என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    மத்திய அரசின் கேட்ரிங் படிப்பில் சேர நண்பருக்காக தேர்வு எழுதிய வடமாநில வாலிபரை கைது செய்த போலீசார் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    சென்னை சோழிங்க நல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் மத்திய அரசின் கேட்ரிங் பிரிவுக்கான தேர்வு நடைபெற்றது.

    பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 17 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். அப்பொழுது தேர்வறையில் அரியானாவை சேர்ந்த மனிஷ் (20) செல்போனை பயன்படுத்தினார். கல்லூரி மேற்பார்வையாளர் மனீஷை விசாரித்தபோது பதட்டத்துடன் நேர்மாறாக பதில் கூறினார்.

    அவருடைய செல்போனை சோதித்தபோது கேள்விகளை எஸ்.எம்.எஸ் மூலமாக வேறு ஒரு நபருக்கு அனுப்பி பதில் கேட்டது தெரிய வந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த கல்லூரி நிர்வாகம் செம்மெஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    உடனடியாக தேர்வு நடந்த பகுதிக்கு வந்த போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை செய்தனர். அப்பொழுது அவரது பெயர் அஜய் (24) என்பதும் அரியனாவை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

    தனது நண்பர் மனீஷுக்கு பதிலாக தான் தேர்வு எழுத வந்ததாகவும், மனீஷ் அவர் தங்கும் இடத்தில் இருந்து செல்போன் மூலம் கேள்விக்கான பதிலை அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆள் மாறாட்டம் செய்த அஜயை கைது செய்தனர். அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். மனீஷ் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்து இருந்தது. ஆனால் காஞ்சீபுரம், திருவள்ளூரில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் ஓடின.
    காஞ்சீபுரம்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்து இருந்தது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. காஞ்சீபுரத்தில் இருந்து அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் வழக்கம் போல் இயங்கின. தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் வழக்கம் போல் சென்றன.

    பிரதான காய்கறி சந்தைகளான ராஜாஜி மார்க்கெட் மற்றும் நேரு மார்க்கெட் வழக்கம் போல் திறந்து இருந்தது. அதிக அளவிலான ஷேர் ஆட்டோக்கள் ஓடின. அனைத்து பெட்ரோல் பங்குகளும் இயங்கின.

    செங்கல்பட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் பெரிய வணிக வளாகங்கள் மூடப்பட்டன. ராஜாஜி சாலையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

    திருவள்ளூரில் காலை முதலே பெரும்பாலான இடங்களில் கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன.

    அதேபோல் அனைத்து பஸ்களும், ஆட்டோக்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பந்த்தால் மாவட்டத்தில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இலலை. மாமல்லபுரத்தில் அரசு பேருந்துகள், வேன், ஆட்டோக்கள் இயங்கின. சுற்றுலா பயணிகள் பாதிக்காத வண்ணம் ஓட்டல்கள் அனைத்தும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிற்ப பட்டறைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன.

    பெரியபாளையம் பஸ் நிலையம் நோக்கி தி.மு.க. ஒன்றிய செயலாளர் மூர்த்தி, சத்தியவேல் தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தை கட்சியினர் சுமார் 100-க்கு மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர். அவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    திடீரென பெரியபாளையம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    டி.எஸ்.பி. சந்திரதாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

    காசிமேட்டு சிக்னல் அருகே மீனவர் மக்கள் முன்னணி கட்சி தலைவர் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசை கண்டித்து அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர். #PetrolPriceHike
    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து கார்களை திருடி விற்ற 2 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரகடத்தில் தனியார் கார் தொழிற்சாலை உள்ளது. இங்கு குன்றத்தூரை சேர்ந்த மாரிமுத்து என்கிற முகமது அஷ்ரப் தண்டையார் பேட்டையை சேர்ந்த அருண் குமார் ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    கடந்த ஜனவரி மாதம் தொழிற்சாலையில் இருந்த 2 புதிய கார்கள் திடீரென மாயமானது. இது குறித்து அதிகாரிகள் ஒரகடம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கார்களை திருடி விற்றதாக அதே தொழிற்சாலையில் வேலை பார்த்த மாரிமுத்து, அருண்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் நூதன முறையில் கார்களை தொழிற்சாலையில் இருந்து திருடி சென்று இருப்பது தெரிய வந்தது.

    மாரிமுத்து தொழிற்சாலை யார்டு பகுதியில் இருந்த கார்களை போலியாக அனுமதி (பாஸ்) தயாரித்து வெளியே எடுத்து வந்து இருக்கிறார். பின்னர் வெளியே வந்த கார்களை பார்க்கிங் பகுதியில் நிறுத்தி விட்டு அங்கு பணியாற்றும் ஊழியர்களின் காரின் பதிவு எண் போன்று போலி நம்பர் பிளேட்டை காரில் பொருத்தி வெளியே கொண்டு சென்றிருப்பது தெரிந்தது.

    மேலும் திருடிய ஒரு காரை ரூ.6 லட்சத்துக்கு விற்று உள்ளார். கைதான 2 பேரிடம் இருந்தும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மகன் மாகேஷ், அதே பகுதியை சேர்ந்த ஜெகத் (16). இவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தனர்.

    நேற்று இருவரும் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த நெமிலி பகுதியில் கிரிக்கெட் விளையாட நண்பர்களுடன் சென்றனர்.

    பின்னர் அவர்கள் பீமன்தாங்கல் ஏரியில் நண்பர்களுடன் குளித்தனர். அப்போது மாகேசும், ஜெகத்தும் ஆழமான பகுதியில் சிக்கி மூழ்கினர். உடன் சென்ற நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இது குறித்து 2 பேரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஏரியில் மூழ்கிய இருவரின் உடலை தேடி வருகிறார்கள். மாகேசின் உடல் கிடைத்தது. இதனை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    கேளம்பாக்கம் அருகே இன்று காலை கல்லூரி பஸ் உரசியதில் ஆட்டோ ஓரத்தில் பயணித்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். விபத்து குறித்து கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மாமல்லபுரம்:

    கூவத்தூரை அடுத்த கடலூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் வெற்றி (வயது5). கல்பாக்கத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இன்று காலை வெற்றி வழக்கம் போல் ஆட்டோவில் சக மாணவர்களுடன் பள்ளிக்கு சென்றான். அவன் ஆட்டோவில் பின் பக்க சீட்டின் ஓரத்தில் அமர்ந்து இருந்தான்.

    கடலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ் திடீரென ஆட்டோவை உரசியபடி முந்தி சென்றது.

    இதில் ஆட்டோ ஓரத்தில் அமர்ந்திருந்த வெற்றியின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஆட்டோவில் இருந்த மற்ற அனைவரும் காயமின்றி தப்பினர்.

    படுகாயம் அடைந்த வெற்றியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வெற்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    இது குறித்து கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை பல்லாவரத்தில் வங்கி மேலாளர் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு, 206 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #PallavaramRobbery
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த ஜமீன்பல்லாவரம் கார்டன் உட்ராப் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் யோகசேரன் (வயது 55). இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ரெப்போ வங்கியில் மேலாளராக உள்ளார். இவருடைய மனைவி சுப்புலட்சுமி.

    இவர்களுக்கு திலகன் என்ற மகனும், செந்தமிழ்காவியா என்ற மகளும் உள்ளனர். திலகன், பல் டாக்டர் ஆவார். செந்தமிழ் காவியாவுக்கு திருமணமாகி கணவருடன் சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வருகிறார்.

    யோகசேரனின் சொந்த ஊர் மதுரை ஆகும். இவரது வீட்டில் மதுரையைச் சேர்ந்த ராணி என்ற பெண், வீட்டு வேலைகள் செய்து வருகிறார். வீட்டின் மாடியில் யோகசேரன், தனது மனைவி, மகனுடன் வசித்து வருகிறார். தரைதளத்தில் உள்ள வீட்டில் வேலைக்காரி ராணி வசித்து வருகிறார்.



    மதுரையில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட செந்தமிழ் காவியா, தனது 175 பவுன் தங்க நகைகளை வங்கி லாக்கரில் வைப்பதற்காக நேற்று மதியம் தனது தாய் வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்துவிட்டு தனது வீட்டுக்கு சென்று விட்டார்.

    வீட்டில் யோகசேரன், சுப்புலட்சுமி மட்டும் இருந்தனர். திலகன் வீட்டில் இல்லை. நேற்று மாலை 5.30 மணியளவில் வீட்டு வேலைக்காரி ராணி, மாடிக்கு சென்று கதவை தட்டினார். யோகசேரன் கதவை திறக்கவும் அவர் உள்ளே சென்றார்.

    அப்போது திபுதிபுவென 5 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். முகத்தில் முகமூடி அணிந்து இருந்த அவர்கள், கத்தி கூச்சலிட்டால் கொன்று விடுவோம் என்று தங்கள் கையில் இருந்த கத்தியை காட்டி யோகசேரனை மிரட்டினர்.

    பின்னர் யோகசேரன், அவருடைய மனைவி சுப்புலட்சுமி, வேலைக்காரி ராணி ஆகிய 3 பேரையும் கத்திமுனையில் மிரட்டி தாங்கள் தயாராக கொண்டு வந்த சணலை கொண்டு கைகளை கட்டினர். சத்தம் போடாமல் இருக்க 3 பேரின் வாயில் துணியை வைத்தும் அடைத்தனர்.

    அதன்பிறகு வீட்டில் இருந்த பீரோவை திறந்த கொள்ளையர்கள், அதில் லாக்கரில் வைக்கும்படி கூறி அவரது மகள் செந்தமிழ்காவியா கொடுத்துச்சென்ற 175 பவுன் நகைகள் மற்றும் சுப்புலட்சுமி அணிந்து இருந்த நகைகள் என மொத்தம் சுமார் 206 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.

    பின்னர் அந்த நகைகளை தாங்கள் கொண்டு வந்த ஒரு பையில் போட்டுக்கொண்டனர். நாங்கள் தப்பிச்செல்லும் வரையில் யாரும் கத்தி கூச்சலிடக்கூடாது. மீறி கத்தினால் கொன்று விடுவோம் என்று மீண்டும் மிரட்டி விட்டு, நகைகளுடன் கொள்ளையர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

    சிறிது நேரத்துக்கு பிறகு யோகசேரன் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் 3 பேரின் கைகட்டுகளை அவிழ்த்து விட்டனர். இதுபற்றி பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு சென்னை தெற்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி, பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி, பல்லாவரம் உதவி கமிஷனர் தேவராஜ் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என அந்த பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதாகவும், கொள்ளையர்களில் 2 பேர் காதில் கடுக்கன் அணிந்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள், செந்தமிழ் காவியாவை பின்தொடர்ந்து வந்து கொள்ளையில் ஈடுபட்டனரா? அல்லது வங்கி மேலாளர் என்பதால் வீட்டில் நகை, பணம் இருக்கும் என்ற எண்ணத்தில் வந்து கைவரிசையை காட்டினரா? என விசாரித்து வருகின்றனர்.

    மேலும் கொள்ளை நடந்த நேரத்தில் அந்த வழியாக வந்து சென்றவர்கள் குறித்து அந்த பகுதியை சுற்றி சாலைகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    கொள்ளையர்கள் யாருடனாவது செல்போனில் பேசினார்களா? என அந்த நேரத்தில் அந்த பகுதியில் பதிவான செல்போன் சிக்னல்களையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    பட்டப்பகலில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 206 பவுன் நகைகளை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #PallavaramRobbery 
    சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் இலங்கை புறப்பட இருந்த பயணிகளை சுங்கத்துரை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது ஒரு வாலிபரின் பின்புற இடுப்பு பகுதி அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அவரை தனியாக அழைத்து சென்று சோதித்தனர்.

    அப்போது யூரோ நோட்டுக்களை இடுப்பில் சுற்றி வைத்து டேப் போட்டு ஒட்டி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த வாலிபரை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவரது பெயர் சரவணன் (28). இலங்கையை சேர்ந்தவர்.

    இதேபோல் நேற்று நள்ளிரவில் சிங்கப்பூர் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த முகமது யாசின் (33) என்பவர் தனது உள்ளாடைக்குள் ரியால், தினார், யூரோ நோட்டுக்களை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    இருவரிடம் இருந்தும் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.9 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர். #ChennaiAirport
    குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக ரூ. 15 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.#arrest

    போரூர்:

    சென்னை விருகம்பாக்கம் நாராயணசாமி முதல் தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார் இவரது மனைவி சங்கீதா.சங்கீதா கடந்த வாரம் விருகம்பாக்கம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    விருகம்பாக்கம் தாங்கல் தெருவைச் சேர்ந்த ஜோதி என்பவர் மகளிர் சுயஉதவி குழு மூலம் எனக்கு அறிமுகமானார்.

    இந்நிலையில் ஜோதி தனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் தலைமை செயலகத்தில் பணியாற்றி வருகிறார் என்றும் அவர் மூலம் திருவள்ளூர் அத்திப்பட்டு செல்லியம்மன் நகரில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு பெற்று தருவதாக கூறினார்.

    இதை நம்பி கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் நானும் மற்றும் அப்பகுதியில் உள்ள பெண்கள் சுமார் 20 பேர் சேர்ந்து ரூபாய் 15 லட்சம் பணத்தை ஜோதியிடம் கொடுத்தோம் ஆனால் சொன்னபடி வீடுகள் ஒதுக்கீடு பெற்று தராமல் பணத்தையும் திருப்பி தராமல் தொடர்ந்து எங்களை அலைகழிப்பு செய்து வந்த ஜோதி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தீடீரென தலைமறைவானார்.

    ஆகவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான ஜோதி போரூரை அடுத்த கெருகம்பாக்கம் பாய் கடை பகுதியில் வீடு எடுத்து தங்கி இருப்பது தெரியவந்தது.

    உடனடியாக அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்த போலீசார் அவரது நண்பரான பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த தலைமைச் செயலக ஊழியர் சாரதி என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஆரோக்கிய மாதா தேர் பவனியையொட்டி இன்று மாலை பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #BesantNagarChurch
    திருவான்மியூர்:

    பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 46-வது ஆண்டு திருவிழா கடந்த 29-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    இதையடுத்து, தினமும் பெசன்ட்நகர் ஆரோக்கிய மாதா ஆலயத்தில் தினமும் ஜெபமாலை திருப்பலி, சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் பல்வேறு குருக்கள் பங்கேற்றனர்.

    10-வது திருவிழாவான இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை-மயிலை கத்தோலிக்க பி‌ஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. ஆரோக்கிய மாதாவின் ஆடம்பர தேர்பவனியும் நடைபெறுகிறது. இதில் ஏராளமான குருக்கள், கன்னியாஸ்திரிகள், லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கிறார்கள்.

    ஆரோக்கிய மாதா தேர் பவனியையொட்டி பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாதா தேர் செல்லும் பாதையான 6-வது அவென்யூ, 4-வது மெயின் ரோடு, 2-வது மற்றும் 7-வது அவென்யூகளில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை.

    மாலை 4 மணி முதல் எம்ஜி சாலை 7-வது அவென்யூ சந்திப்பிலிருந்து 6-வது அவென்யூ, 4-வது மெயின் ரோடு சந்திப்பில் இருந்தும், 4-வது மெயின் ரோடு 3-வது அவென்யூ சந்திப்பிலிருந்தும் மாதா ஆலயத்தை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கபடமாட்டாது. சாஸ்திரி நகர் முதல் அவென்யூவில், எல்.பி. சாலையிலிருந்தும், தாமோதரபுரத்திலிருந்தும் பெசன்ட் நகர் பஸ் டெர்மினல் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கபடமாட்டாது.

    32-வது மற்றும் 33வது குறுக்கு தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடல்களில் வாகன நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பெசன்ட் நகர் 4-வது அவென்யூ கஸ்டம்ஸ் காலனி 2-வது குறுக்குத் தெரு 5வது அவென்யூ ஊருர் குப்பம் சாலை 32-வது குறுக்கு தெரு, பெசன்ட் நகர் 24-வது, 25-வது, 26-வது, 27-வது, 28-வது, 17-வது மற்றும் பெசன்ட் நகர் 21-வது குறுக்குத் தெருக்கள் எலியட்ஸ் கடற்கரை 6-வது அவென்யூ கோஸி கார்னர் முதல் 5வது அவென்யூ சந்திப்பு வரை ஒரு புறம் மட்டும் வாகனங்கள் நிறுத்தலாம்.

    மாலை 4 மணி முதல் மாநகர பேருந்துகள் மட்டும் டாக்டர் முத்துலட்சுமி சாலையிலிருந்து பெசன்ட் அவென்யூ சாலைக்கு இடது புறம் திரும்ப அனுமதியில்லை. பெசன்ட் அவென்யூ சாலைக்கு செல்ல வேண்டிய மாநகர பேருந்துகள் அனைத்தும் எல்.பி சாலை, எம்.ஜி சாலை வழியாக செல்ல வேண்டும். மாநகர பேருந்துகள் எம்.ஜி. சாலை, பெசன்ட் நகர் 1வது மெயின் ரோடு வழியாக பேருந்து நிலையத்தை அடைந்து வெளியே செல்லும் வழியாக திருவான்மியூர், பகுதிக்கு செல்லும் சாஸ்திரி நகர் 1வது அவென்யூ வழியாகவும் செல்லலாம்.

    இரவு 8 மணிக்கு மேல் எல்.பி சாலை ஒரு வழிப் பாதையாக பயன்படுத்தப்படும். அடையாறு பாலத்தில் இருந்து திருவான்மியூர் சிக்னல் செல்லும் வாகனங்கள் எல்.பி. சாலை வழியாக செல்லலாம்.

    திருவான்மியூர் சிக்னலில் இருந்து எல்.பி, சாலையில் வரும் வாகனங்கள் இந்திரா நகர் 3-வது அவென்யூ சந்திப்பில், இந்திரா நகர் 3-வது அவென்யூவில் திருப்பிவிடப்பட்டு இந்திரா நகர் 3-வது அவென்யூ, கஸ்தூரிபாய் நகர் 3-வது குறுக்குத்தெரு வழியாக சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை சென்றடையலாம்.

    சர்தார் பட்டேல் சாலையில் இருந்து கஸ்தூரிபாய் சாலை 3-வது குறுக்குத் தெரு செல்வது தடை செய்யப்படுகிறது. அத்தகைய வாகனங்கள் எல்.பி.சாலை வழியாக கஸ்தூரிபாய் நகர் செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #BesantNagarChurch

    தாம்பரம் காசநோய் ஆஸ்பத்திரி வளாகத்தில் கிடந்த மனித எலும்பு கூடை கைப்பற்றிய போலீசார் சிகிச்சை பெற்ற நோயாளியா அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? என்று விசாரித்து வருகிறார்கள்.
    தாம்பரம்:

    தாம்பரம் சாணடோரியத்தில் காசநோய் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஆஸ்பத்திரி வளாகத்தின் பின்புறம் செடி கொடிகள் படர்ந்து வனப்பகுதி போல் உள்ளது.

    இந்த நிலையில் புதர் பகுதியில் இருந்து மனித எலும்புகளை நாய்கள் கவ்வி கொண்டு வந்தன. இதை பார்த்த நோயாளிகளின் உறவினர்கள் தாம்பரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் அங்கு சென்று புதர் மண்டி இருந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது மனித எலும்பு கூடு ஒன்று கிடந்தது. அதை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    எலும்பு கூடாக கிடந்தது ஆணா? பெண்ணா? என்பது தெரியவில்லை. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோயாளி புதர் பகுதியில் இறந்து கிடந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? என்று விசாரித்து வருகிறார்கள்.

    செம்மஞ்சேரியில் தடுப்பூசி போட்ட குழந்தைக்கு வலிப்பு வந்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.
    சோழிங்கநல்லூர்:

    சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகேஷ்ராஜா , இவரது மனைவி சரோஜா. இவர்களுடைய ஹரிணி என்ற 4 மாத பெண் குழந்தைக்கு செம்மஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பு ஊசி போட்டுள்ளனர்.

    வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் ஹரிணிக்கு வலிப்பு வந்தது. இதனால் மருத்துவர் கொடுத்த மாத்திரையை கொடுத்துள்ளனர். மீண்டும் குழந்தைக்கு வலிப்பு வந்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு நர்சிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 4 மாத பெண் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததாக பெற்றோர் செம்மஞ்சேரி போலீசார் புகார் தெரிவித்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில் மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பிடிப்பட்டது.
    ஆலந்தூர்:

    மலேசியாவில் இருந்து நேற்று நள்ளிரவு சென்னை வந்த விமானத்தில் பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆரிப்கான் (வயது47) என்ற பயணியிடம் சோதனை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அவரது சூட்கேசில் இருந்த கருப்பு நிற பையை திறந்து பார்த்தபோது அதில் 4 தங்க கட்டி துண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

    550 கிராம் எடை கொண்ட அந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.16.5 லட்சம் ஆகும். இதையடுத்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
    ×