search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 5 ஆண்டு ஜெயில் - ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

    பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் வழங்க நீதிபதி பரிந்துரை செய்து உள்ளார்.
    ஈரோடு:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் குடும்பத்துடன் சிவகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தார். இவருக்கு 2002-ம் ஆண்டு திருமணம் நடந்தது. மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் குடிப்பழக்கம் உடையவர். இதனால் குழந்தைகள் கண்முன்பே ஆபாசமாக நடந்து கொண்டிருந்தார்.

    இதன் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு இவருடைய மனைவி இவரை பிரிந்து குழந்தைகளுடன் வேறு பகுதிக்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 24-3-2014 அன்று மனைவியை பார்க்க அவர் வந்தார். தான் திருந்தி விட்டதாகவும், ஈரோட்டில் பூக்கடை ஒன்றில் பூ கட்டும் வேலை கிடைத்து உள்ளது. எனவே குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஈரோடு சென்று வாழலாம் என்றும் கூறினார்.

    பின்னர் அவரது மனைவி வீட்டை விட்டு வெளியே சென்று இருந்தார். அப்போது வீட்டில் 11 வயது மதிக்கத்தக்க மூத்த மகள் மட்டும் இருந்தார். அந்த சிறுமி ஏற்கனவே மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். சிறுமியின் தாயார் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்தபோது அவரது கணவர், பெற்ற மகள் என்றும் பாராமல் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துக்கொண்டு இருந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் நிலையை பார்த்து பெற்ற தாய் கதறி அழுதார்.

    பின்னர் சிறுமியை மீட்டு அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக சிவகிரி போலீஸ் நிலையத்தில் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.

    இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, பாலியல் தொந்தரவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி மாலதி பரிந்துரை செய்தார். இந்த தொகையை ஒரு மாத காலத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க கூறி, மாவட்ட கலெக்டருக்கு உத்தரவு நகல் அனுப்பப்பட்டது.

    இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜர் ஆனார். இந்த தீர்ப்பு காணொலி காட்சி மூலம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×