என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
    • நாளை காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரிக்கு வந்து வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்

    காஞ்சிபுரம்:

    படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இணைந்து காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நாளை (17-3-2023) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.

    இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முகத் தேர்வினை நடத்த உள்ளனர். அதேசமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

    18 வயது முதல் 35 வயது வரை உள்ள வேலைநாடுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் நாளை (17-3-2023) காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறும், இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 044-27237124 என்ற தொலைபேசி எண் வாயிலாக கேட்டறிந்து பயன்பெறுமாறும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    • ஜெயந்தன் மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • ஜெயந்தனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    சோமங்கலம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வரதராஜபுரம் ராயப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் லிங்ககுமார். இவருடைய வீட்டில் இவருடைய மருமகன் ஜெயந்தன் (வயது 20) தங்கியிருந்து செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் ஜெயந்தன் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெயந்தன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயந்தனின் தாய், தந்தை இருவரும் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில் மாமாவின் வீட்டில் வசித்து வந்ததாகவும், ஒரு தலை காதலால் இந்த சம்பவம் நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவிக்கு உதவுவதற்காக தனியார் பள்ளி ஆசிரியரான ஜெகன்நாத் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
    • தேர்வு எழுதிக் கொண்டு இருந்தபோது ஆசிரியர் ஜெகன்நாத், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6091 மாணவர்கள், 7023 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 114 பேர் 53 மையங்களில் தேர்வு எழுதினர். மாற்றுத்திறனாளி மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடந்தது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே திருப்புட் குழி அரசு மேல் நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் முசரவாக்கம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் தேர்வு எழுத வந்தார். அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. மாணவிக்கு உதவுவதற்காக தனியார் பள்ளி ஆசிரியரான ஜெகன்நாத் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.

    தேர்வு எழுதிக் கொண்டு இருந்தபோது ஆசிரியர் ஜெகன்நாத், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் இதுபற்றி மாணவி அப்போது மற்ற ஆசிரியர்களிடம் தெரிவிக்கவில்லை.

    தேர்வு முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவி பள்ளியில் தனக்கு நேர்ந்தது குறித்து பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியபோது மாணவிக்கு ஆசிரியர் ஜெகன்நாத் தேர்வு எழுத உதவியபோது பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து ஆசிரியர் ஜெகன்நாத்தை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • சரவணன் குழந்தைகள் லாவண்யா மற்றும் புவனேஷை தனது மனைவி வீட்டாரிடம் விட்டுவிட்டு சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.
    • திடீரென மாட்டுவண்டியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் லாவண்யாவின் தலைமுடி சிக்கி வேகமாக சுற்றியது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் காண்டீபன். இவரது மனைவி லதா. இவர்கள் தங்களுடைய 3-வது மகள் காஞ்சனாவை சென்னையை சேர்ந்த கூலிதொழிலாளி சரவணன் என்பவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொடுத்தனர்.

    இவர்களது மகள் லாவண்யா (13). மகன் புவனேஷ் (9). இந்த நிலையில் காஞ்சனா குடும்பத்தகராறு காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சரவணன் குழந்தைகள் லாவண்யா மற்றும் புவனேஷை தனது மனைவி வீட்டாரிடம் விட்டுவிட்டு சென்னையில் பணிபுரிந்து வருகிறார். தாத்தா, பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வந்த லாவண்யா 7-ம் வகுப்பும், புவனேஷ் 4-ம் வகுப்பும் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விச்சாதாங்கலில் உள்ள அங்காளம்மன் கோவிலில் கடைசி நாள் விழா நடைபெற்றது. அன்று இரவு சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதற்கென மாட்டு வண்டியில் சாமி அலங்கரிக்கப்பட்டு வண்ண, வண்ண மின்விளக்குகள் பொருத்தப்பட்டு அவை ஒளிர்வதற்கென மினி ஜென்ரேட்டர் வைக்கப்பட்டு சாமி புறப்பாடானது மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது.

    அப்போது லாவண்யா மாட்டுவண்டியில் அமர்ந்து இருந்தார். திடீரென மாட்டுவண்டியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் லாவண்யாவின் தலைமுடி சிக்கி வேகமாக சுற்றியது. சிறுமி கதறி துடித்தாள். கதறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அனைவரும் உடனடியாக ஜெனரேட்டரின் இயக்கத்தை நிறுத்தி சிறுமி லாவண்யாவை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி லாவண்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விமானத்தில் இருந்த பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
    • விமான பணிப்பெண்களும் விமான ஊழியர்களும் அவசர கால ஒலி எழுந்தது குறித்து ஆய்வு செய்தனர்.

    ஆலந்தூர்:

    அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம், வந்து கொண்டு இருந்தது. 147 பயணிகள் இருந்தனர். கவுகாத்தியை சேர்ந்த ஹேம்நாத் என்பவர் தனது 8 வயது பேத்தி உள்பட குடும்பத்தினர் 4 பேருடன் பயணம் செய்தார்.

    விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானத்தில் அவசரகால சைரன் ஒலி விமானத்துக்குள் கேட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. விமான பணிப்பெண்களும் விமான ஊழியர்களும் அவசர கால ஒலி எழுந்தது குறித்து ஆய்வு செய்தனர்.

    இதில் பயணி ஹேம்நாத்தின் பேத்தி தான் அமர்ந்திருந்த, விமான இருக்கைக்கு கீழே உள்ள அவசரகால உபயோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த, லைப் ஜாக்கெட்டை பட்டனை அழுத்தி எடுத்து அணிந்து கொண்டிருந்தார்.

    இதை அடுத்து விமான பணிப்பெண்கள் சிறுமியிடம் விசாரித்து அவசர கால ஒலியை நிறுத்தினர். இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

    இதற்கிடையே அவசர கால ஒலி எழுந்தது தொடர்பாக சென்னையில் உள்ள விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சென்னையில் விமானம் தரையிறங்கியதும் விமான நிலைய அதிகாரிகள் ஹேம் நாத்தின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை அதிகாரிகள் எச்சரித்து விடுவித்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து விமான ஊழியர்கள் கூறும்போது, விமானத்தில் ஒவ்வொரு இருக்கைக்கும் கீழே லைப் ஜாக்கெட் இருக்கும்.

    ஆபத்து நேரத்தில் மட்டுமே அதில் உள்ள பட்டன் அழுத்தி எடுக்க வேண்டும். இது தவிர மற்ற நேரங்களில் யாராவது உபயோகப்படுத்தினால், இதைப்போல் அபாய சைரன் கேட்கும் என்றனர்.

    • மனவேதனை அடைந்த ஹரிஹரன் வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    படப்பை அருகே உள்ள ஆதனூர் டி.டி.சி. நகரை சேர்ந்தவர் செல்வி. கணவரை இழந்த அவர், அதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஹரிஹரன் (வயது 25). வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சுற்றி வந்தார். இதனை தாய் செல்வி கண்டித்தார். இதில் மனவேதனை அடைந்த ஹரிஹரன் வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிரபா மற்றும் மண்டேலா ஆகியோர் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தெரிந்தது.
    • சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் ரவுடிகளை கைதுசெய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். போலீசாரை தாக்கி தப்பும் ரவுடிகளை துப்பாக்கியால் சுட்டுபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.இந்த நிலையில் காஞ்சிபுரத்திலும் ரவுடி கும்பல் குறித்து போலீசார் கண்காணித்தனர்.

    அப்போது காஞ்சிபுரத்தை கலக்கிய மறைந்த பிரபல ரவுடி தனபாலின் வலது கரமாக இருந்து வந்த பிரபல ரவுடி தியாகுவின் கூட்டாளிகளான பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த சகோதரர்களான பிரபா மற்றும் மண்டேலா ஆகியோர் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தெரிந்தது. ஏற்கனவே ரவுடி தியாகு சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

    எனினும் ரவுடி சகோதரர்கள் பிரபா மற்றும் மண்டேலா ஆகியோரின் குற்றச்செயல்கள் அதிகரித்து வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர்களது இருப்பிடம் குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இதில் சகோதரர்கள் இருவரும் நேற்று இரவு காஞ்சிபுரம் புதிய ரெயில்வே நிலையம் மேம்பாலம் பகுதியில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று துப்பாக்கி முனையில் ரவுடி சகோதரர்கள் பிரபா மற்றும் மண்டேலாவை சுற்றி வளைத்தனர். உடனே அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி மேம்பாலத்தில் மேலே இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றனர்.

    இதில் பிரபா, மண்டேலா ஆகிய இருவருக்கும் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்கள் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்ய முயன்ற போது ரவுடிகள் இருவரும் மேம்பாலத்தில் இருந்து குதித்த சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அண்ணன்-தம்பி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
    • கொலை தொடர்பாக வடிவேலுவை கைது செய்து மோதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் அடுத்த கருக்குப்பேட்டையை சேர்ந்தவர் சரவணன் (வயது51). தொழிலாளி. இவரது மனைவி காந்திமணி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    அதே பகுதியில் இவரது கடைசி தம்பி வடிவேலு தாயுடன் தனியாக வசித்து வருகிறார். வடிவேலுவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    சரவணன், வடிவேலு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அவர்களை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வந்தனர். நேற்று இரவும் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் தூங்க சென்று விட்டனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலையும் அண்ணன்-தம்பி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    அப்போது சரவணன் கோபத்தில் வடிவேலுவின் கைவிரலை கடித்ததாக தெரிகிறது. இதனால் வலியால் அலறி துடித்த வடிவேலு அருகில் கிடந்த கட்டையால் அண்ணன் சரவணனை சரமாரியாக தாக்கினார். இதில் சரவணன் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்ததும் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல், டி.எஸ்.பி. ஜுலியர்சீசர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இந்த கொலை தொடர்பாக வடிவேலுவை கைது செய்து மோதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    அண்ணனை தம்பி அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பட்டப்பகலில் ரூ.2 லட்சம் திருடப்பட்டது அந்த பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மணிமங்கலம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த நாட்டரசன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48). சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ் டிரைவராக உள்ளார். இந்த நிலையில் வெங்கடேசன் படப்பை பஜாரில் உள்ள இந்தியன் வங்கியில் தனது குடும்ப செலவுக்காக வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்து தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டினார்.

    பின்னர் அதே பகுதியில் உள்ள பேட்டரி கடைக்குச் சென்று ஏற்கனவே பேட்டரி சார்ஜ் செய்ய கொடுத்திருந்த பேட்டரியை வாங்க சென்றார். பின்னர் பேட்டரி கடையில் இருந்து வெளியே வந்து பார்க்கும் போது மோட்டார் சைக்கிள் பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.2 லட்சம் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து வெங்கடேசன் மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ரூ.2 லட்சம் திருடப்பட்டது அந்த பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சுகாதார கழிப்பறைகளை பயன்படுத்தும்போது காலணிகளை பயன்படுத்துதல் விழிப்புணர்வு கூட்டங்களில் இடம்பெற வேண்டும்.
    • உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்ட வலியுறுத்த வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் தின விழாவையொட்டி 'மிஷன் 11' என்கிற திட்டத்தை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். ரத்த சோகை இல்லாத மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தை உருவாக்குவது இதன் நோக்கமாகும்.

    இதைத்தொடர்ந்து பல்துறை சார்ந்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடந்தது. 'மிஷன் 11' திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது கலெக்டர் ஆர்த்தி கூறியதாவது:-

    கிராமங்கள் தோறும் ரத்தசோகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ரத்தசோகை தடுப்பு முறைகளான சரிவிகித உணவு உட்கொள்ளுதல், இரும்புச்சத்து நிறைந்த உணவு வகைகளான பச்சைக்காய்கறிகள், கீரை வகைகள், எளிதில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரை, வெல்லம், கேழ்வரகு போன்றவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளுதல் மற்றும் சுகாதார கழிப்பறைகளை பயன்படுத்தும்போது காலணிகளை பயன்படுத்துதல் விழிப்புணர்வு கூட்டங்களில் இடம்பெற வேண்டும்.

    பல்துறையினை சார்ந்த 49 வயது வரை உள்ள பெண் பணியாளர்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவினை பரிசோதனை செய்தல், ரத்தசோகை கண்டறியப்பட்டவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளித்து மீண்டும் ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை பரிசோதிக்க வேண்டும்.

    இந்த சிறப்பு திட்டம் வெற்றி பெற சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சி துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, தொழில் துறை ஆகிய பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்ட வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் தேவேந்திரன், உத்திரமேரூர் ஒன்றியக்குழுத்தலைவர் ஹேமலதா ஞானசேகர், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பிரியராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 100 மையங்களில் 33 ஆயிரத்து 948 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர்.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 20 ஆயிரத்து 790 மாணவர்கள், 22 ஆயிரத்து 68 மாணவிகள் என மொத்தம் 42 ஆயிரத்து 858 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை (13-ந் தேதி) தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை நடைபெறும் பிளஸ்-2 தேர்வு காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 90 ஆயிரத்து 723 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்.

    பிளஸ்-2 தேர்வை 6,903 மாணவர்கள், 7,014 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 917 பேர் எழுத உள்ளனர். இதேபோல் 14-ந் தேதி தொடங்கும் பிளஸ்-1 தேர்தலை 13 ஆயிரத்து 114 பேரும், அடுத்த மாதம் 6-ந் தேதி தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 16 ஆயிரத்து 434 பேரும் எழுத உள்ளனர். பிளஸ்-2 தேர்வை கண்காணிக்க 80 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 100 மையங்களில் 33 ஆயிரத்து 948 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர். பிளஸ்-1 தேர்வை 30,891 பேர் எழுத உள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 20 ஆயிரத்து 790 மாணவர்கள், 22 ஆயிரத்து 68 மாணவிகள் என மொத்தம் 42 ஆயிரத்து 858 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். பிளஸ்-1 தேர்வை 44 ஆயிரத்து 356 பேர் எழுத உள்ளனர்.

    இதில் பிளஸ்-2 தேர்வை 171 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளும், பிளஸ்-1 தேர்வை 173 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளும் எழுத உள்ளனர்.

    • பாதிக்கப்பட்ட பெண் காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார்.
    • விசாரித்தபோது சமூக வலைதளங்களில் நட்புடன் பழகி பல பெண்களிடம் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.

    காஞ்சிபுரம்:

    ஈரோடு பகுதியை சேர்ந்தவர் அலாவுதீன். இவர் நடிகர் ஒருவரின் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கினார்.

    பின்னர் காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு நட்பு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்றுக் கொண்ட பெண்ணிடம் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் நன்றாக பேசி பழகி வந்துள்ளார்.

    அப்பெண்ணின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வாங்கிக் கொண்ட அலாவுதீன் அதனை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், குடும்பத்தினருக்கும் தெரிவித்து விடுவதாகவும் கூறி மிரட்டி சுமார் ரூ.2 லட்சம் வரை பணம் பறித்தார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி ஈரோடு பிபி. அக்ரகாரம் பகுதியை சேர்ந்த அலாவுதீன், அவருக்கு உதவியாக இருந்த சகோதரர் வாகித் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    இவர்களிடம் விசாரித்தபோது சமூக வலைதளங்களில் நட்புடன் பழகி பல பெண்களிடம் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இவர்கள் மோசடிக்கு பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப்களை போலீசார் கைப்பற்றினார்கள். அவர்களிடம் வாக்குமூலம் பெற்று இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட கலெக்டர் ஆர்த்திக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று அலாவுதீன், வாகித் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

    ×