என் மலர்tooltip icon

    ஈரோடு

    இ-பாஸ் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளுக்காக அண்டை மாவட்டங்களில் இருந்து வருபவர்களை போலீசார் எச்சரித்து அனுப்புகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்துக்கு வரும் வெளி மாவட்ட வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகள் வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் இ-பாஸ் அனுமதி பெற்று உள்ளதா என்று சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. சிலர் இ-பாஸ் இல்லாமல் சோதனை சாவடிகளை கடந்து வருகிறார்கள். அத்தியாவசிய தேவைகளுக்காக அண்டை மாவட்டங்களில் இருந்து வரும் இதுபோன்றவர்களை போலீசார் எச்சரித்து அனுப்புகிறார்கள்.

    நேற்று கருங்கல்பாளையம் காவிரிக்கரை சோதனைச்சாவடியில் போலீசார் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தே ஈரோடு நகருக்குள் செல்ல அனுமதி அளித்தனர்.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைய மூட ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவால் ம.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
    ஈரோடு:
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. சட்டரீதியான இந்த வெற்றி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் இந்த தீர்ப்பால் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    ஈரோட்டில் ம.தி.மு.க.வினர் தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்தும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் முயற்சி வெற்றி பெற்றதாகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். தீர்ப்பு வெளி வந்த சிறிது நேரத்தில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு ம.தி.மு.க. அலுவலகம் முன்பு அந்த கட்சியினர் பட்டாசு வெடித்தனர்.
    ஈரோட்டில் சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.
    ஈரோடு:

    ஈரோடு கே.கே.நகரில் உள்ள சுப்பிரமணிய நகரில் கோடீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. அங்கு நேற்று இரவு 7 மணிஅளவில் ஊழியர்கள் சிப்ஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அடுப்பில் இருந்து பரவிய தீ அருகில் உள்ள சுவற்றில் படிந்து இருந்த எண்ணெய் மீது பற்றியது. மேலும், சிமெண்டாலான மேற்கூரையிலும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. உடனடியாக ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறி உயிர் தப்பினார்கள்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரம் போராடிய அவர்கள் தீயை முழுமையாக அணைத்தனர். இந்த விபத்தில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.
    ஈரோட்டில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. பெண்கள் ஆர்வமாக பார்த்து தங்களுக்கு தேவையான சிலைகளை வாங்கிச்சென்றனர்.
    ஈரோடு:

    நாடு முழுவதும் வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி வீடுகளில் வழிபாடு செய்வதற்கு வசதியாக சிலைகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    ஈரோட்டில் பிரப்ரோடு பகுதியில் நேற்று ஏராளமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. ரூ.150 முதல் ரூ.2 ஆயிரம் வரை விலையில் விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் வைக்கப்பட்டு இருந்தன. இதனை பெண்கள் ஆர்வமாக பார்த்து தங்களுக்கு தேவையான விநாயகர் சிலைகளை வாங்கிச்சென்றனர்.
    3 மாவட்டங்களை வாழவைக்கும் மண்ணால் கட்டப்பட்ட பவானிசாகர் அணைக்கு இன்று வயது 66 ஆகிறது.
    பவானிசாகர்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையோடு பவானிசாகர் அணை அமைந்துள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்றபின் 1948-ம் ஆண்டு பவானி ஆறும், மோயாறும் கலக்கும் இடத்தில் ரூ.10 கோடியே 50 லட்சம் செலவில் அணையின் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமானப்பணி 1955-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் தேதி நிறைவு பெற்றது. அப்போதைய சென்னை மாகாண முதல்-அமைச்சர் காமராஜர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    தமிழகத்தில் தஞ்சை டெல்டா பாசனத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பாசனப்பரப்பு கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இதுதவிர பவானி ஆற்று பாசனத்தில் தடப்பள்ளி வாய்க்கால் மூலம் 17 ஆயிரத்து 654 ஏக்கர் நிலங்களும், அரக்கன் கோட்டை வாய்க்கால் மூலம் 6 ஆயிரத்து 850 ஏக்கர் நிலங்களும், காலிங்கராயன் வாய்க்கால் மூலம் 17 ஆயிரத்து 776 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

    அணையில் 32.8 டிஎம்சி வரை நீரை தேக்கி வைக்க முடியும். கரையின் நீளம் சுமார் 8.78 கிலோ மீட்டராகும். பவானிசாகர் அணையின் மொத்த உயரம் 120 அடி. இதில் சேறு கழித்து 105 அடி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அணையின் முழுத்தேக்க நீர்ப்பரப்பு 30 சதுர மைல்கள். கீழ்பவானி பிரதானக்கால்வாயின் நீளம் 200 கிலோமீட்டராகும். பிரதான கால்வாயிலிருந்து 800 கிலோமீட்டர் நீளத்திற்கு கிளைவாய்க்கால்களும், 1,900 கிலோ மீட்டர் நீளத்திற்கு பகிர்மான வாய்க்கால்களும் வெட்டப்பட்டுள்ளன. அணையில் ஆற்று மதகுகள் 9-ம், கீழ்பவானி வாய்க்கால் மதகுகள் 3-ம், நீர் வழிந்தோடி மதகுகள் 9-ம் அமைக்கப்பட்டுள்ளன.

    பவானி ஆற்றின் மதகுகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் மூலம் 8 மெகாவாட் மின்சாரமும், கீழ்பவானி வாய்க்காலில் வெளியேற்றப்படும் நீரின் மூலம் 8 மெகாவாட் மின்சாரமும் என மொத்தம் 16 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இத்தகைய பெருமை வாய்ந்த பவானிசாகர் அணையின் கட்டுமான பணி நடைபெற்ற போது 1953-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவும், ராஜாஜியும் கட்டுமான பணியை நேரில் பார்வையிட்டுள்ளனர். 1950 களிலேயே மிக உயரிய தொழில்நுட்பமுள்ள எந்திரங்களை அணை கட்டுமான பணிக்கு பயன்படுத்தியுள்ளனர்.

    இதற்கு தேவையான எந்திரங்கள் லண்டனிலிருந்து வரவழைக்கப்பட்டது என அணை கட்டுமான பணிக்கு சென்ற அப்பகுதி பெரியவர்கள் கூறுகின்றனர்.

    முற்றிலும் மண்ணாலான இந்த அணை 65 ஆண்டுகளை கடந்தும் சிறிதுகூட விரிசல் ஏற்படாமல் உறுதித்தன்மையுடன் உள்ளது. இந்த அணை கட்டப்பட்டதால் 3 மாவட்டங்களில் தரிசுநிலங்கள் நஞ்சை நிலங்களாக மாறின. லட்சக்கணக்கான விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை குடிநீர் ஆதாரம் கிடைத்தது. ஈரோடு மாவட்டத்தின் அடையாளமாக இருக்கும் இந்த மண் அணை இன்று 66-வது வயதில் அடியெடுத்து வைக்கிறது. ஈரோடு கரூர், திருப்பூர் என 3 மாவட்டங்களை வாழவைக்கும் பவானிசாகர் அணை இன்னும் பல நூறாண்டுகள் நிலைத்து நிற்கவேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகள், பொதுமக்களின் நியாயமான ஆசை.
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    ஈரோடு:

    இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

    கொரோனா பாதிப்பு தன்மையை பொறுத்து மாநில அரசாங்கம் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

    தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும்.

    ஆசிரியர் தகுதித்தேர்வில் தற்போதைய நடைமுறை தொடரும் என்றும் அதில் மாற்று வழிக்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறினார்

    ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,582 ஆக உயர்ந்தது.
    ஈரோடு:

    தமிழகத்தில் சென்னை, மதுரை என்று உக்கிரம் காட்டிய கொரோனா தாக்கம் தற்போது ஈரோடு மாவட்டத்தை முற்றுகையிட தொடங்கி இருக்கிறது. தொடக்கத்தில் மற்ற மாவட்டங்களை விட மிகவும் குறைவான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இருந்தது. ஆனால், சமீபகாலமாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு மேலாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினசரி 100 பேருக்கும் மேலாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,445 ஆக இருந்தது. 24 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் வரை 895 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணம் அடைந்து உள்ளனர். 526 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,582 ஆக உயர்ந்து உள்ளது.

    நேற்று 9 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினார்கள். கடந்த 15-ந்தேதி இறந்த 87 வயது முதியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சில தனியார் ஆஸ்பத்திரிகளில் 653 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முழு நேர கொரோனா வைரஸ் சிறப்பு ஆஸ்பத்திரியாக உள்ளது. அங்கு 500 படுக்கைகள் மட்டுமே கொரோனா நோயாளிகளுக்காக போடப்பட்டு இருந்தது.

    தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 500-ஐ கடந்து விட்டதால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கும் சுமார் 200 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளது. எனவே இன்னும் கொரோனா நோயாளிகள் அதிகரிக்கும் போது சிகிச்சை அளிக்க கூடுதல் இடம் தயார் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். அடுத்த கட்டமாக கொரோனா நோயாளிகள் அதிகரிக்கும்போது பெருந்துறையில் உள்ள திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தற்போதைய நிலையில் கூடுதலாக 1000 படுக்கைகள் வரை தயார்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இதுபற்றி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறும்போது, ‘தற்போதைய நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த தாக்கம் ஓரிரு வாரங்களுக்கு அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதியவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலக்கட்டம் இது. காய்ச்சல் பாதிப்பு இருந்தாலே அது கொரோனாவின் அறிகுறிதான்.

    எனவே அசட்டை செய்யாமல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காய்ச்சல், சளி பிரச்சினை இருந்தால் உடனடியாக தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் கொரோனா பரவலை தவிர்க்க முடியும். கொரோனா பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எனினும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுடன் இருந்து கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.
    பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் நீர்மட்டம் 101.92 அடியாக குறைந்தது.
    பவானிசாகர்:

    ஈரோடு மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக பவானிசாகர் அணையாக உள்ளது. இதன் மொத்த நீர்பிடிப்பு உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர் பவானிசாகர் அணைக்கு வருகிறது.

    இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த 9-ந் தேதி பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து 14-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 548 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 101.99 அடியாக இருந்தது.

    இந்த நிலையில் நேற்று அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. மாலை 4 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 678 கனஅடி தண்ணீர் வந்தது. அதே நேரம் கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. வினாடிக்கு 1,700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 101.92 அடியாக குறைந்தது.
    ஈரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை மற்றும் போலீசார் செங்குட்டுவன் வீதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி 2 பேர் நின்றிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். 

    விசாரணையில் அவர்கள், தொப்பையர் வீதியை சேர்ந்த முகமது மீரான் (வயது 38), செங்குட்டுவன் வீதியை சேர்ந்த மோகனா (36) ஆகியோர் என்பதும், அவர்கள் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. 

    இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா விஸ்வரூபம் எடுக்கிறது. ஒரே நாளில் 103 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. 4 பேர் பலியானார்கள்.
    ஈரோடு:

    கொரோனாவின் தாக்கம் ஈரோடு மாவட்டத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினமும் ஒற்றை அல்லது இரட்டை இலக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. கடந்த 14-ந் தேதி புதிய உச்சமாக 128 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் மீண்டும் கொரோனா தனது விஸ்வரூப முகத்தை காட்டி வருகிறது. நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,445 ஆக உயர்ந்தது.

    இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட வீரப்பன்சத்திரம், கொல்லம்பாளையம், மாணிக்கம்பாளையம், என்.ஜி.ஜி.ஓ.காலனி, சூரம்பட்டி, கணபதிநகர், சின்னமுத்துவீதி, இந்திரா வீதி, சோழா நகர், வெட்டுக்காட்டுவலசு, வைரபாளையம், சூளை வி.ஜி.பி.நகர், கிருஷ்ணம்பாளையம், சாஸ்திரிநகர், மூலகவுண்டன்பாளையம், கொங்கம்பாளையம், மூலப்பாளையம், கோணவாய்க்கால், கருங்கல்பாளையம், திருநகர்காலனி, ரங்கம்பாளையம், ஈ.பி.பி.நகர், அம்பிகைநகர், இந்திராநகர், திண்டல், காமதேனுநகர், காசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 54 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டார்கள்.

    இதேபோல் பவானியில் 10 பேரும், சென்னிமலையில் 2 பேரும், சித்தோட்டில் 5 பேரும், கோபிசெட்டிபாளையத்தில் 4 பேரும், கொடுமுடியில் 7 பேரும், மொடக்குறிச்சியில் 5 பேரும், பெருந்துறையில் 6 பேரும், புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம், தாளவாடி, டி.என்.பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்கள்.

    இதில் 42 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போதுவரை 895 பேர் குணமடைந்து உள்ளனர். 526 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மாவட்டத்தில் கொரோனாவுக்கு 20 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 4 பேர் பலியானார்கள். இதில் பெருந்துறையை சேர்ந்த 53 வயது நபர் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 12-ந் தேதி பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் 13-ந் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதேபோல் பவானியை சேர்ந்த 67 வயது முதியவர், ஈரோடு மாநகராட்சி பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர், நம்பியூரை சேர்ந்த 62 வயது முதியவர் ஆகியோர் கொரோனா பாதிப்பு காரணமாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் 3 பேரும் கடந்த 14-ந் தேதி சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். 4 பேர் உயிரிழந்ததால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.
    அந்தியூர் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி வைத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூர்:

    அந்தியூரை அடுத்த மாத்தூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூரில் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டபோது 12 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் வீட்டின் உரிமையாளர் வரதராஜ் (வயது 58) என்பவர் விற்பனைக்காக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதராஜை கைது செய்தனர்.
    ஈரோடு மற்றும் பெருந்துறை பகுதியில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. புதிய உச்சமாக நேற்று முன்தினம் மாவட்டத்தில் 128 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது. இந்த நிலையில் நேற்று கொரோனா வைரசின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் நேற்று புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் வரை ஈரோடு மாவட்ட பட்டியலில் 1,334 பேர் இருந்த நிலையில் இந்த எண்ணிக்கை நேற்று 1,349 ஆக உயர்ந்தது. மேலும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, ஈரோடு பெருந்துறை பகுதியை சேர்ந்த 53 வயது ஆணும், ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்த 90 வயது முதியவரும் நேற்று கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர்.

    புதிதாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் 10 பேரும், சித்தோடு பகுதியில் 3 பேரும், கோபி மற்றும் பெருந்துறை பகுதிகளில் தலா ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்த 23 வயது வாலிபருக்கும், பெரியசேமூர் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவனுக்கும், வீரப்பன்சத்திரம் சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த 42 வயது ஆணுக்கும், அசோகபுரம் பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டிக்கும், கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்த 30 வயது இளைஞருக்கும், சூரம்பட்டி நால்ரோடு பகுதியை சேர்ந்த 50 வயது ஆணுக்கும், சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

    மேலும் ஈரோடு பெருந்துறை ரோடு பகுதியை சேர்ந்த 54 வயது ஆணுக்கும், எஸ்.கே.சி. ரோடு பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண்ணுக்கும், கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த 63 வயது முதியவருக்கும், பெருந்துறை சென்னிமலை ரோடு பகுதியை சேர்ந்த 53 வயது ஆணுக்கும், சித்தோடு செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்த 42 வயது ஆணுக்கும், சித்தோடு எலவமலை பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபருக்கும், வசுவபட்டி பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும், கோபிசெட்டிபாளையம் பச்சமலை பகுதியை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கும் என மொத்தம் 15 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

    இதில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 4 பேருக்கும், தொடர்பில்லாமல் 11 பேருக்கும் கொரோனா தொற்று பரவி உள்ளது. அதே நேரம் நேற்று ஒரே நாளில் 54 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்றது சற்று ஆறுதல் அளிக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,349 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, 853 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். தற்போது 476 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
    ×