என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாநகர் பகுதியில் முக கவசம் அணியாத 10 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ரூ.10 லட்சம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா வைரசை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது எனவும், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கலெக்டர் சி.கதிரவன் கொரோனா தொடக்கத்தின்போதே அறிவித்து இருந்தார்.

    பின்னர் முக கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அதே மாதம் 21-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.100 அபராதமும், அதே நபர் 2-ம் கட்டமாக முக கவசம் அணியாமல் வந்தால் ரூ.500 அபராதமும், 3-ம் கட்டமாக கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் கலெக்டர் கதிரவன் எச்சரித்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, முக கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள்.

    மேலும் மாநகராட்சி சார்பில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 5 மாதங்களாக ஈரோடு மாநகர் பகுதியில் முக கவசம் அணியாமல் வந்த 10 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
    பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் வழங்க நீதிபதி பரிந்துரை செய்து உள்ளார்.
    ஈரோடு:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் குடும்பத்துடன் சிவகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தார். இவருக்கு 2002-ம் ஆண்டு திருமணம் நடந்தது. மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் குடிப்பழக்கம் உடையவர். இதனால் குழந்தைகள் கண்முன்பே ஆபாசமாக நடந்து கொண்டிருந்தார்.

    இதன் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு இவருடைய மனைவி இவரை பிரிந்து குழந்தைகளுடன் வேறு பகுதிக்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 24-3-2014 அன்று மனைவியை பார்க்க அவர் வந்தார். தான் திருந்தி விட்டதாகவும், ஈரோட்டில் பூக்கடை ஒன்றில் பூ கட்டும் வேலை கிடைத்து உள்ளது. எனவே குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஈரோடு சென்று வாழலாம் என்றும் கூறினார்.

    பின்னர் அவரது மனைவி வீட்டை விட்டு வெளியே சென்று இருந்தார். அப்போது வீட்டில் 11 வயது மதிக்கத்தக்க மூத்த மகள் மட்டும் இருந்தார். அந்த சிறுமி ஏற்கனவே மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். சிறுமியின் தாயார் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்தபோது அவரது கணவர், பெற்ற மகள் என்றும் பாராமல் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துக்கொண்டு இருந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் நிலையை பார்த்து பெற்ற தாய் கதறி அழுதார்.

    பின்னர் சிறுமியை மீட்டு அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக சிவகிரி போலீஸ் நிலையத்தில் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.

    இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, பாலியல் தொந்தரவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி மாலதி பரிந்துரை செய்தார். இந்த தொகையை ஒரு மாத காலத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க கூறி, மாவட்ட கலெக்டருக்கு உத்தரவு நகல் அனுப்பப்பட்டது.

    இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜர் ஆனார். இந்த தீர்ப்பு காணொலி காட்சி மூலம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    ஈரோட்டில் திடீரென வைக்கப்பட்ட சாமி சிலைகளை அகற்றக்கோரி பெரியாரிய உணர்வாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் சிலர் அங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு அருகில் உள்ள காலி இடத்தில் புதிதாக பீடம் அமைத்து விநாயகர், முருகன், அம்மன் சிலைகளை நேற்று பிரதிஷ்டை செய்தனர்.

    இந்தநிலையில் காலி இடத்தில் சாமி சிலைகளை வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் அங்கு திரண்டனர். அவர்கள் சிலைகளை அகற்றக்கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “காளைமாட்டு சிலை பகுதியில் ஏற்கனவே பொது கழிப்பறை கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அங்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. எனவே சிலைகளை அகற்ற வேண்டும்”, என்று கூறினார்கள்.

    அதன்பிறகு அங்குள்ள சிலைகள் அகற்றப்பட்டன. மேலும், சிலைகள் வைக்கப்பட்ட பீடமும் இடிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே சிலைகள் அகற்றப்பட்ட தகவல் கிடைத்ததும் பா.ஜ.க.வினர் அங்கு திரண்டனர். அவர்கள் சிலைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அப்போது போலீசார், உரிய அனுமதியில்லாமல் சிலை வைக்கப்பட்டதால் அகற்றப்பட்டதாக விளக்கம் அளித்தனர். அதன்பின்னர் அவர்கள் திரும்பி சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
    அம்மாபேட்டை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டையில் பெண் டாக்டர் உள்பட அவருடைய குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டாக்டர் குடும்பம் வசித்து வந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதுடன், அங்கு கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது. மேலும் அம்மாபேட்டை வட்டார மருத்துவ அதிகாரி அருள்மணி தலைமையில் டாக்டர் திவாகர் அங்குராஜ், பேரூராட்சி செயல் அதிகாரி சுரேஷ்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர்கள் வள்ளிகுமார், குப்பன் ஆகியோரை கொண்ட குழுவினர் தனிமைப்படுத்த பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி அந்த பகுதியை சேர்ந்த 71 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.
    பவானி அருகே திருட்டுத்தனமாக மது விற்ற கடைகளை பெண்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    பவானி:

    பவானியை அடுத்த வரதநல்லூர் ஊராட்சியில் உள்ள சில கடைகளில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் பலர் ஒன்று திரண்டு திருட்டுத்தனமாக மது விற்பனை நடந்த கடைகளுக்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் அந்த கடைகளை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகளை பெண்கள் முற்றுகையிட்டதும், அதன் உரிமையாளர்கள் கடைகளை மூடிவிட்டு ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், ‘சமீப காலமாக வரதநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சில கடைகளில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வேலைக்கு செல்லும் ஆண்கள் வருமானம் குறைந்த நிலையிலும் மது குடிப்பதற்காக அதிக அளவில் செலவும் செய்கிறார்கள்.

    இதனால் நாங்கள் குடும்பம் நடத்த முடியாமல் போதிய வருமானமின்றி சிரமப்பட்டு வருகிறோம். எனவே திருட்டுத்தனமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்க உள்ளோம்,’ என்றனர்.

    இந்த சம்பவத்தால் வரதநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    தொடர்ந்து 3 ஆண்டுகளாக பவானி சாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டி சாதனை படைத்து உள்ளது. இதைத்தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
    பவானிசாகர்:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர்ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. அணையின் கொள்ளளவு 105 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி, அவலாஞ்சி, குந்தா, கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகள் உள்ளன.

    மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீரும் பவானிசாகர் அணைக்கு வரும்.

    பவானிசாகர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பகுதிகளை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், கோபி, புஞ்சைபுளியம்பட்டி, பவானி நகராட்சிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவையையும் இந்த அணை பூர்த்தி செய்கிறது.

    செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை பவானி சாகர் அணையில் 102 அடி தான் தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும். அதற்கு மேல் தேக்கி வைக்கக்கூடாது.

    அதன் பின்னர் நவம்பர் மாதம் 1-ந் தேதியில் இருந்து அணையில் 105 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கலாம் என்பது அரசின் விதி. ஏனென்றால் செப்டம்பர் மாதம் மழைக்காலம் என்பதால் அணைக்கு திடீரென நீர்வரத்து அதிகரிக்கும். அப்போது அணையின் பாதுகாப்பு மற்றும் பவானி ஆற்று கரையோர மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தான் 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.

    தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து 100 அடியை தாண்டி உள்ளது.

    நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 99.79 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 604 கன அடி தண்ணீர் வந்தது.

    அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 500 கன அடியும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 500 கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று மாலை 3 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 100.45 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 667 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் வினாடிக்கு 700 கன அடியும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 500 கன அடியும் என மொத்தம் 1,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    பின்னர் மாலை 4 மணி அளவில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 795 அடியாக அதிகரித்தது. இதனால் அணையில் நீர்மட்டம் 100.48 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் அணைக்கு வரும் நீர்வரத்தை பவானிசாகர் அணைப்பிரிவு உதவி பொறியாளர் சிங்காரவடிவேலு தலைமையில் பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் விரைவில் 102 அடியை எட்டி விடும் என்பதால் பவானி ஆற்று கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
    ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநகராட்சி பகுதியில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி 1,012 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 14 பேர் வேறு மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 998 ஆக மாறியது. இந்தநிலையில் நேற்று புதிதாக 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,064 ஆக உயர்ந்தது.

    இதில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் மட்டும் 43 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் கருங்கல்பாளையம், சூரம்பட்டி நால்ரோடு அண்ணாநகர், வில்லரசம்பட்டி மதுரைவீரன் நகர், நேதாஜிரோடு ஆலமரத்து வீதி, அங்காளம்மன் கோவில் வீதி, வைராபாளையம், சின்னவலசு, சூரம்பட்டி, பெரியார்நகர், ஜானகிஅம்மாள் லேஅவுட் பகுதி, பெரியவலசு, வீரப்பன்சத்திரம் பாரதிதாசன்வீதி, முத்தம்பாளையம், 46 புதூர் ஸ்ரீலட்சுமி கார்டன், லெனின் வீதி, கணபதிநகர், அகில்மேடுவீதி, அசோகபுரம் நேருவீதி, ஆர்.என்.புதூர், கிருஷ்ணம்பாளையம், மூலப்பாளையம் விநாயகர்கோவில் வீதி, திண்டல், பெரியார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதேபோல் அந்தியூர், நம்பியூர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பவானி, சித்தோடு ஆகிய பகுதிகளிலும் கொரோனா தொற்று ஏற்பட்டது. புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 367 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் கடந்த 5 நாட்களில் மட்டும் 235 பேர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்று 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது வரை மொத்தம் 680 பேர் குணமடைந்து உள்ளார்கள். மாவட்டத்தில் 17 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 55 பெண் ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் கொரோனா பாதிப்பு காரணமாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் விவரம் ஈரோடு மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டது. ஆனால் அவரது பாதிப்பு விவரம் திருப்பூர் மாவட்ட பட்டியலில் உள்ளது. எனவே அந்த பெண்ணின் இறப்பு விவரம் விரைவில் ஈரோடு மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படும்”, என்றார்.

    இதற்கிடையே ஈரோடு ஈ.வி.என்.ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஈரோடு மேற்கு கோட்ட மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வரும் முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரிய 2-ம் பகுதியை சேர்ந்த 50 வயது நபருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது வீடு உள்ள பகுதி மற்றும் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
    டி.என்.பாளையம் அருகே ஆசிட் ஊற்றி பனை மரங்களை அழித்த நபர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    டி.என்.பாளையம்:

    கோபியை அடுத்த டி.என்.பாளையம் பகுதியில் அரக்கன்கோட்டை கிளை வாய்க்கால் செல்லும் வழியில் இருபுறமும் பல்வேறு வகையான மரங்கள் வளர்ந்து உள்ளன.

    அதிலும் குறிப்பாக ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அரக்கன்கோட்டை வாய்க்கால் கரையோரம் வளர்ந்த பனை மரங்களின் குருத்துக்களை வளரவிடாமல் மர்ம நபர்கள் ஆசிட் ஊற்றி அழித்து வருகின்றனர். இதனால் பனைமரத்தின் ஓலைகள் கருகிவிட்டன.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் கூறுகையில், ‘அரக்கன்கோட்டை வாய்க்கால் கரையோரம் உள்ள பனை மரங்களை சிலர் ஆசிட் ஊற்றி அழித்து வருகிறார்கள். என்ன காரணம் என்றே தெரியவில்லை.

    அதுமட்டுமின்றி தனியார் ஒருவர் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து உள்ளார். எனவே பனை மரங்கள் மீது ஆசிட் ஊற்றி அழிப்பவர்கள் மீதும், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரியும் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளோம்.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்,’ என்றனர்.
    வாலிபரை எரித்து படுகொலை செய்து விட்டு உடலை ஈரோட்டில் வீசி சென்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இறந்த வாலிபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் கணபதிநகர் பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு வசதியாக 3 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதற்காக குப்பை தொட்டிக்கு வந்தனர்.

    அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன் கார்த்திக் குமார், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    மேலும் மோப்ப நாயும் அங்கு வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் இறந்த வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘இறந்த வாலிபரின் உடல், முகம் முதல் இடுப்பு வரை எரிந்த நிலையில் உள்ளது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. கொலையாளிகள், வேறு எங்கேயோ வைத்து எரித்து படுகொலை செய்து விட்டு உடலை இங்கு வீசிச்சென்று உள்ளனர். ஏனெனில் வாலிபர் உடல் கிடந்த இடம் அருகே தீவைத்து எரிக்கப்பட்டதற்கான எந்தவித தடயங்களும் இல்லை’ என்றனர்.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக அவர் எரித்து படுகொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றார்கள்.

    வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்டு உடலை ஈரோட்டில் வீசிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோட்டில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து 75 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், ஈரோடு மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்த போஸ்டரில், ‘கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கந்தவேல் தண்டிக்கட்டும், கொரோனாவில் இருந்து உலகம் விடுபட நாம் அனைவரது வீடுகளிலும் வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேல் பூஜை செய்திடுவோம், என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதில் ஈரோடு மாநகரில் பெரியார்நகர், பி.பி.அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு இருந்த இந்த போஸ்டரை சிலர் கிழித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் போஸ்டரை கிழித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க. சார்பில், ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு ஈ.வி.என். ரோட்டில் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். எஸ்.சி. அணி மாநில துணைத்தலைவர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், ‘போஸ்டரை கிழித்தவர்களை கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

    அதை ஏற்றுக்கொண்ட பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததால், ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் பா.ஜ.க.வினர் 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஈரோடு அருகே தாயை அடித்து கொன்ற 2 மகன்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சரோஜா (வயது 48). கூலித்தொழிலாளி. இவர்களுக்கு விக்னேஷ் (27), அருண்குமார் (23) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் விக்னேஷ் டிரைவராகவும், அருண்குமார் பிளம்பராகவும் வேலை செய்து வருகிறார்கள். கணேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். 

    கடந்த 4-ந் தேதி நள்ளிரவில் விக்னேஷ், அருண்குமார் ஆகியோர் குடிபோதையில் வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டில் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை எடுத்து செலவு செய்த சரோஜாவை 2 மகன்களும் கண்டித்து உள்ளனர். இதில் அவர்களுக்கும், சரோஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த விக்னேசும், அருண்குமாரும் இரும்பு கம்பியை எடுத்து சரோஜாவை தாக்கினார்கள். 

    வலி தாங்க முடியாமல் அலறிய சரோஜாவின் சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதனால் சரோஜாவை அவரது 2 மகன்களும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டு தனியார் ஆம்புலன்சில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர்.

    இதற்கிடையே சரோஜா இறந்ததால், அவரது உடலை சூரம்பட்டி வலசு மயானத்துக்கு கொண்டு சென்று புதைத்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சூரம்பட்டி போலீசார் நேற்று முன்தினம் மாலை மயானத்துக்கு சென்றனர். அங்கு வருவாய்த்துறையினரின் முன்னிலையில் சரோஜாவின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரோஜாவின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து சந்தேக மரணமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட விக்னேஷ், அருண்குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சரோஜாவை 2 மகன்களும் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கொலை வழக்காக மாற்றிய போலீசார், தாயை அடித்து கொன்றதாக விக்னேஷ், அருண்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

    பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால், உபரி நீர் திறக்கப்பட உள்ளதாக ஆற்றங்கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. நீலகிரியில் பெய்யும் கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    105 அடி கொண்ட பவானிசாகர் அணை நீர்வரத்து அதிகரிப்பால் தினமும் 2 அடி உயர்ந்து 91.75 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 24,112 கனஅடியில் இருந்து 29,667 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால், உபரி நீர் திறக்கப்பட உள்ளதாக பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    ×