸ்மாக் குடோன் முன்பு ஒரு மணி நேரத்துக்கு மேலாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் அரசு டாஸ்மாக் குடோன் உள்ளது. மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து எடுத்து வரப்படும் மதுபான பாட்டில்கள் இங்கிருந்து வாகனங்கள் மூலம் அரசு மதுபானக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
காஞ்சிபுரம் கிழக்கு பகுதியில் மட்டும் சுமார் 110 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதில் படப்பை, வாலாஜாபாத், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகளில் மதுபானங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த டாஸ்மாக் குடோனில் இருந்து பொருட்களை ஏற்றி செல்ல 15 ஆண்டுகளாக உள்ளூர் நிறுவனம் ஏலம் எடுத்து நடத்தி வந்தது. இந்த ஆண்டு வேறு ஒரு வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் இன்று முதல் வேலை இருக்காது என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் லாரி டிரைவர், உதவியாளர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், சுமை இறக்கும் தொழிலாளர்கள் என 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். திடீரென்று வேறு நிறுவனத்துக்கு டெண்டர் மாறியது காரணமாக பணி வழங்கப்படாது என நினைத்து காஞ்சிபுரம் தமிழ்நாடு வாணிபக் கழக டாஸ்மாக் குடோன் முன்பு ஒரு மணி நேரத்துக்கு மேலாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த டாஸ்மாக் அதிகாரிகள் இன்று அவர்களுக்கு வழக்கம் போல் வேலை வழங்கியதால் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
- காஞ்சிபுரம் நகருக்குள் சுற்றுலா பஸ்கள் மற்றும் வேன்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
- காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சர்வ தீர்த்த குளம் அருகில் நிறுத்தப்பட்டன.
காஞ்சிபுரம்:
சுற்றுலா நகரமான காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர், கைலாசநாதர், வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன் உள்ளிட்ட 11 பழமையான கோவில்கள் உள்ளன. இங்கு பஸ் மற்றும் வேன்களில் சுற்றுலா வரும் பயணிகள் கோவில்களை சுற்றிப்பார்த்து விட்டு பஸ் நிலையம் அருகே காந்தி சாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் பட்டுச்சேலைகளை எடுத்துச் செல்வது வழக்கம்.
இங்கு வார நாட்களில் 10 முதல் 15 பஸ்களிலும், வார இறுதி நாட்களில் சுமார் 40 பஸ்களிலும் பயணிகள் சுற்றுலா வருவார்கள். இதனால் காஞ்சிபுரத்தில் சுற்றுலா களைகட்டி வந்தது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் கலெக்டர் மா.ஆர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் தற்காலிகமாக புதிய போக்குவரத்து ஒழுங்கு முறையை அமல்படுத்தினர்.
இதையடுத்து காஞ்சிபுரம் நகருக்குள் சுற்றுலா பஸ்கள் மற்றும் வேன்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அவை காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சர்வ தீர்த்த குளம் அருகில் நிறுத்தப்பட்டன. அங்கு பஸ்களை நிறுத்த ரூ.300 கட்டணமும், வேன்களுக்கு ரூ.150 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களுக்கு நடந்தோ அல்லது ஆட்டோக்களிலோ மட்டுமே செல்ல முடிகிறது. ஆட்டோக்களில் கட்டணம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தற்போது கோடைகாலம் மற்றும் பள்ளிகளில் விடுமுறை தொடங்க இருப்பதால் ஏராளமானோர் காஞ்சிபுரம் நகருக்கு சுற்றுலா செல்வார்கள். ஆனால் சுற்றுலா பஸ்கள் நகருக்குள் அனுமதிக்கப்படாததால் சுற்றுலா செல்ல பயணிகள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
இதனால் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:-
சுற்றுலா பஸ்கள் மற்றும் வேன்களை காஞ்சிபுரம் நகருக்குள் அனுமதிக்காததால் பயணிகள் பல இடங்களுக்கு நடந்து செல்ல வேண்டி இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வரும் பயணிகள் பலர் வயதானவர்களாக உள்ளனர். எனவே அவர்கள் நடக்க சிரமப்படுகின்றனர்.
மேலும் இங்கு சாலையோரம் உள்ள பிளாட்பாரங்களிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. எனவே சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக ஆக்கிரமிப்பு இல்லாத சாலைகளை உருவாக்கி கொடுக்க வேண்டும். சுற்றுலா செல்வதற்கு ஏற்ற நகரமாக காஞ்சிபுரத்தை மாற்ற சாலைகளை விரிவுப்படுத்த வேண்டும். சீரான போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்ற காஞ்சிபுரம் நகரில் வளர்ச்சி திட்டங்களை உருவாக்க வேண்டும். அதன் மூலம் காஞ்சிபுரம் சுற்றுலா நகராக வளர்ச்சி அமையும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- சரியான நேரத்தில் ரோந்து போலீசார் வந்ததால் ஏ.டி.எம்.மையத்தில் இருந்த பணம் தப்பியது.
- வாலாஜாபாத் அருகே மீண்டும் ஏ.டி.எம். எந்திரத்தை மர்மகும்பல் உடைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
வாலாஜாபாத் அருகே உள்ள திம்மராஜம் பேட்டையில் காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு ஏ.டி.எம்.மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் எந்திரத்தை கடப்பாரையால் உடைத்தனர்.
அந்த நேரத்தில் அவ்வழியே ரோந்து போலீசார் வந்தனர். உடனே கொள்ளைகும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். சந்தேகம் அடைந்த போலீசார் ஏ.டி.எம்.மையத்துக்குள் சென்று பார்த்தபோது எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், டி.எஸ்.பி. ஜூலியட் சீசர் மற்றும் போலீசார்விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
சரியான நேரத்தில் ரோந்து போலீசார் வந்ததால் ஏ.டி.எம்.மையத்தில் இருந்த பணம் தப்பியது. கொள்ளைகும்பலை பிடிக்க போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த ஏ.டி.எம். கொள்ளை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாலாஜாபாத் அருகே மீண்டும் ஏ.டி.எம். எந்திரத்தை மர்மகும்பல் உடைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 13 ஆயிரத்து 917 மாணவ- மாணவிகள் எழுத உள்ளனர் என்று கண்காணிப்பு அலுவலர் கண்ணப்பன் தெரிவித்தார்.
- மாணவர்கள் தேர்வை நேர்மையாக எழுத 100-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
தமிழகம் முழுவதும் இன்னும் சில தினங்களில் மேல்நிலை வகுப்புகள் மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ள தேர்வுகளுக்கான மைய முதன்மை கண்காணிப்பாளர் துறை அலுவலர்கள் வினாத்தாள் மையக்கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் வழித்தட அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வழிகாட்டுதல் கூட்டம் காஞ்சிபுரம் அந்தரசன் மேல்நிலை பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
இதில் அரசு பாடநூல் கழக உறுப்பினரும், செயலாளருமான காஞ்சிபுரம் மாவட்ட பொது தேர்வு கண்காணிப்பு அலுவலர் கண்ணப்பன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில்:-
தேர்வுகள் எந்தவித புகார்களுக்கும் இடமின்றி சிறப்பான முறையில் நடத்திடவும் மாணவர்கள் மகிழ்ச்சியான முறையில் தேர்வு எழுத தேவையான பாதுகாப்பான தேர்வு அறைகள், தளவாட பொருட்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் தேர்வு மையங்களுக்கு எடுத்து செல்லப்படும் வினாத்தாள்கள் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லுதல் மற்றும் தேர்வு விதிகளை அனைத்து அலுவலர்களும் முறையாக கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பொது தேர்வுகள் புகார்கள் இன்றி நடைபெறும் அளவில் ஏற்பாடுகளும், மாணவர்கள் தேர்வுகளை அச்சமின்றி எழுதும் வகையில் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்கள் தேர்வை நேர்மையாக எழுத 100-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 8 தேர்வு மையங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 13 ஆயிரத்து 114 மாணவ -மாணவியர்களும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 13 ஆயிரத்து 917 மாணவ மாணவியர்களும் எழுத உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- வழக்கு விசாரணை பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
- கார்த்திக் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
பொன்னேரி:
பொன்னேரி, தண்டபாணி தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியில் ஏலச்சீட்டு நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.
அப்போது, கார்த்திக் ரூ.4 கோடியே 75 லட்சத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் கார்த்திக் போலீசாரிடம் சிக்கவில்லை.
இதற்கிடையே இது தொடர்பான வழக்கு விசாரணை பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆனால் கார்த்திக் ஆஜராகாமல் இருந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு கோர்ட்டு பிடி வாரண்டு பிறப்பித்தது.
இந்நிலையில் 4 ஆண்டுக்கு பிறகு கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு உள்ளது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.
- காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
- வைர வளையல் உடனடியாக காமாட்சி அம்மனுக்கு சாற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிலில் தரிசனம் செய்ய தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
தற்போது மாசி மக பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. தினந்தோறும் காலை,மாலை இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் காமாட்சி அம்மன், லட்சுமி-சரஸ்வதியுடன் 4 ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.இந்தநிலையில் கோவில் மூலவரான காமாட்சி அம்மனுக்கு மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் அஜய் கிருஷ்ணமூர்த்தி என்பவர் 26 வைர கற்கள் பதித்த ஒரு ஜோடி வளையல்களை காணிக்கையாக வழங்கி உள்ளார். இதனை அவரது சார்பில் சென்னையைச் சேர்ந்த ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் நடராஜன் கோவில் அர்ச்சகர் சுந்தரேசனிடம் வழங்கினார். இந்த வைர வளையல் உடனடியாக காமாட்சி அம்மனுக்கு சாற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
- மாசிமக தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று காலை மாமல்லபுரம் கடற்கரையில் நடந்தது.
- முன்னதாக நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய ஆட்டம் பாட்டத்துடன் விழா தொடர்ந்து நடைபெற்றது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வடபகுதியில் மாசி மக விழாவை இருளர்கள் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான இருளர்கள் குடும்பத்துடன் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் குவிந்து உள்ளனர். அவர்கள் குடில் அமைத்து தங்கி இருக்கிறார்கள். நேற்று நடைபெற்ற விழாவின்போது சுமார் 25-க்கும் மேற்பட்ட ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர். அவர்களது பாரம்பரிய வழிபாடும் நடைபெற்றது.
இன்று காலை மாசிமக தீர்த்தவாரி நிகழ்ச்சி மாமல்லபுரம் கடற்கரையில் நடந்தது. முன்னதாக நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய ஆட்டம் பாட்டத்துடன் விழா தொடர்ந்து நடைபெற்றது.
இந்தநிலையில் வாலிபர் ஒருவர் கையில் மாலையுடன் புது மாப்பிள்ளை கோலத்தில் கடற்கரையில் இறந்து கிடப்பதாக தகவல் பரவியது. இதனால் அங்கு குவிந்து இருந்த இருளர்கள் மத்தியில் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து விசாரித்தபோது அது இருளர்கள் பற்றிய குறும்படத்திற்காக எடுக்கப்பட்ட படப்பிடிப்பு என்பதும், அதை தத்ரூபமாக எடுப்பதற்காக டிரோன் கேமரா வைத்து படப்பிடிப்பு நடத்தியதும் தெரிந்தது.
இதையடுத்து படப்பிடிப்பு நடத்தியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.
- ழைகாலத்தில் தண்ணீர் செல்லாதவாறு கோவிலில் உண்டியல்களை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
காஞ்சிபுரம்:
பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவில் பஞ்ச பூத தலங்களில் மண் தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்கள் காணிக்கையை செலுத்த உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இவை 3 மாதத்துக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. அப்போது 3 உண்டியல்களில் கடந்த வடகிழக்கு பருவ மழையின் போது மழைநீர் தேங்கியதால் அதில் இருந்த ரூபாய் நோட்டுகள் சேதம் அடைந்து இருந்தன.
பல ரூ.500 மற்றும் ரூ.100 ரூபாய் நோட்டுகள் முழுவதும் தண்ணீரில் நனைந்து நாசமாகி இருந்தன. இதனை அறிந்து பக்தர்கள் வேதனை அடைந்து உள்ளனர். மழைகாலத்தில் தண்ணீர் செல்லாதவாறு கோவிலில் உண்டியல்களை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- இந்த ஆண்டு ஜனவரியில் 3.40 லட்சம் கிலோ சரக்குகள் மட்டுமே கையாளப்பட்டுள்ளன.
- மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்வது மிகப்பெரும் அளவு குறைந்துவிட்டது.
மீனம்பாக்கம் :
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு சரக்கக முனையம், தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களின் சரக்குகளையும் கையாண்டு வருகிறது.
சென்னை விமான நிலைய சரக்ககத்தில் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 2 கோடியே 35 லட்சத்து 93 ஆயிரம் கிலோ சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 2 கோடியே 57 லட்சத்து 78 ஆயிரம் கிலோ சரக்குகள் கையாளப்பட்டு இருந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜனவரியில் சென்னை விமான நிலைய சரக்கரகத்தில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு 21 லட்சத்து 85 ஆயிரம் கிலோ குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களில் உள்ள பன்னாட்டு சரக்கங்களிலும் கடந்த ஆண்டு ஜனவரியை விட இந்த ஆண்டு ஜனவரியில் சரக்குகள் கையாளப்பட்ட அளவு குறைந்துள்ளது.
கோவை விமான நிலைய பன்னாட்டு சரக்ககத்தில் கடந்த ஆண்டு ஜனவரியில் 6.22 லட்சம் கிலோ சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் 3.40 லட்சம் கிலோ சரக்குகள் மட்டுமே கையாளப்பட்டுள்ளன.
இது பற்றி சென்னை விமான நிலைய பன்னாட்டு சரக்கக அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை விமான நிலைய சரக்ககத்தில் ஒவ்வொரு மாதமும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது சகஜம். இந்த கையாளப்பட்ட சரக்குகளில் இறக்குமதி செய்யப்படும் சரக்குகளின் அளவு தான் குறைந்துள்ளது. ஏற்றுமதி சரக்குகள் அதே நிலையில் தான் இருக்கிறது. தற்போது நாம் சொந்தமாக பொருட்களை பெருமளவு உற்பத்தி செய்யப்படுவதால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிக்காக காத்திருக்கவில்லை. மிக முக்கியமாக 2022-ம் ஆண்டு கொரோனா 3-ம் அலை பெருமளவு தாக்கம் இருந்தது. அந்த நேரத்தில் மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு கொண்டு இருந்தன. அதில் உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் முக்கிய பங்கு வகித்தது.
ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதால் வெளிநாடுகளில் இருந்து மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்வது மிகப்பெரும் அளவு குறைந்துவிட்டது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஜனவரியில் சென்னை உள்பட தமிழ்நாட்டில் உள்ள விமான நிலைய சரக்ககங்களில் இறக்குமதி சரக்குகள் கையாளப்பட்டது குறைவுக்கு இதுதான் காரணம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- காஞ்சிபுரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த சிறு காவேரிப்பாக்கம், ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 48). தொழிலாளி. இவருக்கு முதுகு தண்டுவடத்தில் அதிகவலி இருந்து வந்ததால் 3 ஆண்டுகளுக்கு முன்னர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்த பிறகும் முதுகு தண்டுவட வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் வலியை தாங்கமுடியாமல் இருந்து வந்த ஜானகிராமன் மனமுடைந்து அரளி விதையை அரைத்து மதுவில் கலந்து குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு ஜானகிராமனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து உயிரிழந்த ஜானகிராமன் மகன் பூவரசன் கொடுத்த புகாரின் பேரில் பாலுச்செட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்தன.
- தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் அருகே மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 21 வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன. இதில் 2 சிலிண்டர்கள் வெடித்து சிதறியது, 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் தீயில் எரிந்து சேதமாகின. தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்தன. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் மக்களுக்கு நல திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






