search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்: அரசு-தனியார் ஆஸ்பத்திரிகளில் குவியும் மக்கள்
    X

    வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்: அரசு-தனியார் ஆஸ்பத்திரிகளில் குவியும் மக்கள்

    • குழந்தைகள், வாலிபர்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் வைரஸ் காய்ச்சல் தாக்கி வருகிறது.
    • சாதாரண வகை வைரஸ் காய்ச்சல் என்றாலும் குணமாக 4 முதல் 5 நாட்கள் வரை ஆகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் இரவு, பகலாக மழை பெய்து வருகிறது. பகலில் சில நேரங்களில் மழையும், வெயிலும் மாறி மாறி அடித்து வருகிறது.

    அத்துடன் இரவில் குளிர்வாட்டி வதைப்பதுடன் அதிகாலை பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் பொதுமக்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்தக் காலநிலை மாற்றத்தால் ஈரோடு மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சளி, இருமலுடன் கூடிய ஒரு வகை வைரஸ் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது.

    குழந்தைகள், வாலிபர்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் இந்த வைரஸ் காய்ச்சல் தாக்கி வருகிறது.

    உடல் சோர்வு, தொண்டைவலி, சளி இருமலுடன் இந்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    சாதாரண வகை வைரஸ் காய்ச்சல் என்றாலும் குணமாக 4 முதல் 5 நாட்கள் வரை ஆகிறது. வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் இந்த காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    காலநிலை மாற்றத்தால் இதுபோன்ற காய்ச்சல்கள் வருவது இயல்புதான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் இதுபோன்ற காய்ச்சல், சளி வராமல் இருக்க மக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

    காய்ச்சலை தடுக்க பொதுமக்கள் குடிநீரை காட்சி குடிக்க வேண்டும். 3 நாளைக்கு மேல் காய்ச்சல், சளி, இருமல் தொல்லை இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.

    தன்னிச்சையாக மருந்தகங்களில் சென்று மாத்திரை வாங்கக்கூடாது. முக்கியமாக வீடுகளை சுற்றி நீர் தேங்காதவாறு தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். வீடுகளில் தண்ணீர் தொட்டிகள், உரல்கள் பாத்திரங்களை மூடி வைப்பது நல்லது.

    வீடுகளில் கபசுர குடிநீர் அல்லது நிலவேம்பு கசாயம் அருந்தலாம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×