என் மலர்tooltip icon

    ஈரோடு

    கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி மர்மநபர் கொடுத்த மாத்திரையை தின்றதில் மேலும் 2 பெண்கள் இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குடும்ப நண்பர் மற்றும் கல்லூரி மாணவர் ஒருவரை போலீசார் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கே.ஜி.வலசு பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் கருப்பண கவுண்டர் (வயது 75). இவருடைய மனைவி மல்லிகா (58). இவர்களுடைய மகள் தீபா (30). தீபாவின் கணவர் பிரபு.

    தீபாவும், பிரபுவும், கருப்பண கவுண்டர் வீட்டிலேயே வசித்து வந்தனர். பிரபுவுக்கு லோகித் என்ற மகனும், லட்சிதா என்ற மகளும் உள்ளனர்.

    நேற்று முன்தினம் காலை சென்னிமலைக்கு பிரபு சென்றுவிட்டார். அப்போது மர்ம நபர் ஒருவர் கருப்பண கவுண்டர் வீட்டுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி கருப்பண கவுண்டர், அவரது மனைவி மல்லிகா, மகள் தீபா மற்றும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குப்பம்மாள் (65) ஆகிய 4 பேருக்கும் மாத்திரை கொடுத்துள்ளார். அவர்களும் அந்த மாத்திரையை வாங்கி சாப்பிட்டனர். ஆனால் அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அந்த பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் (43) என்பவர் ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்து விட்டதால் தனக்கு மாத்திரை தேவையில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் அவர் மாத்திரையை சாப்பிடவில்லை.

    பின்னர் அந்த மர்ம நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதற்கிடையே மாத்திரை சாப்பிட்ட தீபாவுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், உடனே அவர் இதுபற்றி தனது கணவர் பிரபுவுக்கு தெரிவித்து உள்ளார். உடனே பிரபு வீட்டுக்கு காரில் விரைந்து சென்று மயங்கி விழுந்த கிடந்த கருப்பண கவுண்டர், மல்லிகா, தீபா, குப்பம்மாள் ஆகியோரை மீட்டு சென்னிமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் மல்லிகா பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து குப்பம்மாள், சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், கருப்பண கவுண்டர், தீபா ஆகியோர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குப்பம்மாள், கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தீபாவும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 2 பெண்கள் இறந்ததால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாத்திரை கொடுத்த மர்ம நபர் யார் என விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இதுதொடர்பாக கொலையாளியை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தும் தீவிர தேடுதல் வேலையில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே கருப்பண கவுண்டரின் குடும்ப நண்பர் மற்றும் சென்னிமலை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரையும் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி சென்னிமலை அருகே உள்ள கருப்பண கவுண்டர் தோட்டத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
    கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி மர்மநபர் கொடுத்த மாத்திரையை வாங்கி தின்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பாதிக்கப்பட்ட 3 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் கருப்பணகவுண்டர் (வயது 75). விவசாயி. இவருடைய மனைவி மல்லிகா (58), மகள் தீபா (30). தீபாவுக்கு திருமணம் ஆகி கணவர் பிரபு (வயது 35) என்பவருடன் தனது தந்தை வீட்டிலேயே வசித்து வருகிறார். இவர்களுக்கு லோகித் (4) என்ற மகனும், லட்சிதா (1) என்ற மகளும் உள்ளனர். நேற்று காலை தீபாவின் கணவர் பிரபு சென்னிமலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் கருப்பணகவுண்டர், அவரது மனைவி மல்லிகா, மகள் தீபா மற்றும் இரு குழந்தைகளும் வீட்டில் இருந்தனர்.

    அப்போது இவர்களுடன் தோட்டத்தில் வேலை செய்யும் குப்பம்மாள் (65) என்ற பெண் மற்றும் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் (43) ஆகியோரும் இருந்துள்ளனர். காலை 8 மணிஅளவில் சுமார் 25 வயதுடைய வாலிபர் ஒருவர் அங்கு வந்து கருப்பணகவுண்டர் வீடு இதுதானே என்று கேட்டுள்ளார். அதற்கு வீட்டில் இருந்தவர்கள் ஆமாம் என கூறியுள்ளனர்.

    அப்போது அந்த வாலிபர், நான் உங்களை கொரோனா பரிசோதனை செய்ய வந்துள்ளேன். பரிசோதனை செய்வதற்கு முன் மாத்திரை சாப்பிட வேண்டும் என்று சில மாத்திரைகளை கொடுத்துள்ளார். பல இடங்களில் கொரோனா பரிசோதனை நடந்து வருவதால் இதனை அவர்கள் நம்பி விட்டனர். அந்த வாலிபர் கொடுத்த கருப்பு நிற மாத்திரைகளை கருப்பணகவுண்டர், மல்லிகா, தீபா மற்றும் குப்பம்மாள் ஆகியோர் சாப்பிட்டுள்ளனர்.

    ஆனால் கல்யாணசுந்தரம் ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்துள்ளதால் எனக்கு வேண்டாம் என கூறியுள்ளார். பின்னர் மாத்திரை சாப்பிட்ட 4 பேரையும் ஒரு கருவி மூலம் பரிசோதனை செய்த வாலிபர் யாருக்கும் கொரோனா இல்லை என கூறினார். பின்னர் தன்னை அந்த ஊரின் மெயின்ரோடு வரை கொண்டு சென்று விட்டுவிடுமாறு கல்யாணசுந்தரத்திடம் கூறி உள்ளார். உடனே அவர் மோட்டார் சைக்கிளில் மெயின்ரோடு வரை கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தார்.

    அந்த வாலிபர் சென்ற சிறிது நேரத்தில் மாத்திரை சாப்பிட்ட 4 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கார் மூலம் சென்னிமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் மல்லிகா பரிதாபமாக இறந்தார். குப்பம்மாள் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், கருப்பணகவுண்டர், தீபா ஆகியோர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளர். நல்லவேளையாக குழந்தைகள் இருவருக்கும் மாத்திரை கொடுக்காததால் அவர்கள் தப்பித்தனர்.

    பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித் சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வாலிபர் கொள்ளையடிக்கும் நோக்கில் வந்தாரா? ஒருவர் மட்டும் மாத்திரை சாப்பிடாததால் மாட்டிவிடுவோம் என்ற பயத்தில் நைசாக அங்கிருந்து தப்பிச்சென்றாரா? வீட்டின் உரிமையாளர் பெயரை சொல்லி கேட்டதால் அந்த பகுதியை சேர்ந்தவராக இருக்குமா? அவர் யார்? என்பதை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ஈரோட்டில் பணம் வைத்து சூதாடியது தொடர்பாக 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.9 ஆயிரத்து 70ஐ பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு நாராயண வலசு பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக, வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் சூதாடிக்கொண்டு இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள், ஈரோடு கைகாட்டிவலசு பகுதியை சேர்ந்த தவமணி (வயது 52), பெரிய வலசு பகுதியை சேர்ந்த பழனியப்பன் (60), மூர்த்தி கவுண்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த செந்தில் (39), நாராயண வலசு பகுதியை சேர்ந்த ராஜா (53), விவேகானந்தர் சாலை பகுதியை சேர்ந்த மாதேஷ் (36), திருமால் நகர் பகுதியை சேர்ந்த கணேசன் (50), வாஞ்சிநாதன் நகர் பகுதியை சேர்ந்த மணி (50), வெட்டுகாட்டுவலசு மடிக்காரர் காலனி பகுதியை சேர்ந்த சண்முகம் (55) ஆகியோர் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சீட்டுக் கட்டுகள் மற்றும் ரூ.9 ஆயிரத்து 70 பறிமுதல் செய்யப்பட்டன.
    வெள்ளித்திருப்பூர், சேவாகவுண்டனூர் பகுதியில் நடந்த வாகன சோதனையில் கர்நாடக மது கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் தொட்டி கிணறு சோதனைச்சாவடியில் வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லக்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    இதில் அவரிடம் 66 மதுபாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள மல்லிகுட்டை பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 34) என்பதும், இவர் வெளிமாவட்டத்தில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து இங்கு அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 66 மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரிடம் இருந்து போலீசார் 77 கர்நாடக மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அந்தியூர் செம்புளிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்த இளவரசன் (25), அதே பகுதியை சேர்ந்த குமார் (23) என்பதும், இவர்கள் 2 பேரும் கர்நாடக மாநிலம் ராமாபுரத்தில் இருந்து சட்டவிரோதமாக மது பாக்கெட்டுகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக 2 பேரையும் வெள்ளித்திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிளும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

    கவுந்தப்பாடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கவுந்தப்பாடி புதூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த செங்கோட்டையன் என்பவரின் மகன் சக்திவேல் (வயது 46) என்பதும், அவர் சட்டவிரோதமாக 48 மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதேபோல் சேவாக்கவுண்டனூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது சேலம் மாவட்டம், கொளத்தூர் காந்திநகரை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் கார்த்தி என்பவர், சட்ட விரோதமாக 96 கர்நாடக மதுபாக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனைக்கு வைத்திருந்ததையும் போலீசார் கண்டு பிடித்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் மற்றும் கார்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    முக கவசம் அணியாமல் வந்த 50 பேருக்கு அபராதமாக தலா ரூ.200 வீதம் ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்டது.
    பெருந்துறை:

    பெருந்துறை நகரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையிலான போலீசார் நேற்று மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவசியமின்றி இரு சக்கர வாகனங்களில் ரோட்டில் சுற்றிக்கொண்டிருந்த 50 பேர் பிடிபட்டனர். அவர்களுக்கு தலா ரூ.500 வீதம், ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    அதேபோல் முக கவசம் அணியாமல் வந்த 50 பேருக்கு அபராதமாக தலா ரூ.200 வீதம் ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்டது. இது தவிர ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்த 50 பேருக்கு தலா ரூ.100 வீதம் ரூ.5 ஆயிரம் விதிக்கப்பட்டது. பெருந்துறை நகரில் நேற்று நடந்த வாகன சோதனையில் கொரோனா தடுப்பு விதிமுறையை மீறியதாக 150 பேருக்கு மொத்தம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா ஊரடங்கால் தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாரதிபுரம், பிசில்வாடி, அருள்வாடி, எத்திகுட்டை பகுதியில் சோதனைசாவடி அமைக்கப்பட்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.

    தாளவாடி:

    ஈரோடு-கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது தாளவாடி மலைப்பகுதி. இங்கு சுமார் 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

    கொரோனா ஊரடங்கால் தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாரதிபுரம், பிசில்வாடி, அருள்வாடி, எத்திகுட்டை பகுதியில் சோதனைசாவடி அமைக்கப்பட்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.

    அதேபோல் கடந்த மாதம் தாளவாடி பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கடும் கட்டுபாடுகளால் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு தாளவாடி பகுதியில் சற்று குறைந்து வருகிறது.

    இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கபட்டு பஸ்கள் கடந்த 21-ந்தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

    தளர்வு காரணமாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து தாளவாடி அருகே உள்ள மாநில எல்லைபகுதியான பாரதிபுரம் வரை கர்நாடக பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    இதனால் தினந்தோறும் கர்நாடகாவில் இருந்து தாளவாடி பகுதிக்கும் தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கும் எந்த ஒரு இ-பதிவும் இல்லாமல் பொதுமக்கள் சகஜமாக சென்று வருகின்றனர்.

    மாநில எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் போலீசாரும் இதை கண்டு கொள்ளாமல் இருப்பதால் தாளவாடி பகுதியில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    மாவட்ட நிர்வாகம் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மாநில எல்லையில் சோதனையை கடுமையாக்க வேண்டும் எனவும், பேருந்தில் பயணம் செய்து வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தாளவாடி மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். * * * தமிழக-கர்நாடக எல்லையான பாரதிபுரத்துக்கு இயக்கப்பட்ட கர்நாடக அரசு பஸ்.

    ஈரோட்டில் கணவர் கொரோனாவுக்கு இறந்ததால் மனமுடைந்த இளம்பெண், மகன், மகளுக்கு உணவில் விஷமாத்திரை கலந்து கொடுத்து தானும் சாப்பிட்டு உயிரிழந்தார்.
    ஈரோடு:

    ஈரோடு திண்டல், லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (67) ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவருக்கு ஹரிஹரன் என்ற மகனும், நித்யா, ரம்யா என்ற 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    மூத்த மகள் நித்யாவிற்கு சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவருடன் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பாஸ்கர் சென்னையில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோரில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.

    இவர்களுக்கு மகதி (11) என்ற மகளும், யாதவ்கிருஷ்ணன் (6) என்ற மகனும் உள்ளனர். மகதி மாங்காடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பும், யாதவ் கிருஷ்ணன் அதே பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    நல்லபடியாக சென்ற இவர்களது குடும்ப வாழ்க்கை கொரோனா என்ற கொடிய நோயால் சின்னா பின்னமாகி விட்டது.

    கடந்த மாதம் 2-ந் தேதி பாஸ்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி பாஸ்கர் கடந்த மாதம் 9-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.

    கணவர் இறந்த அதிர்ச்சியில் இருந்த நித்யா சரிவர சாப்பிடாமலும், யாரிடமும் பேசாமலும் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.

    கணவர் இறந்ததால் நித்யா தனது மகன், மகளுடன் திண்டலில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்தார். நித்யாவிற்கு அவரது பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர். எனினும் கணவர் பிரிவைத் தாங்க முடியாத நித்யா தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.

    அதன்படி நேற்று மதியம் உணவில் வி‌ஷ மாத்திரையை கலந்து மகள் மகதிக்கும், மகன் யாதவ் கிருஷ்ணனுக்கும் கொடுத்து தானும் அந்த சாப்பாட்டை சாப்பிட்டு உள்ளார். பின்னர் வீட்டில் உள்ள ஒரு அறைக்கு மகன், மகளுடன் சென்று உள்பக்கமாக பூட்டி கொண்டார்.

    நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் நித்யாவின் தந்தை பார்த்தசாரதி கதவை தட்டினார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பார்த்தசாரதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது நித்யா, மகதி, யாதவ் கிருஷ்ணன் ஆகியோர் மயங்கி கிடந்தனர். அந்த அறையில் வி‌ஷ மாத்திரை கிடந்தது.

    இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பார்த்தசாரதி 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நித்யா, மகதி, யாதவ் கிருஷ்ணன் ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    ஈரோடு மாவட்டத்தில் 4 பெண்கள் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 686 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. எனினும் தமிழக அளவில் கொரோனா வைரஸ் பரவலில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி, கோவை மாவட்டத்தில் 793 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் 686 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85 ஆயிரத்து 872 ஆக உயர்ந்தது.

    இதற்கிடையில் கொரோனாவுக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 65 வயது முதியவர் கடந்த மாதம் 20-ந்தேதியும், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது மூதாட்டி கடந்த 17-ந்தேதியும், 70 வயது மற்றும் 65 வயது மூதாட்டிகள் 21-ந்தேதியும், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 59 வயது பெண் நேற்றும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 564 ஆக உயர்ந்தது.

    மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,307 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

    இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 79 ஆயிரத்து 990 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ள 5 ஆயிரத்து 318 பேர் மட்டுமே பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    சென்னிமலை அருகே சாப்ட்வேர் என்ஜினீயர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே ஊத்துக்குளி ரோடு எல்லக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (41). சாப்ட்வேர் என்ஜினீயர். சம்பவத்தன்று இவர் தனது தோட்டத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பாலதொழுவு ஜம்பமடை என்ற இடத்தில் டிராக்டர் ஒன்று பஞ்சராகி ரோட்டோரம் நின்று கொண்டிருந்தது. அதன்மீது எதிர்பாராதவிதமாக ராஜேந்திரன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விபத்தானது. இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    ஆப்பக்கூடல் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி-கோபி பகுதியை சேர்ந்தவர் பூபாலன், இவரது மனைவி இனியராதா (29). இவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகிறது, பிரதீப் (10), சுரேஷ் (4) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த இனியராதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி தெரிய வந்ததும் ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட இனியராதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்ககா அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 9 ஆயிரத்து 607 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. எனினும் தினசரி பாதிப்பில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து 2-வது இடத்தில் இருந்து வருகிறது.

    கடந்த 12 நாட்களாக மாவட்டத்தில் தினசரி பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இதுபோல் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 741 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்து 184 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1855 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆயிரத்து 683 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 559 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 5ஆயிரத்து 942 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

    மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் தினமும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 9 ஆயிரத்து 607 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதேப்போல் மாவட்டம் முழுவதும் 4,032 பேர் வீட்டு தனிமையில் கண்காணிப்பில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 89 சதவீதம் பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 11 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரு சதவீதம் பேர் இறந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் சிகிச்சை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள படுக்கைகள் காலியாகி வருகின்றன. தற்போது 4331 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    சித்தோடு அருகே காரில் மது கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சித்தோடு:

    பவானி லட்சுமி நகர் பகுதியில் சித்தோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வாகன சோதனை செய்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அந்த காரில் மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து காரில் இருந்த ஈரோடு வெட்டுகாட்டுவலசு பகுதியை சேர்ந்த விஜய்சூர்யா (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 96 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மதுபாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பது தெரிய வந்தது.

    ×