என் மலர்
ஈரோடு
ஈரோடு கொல்லம்பாளையம் முல்லை நகரை சேர்ந்தவர் தேவபிரசாந்த் (வயது 17). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று தனது அத்தை வீட்டிற்கு சென்று பால் வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அலுச்சாம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக எதிரே வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக தேவ பிரசாந்த் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தேவ பிரசாந்த் தலையில் காயமடைந்து உயிருக்காக போராடினார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இது குறித்து தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேவ பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தேவ பிரசாந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. தேவ பிரசாந்த் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் பலர் குதிரைகளை வளர்த்து வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் ஏராளமான குதிரைகள் ரோட்டில் சுற்றி திரிகின்றன.
இந்த நிலையில் கோபி நகராட்சி சுப்பு நகர் பகுதியில் இன்று காலை ஒரு குதிரை ரோட்டில் சுற்றி திரிந்து கொண்டு இருந்தது. அந்த குதிரை அந்த பகுதியில் உள்ள சாக்கடை அருகே மேய்ந்து கொண்டு இருந்தது.
அந்த குதிரை திடீரென சாக்கடையில் தவறி விழுந்தது. இதையடுத்து குதிரை சத்தம் போட்டு கொண்டு இருந்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாக்கடையில் விழுந்த குதிரையை உயிருடன் மீட்டனர்.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
கோபி நகராட்சி பகுதியில் பலர் குதிரைகள் வளர்த்து வருகிறார்கள். அந்த குதிரைகள் அடிக்கடி வெளியேறி ரோட்டில் சுற்றி திரிகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
மேலும் கோபி பஸ் நிலையம் பகுதியில் சுற்றி திரியும் குதிரைகள் சில சமயங்களில் சண்டை போட்டு கொள்கிறது. இதனால் பஸ் ஏற வரும் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதே போல் சத்தியமங் கலம் ரோடு, மொடச்சூர் ரோடு, அரசு ஆஸ்பத்திரி பகுதி, ஈரோடு ரோடு, கொடிவேரி ரோடு பகுதிகளிலும் குதிரைகள் அதிகளவில் ரோட்டில் திரிகிறது. இதனால் அந்த வழியாக வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ரோட்டில் வரும் குதிரையை கண்டு வாகனத்தை திடீரென நிறுத்துவதால் அவர்கள் கீழே விழுந்து எழுந்து செல்லும் நிலையும் உள்ளது. மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே கோபிசெட்டிபாளையம் பகுதியில் ரோட்டில் சுற்றி திரியும் குதிரைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நேரத்தை செலவிடுகின்றனர். இதேப்போல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் சமூகவலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். சில சமயம் இதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த அஜித் (வயது 21). பிரிண்டிங் பட்டறை தொழிலாளி. இவர் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். அப்போது ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். அப்போது சிறுமியிடம் அஜித் ஆசைவார்த்தை கூறி பழகியுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 26-ந்தேதி சிறுமி திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அஜித் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து சிறுமி மீட்கப்பட்டார்.
அஜித் மீது கடத்தல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்றும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான புளியங்கோம்பை, ஓட்டக்குட்டை, அரியப்பம்பாளையம், சிக்கரசம்பாளையம், வடவள்ளி, ராஜன் நகர், பண்ணாரி, திம்பம் மலைப்பகுதிகளில் நேற்று இரவு 8 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை விடிய, விடிய பெய்து கொண்டே இருந்தது.
இந்த மழையின் காரணமாக திம்பம் மலைப்பாதை வழியாக சென்ற வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டது. மேலும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது.
பவானிசாகர் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் பெய்த மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 297 கனஅடியாக அதிகரித்து உள்ளது.
இதேபோல் கொடுமுடி, பெருந்துறை, ஈரோடு, பவானி, கோபிசெட்டிபாளையம், நம்பியூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் கடுங்குளிர் நிலவியது. பொதுமக்கள் அவதி அடைந்தனர். இன்று காலையும் பல்வேறு இடங்களில் மழை தூறிக்கொண்டு இருந்தது.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அலுவலகத்துக்கு செல்லும் பொதுமக்கள் குடை பிடித்தபடி வந்து சென்றனர். மேலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. ஆனாலும் ஈரோடு நகர் பகுதிகளில் காலை முதலே குடைபிடித்து கொண்டு தீபாவளி ஜவுளி எடுக்க பொதுமக்கள் அதிகளவில் வந்து இருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக குண்டேரிபள்ளம் அணை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஈரோடு-10, கொடுமுடி- 22.2, பெருந்துறை-17.2, பவானி-7.4, கோபி-5.6, சத்தி-6, பவானிசாகர்-5.2, தாளவாடி-1, நம்பியூர்-11, சென்னிமலை-6, மொடக்குறிச்சி-13, கவுந்தப்பாடி-6.2, எலந்தகுட்டைமேடு-6.4, அம்மாபேட்டை-4.4, கொடிவேரி-7.2, குண்டேரிபள்ளம்-2.2, வரட்டுப்பள்ளம்-3.4.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாவக்காடு பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், பழுவில் என்ற இடத்தை சேர்ந்த 23 வயதான இளம் பெண்ணுக்கும் கடந்த மாதம் 25-ந் தேதி திருமணம் நடந்தது. மறுநாள் புதுமணத்தம்பதியினர் அருகில் உள்ள வங்கிக்கு சென்றனர். அப்போது இளம்பெண் போன் செய்துவிட்டு வருவதாக கூறி, கணவரின் செல்போனை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் வங்கிக்குள் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கணவன் வெளியே வந்து பார்த்தபோது இளம்பெண்ணை காணவில்லை. இதனால் அவர் நீண்ட நேரம் மனைவிக்காக வங்கியிலேயே காத்திருந்தார். மாலை நேரமாகியும் மனைவி திரும்பிவரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த புது மாப்பிள்ளை உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் புதுப்பெண் மாயம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், இளம்பெண்ணுக்கு ஒரு தோழி இருப்பதும், 2 பேரும் உயிருக்கு உயிராக பழகி வந்ததும், சம்பவத்தன்று அந்த இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் தப்பிசென்றதும் தெரியவந்தது. அவர் செல்லும்போது வங்கியில் இருந்து எடுத்த ரூ.1 லட்சம் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 16 பவுன் நகையையும் கொண்டு சென்றுள்ளார். திருமணமான மறுநாள் மனைவி தோழியுடன் ஓட்டம் பிடித்ததை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்துபோன கணவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக திருச்சூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மாயமான புதுப்பெண், அவரது தோழி ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இதற்கிடையே புதுப்பெண்ணின் தோழியின் தந்தைக்கு மதுரையில் உள்ள ஒரு லாட்ஜில் இருந்து செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய லாட்ஜ் நிர்வாகத்தினர், உங்கள் மகள் அடையாள அட்டையை காண்பித்து ஒரு அறை எடுத்து இருந்தார். அவருடன் மற்றொரு இளம்பெண்ணும் தங்கி இருந்தார். இருவரும் வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர்கள் திரும்பி வரவில்லை. அறைக்கான வாடகை கட்டணமும் செலுத்தவில்லை என்று தெரிவித்தனர்.

விசாரணையில், தோழிகள் 2 பேரும் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளனர். 2 பேரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். ஆனால் பணம் தேவைப்படும் என்பதால் திருமணம் வரை காத்திருந்துள்ளனர். திருமணம் முடிந்ததும் மறுநாள் கணவருடன் வங்கிக்கு சென்ற புதுப்பெண் தனது 16 பவுன் நகை மற்றும் வங்கியில் எடுத்த ரூ.1 லட்சம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வங்கியில் இருந்து வெளியே வந்துள்ளார். அதன்பின்னர் தோழியை வரவழைத்து 2 பேரும் சேர்ந்து ஸ்கூட்டரில் திருச்சூருக்கு சென்றுள்ளனர். அதன்பின்னர் ரெயில் நிலையம் அருகில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு வாடகை காரில் ஜவுளி கடைக்கு சென்று 2 பேருக்கும் தேவையான புத்தாடைகளை வாங்கி உள்ளனர்.
அதன்பின்னர் வாடகை காருக்கு பணம் கொடுக்காமல் வேறு ஒரு வாடகை காரை பிடித்துக்கொண்டு கோட்டயம் சென்றுள்ளனர். அங்கிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து மதுரைக்கு சென்று தோழியின் அடையாள அட்டையை காண்பித்து லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
அதன்பிறகு மீண்டும் ரெயிலில் பாலக்காடு வந்துள்ளனர். அங்கிருந்து வாடகை காரில் திருச்சூர் சென்று ரெயில்நிலையத்தில் வைத்திருந்த ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். மீண்டும் ரெயில் மூலம் மதுரைக்கு வந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் மக்கள் பட்டாசு வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு சிலர் அனுமதியின்றி பட்டாசுகளை அதிக அளவில் வாங்கி அதை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்று பட்டாசு பதுக்கி வைக்கும் போது சில சமயங்களில் எதிர்பாராதவிதமாக விபத்தும் ஏற்படுகிறது. இதனால் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரச்சலூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் அரச்ச லூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அரச்சலூர் ரவுண்டானா அருகே உள்ள கொங்கு நகரில் ஒரு வீட்டில் பட்டாசு பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கொங்கு நகரில் உள்ள வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் (வயது 45) என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் சிவகாசியிலிருந்து பட்டாசுகளை உரிய அனுமதியின்றி வாங்கி அதை வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு சூளை சி.எஸ். நகரைச் சேர்ந்தவர் பாபு (56). சோப்பு தயாரிப்பு நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்தார்.
இவர் அசோகபுரம் பிரதான சாலையில் அலுவலகம் அமைத்து ஏலச்சீட்டு நடத்தினார். இதில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சீட்டு பணம் செலுத்தினர். இவர் ஏலச்சீட்டில் பணம் எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 28-ந்தேதி ஏலச்சீட்டு நடத்தி வந்த பாபு திடீரென தலைமறைவானார். இதனால் பணம் கட்டிய பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடந்த 28-ந்தேதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர். மேலும் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த பாபுவை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து மீண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணம் செலுத்தி ஏமாந்த பொதுமக்கள் புகார் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. மேலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இதுகுறித்து புகார் செய்யலாம் என்றும் போலீசார் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் கூறியதாவது:-
ஏலச்சீட்டு மோசடி குறித்து இதுவரை 360 பேர் புகார் செய்துள்ளனர். புகார்கள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து இன்னும் ஓரிரு நாட்களில் சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். வேறு யாராவது இதுபோல் ஏலச்சீட்டில் பணம் செலுத்தி ஏமாந்து இருந்தால் அவர்களும் முன் வந்து புகார் அளிக்கலாம். தலைமறைவாக இருக்கும் தொழில் அதிபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏலச்சீட்டு நடத்திய பாபு ரூ.10 கோடி வரை மோசடி செய்திருந்த நிலையில் தற்போது அவர் மீது புகார்கள் குவிந்து வருவதால் மேலும் பல கோடி ரூபாய் அவர் மோசடி செய்திருக்கலாம் என்று தெரிய வருகிறது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது பெய்த மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் பசுமையாக காணப்படுகிறது. மேலும் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
சத்தியமங்கலம் வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்து உள்ளது. இந்த சாலையில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் உணவு தேடி வன விலங்குகள் அடிக்கடி சாலையை கடந்து செல்வது தொடர் கதையாகி வருகிறது.
வழக்கமாக கரும்புக்காக யானைகள் சாலை ஓரம் முகாமிட்டு இருக்கும். இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக சென்று வருவார்கள்.
இந்நிலையில் நேற்று மாலை ஆசனூர் அடுத்த தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் என்ற பகுதியில் வழக்கம் போல் வாகனங்கள் வந்து சென்றது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் வனப்பகுதியில் இருந்து ஒரு சிறுத்தை வெளியேறி வந்தது. இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை அப்படியே நிறுத்திக் கொண்டனர்.
வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை சாலையை கடந்து சென்றது. அப்போது வாகனத்தில் இருந்தபடியே சிலர் சிறுத்தையை போட்டோ எடுத்தனர். ரோட்டில் சிறிது நேரம் நின்று கொண்டு இருந்த சிறுத்தை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து வாகனங்கள் அனைத்தும் புறப்பட்டு சென்றது.






