என் மலர்
ஈரோடு
- மீண்டும் மாலையில் ராதா வீட்டுக்கு வந்த போது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.
- ரங்கசாமியின் செல்போனுக்கு அழைத்த போது அவர் போனை எடுக்கவில்லை.
ஈரோடு:
ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (53). இவரது மனைவி ராதா (48). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர்.
ரங்கசாமி கோவையில் உள்ள தமிழ்நாடு அரசின் டான்சி நிறுவனத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே தனக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக ரங்கசாமி தனது மனைவியிடம் கூறி புலம்பி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலையில் ரங்கசாமி பணிக்கு சென்றார். மனைவி ராதா அவர்களது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். மீண்டும் மாலையில் ராதா வீட்டுக்கு வந்த போது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. ரங்கசாமியின் செல்போனுக்கு அழைத்த போது அவர் போனை எடுக்கவில்லை.
இதையடுத்து சந்தேகமடைந்த ராதா அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மாடிக்கு சென்று பார்த்த போது அங்குள்ள குளியல் அறையில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் ரங்கசாமி இருந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ரங்கசாமி இறந்து விட்டதாக தெரிவித்தார். டான்சி நிறுவனத்தின் உயர் அதிகாரி செய்த தொந்தரவால் தான் ரங்கசாமி தற்கொலை செய்து கொண்டு உள்ளார் என கூறப்படுகிறது.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருப்பூரில் இருந்து வழக்கம் போல் கல்லூரி பஸ்சில் மாணவ-மாணவிகள் ஏறி கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர்.
- விபத்தில் 5 பேருக்கு பலத்த காயமும், 16 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த துடுப்பதியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி சார்பாக பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. அதில் தினமும் மாணவ-மாணவிகள் சென்று வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை திருப்பூரில் இருந்து வழக்கம் போல் கல்லூரி பஸ்சில் மாணவ-மாணவிகள் ஏறி கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகே உள்ள மேட்டுப்புதூரில் பஸ் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பஸ் சாலையோரம் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 15 கல்லூரி மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர். இதில் 5 பேருக்கு பலத்த காயமும், 16 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. காயமான மாணவ, மாணவிகள் பதற்றத்துடன் காணப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவ-மாணவிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- சித்தோடு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
- காரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஈரோடு:
தமிழக அரசு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கண்காணிக்க தமிழக முழுவதும் உள்ள காவல்துறையினர் மூலமாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு போலீசார் சித்தோடு அருகே உள்ள சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையொட்டி உள்ள சத்தியமங்கலம் செல்லும் மேம்பாலம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்றை சந்தேகத்துக்கு இடமான வகையில் நிறுத்தி சோதனை செய்த போது காரில் தடை செய்யப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான 130 கிலோ குட்கா பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் குட்கா பொருட்களை கொண்டு சென்ற ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த தண்டபாணி (40) என்பவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வீட்டில் இருந்த பீரோவின் அடியில் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.
- தீயணைப்பு வீரர்கள் பாம்பை உயிருடன் பிடித்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள மேலப்பாளையம் சூலைத் தெருவில் வீட்டில் இருந்த பீரோவின் அடியில் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.
இதனைக்கண்ட வீட்டின் உரிமையாளர் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
நிலைய அலுவலர் சதீஸ்குமார் தலைமயைில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பாம்பு பிடிக்கும் கருவியின் உதவியுடன் பாம்பை உயிருடன் பிடித்தனர்.
5 அடி நீளம் கொண்ட அந்த சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் அடர்ந்த சென்னிமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
- வேட்டி-சேலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
- இந்த பணி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது.
ஈரோடு:
தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகையின் போது ஏழை எளியோருக்கு வழங்க அரசு சார்பில் இலவச சேலை -வேட்டி தயாரிக்கப்படுகிறது.
மொத்தம் 1.68 கோடி வேட்டி, 1.68 கோடி சேலை தயாரிக்கும் பணி தமிழகம் முழுவதும் 228 விசைத்தறி சங்கங்களில் 60 ஆயிரம் விசைத்தறிகளில் நடந்து வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பு செயலாளர் தங்கவேல் கூறியதாவது:
இலவச வேட்டி-சேலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. தற்போதைய நிலையில் 30 லட்சம் வேட்டிகள், 65 லட்சம் சேலைகள் மட்டும் தயாரிக்க வேண்டியுள்ளது.
இந்த பணிகளும் 15 நாட்களுக்குள் முடிந்து விடும். இதன் பிறகு விசைத்தறிகளுக்கு வேலை இல்லாத நிலை ஏற்படும்.
எனவே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சீருடை தயாரிப்பு பணியை முன்னதாகவே திட்டமிட்டு வழங்க வேண்டும். 96 லட்சம் மீட்டர் கேஸ்மெட் துணிகள் மட்டுமே விசைத்தறிக்கு வழங்கப்படும். மீதி 3 கோடி மீட்டர் துணி தானியங்கி தறிகளுக்கு வழங்கப்படுகிறது.
பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான நீல நிற துணிகள் வெளியே ஆர்டர் போட்டு அரசு வாங்குகிறது. இது போன்றவற்றை விசைத்தறிகளுக்கே வழங்கினால் ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல இடங்களில் தேடி பார்த்தும் மீரின்மய் சர்க்கார் கிடைக்கவில்லை.
- உயர்மின் கோபுரத்தில் தூக்கில் தொங்குவதாக தகவல் கிடைத்தது.
பெருந்துறை:
மேற்கு வங்காளம் மாநி லம் சுகேஷ் கன்ச் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாஸ் சர்கார் (வயது 59). இவருடைய மகன் மீரின்மய் சர்க்கார் (26). இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன், மனைவி இருவரு க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மீரின்மய் சர்க்கார் குடும்பத்தை பிரி ந்து அவரது நண்பர்களுடன் ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்த ன்று வீட்டை விட்டு வெளி யேறிய மீரின்மய் சர்க்கார் பின்னர் வீடு திரும்பவில்லை. நண்பர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் மீரின்மய் சர்க்கார் கிடைக்கவில்லை.
இந்நிலையில் பணிக்கம்பாளையம் அருகே உள்ள உயர்மின் கோபுரத்தில் தூக்கில் தொங்குவதாக தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அவரது நண்பர்கள் மீரின்மய் சர்க்காரை மீட்டு பெருந்துறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் மீரின்மய் சர்க்கார் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இது குறித்து அவரது தந்தை பிரபாஸ் சர்க்கார் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
- வனப்பகுதிக்குள் காட்டுயானை இறந்தது கிடந்ததை கண்டனர்.
- குடல் புழுநோயால் இறந்து இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட குன்றி பிரிவு கொளஞ்சி மடுவு வனப்பகுதியில் கடம்பூர் வனச்சராக அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று காலை வனப்பணியாளர்கள் ரோந்து சென்றனர்.
அப்போது வனப்பகுதி க்குள் காட்டுயானை இறந்தது கிடந்ததை கண்டனர். இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் சத்தியம ங்கலம் புலிகள் காப்பக கால்ந டை உதவி மருத்துவர் சதா சிவம் தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கு சென்றனர்.
பின்னர் தொண்டு நிறுவன பிரதிநிதி கிருஷ்ணகுமார், வனக்குழு தலைவர் மாரியப்பன், வனப்பணியாளர்கள் முன்னிலையில் பிரேத பரி சோதனை செய்யப்பட்டது.
இறந்து கிடந்தது 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை எனவும், குடல் புழுநோயால் இறந்து இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- போதை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என மொடக்குறிச்சி, பவானி, காஞ்சிகோவில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சாமிநாதபுரம், நஞ்சை ஊத்துக்குளி, கருக்கம்பாளையம், பவானி புது பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த மொடக்கு றிச்சி சாமிநாதபுரம் கரட்டங்காடு பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் காமராஜர் (வயது 32), நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த ராமசாமி மகன் முருகேசன் (57), பெத்தம்பாளையம் அடுத்த கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த நல்ல கவுண்டர் மகன் லோகநாதன் (26), பவானி காமராஜர் நகர் பெருமாள்புரம் சுரமணி மனைவி மலர்விழி (44) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ஹான்ஸ், கூலிப், பான் மசாலா உள்ளிட்ட போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.42 அடியாக உயர்ந்துள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 593 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.42 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 593 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது.
பவானிசாகர் அணையில் இருந்து நேற்று கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 700 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 1,700 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 4.59 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.82 அடியாகவும் உள்ளது.
- கடையின் பூட்டு உடைக்கப் பட்டு இருந்தது.
- கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மா பேட்டை, சிங்கம் பேட்டை பவானி- மேட்டூர் ரோடு பகுதியில் மளிகை கடை உள்பட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது.
அதே போல் அம்மா பேட்டை அருகே உள்ள குதிரைக்கல் மேடு பகுதியை சேர்ந்தவர் பிரபாவதி (வயது 31) என்பவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
அவர் தினமும் வியாபாரத்தை முடித்து கொண்டு இரவில் கடையை மூடி விட்டு செல்வது வழக்கம்.
அதே போல் அவர் நேற்று இரவும் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை மீண்டும் திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப் பட்டு இருந்தது.
இதையடுத்து அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதே போல் சுள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (50). இவர் சிங்கம்பேட்டை பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.
இவரது மளிகை கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து கடையில் இருந்த 3 சிப்பம் அரிசி மூட்டைகள் மற்றும் மளிகை பொருட்களை திருடி சென்று விட்டனர்.
மேலும் அம்மாபேட்டை அடுத்த குதிரைக்கல் மேடு பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையின் பூட்டை உடைத்து அங்கு வைத்து இருந்த ரூ.2700 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இன்று காலை சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் குதிரைக்கல் மேடு பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அப்போது பவானி- மேட்டூர் மெயின் ரோட்டில் ஒரு ஆம்னி கார் அதிகாலை 2.30 மணி அளவில் வந்தது.
அந்த காரில் இருந்து இறங்கிய ஒருவர் அந்த பகுதியில் உள்ள பிரபா வதியின் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடித்து சென்றது பதிவாகி இருந்தது.
தொட ர்ந்து அவர்கள் மேட்டூர் ரோட்டில் காரில் வந்து மேலும் 2 கடைகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.
காரில் வந்து கொள்ளை யடித்தவர்கள் யார் என்பது குறித்து அம்மாபேட்டை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் போலீசார் அந்த பகுதியில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் இன்று காலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
- வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
- மொத்த தேங்காய் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 966 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் விவசாயிகள் 10,702 தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்த பட்சமாக 28 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 32 ரூபாய் 19 காசுக்கும் ஏலம் போனது. நேற்றைய சராசரி விலையாக 31 ரூபாய் 41 காசு என நிர்ணயம் செய்யப்பட்டது.
மொத்தம் 3523 கிலோ எடையுள்ள தேங்காய் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 966 ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக விற்பனை கூடத்து நிர்வாகி தெரிவித்துள்ளார்.
- குழந்தைகள், வாலிபர்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் வைரஸ் காய்ச்சல் தாக்கி வருகிறது.
- சாதாரண வகை வைரஸ் காய்ச்சல் என்றாலும் குணமாக 4 முதல் 5 நாட்கள் வரை ஆகிறது.
ஈரோடு:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் இரவு, பகலாக மழை பெய்து வருகிறது. பகலில் சில நேரங்களில் மழையும், வெயிலும் மாறி மாறி அடித்து வருகிறது.
அத்துடன் இரவில் குளிர்வாட்டி வதைப்பதுடன் அதிகாலை பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் பொதுமக்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்தக் காலநிலை மாற்றத்தால் ஈரோடு மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சளி, இருமலுடன் கூடிய ஒரு வகை வைரஸ் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது.
குழந்தைகள், வாலிபர்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் இந்த வைரஸ் காய்ச்சல் தாக்கி வருகிறது.
உடல் சோர்வு, தொண்டைவலி, சளி இருமலுடன் இந்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சாதாரண வகை வைரஸ் காய்ச்சல் என்றாலும் குணமாக 4 முதல் 5 நாட்கள் வரை ஆகிறது. வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் இந்த காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
காலநிலை மாற்றத்தால் இதுபோன்ற காய்ச்சல்கள் வருவது இயல்புதான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதுபோன்ற காய்ச்சல், சளி வராமல் இருக்க மக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
காய்ச்சலை தடுக்க பொதுமக்கள் குடிநீரை காட்சி குடிக்க வேண்டும். 3 நாளைக்கு மேல் காய்ச்சல், சளி, இருமல் தொல்லை இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.
தன்னிச்சையாக மருந்தகங்களில் சென்று மாத்திரை வாங்கக்கூடாது. முக்கியமாக வீடுகளை சுற்றி நீர் தேங்காதவாறு தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். வீடுகளில் தண்ணீர் தொட்டிகள், உரல்கள் பாத்திரங்களை மூடி வைப்பது நல்லது.
வீடுகளில் கபசுர குடிநீர் அல்லது நிலவேம்பு கசாயம் அருந்தலாம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.






