என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே யானை தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆசனூர் பகுதியை சேர்ந்தவர் சிக்கண்ணா (வயது 40). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ஆசனூர் மலைப்பகுதியில் காணாமல்போன பசுவை தேடி வனப்பகுதிக்கு  சென்றார். . அப்போது அந்த வழியாக வந்த யானை சிக்கண்ணாவை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிக்கண்ணா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
    கோபியில் செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 74). சம்பவத்தன்று இவரது வீட்டின் அருகே 8 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தாள். இதனைப்பார்த்த சண்முகம் அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்தார். பின்னர் அவர் தனது செல்போனில் இருந்த ஆபாச படங்களை பார்க்கும்படி சிறுமியிடம் காட்டியுள்ளார்.

    ஆனால் அந்த சிறுமி பார்க்க மறுத்துள்ளார். பின்னர் சண்முகம் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதார். உடனே அவர்கள் இதுபற்றி கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் சண்முகம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் இறந்த பிரவுனி என்ற நாய்க்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து பொதுமக்கள் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தினர்.
    ஈரோடு:

    ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளன. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் பிரவுனி என்கிற வெள்ளையன் என்ற ஆண் நாயை செல்லமாக வளர்த்து வந்தனர். பிரவுனி எஸ்.கே.சி. ரோடு முழுவதும் சுற்றித்திரிந்து அந்த பகுதி மக்களை பாதுகாத்து வந்ததோடு மிகவும் பாசமாகவும் இருந்துள்ளது. அந்த நாய்க்கு பொதுமக்கள் தினமும் உணவு வழங்கி வந்தனர்.

    இவ்வாறு செல்லமாக வளர்ந்த அந்த நாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவால் இறந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் வேதனை அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் எஸ்.கே.சி. ரோட்டில் இறந்த பிரவுனிக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து தங்களது துக்கத்தை வெளிப்படுத்தினர்.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘பிரவுனி நாய் எங்கள் பகுதியின் செல்லப்பிள்ளையாக வளர்ந்து வந்தது. இரவு நேரத்தில் எங்கள் பகுதி முழுவதும் சுற்றி வந்து எங்களை பாதுகாத்து வந்தது. பிரவுனியால் எங்களுக்கு எந்த தொந்தரவும் வந்ததில்லை. எங்கள் பகுதி மக்கள் அனைவரது முகத்தையும் நன்கு அடையாளம் தெரிந்து வைத்திருந்தது. வெளி ஆட்கள் யாரேனும் உள்ளே வந்தால் குரைத்து விரட்டி விடும். பிரவுனி இறந்தது எங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்று உள்ளது’ என்றனர்.
    ஈரோட்டில் ஐம்பொன் முருகர் சிலையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரி நகர் கல்யாணசுந்தரம் வீதியில் வெற்றி விநாயகர் கோவில் உள்ளது இந்த கோவிலில் மூலவர் விநாயகரும், அவருக்கு அருகில் ஒரு அடி உயரம் உள்ள ஐம்பொன்னாலான முருகர் உற்சவர் சிலையும் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக கோவில் மூடப்பட்டு இருந்தது.

    கோவில் பூசாரி, கால பூஜைகள் மட்டும் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி பகுதியில் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக வருமானம் உள்ள கோவில்களை திறக்கலாம் என அரசு அனுமதி அளித்தது. அதன்படி வெற்றி விநாயகர் கோவில் மீண்டும் திறக்கப்பட்டு, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பூசாரி கோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு வழக்கம்போல் பூட்டி சென்றார். நேற்று அதிகாலை மீண்டும் கோவிலை திறப்பதற்காக பூசாரி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலில் உள்ள ஐம்பொன்னாலான ஒரு அடி உயரம் உள்ள முருகர் சிலை மாயமானதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    போலீசார் விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கிரில் கேட் ஓட்டை வழியாக ஐம்பொன்னால் ஆன முருகர் சிலையை தூக்கி சென்றது தெரிய வந்துள்ளது. திருட்டுப்போன முருகர் சிலையின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஐம்பொன் சிலையை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு கோப்பெருந்தேவி வீதியை சேர்ந்தவர் மக்தும் கான் (வயது 41). மெக்கானிக். கொரோனா ஊரடங்கு காரணமாக இவருக்கு சரிவர வேலை கிடைக்கவில்லை. இதனால் போதிய வருமானம் இன்றி குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த மக்தும் கான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று முன்தினம் விஷம் குடித்து விட்டார். வீட்டில் மயங்கியபடி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மக்தும் கான் இறந்தார்.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோட்டில் பாதாள சாக்கடை பணியின் போது மண்சரிந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    ஈரோடு:

    ஈரோடு நேதாஜி ரோடு முனிசிபல் சத்திரம் பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அந்த பகுதியில் சுமார் 15 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்த பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு இருந்தனர்.

    ஈரோடு அருகே உள்ள லக்காபுரம் பகுதியை சேர்ந்த சின்ராசு என்பவரது மகன் ஆனந்த் (வயது 24) என்பவர் குழிக்குள் இறங்கி குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து அவர் மீது விழுந்தது. குழி முழுவதுமாக மூடியதால் அவர் வெளியில் வரமுடியாதபடி மண்ணுக்குள் புதைந்து சிக்கிக்கொண்டார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மண்சரிவில் சிக்கிய ஆனந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணிக்காக பொக்லைன் எந்திரம் பயன்படுத்தப்பட்டது. மீட்பு பணி நடக்கும் பகுதியில் 108 ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

    சுமார் 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு ஆனந்தை தீயணைப்பு துறையினர் மீட்டனர். அப்போது 108 ஆம்புலன்சு மருத்துவ குழுவினர் ஆனந்தின் உடலை பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சூரம்பட்டி போலீசார் ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மண் சரிவில் சிக்கி ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு கல்யாணசுந்தரனார் வீதிப்பகுதியில் உள்ள வெற்றிவேல் முருகன் கோயிலில் இருந்த பழமையான ஐம்பொன்னால் ஆன உற்சவர் முருகன் சிலையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளன.
    ஈரோடு:

    ஈரோடு கல்யாணசுந்தரனார் வீதிப்பகுதியில் உள்ள வெற்றிவேல் முருகன் கோயிலில் இருந்த பழமையான ஐம்பொன்னால் ஆன உற்சவர் முருகன் சிலையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளன.

    இன்று அதிகாலை பூஜைக்காக கோயிலை திறக்க வந்த பூசாரி, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததையும், உற்சவர் சிலை திருடப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கோயில் நிர்வாகிகளுடன் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்ததன் பேரில், சிலையை திருடிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    தாளவாடி அருகே மீண்டும் சிறுத்தை நடமாடியதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்தில் தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம், மல்குத்திபுரம் உள்பட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று இங்குள்ள கிராமத்துக்குள் புகுந்து 10-க்கும் மேற்பட்ட ஆடுகளையும், 20-க்கும் மேற்பட்ட நாய்களையும் அடித்து கொன்று அட்டகாசம் செய்து வந்தது. இதைத்தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்த நிலையில் சூசைபுரத்தை சேர்ந்த முத்தன் என்ற விவசாயி தன்னுடைய தோட்டத்துக்கு சென்று உள்ளார். அப்போது அவருடைய தோட்டத்தை சிறுத்தை ஒன்று கடந்து சென்றதை நேரில் கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ஊருக்குள் வந்து நடந்ததை கூறினார். இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு பதிவான கால் தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தையின் கால் தடம்தான் என உறுதி செய்தனர். தாளவாடி அருகே மீண்டும் சிறுத்தை நடமாடியதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.
    அந்தியூர் கரட்டுப்பாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தரை தளம் அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
    அந்தியூர்:

    அந்தியூர் கரட்டுப்பாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தரை தளம் அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவுக்கு அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் பொது மேலாளர் கணபதி, கிளை மேலாளர்கள் ஜெகதீஸ், கேசவன், கிளை செயலாளர் குமரவேல், ஒன்றியக்குழு தலைவர் வளர்மதி தேவராஜ், பேரூராட்சி முன்னாள் தலைவர் டி.எஸ்.மீனாட்சி சுந்தரம், கூட்டுறவு சங்க தலைவர்கள் கிருஷ்ணன், பால்சாமி, மோகன், சண்முகானந்தம், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் குருராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வந்தது. இதைத்தொடர்ந்து அணையின் நீர்மட்டம் கடந்த 10-ந் தேதி 100 அடியை தாண்டியது.

    தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிக்கு மேல் இருந்து வந்தது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் 101 அடியை தாண்டியது.

    இந்நிலையில் பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் பாசனத்திற்கு நீர் திறக்கப்படுகிறது.

    அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், ஆட்சியர் கதிரவன் உள்ளிட்டோர் அணையை திறந்து வைத்தனர்.

    120 நாட்களுக்கு திறக்கப்படும் நீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் பகுதியிலுள்ள 1,03,500 ஏக்கர் நிலம் பயன்பெறும்.

    பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 101 அடியாக உயர்ந்துள்ளது.
    பவானிசாகர்:

    தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையும், ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக நீலகிரி மலைப்பகுதி, குந்தா, கூடலூர், எமரால்டு ஆகிய பகுதிகள் உள்ளன. அணையின் கொள்ளளவு 105 அடியாகும்.

    அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதுமட்டுமின்றி ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் இந்த அணையின் தண்ணீர் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வந்தது. இதைத்தொடர்ந்து அணையின் நீர்மட்டம் கடந்த 10-ந் தேதி 100 அடியை தாண்டியது.

    எனினும் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிக்கு மேல் இருந்து வந்தது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் நேற்று 101 அடியை தாண்டியது.

    நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 100.86 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 144 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 700 கன அடியும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 500 கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.16 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 428 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 700 கன அடியும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 500 கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை தாண்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 
    ஈரோட்டில் ரூ.75 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காவை எம்.எல்.ஏ.க்கள் திறந்து வைத்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட மோளகவுண்டன்பாளையம் கரூர் ரோடு பகுதியில் போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கோவையில் அமைக்கப்பட்டு உள்ள போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா மாதிரியில் ஈரோடு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் ஆலோசனையின் பேரில் இந்த பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

    20 ஆயிரத்து 759 சதுர அடி பரப்பளவில், ரூ.75 லட்சம் செலவில் பூங்கா கட்டமைப்புகள் செய்யப்பட்டு உள்ளன. சாலைகளில் பொதுமக்கள் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய அனைத்து வகையான போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் விதிமுறைகளை ஒரே இடத்தில் அனுபவப்பூர்வமாக உணர்ந்து தெரிந்து கொள்ளும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த பணிகள் முடிந்து நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு அகியோர் கலந்து கொண்டு போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டனர். ஈரோடு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டும், தற்போதைய நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுமான எஸ்.சக்திகணேசன் சிறப்பு அழைப்பாளராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், பகுதி செயலாளர்கள் மனோகரன், கேசவமூர்த்தி, ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×