search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கர்நாடக அரசு பஸ்கள் இயக்குவதால் தாளவாடி பகுதியில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்

    கொரோனா ஊரடங்கால் தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாரதிபுரம், பிசில்வாடி, அருள்வாடி, எத்திகுட்டை பகுதியில் சோதனைசாவடி அமைக்கப்பட்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.

    தாளவாடி:

    ஈரோடு-கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது தாளவாடி மலைப்பகுதி. இங்கு சுமார் 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

    கொரோனா ஊரடங்கால் தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாரதிபுரம், பிசில்வாடி, அருள்வாடி, எத்திகுட்டை பகுதியில் சோதனைசாவடி அமைக்கப்பட்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.

    அதேபோல் கடந்த மாதம் தாளவாடி பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கடும் கட்டுபாடுகளால் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு தாளவாடி பகுதியில் சற்று குறைந்து வருகிறது.

    இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கபட்டு பஸ்கள் கடந்த 21-ந்தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

    தளர்வு காரணமாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து தாளவாடி அருகே உள்ள மாநில எல்லைபகுதியான பாரதிபுரம் வரை கர்நாடக பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    இதனால் தினந்தோறும் கர்நாடகாவில் இருந்து தாளவாடி பகுதிக்கும் தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கும் எந்த ஒரு இ-பதிவும் இல்லாமல் பொதுமக்கள் சகஜமாக சென்று வருகின்றனர்.

    மாநில எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் போலீசாரும் இதை கண்டு கொள்ளாமல் இருப்பதால் தாளவாடி பகுதியில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    மாவட்ட நிர்வாகம் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மாநில எல்லையில் சோதனையை கடுமையாக்க வேண்டும் எனவும், பேருந்தில் பயணம் செய்து வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தாளவாடி மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். * * * தமிழக-கர்நாடக எல்லையான பாரதிபுரத்துக்கு இயக்கப்பட்ட கர்நாடக அரசு பஸ்.

    Next Story
    ×