என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • பட்டாசு குடோன் உரிமையாளரான நரேந்திரன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே இன்று பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பலியாகினர். 12 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளரான நரேந்திரன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், தலா ரூ.3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க உத்தரவிட்டிருந்தார்.

    இதேபோல் காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். 

    • தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
    • காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த குருவி மலை பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. குடோன் பற்றி எரிந்தது. இதில் அங்கிருந்த ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கி படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுவோரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குடோன் உரிமையாளர் நரேந்திரன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர்.

    • பரந்தூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • புதிய விமான நிலைய அறிவிப்புக்கு பின்னர் நடந்த அனைத்து கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு விளைநிலங்கள், குடியிருப்புகளை கையகப்படுத்துவதற்கு அதை சுற்றியுள்ள பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் இன்று உலக தண்ணீர் தினத்தையொட்டி சிறப்பு கிராமசபை கூட்டம் அனைத்து கிராமங்களிலும் நடைபெற்றது.

    பரந்தூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே புதிய விமான நிலைய அறிவிப்புக்கு பின்னர் நடந்த அனைத்து கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏகனாபுரத்தில் நடந்த கிராமசபை கூட்டத்திலும் புதிய விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த தமிழ்வாணன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
    • குடிபோதை தகராறில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள சதாவரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன் (வயது23). இவரும் அதே பகுதியை சேர்ந்த குணா என்பவரும் நண்பர்கள்.

    நேற்று இரவு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தபோது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில் குணாவின் தந்தை ரகு அங்கு வந்தார். அவர் மகனிடம் தகராறில் ஈடுபட்ட தமிழ்வாணனை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் பயங்கர மோதல் ஏற்பட்டது. ரகுவும், அவரது மகன் குணாவும் சேர்ந்து தமிழ்வாணனை தாக்கினர்.

    மேலும் ஆத்திரம் அடைந்த அவர்கள் இருவரும் அரிவாளால் தமிழ்வாணனை சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த தமிழ்வாணன் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    உடனே ரகுவும், அவரது மகன் குணாவும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய தமிழ்வாணணை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் தமிழ்வாணன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து ரகு மற்றும் குணாவை தேடி வருகின்றனர். குடிபோதை தகராறில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடோனில் இன்று மதியம் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
    • குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த குருவி மலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. சுமார் 30-க்கும் மேற்பட் டோர் வேலைபார்த்து வருகிறார்கள்.

    இங்குள்ள குடோனில் இன்று மதியம் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

    குடோன் முழுவதும் பற்றி எரிந்தது. இதில் அங்கிருந்த ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கி படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 2 பெண்கள் உள்பட 6 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் படுகாயமடைந்தோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பட்டாசு குடோன் வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 8 ஆக உயர்ந்துள்ளது.

    • தமிழகத்தை சேர்ந்த 2 பயணிகள் மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 4 குரங்கு குட்டிகளையும் சுங்க இலாகா பறிமுதல் செய்தனர்.

    மீனம்பாக்கம்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

    அப்போது தமிழகத்தை சேர்ந்த 2 பயணிகள் மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர். 2 பேரும் அதிகாரிகளிடம் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அவர்களிடம் இருந்த கூடையில் உயிருள்ள பொருள் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாக அதிகாரிகள் அந்த கூடையை திறந்து பாா்த்தனா். அதில் அரிய வகை உயிரினங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

    அதில் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள சதுப்பு நில காடுகளில் வசிக்கும் டி பிரஸ்ஸாவின் குரங்கு, நைஜீரியா, கென்யா, உகாண்டா போன்ற நாடுகளில் வாழும் மாண்டட் கெரேசா என்ற குரங்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில் ஆகிய நாடுகளில் வாழும் சிலந்தி குரங்கு என அரியவகை 4 குரங்கு குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி பயணிகளிடம் விசாரித்தபோது, அவை அபூர்வ வகை குட்டிகள் என்பதால் வீட்டில் வளர்க்க எடுத்து வந்திருக்கிறோம் என்று கூறினர்.

    ஆனால் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும், மருத்துவ பரிசோதனை செய்து நோய் கிருமிகள் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழ் ஆகியவையும் அவர்களிடம் இல்லை. மேலும் சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறையிடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும்.

    ஆனால் இதில் எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 4 குரங்கு குட்டிகளையும் சுங்க இலாகா பறிமுதல் செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் அவை அபூர்வ வகையை சேர்ந்தது என்பதை உறுதி செய்தனர்.

    இதையடுத்து குரங்கு குட்டிகளை மீண்டும் மலேசிய நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க ரூ.8 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
    • எண்ணெய் உற்பத்தி செய்து "ஸ்ரீ-காஞ்சி" எனும் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் ஆரம்பிக்கபட்ட மகளிர் உழவர் உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள 1947 உறுப்பிளர்களை ஒருங்கிணைத்து வேகவதி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

    இந்நிறுவனத்தின் மூலம் விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் செய்து மதிப்புகூட்டு பொருட்களாக மாற்றி விற்பனை செய்திட, வேகவதி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி கூடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி. துவக்கி வைத்து தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க ரூ.8 லட்சத்துக்கான காசோலை வழங்கினார்.

    இந்நிறுவனத்தின் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் வேர்கடலை, எள்ளு மற்றும் தேங்காய் கொள்முதல் செய்து மதிப்பு கூட்டுதல் நடவடிக்கையாக எண்ணெய் உற்பத்தி செய்து "ஸ்ரீ-காஞ்சி" எனும் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் 113 உழவர் உற்பத்தியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் தினகர் ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • லோகநாதன் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
    • புள்ளலூர் கிராமத்துக்கு அடிக்கடி வந்து சென்றபோது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள புள்ளலூர் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவியின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து மாணவியை பரிசோதனைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

    இதனை கேட்டு மாணவியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக மாணவியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது கோவிந்தவாடி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவரிடம் மாணவி நெருங்கி பழகி வந்தது தெரிந்தது. லோகநாதன் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    புள்ளலூர் கிராமத்துக்கு அடிக்கடி வந்து சென்றபோது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அவர் மாணவியுடன் நெருங்கி பழகியது தெரிந்தது.

    இதையடுத்து மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் லோகநாதனை போலீசார் கைது செய்தனர். மாணவியின் கர்ப்பம் தொடர்பாக அடுத்தகட்ட முடிவு எடுக்க போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கட்டுமான பணிகளில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்கள் போதைப்பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.
    • போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க அனைத்து கடைகளிலும் போலீசார் கடுமையான சோதனை மேற்கொள்ள வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் காவல்துறை மண்டலம் சார்பில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 70 பள்ளி-கல்லூரி நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நடைபெற்றது. தமிழக கூடுதல் காவல் துறை இயக்குனர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், டி.ஐ.ஜி.பகலவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சுதாகர், பிரதீப் சீபாஸ் கல்யாண் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து கூடுதல் காவல் துறை இயக்குனர் சங்கர் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் உள்ள தொழிற்சாலை, கட்டுமான பணிகளில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்கள் போதைப்பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். இதனை பார்க்கும் நமது மாணவர்களும், இளைஞர்களும் அதிக அளவில் இதை பயன்படுத்துகிறார்கள்.

    இதனை பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்யும்போது காண முடிகிறது. எனவே போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க அனைத்து கடைகளிலும் போலீசார் கடுமையான சோதனை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் அனைத்து மக்கள் கூடும் இடங்களிலும் கட்டாயம் கண்ணில் தெரியும்படி வைக்க வேண்டும். காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் தடுப்பு குழு உருவாக்கப்படும். அதன் அடிப்படையில் போதை இல்லா காஞ்சிபுரம் மண்டலம் உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நள்ளிரவு நேரங்களில் வீட்டின் கட்டிட கழிவுகள், தேவையற்ற பொருட்களை பொதுமக்கள் சாலையோரத்தில் வீசி விட்டு செல்கின்றனர்.
    • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி அந்தந்த பகுதி மண்டல அலுவலருக்கு அறிவுறுத்தியது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கியது. இதனை 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் பேரில் வீடுகளுக்கே சென்று தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கின்றனர்.

    ஆனாலும் நள்ளிரவு நேரங்களில் வீட்டின் கட்டிட கழிவுகள், தேவையற்ற பொருட்களை பொதுமக்கள் சாலையோரத்தில் வீசி விட்டு செல்கின்றனர்.

    இதையடுத்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி அந்தந்த பகுதி மண்டல அலுவலருக்கு அறிவுறுத்தியது. அதன்பேரில், காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியான ஐதர் பேட்டை பகுதியில் துப்புரவு ஆய்வாளர் மற்றும் தூய்மை பணியாளர்கள் பெயர் மற்றும் அவர்களது தொலைபேசி எண்களுடன், நகைச்சுவை நடிகரான வடிவேலுவின் 'வின்னர்' பட காமெடியான "இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது... நானும் வரமாட்டேன்..." எனும் காமெடி பாணியில் விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதில் 'வின்னர்' படத்தில் வரும் வடிவேலுவின் 'கைப்புள்ள' காதாபாத்திரத்தின் படத்துடன், "இங்கு குப்பை கொட்ட நீங்களும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்" என்ற வாசகங்கள் இடம்பெற்று இருந்தது. இது அந்த பகுதி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

    • காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
    • விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2023 மார்ச் மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுனர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.

    ஆகவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

    பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள 13-வது தவணை தொகையை பெறும் பொருட்டு அனைவரும் பி.எம். கிசான் கணக்கை புதுப்பிக்க வேண்டும். பிரதம மந்திரி கிசான் பயனாளிகள் அனைவரும் தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திடவும், நேரடி பயன் பரிமாற்றம் வசதி தங்களது வங்கி கணக்கில் செயல்பாட்டில் உள்ளதா என உறுதி செய்திடுங்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • திருமங்கலம் ஊராட்சியில் சுங்குவார் சத்திரம் செல்லும் சாலையில் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
    • பொதுமக்கள் அந்த வழியாக கடந்து செல்லும் போது துர்நாற்றம் விசுகிறது.

    சுங்குவார்சத்திரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அருகே உள்ளது திருமங்கலம் ஊராட்சி. இங்கு 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுங்குவார் சத்திரத்தை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. திருமங்கலம் ஊராட்சியில் சுங்குவார் சத்திரம் செல்லும் சாலையில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அப்புறப்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருகிறது. பொதுமக்கள் அந்த வழியாக கடந்து செல்லும் போது துர்நாற்றம் விசுகிறது. மேலும் இங்கு கொட்டப்படும் குப்பையால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது:-

    ஊராட்சியில் பல பகுதிகளில் இது போல ஆங்காங்கே குப்பைகள் கொட்டி கிடக்கின்றன. ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றமல் அலட்சியம் காட்டுகிறது. பல முறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×