என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திரவுபதி அம்மன் கோவிலில் மகாபாரத பெருவிழா- துரியோதனன் படுகளம் காட்சி
    X

    திரவுபதி அம்மன் கோவிலில் மகாபாரத பெருவிழா- துரியோதனன் படுகளம் காட்சி

    • மகாபாரத பெருவிழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துக்கொண்டு தங்களின் வேண்டுதல் காணிக்கையை செலுத்தி அம்மனை வழிபட்டுச்சென்றனர்.

    காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி, திரவுபதி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் மகாபாரத பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அவ்வகையில் இந்தாண்டு மகாபாரத பெருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் பல்வேறு சொற்பொழிவு நிகழ்ச்சிகள், நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்நிலையில் மகாபாரத பெருவிழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. அதையொட்டி பிரமாண்டமாக துரியோதனன் மண்சிலை வடிவமைக்கப்பட்டு கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன்-துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சி தத்ரூபமாக நடத்தப்பட்டது.

    இதில் பீமன் வேடமணிந்த ஒருவர் துரியோதனன் சிலையின் தொடைப்பகுதியில் கதாயுதத்தால் ஓங்கி அடித்ததில் அந்த இடத்தில் இருந்து சிவப்பு நிற திரவம் வடிந்ததையடுத்து அதை திரவுபதி வேடமணிந்தவர் கூந்தலில் பூசியப்பின் துரியோதனன் சிலையை மூன்று முறை வலம் வந்து சபதம் முடிந்ததையடுத்து, அம்மனுக்கு மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.

    மேலும் இந்த துரியோதனன் படுகளம் காட்சியை தீமிதி விழாவிற்காக காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துக்கொண்டு தங்களின் வேண்டுதல் காணிக்கையை செலுத்தி அம்மனை வழிபட்டுச்சென்றனர்.

    மேலும் மாலை தீமிதி திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    Next Story
    ×