என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகேயுள்ள அண்ணாநகரில் ஈஸ்வரன் என்பவர் வீடு கட்டி வருகிறார். இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த சுனில் (எ) புளுநாயக் (34) தனது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் தங்கி கட்டிடப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் கட்டிடப் பணியின்போது முதல் மாடியில் இருந்த புளுநாயக்கிற்கு உடன் பணியாற்றும் சுக்ரீப் நாயக் என்பவர் சென்டரிங் கம்பியை எடுத்து மேலே கொடுத்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அருகில் உள்ள மின்கம்பியில் சென்டரிங் கம்பி படுவதை கவனிக்காமல் கம்பியை வாங்கும்போது புளுநாயக் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
உடனே அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் புளுநாயக்கை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு புளுநாயக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை அடுத்து புளுநாயக் உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஈரோடு:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி உடையானூர் பகுதியை சேர்ந்தவர் தேவநாதன் (53). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இந்திராணி (51). இவர் வனவாசி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு விகாஷினி (15) என்ற மகளும் இளமுகில் (11) என்ற மகனும் உள்ளனர்.
தேவநாதன் தனது மனைவி இந்திராணி மற்றும் தன்னுடன் வேலை பார்க்கும் மேச்சேரி சுப்பிரமணியன் நகரைச் சேர்ந்த ராஜாமணி என்பவரது மகன் சத்தியசீலன் (24) ஆகியோருடன் ஒரு வேலை விசயமாக நேற்று காரில் கோவைக்கு சென்றனர்.
பின்னர் மீண்டும் அவர்கள் கோவையில் இருந்து மேச்சேரி திரும்பி கொண்டு இருந்தனர். காரை தேவநாதன் ஓட்டி வந்தார். கார் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காடப்பநல்லூர் சேவனூர் பிரிவு என்ற பகுதியில் நள்ளிரவு 11.30 மணி அளவில் வந்து கொண்டு இருந்தது.
அப்போது எதிரே வந்த ஒரு லாரி கண் இமைக்கும் நேரதில் கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் லாரிக்குள் சிக்கி கொண்டது. இந்த விபத்தில் காரில் இருந்த தேவநாதன் அவரது மனைவி டாக்டர் இந்திராணி மற்றும் சத்தியசீலன் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
இந்த விபத்து பற்றி தெரிய வந்ததும் பவானி டி.எஸ்.பி. கார்திகேயன், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் காருக்குள் இருந்த 3 பேர் உடல்களையும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டனர். பின்னர் அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்து நடந்த வாகனங்களை அப்புறப்படுத்தியதும் போக்குவரத்து சீரானது. மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
விபத்து குறித்து பலியானவர்களின் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து பலியானவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இந்த விபத்தில் பலியான சத்தியசீலனுக்கு சுகன்யா (22) என்ற மனைவியும், இஷாந்த் அத்வா என்ற 4 வயது மகனும், 6 மாத கைக்குழந்தையும் உள்ளனர்.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஈரோட்டில் உள்ள ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்கள் குறித்து மாநகராட்சி தகவல் சேகரித்து வருகிறது. அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர் வசித்து வரும் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் உத்தரவின்படி மாநகர் நல அதிகாரி டாக்டர் பிரகாஷ் மேற்பார்வையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தலைமையிலான பணியாளர்கள் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மாநகராட்சியில் பல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. மழை நீர், குடிநீர் ஆகியவை வீடுகளை சுற்றி தேங்காமல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும் என்று மாநகராட்சி பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் புகழ்பெற்ற ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது.
இங்கு கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளைக் கொள்முதல் செய்து செல்வார்கள்.
வெளி இடங்களைக் காட்டிலும் இங்கு ஜவுளி ரகங்கள் குறைவான விலையில் கிடைப்பதால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். மொத்தம் 740 கடைகள் செயல்பட்டு வந்தன. தற்போது இந்தப் பகுதியில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டும் பணி நடந்து வருகின்றன.
இதனால் தற்போது இந்தப் பகுதியில் 240 கடைகளும் சாலையைச் சுற்றி 500-க்கும் மேற்பட்ட கடை செயல்பட்டு வருகின்றன.
கொரோனா தளர்வுக்கு பிறகு தற்போது ஜவுளி வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தீபாவளிக்கு இன்னும் 8 நாட்களே இருப்பதால் ஜவுளி வியாபாரம் களை கட்டியுள்ளது.
இதனால் மொத்த, சில்லரை வியாபாரமும் அதிகளவில் நடந்து வருகிறது.
ஜவுளி சந்தையில் மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. திருப்பூர் பனியன் காட்டன் கவுன், சுடிதார் மசகலி சுடிதார், வேட்டி ரகங்கள், பெண்களுக்கான சேலை வகைகள், துண்டு போன்றவை அதிக அளவில் விற்பனை ஆனது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோட்டிலும் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்கிறது. இதனால் பெரும்பள்ளம் ஓடை, சுண்ணாம்பு ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை உள்பட சிறிய ஓடைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் தாழ்வான இடங்களிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்தநிலையில் மழை பெய்ததால் சூரம்பட்டி அணைக்கட்டு நிரம்பி வழிகிறது. அங்கு தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளியை உருக்கி கொட்டுவதுபோல் தண்ணீர் விழுகிறது.
அணைக்கட்டு நிரம்பியதால் அங்கிருந்து மதகு வழியாக நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
சூரம்பட்டி அணைக்கட்டு நிரம்பி இருந்தாலும், பச்சை போர்வை போர்த்தியதை போல ஆகாயத்தாமரை முழுவதும் ஆக்கிரமித்து காணப்படுகிறது.
அணைக்கட்டில் தேங்கி நிற்கும் தண்ணீர் தெரியாத வகையில் ஆகாயத்தாமரை முழுவதுமாக படர்ந்து உள்ளது. வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் மதகு உள்ள பகுதியிலும் ஆகாயத்தாமரை அடைத்து உள்ளது.
இதனால் வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது.
எனவே அணைக்கட்டு முழுவதும் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பழையகோட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி (25) எலக்ட்ரீசியன். காங்கேயம் அருகே உள்ள நத்தக்காடையூரை சேர்ந்தவர் மாணிக்கம் (23) மெக்கானிக்கல். நண்பர்களான இவர்கள் 2 பேரும் ஈரோட்டுக்கு ஒரு வேலை விஷயமாக நேற்று காரில் வந்தனர்.
பின்னர் ஈரோட்டில் வேலையை முடித்து கொண்டு மீண்டும் திருப்பூர் நோக்கி சென்றனர். காரை பூபதி ஓட்டினார். அவரது அருகில் மாணிக்கம் அமர்ந்து பயணித்தார்.
மொடக்குறிச்சி அருகே உள்ள அரச்சலூர் கண்ணமாபுரம் என்ற பகுதியில் அவர்கள் நள்ளிரவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடத் தொடங்கியது. பூபதியால் காரை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து கார் ரோட்டோரம் இருந்த ஒரு புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் கார் முற்றிலும் சேதம் அடைந்து காரில் இருந்த பூபதி, மாணிக்கம் ஆகியோர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் அங்கேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
விபத்து பற்றி தெரிய வந்ததும் அரச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பலியான பூபதி, மாணிக்கம் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள், தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. பவானி, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம், அம்மாபேட்டை, கொடிவேரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான குறிச்சி வயக்காடு பகுதி சித்தார், பூனாட்சி, நத்தமேடு, அய்யந்தோட்டம், சீலம்பட்டி, கூச்சிக்கல்லூர், ராமாட்சி பாளையம், சுப்பராயன் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 9 மணி வரை 2 மணி நேரம் கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக அந்த பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த சுமார் 20 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. வயல்வெளிகளே தெரியாத அளவுக்கு மழைத்தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதே போல் மக்காச்சோளம் மற்றும் வாழைகளும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது பயிர்கள் மழையால் சேதமடைகின்றன. எனவே இந்த பகுதியில் குறிச்சி சமத்துவபுரம் முதல் அந்தியூர் மெயின் ரோடு வரை உள்ள ரோட்டிற்கு இடையே மழை நீர் வெளியேறும் வகையில் பாலம் அமைத்து வடிகால் வசதி செய்து தர வேண்டும். மேலும் தற்போது சேதம் அடைந்து உள்ள பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஈரோடு குறிகாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 43). இவருக்கு ஈரோட்டில் சொந்தமாக செல்போன் உதிரிபாக கடை மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் கடை உள்ளது. நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வெங்கடேஷ் கடைக்கும், அவருடைய குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கும் சென்றுவிட்டனர். அவருடைய மனைவி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். அதைத்தொடர்ந்து மாலையில் வெங்கடேஷ் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார்.
அப்போது வீட்டில் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரூ.2 லட்சத்தையும் காணவில்லை. அதை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருட்டு போன வீட்டை பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் சென்று வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
போலீசார் விசாரணையில், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவத்தால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஜீவா செட் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 48). இவர் திங்களூர் அடுத்த கிரே நகர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் இரவு வேலை முடிந்து டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு கடையில் வசூலான பணத்தை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். திங்களூர் அடுத்த பெரிய வீரசங்கிலி அருகே ஒரு கோழிபண்ணை வழியாக வந்து கொண்டு இருந்தார்.
அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து அவரை வழி மறித்து கத்தியை காட்டி அவர் வைத்து இருக்கும் பணத்தை கேட்டு மிரட்டினர். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியால் அவர் முதுகில் குத்த முயன்றனர். இதை தடுத்ததால் செல்வராஜிக்கு முதுகில் லேசான காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் 2 பேர் செல்வராஜ் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணம், 2 செல்போன்கள் மற்றும் 6 ஏ.டி.எம். கார்டுகளை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து செல்வராஜ் திங்களூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு பச்சப்பாளி மாயவன் கோவில் வீதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 30). எலெக்ட்ரீசியன். இவரது மனைவி பிருந்தா.
உதயகுமார் ஈரோடு குதிரைபாளியில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் மின்மோட்டார் பொருத்தும் பணிக்கு சென்றார்.
இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் அங்கன்வாடி மையத்துக்கு சென்றனர். அப்போது அங்கு இருந்த ஒரு அறையில் மின்மோட்டார் அருகே ஒயரை பிடித்த நிலையில் மின்சாரம் தாக்கி உட்கார்ந்த நிலையில் உதயகுமார் இருந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உதயகுமாரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே உதயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக அணை இருந்து வருகிறது.
இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஊட்டி, தெங்குமரகடா மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
மேலும் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பவானிசாகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.
நேற்று அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 813 கனஅடி தண்ணீர் வந்தது. இது படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணைக்கு 8 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,300 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்காலுக்கு 500 கனஅடியும், பவானி ஆற்றுக்கு 5 ஆயிரத்து 700 கன அடி என மொத்தம் 8 ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பவானி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் அணையின் கரையோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.






