என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    திருக்கழுக்குன்றம் அருகே கல்லூரி மாணவர் மர்ம பலி திருக்கழுக்குன்றம் அருகே கல்லூரி மாணவர் மர்மமான முறையில் பலியானதை தொடர்ந்து அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றம் அடுத்த சிட்லபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பார்த்தீபன் (21) கொத்திமங்கலத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். படிப்பில் கவனம் செலுத்தாததால் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

    இதில் மனமுடைந்த பார்த்தீபன் கடந்த 5-ம் தேதி வீட்டிலிருந்து மாயமானார். அவரை உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடி வந்த நிலையில் நேற்று முள்ளிக்கொளத்தூர் ஏரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் திருக்கழுகுன்றம் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதணைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

    பார்த்தீபனை எவரேனும் கொலை செய்திருப்பார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6-ந் தேதியை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு த.மு.மு.க.வினர் காஞ்சீபுரத்தில் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் காந்திரோடு பெரியார் நினைவுதூண் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் ஷாஜகான் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் அப்துல் ரவூப் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மதவாத அரசியலை புறக்கணிப்போம் என கோ‌ஷமிட்டனர். மேலும் பாபர் மசூதி இடத்தினை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும். பாபர் மசூதி இடிப்பிற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். இது சம்பந்தமான வழக்கினை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க. மாநில பொதுச் செயலாளர் அப்துல்சமத், மாநிலச் செயலாளர் ஹாஜா கனி, மனித நேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் யாகூப் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
    காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அதிக எண்ணிக்கையில் வரும் நோயாளிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் 2 டயாலிசிஸ் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் கருவிகளை அமைக்க மாவட்ட கலெக்டரின் விருப்ப உரிமை நிதியில் இருந்து நிதி வழங்கினார்.

    இரண்டு கருவிகளும் காஞ்சீபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டு அதன் தொடக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் பொன்னையா இந்த டயாலிசிஸ் கருவிகளை தொடங்கி வைத்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-

    காஞ்சீபுரம் தலைமை அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கனவே 2 டயாலிசிஸ் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 40-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் அதிக எண்ணிக்கையில் வரும் நோயாளிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் மேலும் 2 கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இ.சசிகலா, டாக்டர் கல்பனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    மேடவாக்கம் அருகே குழந்தைகள் கண் முன்பு மனைவியை, கணவனே எரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பள்ளிக்கரணை:

    பள்ளிக்கரணையை அடுத்த மேடவாக்கம் ராமதாஸ் தெருவில் வசித்து வருபவர் ராஜேஷ், கூலி தொழிலாளி. இவரது மனைவி சந்தியா (வயது 30). இருவரும் காதலித்து திருமணம் செய்து இருந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    ராஜேசுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்தார். சந்தியா பள்ளிக்கரணையில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை பார்த்து குடும்ப செலவுகளை கவனித்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மது குடித்துவிட்டு ராஜேஷ் வீட்டுக்கு வந்தார். இதனை சந்தியா கண்டித்தார் இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏறபட்டது. பின்னர் இருவரும் வீட்டில் தூங்கினர்.

    நள்ளிரவு 2 மணி அளவில் எழுந்த ராஜேஷ் மனைவியிடம் மீண்டும் மோதலில் ஈடுபட்டார். அவரை தாக்கி கிழே தள்ளினார். இதில் பலத்த காயம் அடைந்த சந்தியா மயங்கினார்.

    உடனே வீட்டில் இருந்த மண்எண்ணையை சந்தியா மீது ஊற்றி தீவைத்தார். அப்போது ராஜேசின் உடலிலும் தீப்பற்றியது. சத்தம் கேட்டு எழுந்த 2 மகன்களும் தாய் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இருவரும் அலறியபடி வீட்டை விட்டு வெளியே ஓடினர்.

    அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சந்தியாவை மீட்க முயன்றனர். இதற்குள் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தீக்காயம் அடைந்த ராஜேசை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன்கள் கண் முன்பு மனைவியை, கணவனே எரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆவணங்கள் சரியாக இருந்தால் நடிகர் விஷால் தேர்தல் ஆணையத்தை அணுக வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரியில் கடலில் மீன்பிடிக்க சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உயிரிழந்த மீனவர்களுக்கு கேரள அரசு நிவாரணத் தொகை அளித்தது போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள உதவித்தொகை போதாது. அதை ஏற்க முடியாது.

    இது போன்ற பேரிடர் நேரங்களில் மத்திய அரசு, பேரிடர் நிதியில் இருந்து பணம் ஒதுக்கி மீட்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால் இதற்கு முன்பு இருந்த அனைத்து முதல்-அமைச்சர்களும் இதே போன்று பெரிய பாதிப்பு ஏற்பட்ட நேரத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. நடைமுறைகளை அவர் பின்பற்றி இருக்க வேண்டும். அவை எல்லாம் சரியாக இருந்தால் விஷால் தேர்தல் ஆணையத்தை அணுக வேண்டும்.

    தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசை ஆதரித்து நாளை முதல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன். காங்கிரஸ் சார்பாக 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. அம்பேத்கர் படத்திற்கு திருநாவுக்கரசர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. ஆட்சி அதிகாரம், காவல் துறையை கொண்டு அடக்க நினைத்தால் அது தவறானது. அதே நேரத்தில் மக்கள் சேவை ஆற்ற விரும்புபவர்கள் வேட்பு மனுதாக்கல் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

    வாட்ஸ்-அப்பில் விஷால் வெளியிட்ட உரையாடல் குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும். நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆதரவளிக்க வேண்டும் என தி.மு.க. கேட்டுக் கொண்டதன் பேரில் காங்கிரஸ் ஆதரிக்கிறது.

    நடிகர் சங்கம் வேறு, கட்சி தேர்தல் வேறு. நடிகர் விஷாலுக்கு குஷ்பு வாழ்த்து சொன்னது சரியான அணுகுமுறை அல்ல. காங்கிரசார் பேசும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குஜராத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்’’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, கராத்தே தியாகராஜன், செல்வபெருந்தகை, ரஞ்சன் குமார், சிவராஜசேகரன், வீரபாண்டியன், தி.நகர் விக்னேஷ்வரன், நாச்சிகுளம் சரவணன் கலந்து கொண்டனர்.
    காஞ்சீபுரத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் காமராஜர் சாலையில் உள்ள பஸ் நிலையத்துக்கு இன்று காலை தனியார் பஸ் வந்தது. அதில் இருந்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் இறங்கினார்.

    அப்போது திடீரென பஸ்சை டிரைவர் இயக்கினார். இதில் நிலை தடுமாறிய பெண் கீழே விழுந்து பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். அவரை பற்றிய விபரம் தெரியவில்லை. இது குறித்து சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொல்லப்பட்டார். 5 பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது.
    வண்டலூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 46). நந்திவரம் பேரூராட்சி பேரூர் அ.தி.மு.க. பொருளாளராக இருந்தார். இவர் ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம் ஆகியவற்றை நடத்தி வந்தார்.

    தமிழ்ச்செல்வன் நேற்று இரவு கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகே உள்ள தன்னுடைய அலுவலகத்தை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது வேகமாக வந்த ஒரு கார், தமிழ்ச்செல்வனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தடுமாறி தமிழ்ச்செல்வன் கீழே விழுந்தார். உடனே 5 பேர் கொண்ட கும்பல் திபுதிபுவென காரில் இருந்து இறங்கி தமிழ்ச்செல்வனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அவர்களிடம் இருந்து தமிழ்ச்செல்வன் தப்பிக்க ஓடினார்.

    எனினும் அந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டிச்சென்று ஒரு வீட்டின் முன்பு உள்ள சாக்கடை கால்வாயில் வைத்து மீண்டும் வெட்டியது. இதில் ரத்தவெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். பின்னர் அந்த கும்பல் அதே காரில் தப்பி சென்றது.

    இது பற்றி தகவல் அறிந்த வண்டலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குருசாமி, கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தமிழ்ச்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், சில மாதங்களுக்கு முன்பு தமிழ்ச்செல்வன் தன்னுடைய கார் டிரைவர் அருளை அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது. எனவே முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது தொழில் பிரச்சினையா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 5 பேர் கொண்ட கும்பல் தமிழ்ச்செல்வனை விரட்டி, விரட்டி வெட்டியது பதிவாகி இருந்தது. அதை வைத்து அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ×